நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு, நூலறிமுகம்




ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சென்னை மாகாணத்தில் அடங்கியிருந்த மாவட்டங்கள் குறித்த கையேடுகளை (Gazetteer) வெளியிட்டனர். அவ்வகையில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வடார்க்காடு, தொன்னார்க்காடு முதலிய 9 மாவட்டங்களுக்குக் கையேடுகள் வந்துள்ளன.



அந்தவகையில் இலங்கையின் வன்னி மாவட்டத்துக்கு ஒரு கையேடு வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஜே.பி.லூயிஸ்(J.P.Lewis). இவர் எழுதிய நூல் வன்னி மாவட்டங்கள் (A Manual of the vanni Districts) என்பதாகும். இந்தக் கையேடு 1895 இல் வெளிவந்துள்ளது. இந்தக் கையேட்டில் வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்கள் குறித்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலத்தில் முதல்பதிப்பு கண்ட இந்த நூலினை மொழிபெயர்த்து இரண்டாம் பதிப்பாகத் தமிழில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை வெளியிட்டுள்ளது(2012). தமிழர்களின் அரிய ஆவணத்தை வெளியிட்டுள்ள கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபைக்கும் மொழிபெயர்ப்புக் குழுவினருக்கும் நம் நன்றியும் பாராட்டுகளும்.

இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு என்னும் இந்த நூல் 506 பக்கங்களைக் கொண்டு 1200 உருவா விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் முகப்பில் முன்னுரை, அறிமுகம், பதிப்புரை, வெளியீட்டு உரை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய குறிப்பும் அறிமுகமும், மூல நூலாசிரியரின் உரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. வன்னிப் பிரதேசத்தின் வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது.

நூலின் உள்ளடக்கமாகத் தரைத்தோற்ற விவரணம் - பௌதிக அம்சங்கள், வரலாற்றுச் சுருக்கம், நிருவாகம், குடித்தொகை, பிரிவுகளும் கிராமங்களும், இனம், சாதி, தொழில், சமயம்; வன்னியில் சிங்களவர்கள், வருமானம் - பொது, வருமானம் - உப்பு, வருமானம் - சுங்கம், வருமானம் - மரம், வருமானம்- நெல்லும் உலர்தானியங்களும், நிலம்(காணி) உடைமையுரிமை, விவசாயம், நீர்ப்பாசனம், விவசாயம் - நெல்வேளாண்மை, விவசாயம் - உலர்தானியப் பயிர்ச் செய்கை, நானா வித விவசாயம், மீன்பிடித் தளங்கள், உழைப்பு - வேதனம், கால் நாடை, வீதிகள், தபால்சேவை(அஞ்சல்), நிறுவைகளும் அளவைகளும், விலை, குற்றமும் சட்ட நடவடிக்கைகளும், ஆரோக்கியமும் சுகாதாரமும், மக்களின் சமூகநிலை, காலநிலை, தாவரங்கள், விலங்கினங்கள், தொல்பொருளியல், நானாவித தகவல்கள், அபிவிருத்திக்கான திட்டங்கள் என்னும் தலைப்புகளில் மிக முதன்மையான செய்திகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் வன்னி என்னும் பகுதி வடதிசையில் யாழ்ப்பாண ஏரியையும், தென்திசையில் அருவியாற்றையும், கிழக்கே திருகோணமலையையும் மேற்கே மன்னார் மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டு  விளங்கியது. வன்னியின் வடபகுதி முல்லைத்தீவு மாவட்டமாகவும், தென்பகுதி வவுனியா மாவட்டமாகவும் விளங்கியது.

வன்னி என்ற பெயர்க்காரணம் பற்றிய பலகுறிப்புகளை இந்த நூல் தாங்கியுள்ளது. தமிழர்களின் வரலாற்றின்படி இந்தியாவிலிருந்து வந்து ஆட்சி செய்த வன்னியர்களிடமிருந்து பெறப்பட்ட பகுதி இந்த வன்னி என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பதை இந்த நூலின் அடிக்குறிப்பு காட்டுகின்றது(பக்கம்.11). திருகோணமலைப் பிரதேசமும் வன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததையும், தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்த வன்னியர்களின் பட்டியலைக் கோணேசர் கல்வெட்டு என்னும் நூலின் வழி அறியலாம் என்ற முன்னுரைப் பகுதியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வன்னி எனும் பெயரை இப் பிரதேசம் பொறுவதற்கு முதல் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. ஏனெனில் வன்னிப்பிரதேசம் யாழ்ப்பாணத்திலிருந்தும், அனுராதபுரத்திலிருந்தும் சுதந்திரமாக இருந்தது.

இலங்கையை ஆண்ட மன்னன் வாலசிங்க என்பவன் மதுரையை ஆண்ட சிங்ககேதுவின் புதல்வி, இளவரசி சாமதுதியை மணம் செய்ய எண்ணித் தம் தூதுவர்களை அனுப்பினார். இதனை உணர்ந்த மதுரை மன்னன் சிங்ககேது, தம் ஆட்சி மன்ற உறுப்பினர் அறுபது வன்னியர்களை அழைத்துத் தனது மகளை இலங்கைக்கு அழைத்துச் சென்று வாலசிங்கராசாவுக்கு மணம் செய்விக்கும்படி கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி அறுபது வன்னியர் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களும் இளவரசி சாமதுதியை அழைத்துச் சென்று வாலசிங்க மகாராசருக்குத் திருமணம் செய்வித்தனர். 
இதன்பிறகு வன்னியர்களைச் சந்தித்த வாலசிங்க அரசன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அடங்காப்பற்று என்ற நாட்டைத் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்க இயலுமா? என்று கேட்டனர். அரசனும், “நீங்கள் அடங்காப்பற்று என அழைக்கப்படும் அந்நாட்டில் சென்று ஆளுங்கள். அங்குள்ள மிக மோசமானவர்களை அழியுங்கள். அங்கு குடியேறுங்கள். குளங்களைக் கட்டுங்கள், அத்துடன் யாழ்ப்பாண அரசன் கூழங்கை சக்கரவர்த்திக்குத் திறை செலுத்துங்கள்” எனக் கூறினான். வன்னியர்களில் ஒருவர் வாலசிங்க மகாராசாவின் திசாவையாக அனுராதபுரத்தில் நியமிக்கப்பட்டார். ஏனைய ஐம்பத்தொன்பதுபேரும் அடங்காப்பற்றுக்குச் சென்று ஆட்சி செய்தனர்”.(பக்கம் 15,16)

யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூல் வன்னியர்களின் குடியேற்றம் என்பது ஆயிரம் வருடத்துக்கு  முற்பட்ட காலம் எனக்கூறுகிறது.(பக்கம் 18).

1782 ம் ஆண்டில் தொடர்ச்சியான போர் நடைபெற்றது, டச்சுக்காரர் சக்திவாய்ந்த படையை எல்லா இடங்களிலும் நிறுவி, வன்னியர்களின் படைபலத்தைக் குலைத்தனர். டச்சுக்காரர்கள் வன்னியின் இராசகுமாரி வன்னிச்சி மரியா செம்பட்டி அவர்களின் உறுதியான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. டச்சுக்காரர்கள் இவளைச் சிறைபிடித்துக் கொழும்புக் கோட்டையில் வைத்தனர். (பக்கம். 22) என்ற வன்னியின் வரலாற்றுக் குறிப்புகளை இந்த நூல் எடுத்துரைக்கின்றது.

டச்சுக்காரர்கள் இலங்கையில் எவ்வாறு காலூன்றினர் என்பதை இந்நூலின் குறிப்புகள் நமக்குச் சிறப்பாகத் தெரிவிக்கின்றன. மேலும்17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் போர்ச்சுக்கீசியரிடமிருந்து இந்நாட்டைக் கைப்பற்றிய பின்னர் தமக்கு அடங்க மறுத்த கயிலாய வன்னியனைப் போரில் வெற்றிகண்டனர். மன்னார் மாவட்டம் முழுமையும் டச்சுக்காரர் வசமான பின்பும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் வன்னியர்களின் ஆட்சி தொடர்ந்தது.

1796 இல் இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்னர் வன்னியனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் பலமுறை போர் நடந்துள்ளது. வன்னியன் பலமுறை வெற்றிபெற்றான். 1803 இல்  கற்சிலை மடுவில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கிய கப்ரின் வண்ட் றிபேக்கின் படையால் தோற்கடிக்கப்பட்டான்.

பண்டாரவன்னியன் பனங்காமத்தில் தம் உடன்பிறந்தாளுடன் தங்கி மருத்துவம் பார்த்துக்கொண்டான். எதிரிகளை விரட்ட வேண்டும் என்ற நினைவில் இருந்த பண்டாரவன்னியன் 1811 இல் இயற்கை எய்தினான்.  வன்னியனின் இறப்புடன் வன்னிதேசம் முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று.

வடக்கில் அமைந்த யாழ்ப்பாண அரசுக்கோ, தெற்கில் அமைந்த கண்டியரசுக்கோ அடங்காப்பற்றாக விளங்கிய வன்னி என அழைக்கப்பெற்ற இப்பகுதி 1811 ஆம் ஆண்டுக்குப் பிறகு  இலங்கை தேசியத்துள் ஐக்கியமாயிற்று என்ற குறிப்புகளை இந்த நூலின் பல பகுதிகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன, இலங்கையின் ஒருபகுதியைத் தமிழகத்திலிருந்து பெருவீரத்துடன் சென்று வன்னியர் ஆட்சிசெய்துள்ளதை இந்த நூல் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

ஜே.பி.லூயிஸ் அவர்கள்  முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இருமாவட்டங்களில் 1892 ஆம் ஆண்டுக்கு முந்தியிருந்த நாட்குறிப்பேடுகளின் துணையுடன் இந்த நூலை உருவாக்கியுள்ளார். இந்த நூலில் வன்னி மாவட்டத்தில் இருந்த ஏரிகள், குளங்கள், இயற்கை வளங்கள் யாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, சமூக அமைப்பை அறிந்துகொள்வதற்கும் இந்த நூல் பயன்படுகின்றது.

1811 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலேயர் எவ்வாறு வன்னிப் பகுதியில் நிலைகொண்டனர் என்பதை நூலாசிரியர் ஜே.பி.லூயிஸ் பதிவுசெய்துள்ளார். அங்கங்கு உருவாக்கப்பட்ட கோட்டைகள், படைப்பிரிவுகள் பற்றிய பல குறிப்புகளைப் பார்க்கமுடிகின்றது. ஏரிகளும், குளங்களும் இயற்கைப் பேரிடர்களால் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்ற குறிப்புகளையும் ஆசிரியர் குறித்துள்ளார். 1802 இல் ஏற்பட்ட புயலில் ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்தன என்பதும் யானைகளால் பயிர்களுக்குக் கேடுகள் விளைந்தன என்பதும் இந்த நூலில் பதிவாகியுள்ளன(பக்கம்30).

ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னிப் பகுதி “ஒமில்தார்” என்பவரால்  நிர்வாகம் செய்யப்பட்டது. அடுத்து, சென்னையைச்(மெட்ராஸ்) சேர்ந்த கலெக்டர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரியால் ஆளப்பட்டது. அந்த பதவிப்பெயர் ”திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னிப்பிரதேச கொலெக்டர்” என்பதாகும்.

1807 ஆம் ஆண்டு மே மாதம்  வன்னி மாகாணம் புதியதாக உருவாக்கப்பட்டு அதன் தலைமை இடம் முல்லைத்தீவாக இருந்தது. “கௌரவ ஜோர்ஜ் ரேணர்” என்பவர் இப் புதிய மாகாணத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1808 இல் வன்னியில் கலெக்டர் என்னும் பதவிக்கு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் (பக்கம் 38). வன்னி என்ற புதிய மாவட்டம் 17 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஒவ்வொரு பெரும் பிரிவுக்கும் “மாகாண முதலியார்” என்ற தலைமைக்காரர் இருந்தார். அவருக்கு அடுத்து “போர்மாண்டோ” அல்லது “போர்மாண்ட முதலியார்” என்னும் பதவி இருந்தது.

உடையார், விதானையார், அடப்பன் என்னும் பதவிகளும் அக்காலத்தில் இருந்துள்ளன. 1810 இல் கலெக்டரின் மாதாந்தக் கொடுப்பனவுகள் 400 றிக்ஸ் டாலர் என்ற குறிப்பும் பிற அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவுகளும் இந்த நூலில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன(பக்கம் 42). ஆட்சித்துறை அதிகாரியின் வருடாந்த மொத்த ஊதியம் 7400 முதல் 7800 றிக்ஸ் டாலர் வரை  இருந்துள்ளது.

கலெக்டரின் முதற்செயல்பாடு அவருடைய மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்வது. தலைமைக்காரர், குடிமக்களைச் சந்திப்பதும் அவரின் செயலாக இருந்துள்ளது. கலெக்டரின் நாள்குறிப்பேட்டில் மக்கள்தொகை, கால்நடைகளில் எண்ணிக்கை, குளங்கள், பயிரிடப்பட்ட நிலப்பரப்பு, உணவு விநியோகம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இருந்துள்ளன.

1811 இல் கலெக்டரின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு முல்லைதீவில் தொடர்ந்து வசிக்க வேண்டாம் எனவும், காலத்திற்குக் காலம் தமது மாவட்டத்தைப் பார்த்தால் போதும் எனவும் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பையும் பார்க்கமுடிகின்றது.

 இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு என்ற இந்த நூலில் அக்காலத்தில் மாகாண எல்லைகள், அதில் அடங்கியிருந்த ஊர்கள் முதலியன சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

1806 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் தொகை 2944 எனவும், மொத்த மக்கள்தொகை 9000 எனவும் தெரியவருகின்றது. மக்கள் பல்வேறு காரணங்களுக்காக அன்று குடிபெயர்ந்துள்ள குறிப்புகளும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் குழப்பமானநிலை, பட்டினி போன்றவற்றால் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இக்காலத்தில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இறந்துள்ளன. 1881 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 15501 மக்கள்தொகை இருந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 1881 இன் கணக்கின்படி கிராமங்களின் தொகை 253 எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 ஆகவும் இருந்தது. புதிய புதிய கிராமங்கள் தோற்றம் பெற்றுள்ளன. கிராமங்கள் ஊர்கள் பற்றிய குறிப்புகள், சாலைகள், தொலைவுகள் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் பதிந்துவைக்கப்பட்டுள்ளன. வவுனியாவின் கிராமங்களும் மக்கள் தொகையும் குறித்த பட்டியல் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் 1817, 1839, 1881, 1891 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகள் இடம்பெறுள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் 1895 இல் இருந்த இனம் சாதி, தொழில், சமயம் சார்ந்த செய்திகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. வவுனியாவில் 76 சதவீதத்தினரும், முல்லைத்தீவில் 92 சதவீதத்தினரும் தமிழர்கள் என்று குறிப்பு இந்த நூலில் உள்ளது. வவுனியா மாவட்டத்தில்  இந்தக் கால கட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவான சிங்களர்களே வாழ்ந்துள்ளனர் என்கிறது இந்தக் கையேட்டு நூல். ஆண்டுதோறும் நானூறு முதல் ஐந்நூறு வரையிலான சிங்களர்கள் நீர்கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து மீன்பிடிதொழில் செய்வார்கள். 1891 இல் 701 முஸ்லீம்கள் வவுனியா மாவட்டத்தில் இருந்தனர். முல்லைத்தீவில் 438 முஸ்லீம்கள் இருந்துள்ளனர் என்கிறது கையேடு(பக்கம் 117).

1891 இல் பறங்கியர் போர்த்துக்கீசியர் 20 பேர் வவுனியாவிலும், 62 பேர் முல்லைத்தீவிலும் இருந்தார்கள். 13 கனடியர்கள் வவுனியாவிலும் முல்லைத்தீவில் ஒருவரும் இருந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 7 மலேசியரும், 4 ஆப்கானியர்களும் ஒரு கபீரும் இருந்துள்ளனர் என்ற குறிப்புகளைப் பார்க்கும்பொழுது இப்பகுதிகளில் தமிழர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்துள்ளமை தெளிவாகின்றது. தமிழர்களின் உட்சாதியினரின் எண்ணிக்கையும் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளது. 1817 இல்  40 மலையாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் மலையாளம் பேசுபவர்கள். வவுனியா மாவட்டத்தில் 6 தெலுங்கு பேசும் வடுகர்கள் இருந்துள்ளனர். 1807 இல் வன்னியில் 300 அடிமைகள் இருந்துள்ளனர். இவர்களுள் முக்கியமானவர்கள் நளவரும்,கோவியர்களுமாவர்.

மேலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் இருந்த நகை வியாபாரிகள், தட்டான், பித்தளைப் பாத்திரம் செய்வோர், ஒட்டுவேலை செய்வோர், கொல்லர், தச்சர், மரம் அரிவோர், வீடு கட்டுவோர், கல்லு உடைப்போர், எண்ணெய் வியாபாரிகள், குயவர், பாய்கூடைப் பின்னுவோர், குளம் கட்டுபவர்கள், வீதிவேலை செய்வோர்களின் எண்ணிக்கை ஆண் பெண் வரிசையில் தரப்பட்டுள்ளது(பக்கம் 126).

வவுனியா மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு கணக்கின்படி சிங்கள மக்களின் எண்ணிக்கை 970- 1000 அளவில் இருந்துள்ளது. இது அந்த மாவட்டத்து மக்கள் தொகையில் எட்டில் ஒன்றாகும். வன்னி தேசத்தில் இருந்த சிங்களர்களின் எண்ணிக்கை குறித்தும் இந்த நூலில் தகவல்கள் உள்ளன.

மண்டுக்கோட்டை(மடுக்கந்தை)தான் சிங்களர்கள் குடியேறிய முதல் கிராமமாகக் கருதப்படுகின்றது. 1810 ஆம் ஆண்டில் 30 குடும்பங்கள் மடுக்கந்தையில் வாழ்ந்தன(பக்கம் 135). 1871 இல் 850 சிங்களர்கள்தான் மன்னார் மாவட்டத்தில் காணப்பட்டார்கள் என்ற குறிப்பு இந்த நூலில் பதிவாகியுள்ளது(பக்கம் 137). சிங்களர்களின் உடை பழக்கவழக்கம் பற்றிய குறிப்புகளும் பதிவாகியுள்ளது.

வன்னி தேசத்தில் அரசின் வருவாய்க்குப் பலவகையில் வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. கடவுச்சீட்டு வரி குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயருக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. புராதன சடங்குகள் நடத்த வரி கட்டப்பட்டுள்ளது. திருமணம், பூப்பெய்தல், இளைஞர்கள் தலைப்பாகை அணிதல், காதணி விழாவின்பொழுது வரிகட்டும் பழக்கம் இருந்துள்ளது. சாதிக்கு ஏற்ப வரிகளும் சிலபொழுது இருந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நெல்லுக்கு அடுத்தபடியான வருவாய் உப்பு வருவாயாக இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விற்கப்பட்ட உப்பு எடையை இந்த நூலின் பட்டியல் தெளிவாகக் காட்டுகின்றது.

சுங்கவரி வழியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 1809-10 ஆம் ஆண்டுகளில் பாக்கு, பருத்தி, எள்ளுவிதை, மிளகு, தேன்மெழுகு உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. மரங்கள் மிகுதியாக விற்பனை செய்யப்பட்டதையும் ஒவ்வொரு மரத்தின் பயனையும் இந்த நூல் சிறப்பாக விளக்கியுள்ளது. குலா, குருந்து, கொக்கட்டி, மருது, மகிழ், நாவல், புன்னை, பூவரசு, சடவக்கு, தம்பனை, புளியமரம், வேம்பு, விடத்தல், விண்ணாங்கு,  முதலிய மரங்களின் சிறப்புகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. நெல்லின் வழியாகக் கிடைத்த வருவாயும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வன்னிதேசத்தில் இருந்த மக்களுக்கு ஏற்பட்ட  நோய்கள், மருந்துகள் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

வன்னியில் 1800 ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த அளவினான குற்ற மற்றும் நடவடிக்கைகளே இருந்துள்ளன. 1801 ஆம் ஆண்டில் சமாதான நீதிவான் பதவி உருவாக்கப்பட்டது. 1918 பெப்ரவரி முதலாந் திகதி குடியியல், குற்றவியல் வழக்கு ஐந்து மட்டுமே மன்றில் தீர்க்கப்பட வேண்டியவையாக இருந்தன.

1885-89 வரையிலான ஐந்தாண்டுக் காலப்பகுதியின்போது வவுனியாவில் நான்கும் முல்லைத்தீவில் பதினேழுமாக, இருபத்தொரு வழக்குகள் மட்டும் தொடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுக்கு மட்டுமே தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எருமை மாடுகள் திருடப்பட்டமைக்கும், பசுக்கள் திருடப்பட்டமைக்கும், நகையும் பணமும் திருடப்பட்டமைக்கும் முறைகேடான நடத்தைக்கும் கொள்ளைக்கும், நூறு கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன(325). அதிகாரிகளை அலட்சியம் செய்தல், ஆணைகளுக்குக் கட்டுப்படாமை, பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டமை, அஞ்சல்கொண்டுவரக் காலம் கடத்தியமைக்கு, ஓலைகளைக் கச்சேரிகளுக்கு வழங்கக் காலம் தாழ்த்தியமைக்குப் பிரம்படிகள் தண்டனையாக அக் காலங்கங்களில் விதிக்கப்பட்டுள்ளன.

வன்னியர்கள் ஆண்ட காலத்திலும், டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்திலும் வன்னியில் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை, நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மாடுகளின் எண்ணிக்கை முதலியனவும் இந்த நூலில் பதிவாகியுள்ளன. எருமை மாடுகள் பலவகையான வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எருதுகள் உழுவுதற்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. மாடுகளின் மேய்ச்சல் குறித்த விவரங்களும் இந்த நூலில் பதிவாகியுள்ளன. கட்டாக்காலி மாடுகள் வயல்களில் இருந்த பயிர்களை மேய்ந்தமைக்கு பயிர் இழப்பீடு 354 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவிற்கு ஒரு தபாலுக்கு ஒரு பணம், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பணம், அதே போன்று இடைப்பட்ட நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் தபால்களுக்கும் தபால் ஒன்றுக்கு ஒரு பணம் அளவிடப்படும்.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வழியாகக் கொழும்பிற்கு ஏழு பணம் அளவிடப்படும் என்ற குறிப்புகளிலிருந்து அக்காலத்தில் இருந்த அஞ்சல்சேவை குறித்த விவரங்களை அறியலாம். வன்னியில் உள்ள தபால் அலுவலங்களுக்கு அங்கு வசிப்பவர்கள் வரியாகப் பத்துசதவீதம் செலுத்தியுள்ளனர். அக்காலத்தில் இருந்த தபால் நிலையங்கள், சேவைகள் குறித்த விவரங்களும் இந்த நூலில் பதிவாகியுள்ளன.

வன்னிப்பகுதியில் இருந்த மக்கள் மூட நம்பிக்கைகள் மிகுந்தவர்களாக இருந்துள்ளனர். கிராமங்கள் சிலவற்றைப் பேயுறையும் இடமாகவோ, பிள்ளையாரின் கோபத்துக்கு ஆட்பட்டதாகவோ கருதி அவற்றைக் கைவிட்டுள்ளனர். மந்திரங்கள், மாந்திரீகங்களில் நம்பிக்கை இருந்துள்ளது. பாம்புகடி, மாறாத உடல்நலமின்மை போன்றவற்றிற்குக் கந்தபுராணம் படிக்கும் பழக்கம் இருந்தள்ளது. பாம்புக்கடிக்கு இன்னொரு மருந்தாக நயினாதீவு நாக தம்பிரான் கோயிலிருந்து பெறப்படும் மண்ணும் திருநீறுங் கலந்த கலவை இருந்தது. இந்தக் கலவை தண்ணீரில் கலக்கப்பட்டு, பாம்புகடிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.(பக்கம் 356).
கருநாவல் பற்றுப் பிரதேசத்தில் காலரா பரவியபொழுது பெண்கள் தம்மைத் “தூய்மைப் படுத்துவதற்காக” கோயில்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வன்னிப்பகுதியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அமைந்த வெப்பம்,மழை குறித்த தகவல்களும் இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1808 நவம்பர் 30 இல் முல்லைத்ததீவில் கொடும்புயல் ஒன்று ஏற்பட்டுப் பெரும் சேதம் விளைவித்துள்ளது. 1814 நவம்பர் 25 இல் வன்னி முழுவதும் கொடும்புயல் வீசியுள்ளது. பல உயிர்களைப் பலிவாங்கியது. வீடுகள்,தென்னை மரங்கள், பழமரங்கள் முறிந்து வீழ்ந்தன. வீட்டுப் பொருள்கள் அழிந்தன.

வன்னிப்பகுதியில் இருந்த தொல்பொருள் எச்சங்கள் குறித்த குறிப்புகளையும் இந்த நூல் குறிப்பிடுகின்றது. அப்பகுதியில் இருந்த பழைமையான மதகுகள், கலிங்குகள், குளங்கள் குறித்த சிறந்த குறிப்புகளை இந்த நூலில் காணலாம். ஆளுநர், கலெக்டர் உள்ளிட்ட ஆங்கிலேயை அதிகாரிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் மேற்கொண்ட பயணங்கள் குறித்த குறிப்புகளும், விவரங்களும் இந்த நூலில் அடங்கியுள்ளன. அக்காலத்தில் கடலில் சென்ற கப்பல், படகுகள் உடைந்து கரையொதுங்கிய விவரங்களும் பதிவாகியுள்ளன.

முல்லைத்தீவு, வவுனியா பகுதியினை ஆண்டவர்களின் வீரவரலாறு, வளர்ச்சி, ஆங்கிலேயரின் செல்வாக்கு, அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள், குடிபெயர்ந்தவர்களின் தொழில்கள், ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைப்படுத்த செய்த முயற்சிகள், கல்வி, மருத்துவம், வழங்குதுறை சேவைகள் குறித்த முக்கியமான தகவல்களை இந்தக் கையேடு தருகின்றது.

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வன்னிப் பிரதேசத்தின் வரலாற்றையும், அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை, தொழில்முறைகளையும் அறிவதற்கு இந்தக் கையேடு பெருந்துணைபுரியும். நாட்குறிப்பேடு, பழையவரலாறு, ஆட்சி அதிகார ஆவணங்களின் சான்றுகளின் அடிப்படையில் உருவான இந்த நூலை இலங்கைத் தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக வன்னிப் பகுதி மக்கள் தங்கள் அடிச்சுவடுகளை அறிய இந்த நூலைக் கட்டாயம் பயில வேண்டும். நூல் வெளியீட்டில் முன்னின்ற அனைவரும் நம் பாராட்டிற்கு உரியவர்கள்.

நூல்: இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு
நூலாசிரியர்: ஜே.பி.லூயிஸ்
வெளியீடு: வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை
பதிப்பகம்: சேமமடு பதிப்பகம், கொழும்பு 11.
     விலை 1200 – இலங்கை விலை   

நன்றி: திரு. சரவணபவன், இலங்கை

கருத்துகள் இல்லை: