யாழ்நூல் என்னும் அரிய நூலினைப் படைத்த தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பணிகள்(1892-1947) போதிய அளவு தமிழுலகுக்குத் தெரியாமல் உள்ளதை அண்மைக்காலமாக அறிகின்றேன்.
விபுலாநந்தரின் பன்முக ஆற்றலும்
வெளிப்படும் வகையில் அவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். எனவே விபுலாநந்தர்
தொடர்புடைய அறிஞர்கள், துறவியர்கள், ஆய்வாளர்கள், அன்பர்கள், பற்றாளர்கள்,
ஊரினர், உறவினர் தங்களிடம் உள்ள குறிப்புகள்,
படங்கள், கையெழுத்துப்படிகள், மடல்கள், நூல்கள் குறித்த விவரங்களை muelangovan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத்
தொடர்புகொண்டு பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 8 செப்டம்பர், 2016
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு, நூலறிமுகம்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சென்னை
மாகாணத்தில் அடங்கியிருந்த மாவட்டங்கள் குறித்த கையேடுகளை (Gazetteer) வெளியிட்டனர்.
அவ்வகையில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வடார்க்காடு, தொன்னார்க்காடு
முதலிய 9 மாவட்டங்களுக்குக் கையேடுகள் வந்துள்ளன.
அந்தவகையில் இலங்கையின் வன்னி மாவட்டத்துக்கு ஒரு கையேடு வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஜே.பி.லூயிஸ்(J.P.Lewis). இவர் எழுதிய நூல் வன்னி மாவட்டங்கள் (A Manual of the vanni Districts) என்பதாகும். இந்தக் கையேடு 1895 இல் வெளிவந்துள்ளது. இந்தக் கையேட்டில் வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்கள் குறித்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் இலங்கையின் வன்னி மாவட்டத்துக்கு ஒரு கையேடு வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஜே.பி.லூயிஸ்(J.P.Lewis). இவர் எழுதிய நூல் வன்னி மாவட்டங்கள் (A Manual of the vanni Districts) என்பதாகும். இந்தக் கையேடு 1895 இல் வெளிவந்துள்ளது. இந்தக் கையேட்டில் வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்கள் குறித்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் முதல்பதிப்பு கண்ட இந்த நூலினை
மொழிபெயர்த்து இரண்டாம் பதிப்பாகத் தமிழில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன
சபை வெளியிட்டுள்ளது(2012). தமிழர்களின் அரிய ஆவணத்தை வெளியிட்டுள்ள கண்ணகி அம்மன்
ஆலய பரிபாலன சபைக்கும் மொழிபெயர்ப்புக் குழுவினருக்கும் நம் நன்றியும் பாராட்டுகளும்.
இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு
என்னும் இந்த நூல் 506 பக்கங்களைக் கொண்டு 1200 உருவா விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
நூலின் முகப்பில் முன்னுரை, அறிமுகம், பதிப்புரை,
வெளியீட்டு உரை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய குறிப்பும் அறிமுகமும், மூல நூலாசிரியரின்
உரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. வன்னிப் பிரதேசத்தின் வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது.
நூலின் உள்ளடக்கமாகத் தரைத்தோற்ற விவரணம்
- பௌதிக அம்சங்கள், வரலாற்றுச் சுருக்கம், நிருவாகம், குடித்தொகை, பிரிவுகளும் கிராமங்களும்,
இனம், சாதி, தொழில், சமயம்; வன்னியில் சிங்களவர்கள், வருமானம் - பொது, வருமானம் - உப்பு,
வருமானம் - சுங்கம், வருமானம் - மரம், வருமானம்- நெல்லும் உலர்தானியங்களும், நிலம்(காணி)
உடைமையுரிமை, விவசாயம், நீர்ப்பாசனம், விவசாயம் - நெல்வேளாண்மை, விவசாயம் - உலர்தானியப்
பயிர்ச் செய்கை, நானா வித விவசாயம், மீன்பிடித் தளங்கள், உழைப்பு - வேதனம், கால் நாடை,
வீதிகள், தபால்சேவை(அஞ்சல்), நிறுவைகளும் அளவைகளும், விலை, குற்றமும் சட்ட நடவடிக்கைகளும்,
ஆரோக்கியமும் சுகாதாரமும், மக்களின் சமூகநிலை, காலநிலை, தாவரங்கள், விலங்கினங்கள்,
தொல்பொருளியல், நானாவித தகவல்கள், அபிவிருத்திக்கான திட்டங்கள் என்னும் தலைப்புகளில்
மிக முதன்மையான செய்திகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் வன்னி என்னும் பகுதி வடதிசையில்
யாழ்ப்பாண ஏரியையும், தென்திசையில் அருவியாற்றையும், கிழக்கே திருகோணமலையையும் மேற்கே
மன்னார் மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டு
விளங்கியது. வன்னியின் வடபகுதி முல்லைத்தீவு மாவட்டமாகவும், தென்பகுதி வவுனியா
மாவட்டமாகவும் விளங்கியது.
வன்னி என்ற பெயர்க்காரணம் பற்றிய பலகுறிப்புகளை
இந்த நூல் தாங்கியுள்ளது. தமிழர்களின் வரலாற்றின்படி இந்தியாவிலிருந்து வந்து ஆட்சி
செய்த வன்னியர்களிடமிருந்து பெறப்பட்ட பகுதி இந்த வன்னி என்று வரலாற்று ஆசிரியர்கள்
குறிப்பதை இந்த நூலின் அடிக்குறிப்பு காட்டுகின்றது(பக்கம்.11). திருகோணமலைப் பிரதேசமும்
வன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததையும், தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்த வன்னியர்களின்
பட்டியலைக் கோணேசர் கல்வெட்டு என்னும் நூலின் வழி அறியலாம் என்ற முன்னுரைப் பகுதியும்
குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வன்னி எனும் பெயரை இப் பிரதேசம் பொறுவதற்கு
முதல் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. ஏனெனில் வன்னிப்பிரதேசம் யாழ்ப்பாணத்திலிருந்தும்,
அனுராதபுரத்திலிருந்தும் சுதந்திரமாக இருந்தது.
இலங்கையை ஆண்ட மன்னன் வாலசிங்க என்பவன் மதுரையை
ஆண்ட சிங்ககேதுவின் புதல்வி, இளவரசி சாமதுதியை மணம் செய்ய எண்ணித் தம் தூதுவர்களை அனுப்பினார்.
இதனை உணர்ந்த மதுரை மன்னன் சிங்ககேது, தம் ஆட்சி மன்ற உறுப்பினர் அறுபது வன்னியர்களை
அழைத்துத் தனது மகளை இலங்கைக்கு அழைத்துச் சென்று வாலசிங்கராசாவுக்கு மணம் செய்விக்கும்படி
கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி அறுபது வன்னியர் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களும்
இளவரசி சாமதுதியை அழைத்துச் சென்று வாலசிங்க மகாராசருக்குத் திருமணம் செய்வித்தனர்.
இதன்பிறகு வன்னியர்களைச் சந்தித்த வாலசிங்க
அரசன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அடங்காப்பற்று என்ற நாட்டைத் எங்களுக்கு
அன்பளிப்பாக வழங்க இயலுமா? என்று கேட்டனர். அரசனும், “நீங்கள் அடங்காப்பற்று என அழைக்கப்படும்
அந்நாட்டில் சென்று ஆளுங்கள். அங்குள்ள மிக மோசமானவர்களை அழியுங்கள். அங்கு குடியேறுங்கள்.
குளங்களைக் கட்டுங்கள், அத்துடன் யாழ்ப்பாண அரசன் கூழங்கை சக்கரவர்த்திக்குத் திறை
செலுத்துங்கள்” எனக் கூறினான். வன்னியர்களில் ஒருவர் வாலசிங்க மகாராசாவின் திசாவையாக
அனுராதபுரத்தில் நியமிக்கப்பட்டார். ஏனைய ஐம்பத்தொன்பதுபேரும் அடங்காப்பற்றுக்குச்
சென்று ஆட்சி செய்தனர்”.(பக்கம் 15,16)
யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூல் வன்னியர்களின்
குடியேற்றம் என்பது ஆயிரம் வருடத்துக்கு முற்பட்ட
காலம் எனக்கூறுகிறது.(பக்கம் 18).
1782 ம் ஆண்டில் தொடர்ச்சியான போர் நடைபெற்றது,
டச்சுக்காரர் சக்திவாய்ந்த படையை எல்லா இடங்களிலும் நிறுவி, வன்னியர்களின் படைபலத்தைக்
குலைத்தனர். டச்சுக்காரர்கள் வன்னியின் இராசகுமாரி வன்னிச்சி மரியா செம்பட்டி அவர்களின்
உறுதியான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. டச்சுக்காரர்கள் இவளைச் சிறைபிடித்துக்
கொழும்புக் கோட்டையில் வைத்தனர். (பக்கம். 22) என்ற வன்னியின் வரலாற்றுக் குறிப்புகளை
இந்த நூல் எடுத்துரைக்கின்றது.
டச்சுக்காரர்கள் இலங்கையில் எவ்வாறு காலூன்றினர்
என்பதை இந்நூலின் குறிப்புகள் நமக்குச் சிறப்பாகத் தெரிவிக்கின்றன. மேலும்17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் போர்ச்சுக்கீசியரிடமிருந்து
இந்நாட்டைக் கைப்பற்றிய பின்னர் தமக்கு அடங்க மறுத்த கயிலாய வன்னியனைப் போரில் வெற்றிகண்டனர்.
மன்னார் மாவட்டம் முழுமையும் டச்சுக்காரர் வசமான பின்பும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில்
வன்னியர்களின் ஆட்சி தொடர்ந்தது.
1796 இல் இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்றிய
பின்னர் வன்னியனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் பலமுறை போர் நடந்துள்ளது. வன்னியன்
பலமுறை வெற்றிபெற்றான். 1803 இல் கற்சிலை மடுவில்
மறைந்திருந்து திடீரெனத் தாக்கிய கப்ரின் வண்ட் றிபேக்கின் படையால் தோற்கடிக்கப்பட்டான்.
பண்டாரவன்னியன் பனங்காமத்தில் தம் உடன்பிறந்தாளுடன்
தங்கி மருத்துவம் பார்த்துக்கொண்டான். எதிரிகளை விரட்ட வேண்டும் என்ற நினைவில் இருந்த
பண்டாரவன்னியன் 1811 இல் இயற்கை எய்தினான்.
வன்னியனின் இறப்புடன் வன்னிதேசம் முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று.
வடக்கில் அமைந்த யாழ்ப்பாண அரசுக்கோ, தெற்கில்
அமைந்த கண்டியரசுக்கோ அடங்காப்பற்றாக விளங்கிய வன்னி என அழைக்கப்பெற்ற இப்பகுதி
1811 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை தேசியத்துள்
ஐக்கியமாயிற்று என்ற குறிப்புகளை இந்த நூலின் பல பகுதிகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன,
இலங்கையின் ஒருபகுதியைத் தமிழகத்திலிருந்து பெருவீரத்துடன் சென்று வன்னியர் ஆட்சிசெய்துள்ளதை
இந்த நூல் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.
ஜே.பி.லூயிஸ் அவர்கள் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இருமாவட்டங்களில்
1892 ஆம் ஆண்டுக்கு முந்தியிருந்த நாட்குறிப்பேடுகளின் துணையுடன் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.
இந்த நூலில் வன்னி மாவட்டத்தில் இருந்த ஏரிகள், குளங்கள், இயற்கை வளங்கள் யாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, சமூக அமைப்பை அறிந்துகொள்வதற்கும் இந்த நூல் பயன்படுகின்றது.
1811 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலேயர் எவ்வாறு
வன்னிப் பகுதியில் நிலைகொண்டனர் என்பதை நூலாசிரியர் ஜே.பி.லூயிஸ் பதிவுசெய்துள்ளார்.
அங்கங்கு உருவாக்கப்பட்ட கோட்டைகள், படைப்பிரிவுகள் பற்றிய பல குறிப்புகளைப் பார்க்கமுடிகின்றது.
ஏரிகளும், குளங்களும் இயற்கைப் பேரிடர்களால் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்ற குறிப்புகளையும்
ஆசிரியர் குறித்துள்ளார். 1802 இல் ஏற்பட்ட புயலில் ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்தன
என்பதும் யானைகளால் பயிர்களுக்குக் கேடுகள் விளைந்தன என்பதும் இந்த நூலில் பதிவாகியுள்ளன(பக்கம்30).
ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னிப் பகுதி “ஒமில்தார்”
என்பவரால் நிர்வாகம் செய்யப்பட்டது. அடுத்து,
சென்னையைச்(மெட்ராஸ்) சேர்ந்த கலெக்டர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரியால்
ஆளப்பட்டது. அந்த பதவிப்பெயர் ”திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னிப்பிரதேச கொலெக்டர்”
என்பதாகும்.
1807 ஆம் ஆண்டு மே மாதம் வன்னி மாகாணம் புதியதாக உருவாக்கப்பட்டு அதன் தலைமை
இடம் முல்லைத்தீவாக இருந்தது. “கௌரவ ஜோர்ஜ் ரேணர்” என்பவர் இப் புதிய மாகாணத்துக்குப்
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1808 இல் வன்னியில் கலெக்டர் என்னும் பதவிக்கு
அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் (பக்கம் 38). வன்னி என்ற புதிய மாவட்டம் 17 பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஒவ்வொரு பெரும் பிரிவுக்கும் “மாகாண முதலியார்” என்ற தலைமைக்காரர்
இருந்தார். அவருக்கு அடுத்து “போர்மாண்டோ” அல்லது “போர்மாண்ட முதலியார்” என்னும் பதவி
இருந்தது.
உடையார், விதானையார், அடப்பன் என்னும் பதவிகளும்
அக்காலத்தில் இருந்துள்ளன. 1810 இல் கலெக்டரின் மாதாந்தக் கொடுப்பனவுகள் 400 றிக்ஸ்
டாலர் என்ற குறிப்பும் பிற அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவுகளும் இந்த நூலில் பட்டியலிட்டுக்
காட்டப்பட்டுள்ளன(பக்கம் 42). ஆட்சித்துறை அதிகாரியின் வருடாந்த மொத்த ஊதியம் 7400
முதல் 7800 றிக்ஸ் டாலர் வரை இருந்துள்ளது.
கலெக்டரின் முதற்செயல்பாடு அவருடைய மாகாணத்தில்
சுற்றுப்பயணம் செய்வது. தலைமைக்காரர், குடிமக்களைச் சந்திப்பதும் அவரின் செயலாக இருந்துள்ளது.
கலெக்டரின் நாள்குறிப்பேட்டில் மக்கள்தொகை, கால்நடைகளில் எண்ணிக்கை, குளங்கள், பயிரிடப்பட்ட
நிலப்பரப்பு, உணவு விநியோகம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இருந்துள்ளன.
1811 இல் கலெக்டரின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு
முல்லைதீவில் தொடர்ந்து வசிக்க வேண்டாம் எனவும், காலத்திற்குக் காலம் தமது மாவட்டத்தைப்
பார்த்தால் போதும் எனவும் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பையும்
பார்க்கமுடிகின்றது.
இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு என்ற இந்த
நூலில் அக்காலத்தில் மாகாண எல்லைகள், அதில் அடங்கியிருந்த ஊர்கள் முதலியன சிறப்பாகப்
பதிவாகியுள்ளன.
1806 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி ஆண்களின் தொகை 2944 எனவும், மொத்த மக்கள்தொகை 9000 எனவும் தெரியவருகின்றது.
மக்கள் பல்வேறு காரணங்களுக்காக அன்று குடிபெயர்ந்துள்ள குறிப்புகளும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் குழப்பமானநிலை, பட்டினி போன்றவற்றால் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இக்காலத்தில்
பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இறந்துள்ளன. 1881 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி
15501 மக்கள்தொகை இருந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 1881 இன் கணக்கின்படி
கிராமங்களின் தொகை 253 எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 ஆகவும் இருந்தது. புதிய
புதிய கிராமங்கள் தோற்றம் பெற்றுள்ளன. கிராமங்கள் ஊர்கள் பற்றிய குறிப்புகள், சாலைகள்,
தொலைவுகள் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் பதிந்துவைக்கப்பட்டுள்ளன. வவுனியாவின்
கிராமங்களும் மக்கள் தொகையும் குறித்த பட்டியல் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இதில்
1817, 1839, 1881, 1891 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகள் இடம்பெறுள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில்
1895 இல் இருந்த இனம் சாதி, தொழில், சமயம் சார்ந்த செய்திகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
வவுனியாவில் 76 சதவீதத்தினரும், முல்லைத்தீவில் 92 சதவீதத்தினரும் தமிழர்கள் என்று
குறிப்பு இந்த நூலில் உள்ளது. வவுனியா மாவட்டத்தில் இந்தக் கால கட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவான சிங்களர்களே
வாழ்ந்துள்ளனர் என்கிறது இந்தக் கையேட்டு நூல். ஆண்டுதோறும் நானூறு முதல் ஐந்நூறு வரையிலான
சிங்களர்கள் நீர்கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து மீன்பிடிதொழில் செய்வார்கள்.
1891 இல் 701 முஸ்லீம்கள் வவுனியா மாவட்டத்தில் இருந்தனர். முல்லைத்தீவில் 438 முஸ்லீம்கள்
இருந்துள்ளனர் என்கிறது கையேடு(பக்கம் 117).
1891 இல் பறங்கியர் போர்த்துக்கீசியர்
20 பேர் வவுனியாவிலும், 62 பேர் முல்லைத்தீவிலும் இருந்தார்கள். 13 கனடியர்கள் வவுனியாவிலும்
முல்லைத்தீவில் ஒருவரும் இருந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 7 மலேசியரும், 4 ஆப்கானியர்களும்
ஒரு கபீரும் இருந்துள்ளனர் என்ற குறிப்புகளைப் பார்க்கும்பொழுது இப்பகுதிகளில் தமிழர்கள்
பெரிய எண்ணிக்கையில் இருந்துள்ளமை தெளிவாகின்றது. தமிழர்களின் உட்சாதியினரின் எண்ணிக்கையும்
இந்த நூலில் காட்டப்பட்டுள்ளது. 1817 இல்
40 மலையாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் மலையாளம் பேசுபவர்கள். வவுனியா மாவட்டத்தில்
6 தெலுங்கு பேசும் வடுகர்கள் இருந்துள்ளனர். 1807 இல் வன்னியில் 300 அடிமைகள் இருந்துள்ளனர்.
இவர்களுள் முக்கியமானவர்கள் நளவரும்,கோவியர்களுமாவர்.
மேலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் இருந்த
நகை வியாபாரிகள், தட்டான், பித்தளைப் பாத்திரம் செய்வோர், ஒட்டுவேலை செய்வோர், கொல்லர்,
தச்சர், மரம் அரிவோர், வீடு கட்டுவோர், கல்லு உடைப்போர், எண்ணெய் வியாபாரிகள், குயவர்,
பாய்கூடைப் பின்னுவோர், குளம் கட்டுபவர்கள், வீதிவேலை செய்வோர்களின் எண்ணிக்கை ஆண்
பெண் வரிசையில் தரப்பட்டுள்ளது(பக்கம் 126).
வவுனியா மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு கணக்கின்படி
சிங்கள மக்களின் எண்ணிக்கை 970- 1000 அளவில் இருந்துள்ளது. இது அந்த மாவட்டத்து மக்கள்
தொகையில் எட்டில் ஒன்றாகும். வன்னி தேசத்தில் இருந்த சிங்களர்களின் எண்ணிக்கை குறித்தும்
இந்த நூலில் தகவல்கள் உள்ளன.
மண்டுக்கோட்டை(மடுக்கந்தை)தான் சிங்களர்கள்
குடியேறிய முதல் கிராமமாகக் கருதப்படுகின்றது. 1810 ஆம் ஆண்டில் 30 குடும்பங்கள் மடுக்கந்தையில்
வாழ்ந்தன(பக்கம் 135). 1871 இல் 850 சிங்களர்கள்தான் மன்னார் மாவட்டத்தில் காணப்பட்டார்கள்
என்ற குறிப்பு இந்த நூலில் பதிவாகியுள்ளது(பக்கம் 137). சிங்களர்களின் உடை பழக்கவழக்கம்
பற்றிய குறிப்புகளும் பதிவாகியுள்ளது.
வன்னி தேசத்தில் அரசின் வருவாய்க்குப் பலவகையில்
வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. கடவுச்சீட்டு வரி குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயருக்கும்
அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. புராதன சடங்குகள்
நடத்த வரி கட்டப்பட்டுள்ளது. திருமணம், பூப்பெய்தல், இளைஞர்கள் தலைப்பாகை அணிதல், காதணி
விழாவின்பொழுது வரிகட்டும் பழக்கம் இருந்துள்ளது. சாதிக்கு ஏற்ப வரிகளும் சிலபொழுது
இருந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நெல்லுக்கு அடுத்தபடியான வருவாய் உப்பு வருவாயாக
இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விற்கப்பட்ட உப்பு எடையை இந்த நூலின் பட்டியல் தெளிவாகக்
காட்டுகின்றது.
சுங்கவரி வழியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
1809-10 ஆம் ஆண்டுகளில் பாக்கு, பருத்தி, எள்ளுவிதை, மிளகு, தேன்மெழுகு உள்ளிட்ட பொருள்கள்
ஏற்றுமதியாகியுள்ளன. மரங்கள் மிகுதியாக விற்பனை செய்யப்பட்டதையும் ஒவ்வொரு மரத்தின்
பயனையும் இந்த நூல் சிறப்பாக விளக்கியுள்ளது. குலா, குருந்து, கொக்கட்டி, மருது, மகிழ்,
நாவல், புன்னை, பூவரசு, சடவக்கு, தம்பனை, புளியமரம், வேம்பு, விடத்தல், விண்ணாங்கு, முதலிய மரங்களின் சிறப்புகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
நெல்லின் வழியாகக் கிடைத்த வருவாயும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வன்னிதேசத்தில் இருந்த மக்களுக்கு ஏற்பட்ட நோய்கள், மருந்துகள் பற்றிய குறிப்புகளும் இந்த
நூலில் இடம்பெற்றுள்ளன.
வன்னியில் 1800 ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த
அளவினான குற்ற மற்றும் நடவடிக்கைகளே இருந்துள்ளன. 1801 ஆம் ஆண்டில் சமாதான நீதிவான்
பதவி உருவாக்கப்பட்டது. 1918 பெப்ரவரி முதலாந் திகதி குடியியல், குற்றவியல் வழக்கு
ஐந்து மட்டுமே மன்றில் தீர்க்கப்பட வேண்டியவையாக இருந்தன.
1885-89 வரையிலான ஐந்தாண்டுக் காலப்பகுதியின்போது
வவுனியாவில் நான்கும் முல்லைத்தீவில் பதினேழுமாக, இருபத்தொரு வழக்குகள் மட்டும் தொடுக்கப்பட்டன.
இவற்றில் ஒன்றுக்கு மட்டுமே தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எருமை மாடுகள் திருடப்பட்டமைக்கும், பசுக்கள்
திருடப்பட்டமைக்கும், நகையும் பணமும் திருடப்பட்டமைக்கும் முறைகேடான நடத்தைக்கும் கொள்ளைக்கும்,
நூறு கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன(325). அதிகாரிகளை அலட்சியம் செய்தல், ஆணைகளுக்குக்
கட்டுப்படாமை, பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டமை, அஞ்சல்கொண்டுவரக் காலம் கடத்தியமைக்கு,
ஓலைகளைக் கச்சேரிகளுக்கு வழங்கக் காலம் தாழ்த்தியமைக்குப் பிரம்படிகள் தண்டனையாக அக்
காலங்கங்களில் விதிக்கப்பட்டுள்ளன.
வன்னியர்கள் ஆண்ட காலத்திலும், டச்சுக்காரர்களின்
ஆட்சிக்காலத்திலும் வன்னியில் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை, நோயால் பாதிக்கப்பட்டு
இறந்த மாடுகளின் எண்ணிக்கை முதலியனவும் இந்த நூலில் பதிவாகியுள்ளன. எருமை மாடுகள் பலவகையான
வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எருதுகள் உழுவுதற்கும், வண்டி இழுப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டன. மாடுகளின் மேய்ச்சல் குறித்த விவரங்களும் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
கட்டாக்காலி மாடுகள் வயல்களில் இருந்த பயிர்களை மேய்ந்தமைக்கு பயிர் இழப்பீடு 354 ரூபாய்
என மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவிற்கு
ஒரு தபாலுக்கு ஒரு பணம், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பணம், அதே போன்று
இடைப்பட்ட நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் தபால்களுக்கும் தபால் ஒன்றுக்கு ஒரு பணம்
அளவிடப்படும்.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வழியாகக்
கொழும்பிற்கு ஏழு பணம் அளவிடப்படும் என்ற குறிப்புகளிலிருந்து அக்காலத்தில் இருந்த
அஞ்சல்சேவை குறித்த விவரங்களை அறியலாம். வன்னியில் உள்ள தபால் அலுவலங்களுக்கு அங்கு
வசிப்பவர்கள் வரியாகப் பத்துசதவீதம் செலுத்தியுள்ளனர். அக்காலத்தில் இருந்த தபால் நிலையங்கள்,
சேவைகள் குறித்த விவரங்களும் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
வன்னிப்பகுதியில் இருந்த மக்கள் மூட நம்பிக்கைகள்
மிகுந்தவர்களாக இருந்துள்ளனர். கிராமங்கள் சிலவற்றைப் பேயுறையும் இடமாகவோ, பிள்ளையாரின்
கோபத்துக்கு ஆட்பட்டதாகவோ கருதி அவற்றைக் கைவிட்டுள்ளனர். மந்திரங்கள், மாந்திரீகங்களில்
நம்பிக்கை இருந்துள்ளது. பாம்புகடி, மாறாத உடல்நலமின்மை போன்றவற்றிற்குக் கந்தபுராணம்
படிக்கும் பழக்கம் இருந்தள்ளது. பாம்புக்கடிக்கு இன்னொரு மருந்தாக நயினாதீவு நாக தம்பிரான்
கோயிலிருந்து பெறப்படும் மண்ணும் திருநீறுங் கலந்த கலவை இருந்தது. இந்தக் கலவை தண்ணீரில்
கலக்கப்பட்டு, பாம்புகடிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.(பக்கம் 356).
கருநாவல் பற்றுப் பிரதேசத்தில் காலரா பரவியபொழுது
பெண்கள் தம்மைத் “தூய்மைப் படுத்துவதற்காக” கோயில்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வன்னிப்பகுதியில் ஒவ்வொரு காலகட்டத்திலும்
அமைந்த வெப்பம்,மழை குறித்த தகவல்களும் இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1808 நவம்பர் 30 இல் முல்லைத்ததீவில் கொடும்புயல் ஒன்று ஏற்பட்டுப் பெரும் சேதம் விளைவித்துள்ளது.
1814 நவம்பர் 25 இல் வன்னி முழுவதும் கொடும்புயல் வீசியுள்ளது. பல உயிர்களைப் பலிவாங்கியது.
வீடுகள்,தென்னை மரங்கள், பழமரங்கள் முறிந்து வீழ்ந்தன. வீட்டுப் பொருள்கள் அழிந்தன.
வன்னிப்பகுதியில் இருந்த தொல்பொருள் எச்சங்கள்
குறித்த குறிப்புகளையும் இந்த நூல் குறிப்பிடுகின்றது. அப்பகுதியில் இருந்த பழைமையான
மதகுகள், கலிங்குகள், குளங்கள் குறித்த சிறந்த குறிப்புகளை இந்த நூலில் காணலாம். ஆளுநர்,
கலெக்டர் உள்ளிட்ட ஆங்கிலேயை அதிகாரிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில்
மேற்கொண்ட பயணங்கள் குறித்த குறிப்புகளும், விவரங்களும் இந்த நூலில் அடங்கியுள்ளன.
அக்காலத்தில் கடலில் சென்ற கப்பல், படகுகள் உடைந்து கரையொதுங்கிய விவரங்களும் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு, வவுனியா பகுதியினை ஆண்டவர்களின்
வீரவரலாறு, வளர்ச்சி, ஆங்கிலேயரின் செல்வாக்கு, அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள்,
குடிபெயர்ந்தவர்களின் தொழில்கள், ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைப்படுத்த செய்த
முயற்சிகள், கல்வி, மருத்துவம், வழங்குதுறை சேவைகள் குறித்த முக்கியமான தகவல்களை இந்தக்
கையேடு தருகின்றது.
இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வன்னிப் பிரதேசத்தின்
வரலாற்றையும், அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை, தொழில்முறைகளையும்
அறிவதற்கு இந்தக் கையேடு பெருந்துணைபுரியும். நாட்குறிப்பேடு, பழையவரலாறு, ஆட்சி அதிகார
ஆவணங்களின் சான்றுகளின் அடிப்படையில் உருவான இந்த நூலை இலங்கைத் தமிழர்கள் கட்டாயம்
படிக்க வேண்டும். குறிப்பாக வன்னிப் பகுதி மக்கள் தங்கள் அடிச்சுவடுகளை அறிய இந்த நூலைக்
கட்டாயம் பயில வேண்டும். நூல் வெளியீட்டில் முன்னின்ற அனைவரும் நம் பாராட்டிற்கு உரியவர்கள்.
நூல்: இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு
கையேடு
நூலாசிரியர்: ஜே.பி.லூயிஸ்
வெளியீடு: வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய
பரிபாலன சபை
பதிப்பகம்: சேமமடு பதிப்பகம், கொழும்பு
11.
விலை 1200 – இலங்கை விலை
நன்றி: திரு. சரவணபவன், இலங்கை
திங்கள், 5 ஜூலை, 2010
இலங்கை எழுத்தாளர் கலாபூசணம் புன்னியாமீன் நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன...
.jpg)
கலாபூசணம் புன்னியாமீன்
இலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர்.உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன்.இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.
தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும், ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.
1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான 'ஞாயிறு தினக்குரலில்' எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.
இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’ எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
பயிற்றப்பட்ட கணித, அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது, பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.
‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010
இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா
அந்தனி ஜீவா
புதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும். நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா, நினைவுநாள் விழா, பாராட்டு விழா, புத்தகக் கண்காட்சி, பக்தி விழாக்கள், சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப் பொழிவு, வரவேற்பு விழா, வழியனுப்பு விழா, பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கலந்துகொள்வேன்.
இலங்கையிலிருந்து அந்தனி ஜீவா வருகின்றார். அவர் ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து உரையாற்றுவார் என்று பாவலர் சீனு. தமிழ்மணி சில மாதங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்றேன். வேறொரு வேலை இருந்ததால் உரையை மட்டும் கேட்டுவிட்டு, கலந்துரையாடலின் பொழுது வந்துவிட்டேன். எழுத்தாளர் சூரியதீபன் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் விழா நடந்தது.
மறுநாள் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யும்படி சீனு. தமிழ்மணியைக் கேட்டுக்கொண்டேன். அவரும் அந்தனியிடம் இசைவு பெற்றிருந்தார். அந்தனியும் சூரியதீபனும் பிரஞ்சு நிறுவன நூலகம் உள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டுப் பாரதிப் பூங்கா வந்தனர். நானும் சீனு.தமிழ்மணியும் ஓர் ஒலிப்பதிவுக் கருவியுடன் பூங்காவில் நுழைந்து அறிமுகம் செய்துகொண்டோம். சில படங்களை நினைவுக்காக எடுத்துக்கொண்டேன். இவை இரண்டு திங்களுக்கு முன் நடந்தவை (இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த சமயம்).
அந்தனியிடம் மலையகத் தமிழர்கள் பற்றியும் பொதுவான கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம்.
தமிழகத்தைவிடவும் அங்குத் திட்டமிட்டுக் கூத்துக்கலையை எப்படியெல்லாம் வளர்த்துள்ளார்கள் என்பதறிந்து மகிழ்ந்தேன். மலையக மக்களின் அரசியல் முயற்சி, அரசியல் வாதிகளால் மலையக மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். தாம் ஆசிரியராக இருந்து நடத்தும் கொழுந்து என்னும் இதழ் பற்றியும் எடுத்துரைத்தார். பல நாடகங்களை உருவாக்கியும் இயக்கியும், நடித்தும், பல நூல்களை எழுதியும், தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் அந்தனி ஜீவா அவர்கள் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன்.
அந்தனி ஜீவா அவர்கள் மலையக இலக்கியத்துக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் இலக்கிய உலகிற்கு நினைவூட்டியவர். இவர் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற அக்கினிப்பூக்கள்,ஈழத்தில் தமிழ்நாடகம், அன்னை இந்திரா, காந்தி நடேசையர், மலையகமும் இலக்கியமும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் வளர்த்த தமிழ், மலையகம் வளர்த்த கவிதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள், அம்மா, மலையக மாணிக்கங்கள், முகமும் முகவரியும், திருந்திய அசோகன், நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்,மலையகத் தொழிற்சங்க வரலாறு உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதியவர்.
1970 அளவில் நாடகத் துறையில் கால்பதித்த ஜீவா இதுவரை 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
1980 களில் மலையக வீதி நாடகங்களை அளித்த பெருமை இவரையே சாரும்.
அந்தனி ஜீவா அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கொழும்பில் பிறந்தவர்.படிக்கும் காலத்தில் மாணவ நண்பர்களுடன் இணைந்து கரும்பு என்னும் சிறுவர் இதழை நடத்தியவர்.மாணவப்பருவத்தில் மாணவன்,தமிழருவி, திருமகன், கலைமலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதியவர். வீரகேசரி உள்ளிட்ட புகழ்பெற்ற ஏடுகளிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. இதழாசிரியராக நமக்கு அறிமுகமானாலும் சிறுகதையாசிரியராக, நாடக ஆசிரியராக,நாடக இயக்குநராக, நூல் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார்.
தமிழ்நாட்டில் வீதி நாடகப் பயிற்சி பெற்ற ஜீவா வெளிச்சம்,சாத்தான் வேதம் ஓதுகின்றது போன்ற முதன்மையான வீதி நாடகங்களைத் தந்துள்ளார்.1970 இல் இவர் உருவாக்கிய முள்ளில் ரோஜா நாடகம் தமிழ் அரங்கியல் உலகுக்கு இவரை அடையாளம் காட்டியது.30 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்ட அக்கினிப்பூக்கள் நாடகம் இதுவரை 16 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சிக்கலை முன்வைக்கும் இந்த நாடகம் நடந்தபொழுது தொழிலாளர்கள் எழுந்து நின்று குரல்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு உணர்வுமயமானது. இந்த நாடகம் நூல் வடிவிலும் வந்து பரிசில் பெற்றது.
சாரல் நாடனும் அந்தனியும் இணைந்து பதிப்பித்த தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூல் தொழிற்சங்கவாதியான நடேசய்யரின் வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் இலக்கியக் கலந்துரையாடல்கள், மாநாடுகள், ஆய்வரங்குகளில் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்கின்றார். தமிழகத்து முற்போக்கு இயக்கத் தோழர்களுடன் நல்ல உறவுகொண்டுள்ள அந்தனி அவர்கள் இலங்கை-தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றார்.இலங்கை எழுத்தாளரும், பதிப்பாளருமான திரு.புன்னியாமீன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதறிந்து மகிழ்கிறேன். பழகுதற்கு இனியவரும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்த அந்தனி அவர்களின் நட்பை உயர்வானதாகப் போற்றுகின்றேன்.
நாடகம், தொழிற்சங்கம், கலை,இலக்கியம் என்று வாழ்வைச் செலவிடும் மலையகத்தின் மூத்த இதழாளரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இவர் உதவியால் என் நூல்கள், இணையப்பணிகள் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரியத் தொடங்கியது. ஆம். தினக்குரலில் என் நூல் பற்றிய விரிவான மதிப்புரை வரைந்ததும், கொழுந்து இதழில் என்னைப் பற்றி அறிமுகம் செய்ததும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
பேரா. ம.இலெ. தங்கப்பா, சூரியதீபன், அந்தனி(இலக்கியம் நிகழ்ச்சி)
நான், சூரியதீபன், அந்தனி
சீனு.தமிழ்மணி, சூரியதீபன், அந்தனி
வெள்ளி, 19 ஜூன், 2009
இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் புன்னியாமீன்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.
மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் 'அயோத்தி நூலக சேவை'யின் பரிந்துரையின்படி 'இலண்டன் புக்ஸ்' எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்.நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5 ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனை வட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.
கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா?
பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'புஜ்ய கல்வி அலகை' எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.
முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் உள்ளனர்.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்?
பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.
ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.
இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா?
பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.
கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக்இ கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்?
பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5 - ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்?
பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.
கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?
பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.
கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.
கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?
பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.
ஒரு மாணவனுக்கு 570 ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'திரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன.
இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.
கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா?
பதில்: மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.
கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா?
பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.
அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் "வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது" என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.
கேள்வி: தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?
பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.
தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
உரையாடியவர்: பொன்மொழிவேந்தன்
நன்றி: சங்கமம்லைவ்
ஞாயிறு, 4 ஜனவரி, 2009
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982)

முனைவர் க.கைலாசபதி
இலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்து நினைவு கூர்வது உண்டு. முதலாமவர் க.கைலாசபதி. மற்றவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார். இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர். இவர் பார்த்த பார்வையில் இலக்கியங்களைப் பார்க்கத் தொடங்கினர் என்றால் பொருத்தமாக இருக்கும்.
இவர் தமிழகத்திற்கு வந்து அறிமுகம் ஆவதற்கு முன்பே இவரின் ஆய்வுத் தாக்கத்துக்கு ஆளான அறிஞர்கள் அதிகம். சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் கண்டுகாட்டிய ஆய்வு உண்மைகள் தமிழ் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது.
மேல்நாட்டினருக்குச் சங்க இலக்கியங்களை உரிய வகையில் அறிமுகம் செய்துவைத்தவர் இவர் எனில் சாலப் பொருத்தமாக அமையும்.இலக்கியத் துறையில் ஈடுபட்டு,இதழியல் துறையில் பணிபுரிந்து, கல்வி உலகில் பேசப்படும் அறிஞரான இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப்பார்ப்போம்.
இலங்கையின் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் கைலாசபதி அவர்களின் தந்தையார் இளையதம்பி கனகசபாபதி அவர்கள் மலேசியாவில் அலுவலராகப் பணிபுரிந்தவர். எனவே க.கைலாசபதி அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 இல் பிறந்தவர். இவரின் அன்னையார் பெயர் தில்லைநாயகி நாகமுத்து ஆகும். கைலாசபதிக்குத் தொடக்க கல்வி கோலாலம்பூரில் அமைந்தது. பதின்மூன்று அகவை வரை மலேசியாவில் இருந்தார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில்(1946-47) இலங்கை வந்தார்.
கைலாசபதி அவர்கள் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்,கொழும்பு இராயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) படிப்பில் சேர்ந்து சிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தார்(1957).இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். இப்படிப்பு இவருக்கு மேற்குலக அறிமுகத்திற்கும் வரலாற்றுப் பார்வைக்கும் வழிவகுத்தது. இவர்தம் ஆசிரியர் பெருமக்களுள் கணபதிபிள்ளை, வித்தியானந்தன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
பல்கைலக்கழகக் கல்வி கற்ற பிறகு இலங்கையின் புகழ்பெற்ற ஏடான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62). 1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். 1964-66 ஆம் ஆண்டுகளில் சர்வமங்களம் அவர்கள் தம் கணவருடன் பர்மிங்காம் படிப்புக்கு உதவியாக அங்கு இருந்தார். க.கைலாசபதி அவர்களின் ஆய்வுப்பணி 1966 ஆகத்து மாதம் நிறைவுற்ற உடன் இலங்கைப் பல்கலைக்கழகப் பணியில் மீண்டும் இணைந்தார்.

முனைவர் க.கைலாசபதி
பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் வீரநிலைப் பாடல்கள்(Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்தவர். இவருக்குக் கிடைத்த நெறியாளர் உலக அளவில் அறிவாற்றலால் மதிக்கப்படுபவர். இவர் தம் நெறிப்படுத்தலில் உருவான ஆய்வேடு க.கைலாசபதிக்கு முனைவர் பட்டம்பெற்றுத் தந்ததுடன் மேல்நாட்டாருக்குத் தமிழிலக்கியச் சிறப்பை உணர்த்தியது எனலாம். அதன் பிறகே மேல்நாட்டார் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதை அறியமுடிகிறது.
ஆய்வுக்காலத்தில் பேராசிரியர் சார்ச் தாம்சன் மணிக்கணக்கில் கிரேக்க, தமிழ் நாகரிகம் பற்றி ஆர்வத்துடன் உரையாடுவது உண்டு. சார்ச் தாம்சன் அவர்களின் மனைவி காத்லின் அவர்களும் அவர்களின் மகளார் லிசு, மெக்(இவரும் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) ஆகியவர்களும் குடும்ப நண்பர்களாகப் பழகியதைச் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார்.
பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர். செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர். மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாளில் இலங்கை முழுவதும் இருந்த அரச கல்வி நிறுவனங்கள் யாவும் இலங்கைப் பல்கைலக்கழகம் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பெற்றது. பல பகுதிகளில் இருந்த கல்வி நிறுவனங்கள் அப் பல்கலைக்கழகத்தின் சார்பு வளாகங்களாகக் கருதப்பட்டன. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற நிலை எழுந்தபொழுது திருகோணமலையில் பல்கலைக்கழகம் தொடங்கவும் யாழ்ப்பாணத்தில் தொடங்கவும் என இரு கருத்துகள் அரசியல்வாணரிடையே அந்நாளில் இருந்தது.
திருகோணமலையில் தொடங்கப்படாமல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகமும் தொடக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்றும் அது யாழ்ப்பாண வளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது. 1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.
இப்பதவிக்கு அவர் ஆசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் விண்ணப்பித்திருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் மூத்த பேராசிரியர் என்ற அடிப்படையில் அவர்க்கு முதலில் துணைவேந்தர் பணி கிடைக்காமல் அவரைவிட இளையவரான கைலாசபதிக்குக் கிடைத்ததில் கருத்து வேறுபாடுகள் இன்றுவரை இலங்கையில் உண்டு. ஆயினும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய க.கைலாசபதி அப்பதவிக்குத் தகுதியானவர் என அறிஞருலகம் குறிப்பிடுவது உண்டு. பின்னாளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கல்லகழகத்தின் துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
தென் அமெரிக்கா, ஆத்திரேலியா தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவந்த பெருமைக்கு உரியவர். 1958 இல் இதழாளராக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். அப்பயண அனுபவத்தை "நான்கு நாடுகளில் நாற்பத்தி நான்கு நாட்கள்" என்னும் நூலாக எழுதியவர். இவர்தம் நூல்கள், பணிகள், வாழ்வியல் முழுமைப்படுத்தி வெளிவருவது காலத்தின் தேவையாகும்.
1955 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதன்முதல் இந்தியா வந்தவர். அதன் பிறகு பலமுறை இந்தியா வந்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கைலாசபதி அவர்கள் "தமிழ்த்துறையில் தமிழாய்வுகள்" என்னும் பொருளில் ஆற்றிய உரை அனைவராலும் விரும்பப்பட்டது. க.கைலாசபதியின் நீண்ட நாள் நண்பர்களாகத் தமிழகத்தில் விளங்குபவர்கள் சிதம்பர ரகுநாதன். குலோத்துங்கன்(வா.செ.கு), கு.அழகிரிசாமி, செயகாந்தன் உள்ளிட்டோர் ஆவர்.
இலங்கையில் பணியாற்றியதுடன் அமையாமல் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும் (1978-82) பணிபுரிந்து அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கியவர். இவர் மாணவர்களுள் மௌனகுரு, சித்திரலேகா, அம்மன்கிளி முருகதாசு, மனோன்மணி சண்முகதாசு, நுஃமான் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
கைலாசபதி அவர்கள் பல்கலைக்கழகப் பணிபுரிந்ததுடன் இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்
(1970),இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் பணியிலும் ஈடுபாட்டுடன் உழைத்தவர்.
க.கைலாசபதி அவர்களுக்குத் தொடக்கத்தில் திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லை. காலப்போக்கில் இவ்வியக்கத்தின் பணிகளை உணர்ந்து தம் கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டார்.
க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். இவருக்கு இலக்கியம், கர்நாடக இசை, பரத நாட்டியம், நாடகத்துறைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.தமிழகத்தில் மார்கழி மாதங்களில் நடைபெறும் இசைவிழாக்களுக்கு இவர் வந்து கண்டுகளிப்பது உண்டு. பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவர். தியாகராச பாகவதர். சுப்புலட்சுமி, சிதம்பரம் செயராமன், பி.யு.கிட்டப்பா, சீவானந்தம் பாடல்களை நாடாப் பதிவுக்கருவியில் விரும்பிக் கேட்பது உண்டு.
இலங்கையில் வெளிவந்த தினகரனில் பணிபுரிந்த கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான், அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பல சிற்றிதழ்கள் இலங்கையில் வெளிவர உதவியுள்ளார். பல்வேறு இதழ்களில் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் கட்டுரை எழுதியவர். எனவே இவருக்கு எனத் தனித்த நடை உண்டு. இதழ்களில் எழுதி நல்ல பயிற்சி பெற்றிருந்ததால் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட முடிந்தது.
அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு உடையவராக விளங்கினார். இந்துக்கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய இலெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் தம் மனைவி சர்வமங்களம் குழந்தைகள் சுமங்களா, பவித்ரா ஆகியோருடன் 1979 இல் சீனா சென்றுவந்தார். தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின் வழியாக வெளிவந்தன. தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு தம் 49 ஆம் அகவையில் 06.12.1982 இல் இயற்கை எய்தினார். சற்றொப்ப முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார். இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல அரிய ஆய்வு உண்மைகள் கிடைத்திருக்கும்.
Tamil Heroic Poetry நூலும், பண்டைதமிழர் வாழ்வும் வழிபாடும், அடியும் முடியும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் உள்ளிட்ட நூல்களும் க.கைலாசபதியின் பெருமையை என்றும் பேசிக்கொண்டிருக்கும்.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்
01. பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02. தமிழ் நாவல் இலக்கியம்,1968
03. Tamil Heroic Poetry,Oxford,1968
04. ஒப்பியல் இலக்கியம்,1969
05. அடியும் முடியும்,1970
06. ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
07. இலக்கியமும் திறனாய்வும்,1976
08. கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09. சமூகவியலும் இலக்கியமும்,1979
10. மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
11. The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13. திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14. பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)
15. இலக்கியச் சிந்தனைகள்,1983
16. பாரதி ஆய்வுகள்,1984
17. The Relation of Tamil and Western Literatures
18. ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19. On Art and Literature,1986
20. இரு மகாகவிகள்,1987(ஆ.ப)
21. On Bharathi,1987
22. சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23. Tamil (mimeo)(co-author A,Shanmugadas)
நனி நன்றி :
தமிழ் ஓசை (களஞ்சியம்), அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 15, 04.01.2009
முனைவர் பொற்கோ
முனைவர் இராம.சுந்தரம், "கலாநிதி கைலாசபதி", சாகித்திய அகாதெமி
முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)
திரு.அ.முத்துலிங்கம்
திருநிறை சர்வமங்களம் கைலாசபதி
திரு.கணேசலிங்கம், சென்னை
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முனைவர் மனோன்மணி
பேராசிரியர் அ.சண்முகதாசு
முனைவர் மனோன்மணி சண்முகதாசு
தமிழாய்வு சார்ந்த கருத்தரங்குகள் எந்தப் பொருளில் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு கட்டுரை படித்துத் தம் ஆய்வுத்திறமையால் அனைவரது உள்ளத்திலும் இடம்பிடிக்கும் இலக்கிய இணையர்கள் பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்களும் ஆவார்கள். இவர்கள் இலங்கையை மையமிட்டு வாழ்ந்தாலும் உலக அளவில் அனைவருக்கும் அறிமுகமானவர்கள் ஆவர். இவ்விரு பெருமக்களின் தமிழ்ப்பணிகள் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியனவாகும்.
சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், இலக்கியத் திறனாய்வு, பக்தி இலக்கியம், வரலாறு, கல்வெட்டு எனத் தமிழின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆய்வுப் புலங்களில் தடம்பதித்து ஆய்வுலகில் தமக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் இங்கு நோக்குவோம்.
முனைவர் அ. சண்முகதாசு அவர்கள் இலங்கையில் உள்ள திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம்நாள் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் அருணாசலம் - முத்தம்மாள் ஆவர். இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிசு சேவியர் பள்ளியில் பயின்றவர்(1945-51). பின்னர் வந்தாறுமூலையில்(செங்கலடி) உள்ள அரசு கல்லூரியில் பயன்றவர்(1952-57). பின்னர் சிவானந்த வித்தியாலயத்தில் பயின்றவர்(1957-59).
1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழை இளங்கலையில் பயின்றவர். இதில் வரலாறு, சமற்கிருதம் உள்ளிட்ட பாடங்களையும் பயின்றார். முதல் வகுப்பில் தேறினார். அதன் பிறகு இசுகாட்லாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ( University of Edinburgh, Scotland, United Kingdom.) ஓராண்டு மொழியியல் பயின்றார்(1969 – 1970). 1970-72 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். "இலங்கைப் பேச்சுத் தமிழின் வினைவடிவங்களின் ஒலியன்கள்"(Phonology of the Verbal Forms in Colloquial Ceylon Tamil) என்பது இவர் தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகும்.
இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.
1982 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டில் நைசீரியாவில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் நைசீரிய மொழியியல் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்(University of Ibadan). 1983 இல் சப்பான் டோக்கியோவில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.
1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர். 2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர். 2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.
சண்முகதாசு அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளை, பரிசுகளை வாங்கிப் பெருமை சேர்த்தவர். 1963 இல் ஆறுமுக நாவலர் விருதினை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர். 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கல்லைகழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர். யுனெசுகோ விருது ஒன்றும், இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஒன்றும் பெற்ற பெருமைக்கு உரியவர்.
இலங்கையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, மதிப்பீட்டுக்குழு எனப் பல நிலைகளில் பணிபுரிந்தவர். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் தேர்வாளராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிந்தனை என்னும் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.
அக இலக்கியமும் அறிவியலும் என்னும் தமிழ்த்துறை வெளியிட்ட நூலின் பதிப்பாசிரியராக இருந்து கடமையாற்றியவர். உலக அளவில் நடைபெற்ற பல உலகத் தமிழ்மாநாடுகளைக் கண்ட பெருமைக்கு உரியவர். அவ்வகையில் சென்னை, பாரிசு, மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கட்டுரை படைத்த பெருமைக்கு உரியவர்.பல நாடுகள் சுற்றி வந்தாலும் தமிழ் அரங்குகளில் தமிழர் ஆடையான வேட்டியணிந்து அமர்ந்து வீற்றிருப்பது இவர்தம் தமிழ் உணர்வுகாட்டும் சான்றாகும். இலங்கை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி விளக்கும் ஆற்றல்பெற்றவர்.
முனைவர் மனோன்மணி
எளிய தோற்றமும் பேரறிவும் கொண்டு அன்பு ததும்பும் சொல்லாடல்களால் நம்மை ஈர்ப்பவர் மனோன்மணி அவர்கள். இலங்கையில் 14.10.1943 இல் திருவாளர் முருகேசு, பாக்கியம் ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தவர். 1948 முதல் 58 வரை சிவப்பிரகாசர் பள்ளியில் தொடக்க உயர்நிலை வகுப்புகளைப் பயின்றவர். 1959 இல் புகுமுக வகுப்பை மெத்தடிசுடு நிறுவனத்தில் பயின்றவர். 1961 முதல் 65 வரை இலங்கைப் பரதேனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றவர். பின்னர் நூலகவியல் சார்ந்த பட்டயப்படிப்பு நிறைவு செய்தவர்.
1978-80 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். சி.வை.தாமோதரம் பிள்ளை குறித்த ஆய்வேடு இதற்காக வழங்கினார். க.கைலாசபதி மேற்பார்வையாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1994-97 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கா.சிவத்தம்பி அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்தவர். இவர் தம் ஆய்வுத்தலைப்பு சங்க இலக்கியத்தில் உரைகளின் பொருத்தப்பாடு - குறுந்தொகை (Appropriateness of the Commentaries to Cankam literature: A close analysis of Kuruntokai) என்னும் தலைப்பில் அமைந்தது.
வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்கல்லூரியில் (1965-68) இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் பணியைத் தொடங்கிய மனோன்மணி அவர்கள் 1979-82 வரை தம் கணவரின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார். 1975 முதல் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1983 முதல் 1993 வரை சப்பானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்களின் ஆய்வுப்பணிகளில் இணைந்து ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கும் சப்பான் மொழிக்குமான உறவு பற்றிய அரிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டு உழைத்தார். அதுபொழுது சப்பானிய(யப்பான்) இலக்கியம், கவிதைகள் பற்றிய படைப்புகளைத் தமிழில் வழங்கினார். மேலும் முதுகலை பயிலும் சப்பானிய மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி பாடம் நடத்தும் வாய்ப்பு அமையப்பெற்றவர். 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருகைதரு பேராசிரியர் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத்தொடங்கினார். தொடர்ந்து சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழ் சப்பானிய ஆய்வுகளுக்கும் உதவினார்.
படிக்கின்ற காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் மனோன்மணி அவர்கள் பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவர். கலைஞானச் சுடர் விருது உள்ளிட்ட விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்குக் கிடைத்துள்ளன. இவர் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். கல்வி நிறுவனங்கள் பெண்கள் அமைப்பு உள்ளிட்டவற்றில் இவரின் பணி மேம்பட்டு இருந்தது. இலங்கையிலும் சப்பானிலும் கல்வி சார்ந்த, பாடத்திட்டம் சார்ந்த பல குழுக்களில் இணைந்து பணிபுரிந்தவர்.
பத்தொன்பதாம்நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப்போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிமொழியும் யப்பானியமொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்),தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள்(இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், சப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், சி.வை.தாமோதரன் பிள்ளை உள்ளிட்ட பேராசிரியர் மனோன்மணியின் நூல்கள் இவர்தம் எழுத்து வன்மையை அறிவிக்கும் சான்றுகளாகும்.
இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் தம் கருத்துகளை வழங்கியவர். பல ஆய்வரங்குகளில் கலுந்துகொண்டு கட்டுரை படித்தவர். சமயம், பெண்மை, சங்க இலக்கியம், நூலகம், சப்பானிய மொழி, இலக்கியம், ஈழத்து இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடுகொண்டு இவர் எழுதியுள்ள தமிழ் ஆக்கங்கள் என்றும் இவர் பெருமையைப் பறைசாற்றி நிற்கும்.இலங்கையின் சார்பாளர்களாக உலக அரங்கில் தேமதுரத் தமிழின் ஓசை பரவப் பாடுபடும் இவர்களைத் தமிழுலகம் பாராட்டி மதிக்கவேண்டும்.
மொழி, இன, நாட்டுப்பற்றுடன் விளங்கும் இந்த இலக்கிய இணையர்கள் தம் வாழ்நாள் காலத்தைத் தொடர்ந்து தமிழ் மொழி,இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கு உட்படுத்தவேண்டும் என்பதே நம் பேராவலாக உள்ளது.
தமிழ் ஓசை களஞ்சியப் பகுதி
நனி நன்றி :
தமிழ் ஓசை களஞ்சியம்,(நாளிதழ்),21.12.2008,
அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 13
முனைவர் பொற்கோ.
முனைவர் அம்மன்கிளி முருகதாசு(கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு)
ஞாயிறு, 26 அக்டோபர், 2008
கார்த்திகேசு சிவத்தம்பி (10.05.1932)

முனைவர் கா.சிவத்தம்பி அவர்கள்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர். க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள்.
மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.
க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து 1966 இல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை) என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970 இல் பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவ்விரு ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பியின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.
கா.சிவத்தம்பி இளமை வாழ்க்கை
கா.சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர். பெற்றோர் கார்த்திகேசு, வள்ளியம்மை அவர்கள்.தந்தையார் பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில் கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது. கரவெட்டி விக்கினேசுவரா கல்லூரியில் தொடக்கக் கல்வியையும்,கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970இல் பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச் செய்திகளை உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும்.
தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில் கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. அதுபோல் தொல்காப் பியம்,சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச் சூழலில் இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு, வகைப்படுத்தல், ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில் எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது. தமிழக வரலாறு,சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில் விளக்கப்பட்டுள்ளன.
கா.சிவத்தம்பியின் முனைவர் பட்ட ஆய்வுநூல்
ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப் புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது.அந்த நூல் தமிழக அரசின் சிறந்த பரிசினையும் பெற்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களால்(சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்) மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
சிவத்தம்பியின் ஆய்வேடு வெளிவந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்ச்சி ஈழத்தில் ஏற்பட்டது. பாடத்திட்டங்களில் நாடகம் முதன்மை இடம்பெற்றது. பல மாணவர்கள் நடிக்கவும் ஆராயவும் இத்துறையில் புகுந்தனர். தமிழ் நாடகம் இவ்வாய்வேட்டின் வருகைக்குப் பிறகு ஈழத்தில் மறுமலர்ச்சி பெற்றது எனலாம். தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இந்த நூல் ஒரு காரணமாக அமைந்தது.
சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பதினேழு ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து, செர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள் வழங்கித் தமிழாய்வுப் புலத்தில் ஆக்கப்பணிகள் புரியும் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை வியப்பளிக்கிறது.தமிழ்ப்பேராசிரியராகவும்,பன்மொழி அறிஞராகவும்,கலை விமர்சகராகவும்,சிந்தனையாளராகவும்,அரசியில் அறிவு நிரம்பியவராகவும் விளங்குபவர்.
கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை
கா.சிவத்தம்பி அவர்கள் மார்க்சியநோக்கில் திறனாய்வு செய்பவர் என்பது ஆய்வுலகம் நன்கு அறிந்த ஒன்றாகும்.ஆனால் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதும்,நாடக எழுத்தாளர் என்பதும் பலநாடகங்களை எழுதியவர்,இயக்கியவர்,நடித்தவர் என்பதும் தமிழுலகம் பரவலாக அறியாத ஒன்றாகும்.இலங்கையின் நாடக மரபுகளை மீட்டெடுத்த வித்தியானந்தன், சிவத்தம்பியின் பணிகளை ஈழத்து அறிஞருலகம் நன்றியுடன் நினைவு கூர்கிறது.
தமிழ் நாடக வளர்ச்சியில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு மிகப்பெரியது என மௌனகுரு குறிப்பிடுவார். கூத்து, நாடக, அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் கொண்டு வந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள். பல கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இவர் இடம்பெற்ற பொழுதெல்லாம் இவர் தரமான பாடத்திட்டங்கள் அமைய உதவியுள்ளார்.
பல்கலைக்கழகப்பணிக்காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தவர். வானொலி நாடகங் களிலும் நடித்துள்ளார்.
இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில் ' தொடர்நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்.இவரின் நடிப்பு இவருக்கு நல்ல புகழை ஈட்டித்தந்தது. கைலாசபதியும் இந்நாடகத்தில் நடித்ததாக அறியமுடிகிறது.
நாட்டார் இயல் ஆய்வுகளில் கா.சிவத்தம்பி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். முல்லைத் தீவில் இவர் ஏற்பாடு செய்திருந்த நாட்டாரியல்விழா அனைவராலும் நினைவு கூரத்தக்கது. நாடகம், கூத்து இவற்றின் ஊடாகத்தமிழ் மக்களை,தமிழர்களின் பண்பாட்டை அறிய முனைந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத் துறைத்தலைவராகப் பணிபுரிந்தபொழுது பல்வேறு நாடக முயற்சிகள் வளர்முகம் கண்டன. யாழில் புதிய நாடகமரபு உருவானது. ஈழத்துப்பகுதியில் நடிக்கப்பெற்ற கூத்துகளின் வழியாக புதிய நாடகமரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியில் சிவத்தம்பி முன்னின்றார். வன்னிப்பகுதியில் வழக்கத்தில் இருந்த கூத்துகள் உள்ளிட்ட பிற கலைகளை வளர்க்க மாநாடு, கருத்தரங்குகளை நண்பர்களின் துணையுடன் செய்தவர்.
மௌகுருவின் இராவணேசன் என்னும் புகழ்பெற்ற நாடகம் சிறந்தவடிவம் பெற்றதில் சிவத்தம்பிக்குப் பெரும் பங்கு உள்ளதை மௌனகுரு குறிப்பிடுவார்.கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் இடம்பெறும் இராவணனின் பாத்திரப்படைப்பை விளக்கி,இராவணன் பாத்திரத்தைக் கோபம்,வெட்கம்,ஏளனச்சிரிப்பு இவற்றைக் கொண்டு மிகச்சிறப்பாக வடிவமைக்க சிவத்தம்பி உதவியதை மெனகுரு நன்றியுடன் நினைவுகூர்வர். கா.சிவத்தம்பி மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் வல்லவர்.இவர்தம் வகுப்புகள் நான்கு மணி நேரம்வரை நீண்டுவிடுமாம். அவ்வளவு நேரமும் மாணவர்கள் ஆர்வமுடன் அமர்ந்து படித்துள்ளனர்.
தொல்காப்பியம். அகத்திணை மரபுகள்,நாடகம் பற்றி பாடம் நடத்துவதில் கா.சிவத்தம்பி அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாம்.
தமிழ்இலக்கியம், சமயநூல்கள், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலைகளில் நல்ல புலமைபெற்றிருந்த கா.சிவத்தம்பி அவர்கள் இத்துறை சார்ந்த திறனாய்வுக் கட்டுரை களையும் நூல்களையும் எழுதியுள்ளார். இத்துறை சார்ந்து பல இடங்களில் பேசியுள்ளார். இவர் கட்டுரைகளை நூல்களைக் கற்றவர்களும் இவரிடம் நேரடியாகக் கற்றவர்களும் இவர் வழியில் ஆய்வுகளை மேற்கொள்வது ஒன்றே இவரின் அறிவுத் திறனுக்குச் சான்றாக அமையும்.
இவரின் மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.
தமிழகத்துப் பல்கலைக் கழகங்கள்,கல்வி நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள கா.சிவத்தம்பி அவர்கள் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள்,கல்வியளர்கள் இளைஞர்களுடன் நல்ல உறவுகொண்டவர்.அவர்களின் நூல்களைக் கற்று நூல்குறித்த சிறப்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டவர். தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்கள்,கலைவிழாக்களை நன்கு உற்று நோக்கி விமர்சிப்பவர். ஈழத்து அரசியல் எழுச்சியில் இவரின் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சிவத்தம்பியின் தமிழ்ப்பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.இலங்கை சப்பானிய நட்புறவுக்கழக விருது பெற்றவர்.2000 இல் இவர் பெயர் உலக அளவிலான புலமைப்படியலில் இடம்பெற்றுள்ளது. பல அமைப்புகள் இவருக்குப் பரிசில்கள் பாராட்டுகள் வழங்கியுள்ளன.கா.சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்து அகவை நிறைவையட்டி அவரின் அன்பிற்கு உரியவர்கள் பல விழாக்களை எடுத்துக் கொண்டாடியும் அவர்களின் அன்பு வெளிப்படும்படி நூல்கள் வெளியிட்டும் கருத்தரங்குகள் நிகழ்த்தியும் அவரின் தமிழ்ப் பணிகளை மதித்தனர்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் பழகியவர்கள் பயின்றவர்களின் பங்களிப்புடன் கானா பிரபா அவர்கள் பேராசிரியரின் பலதுறைப் பங்களிப்புகளை ஒலிப்பதிவு செய்து வானொலி வழியும் இணையம் வழியும் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது மற்றவர்களுக்கு அமையாத பெருஞ்சிறப்பாகும்.இவ் வானொலி, இணைய ஒலிப்பதிவில் பேராசிரியரின் மாணவர்கள், அன்பிற்குரியவர்களான அம்மன்கிளி முருகதாசு, மௌனகுரு, பாலசுகுமார், வீ.அரசு ஆகியோரின் உரைகள் பேராசிரியரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.
கா.சிவத்தம்பி அவர்களின் பணிகள் செப்பமுடன் நடைபெறுவதற்குக் காரணம் அவரின் துணைவியார் ரூபவதி நடராசன் அவர்களாவார். பேராசிரியரின் பணிகளுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் உதவியது இவரே. எழுத்துப்பணிகள், ஆய்வுப் பணிகள், குடும்பப் பொறுப்புகளில் அம்மையார் பல வகையில் துணைநின்றவர். இவர்களுக்கு கிரித்திகா, தாரிணி,வர்த்தினி என்னும் மூன்று மக்கள் செல்வங்களாவர்.
பேராசிரியரின் முதல் நூல் மார்க்கண்டன் என்பதாகும்.
தமிழ்ச்சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்(1966) என்ற இவரின் நூல் அனைவராலும் பேசப்படும் ஒன்றாகும்.தமிழ்மொழி, இலக்கியம்,கவின்கலைகள், சமூகம், மானுடவியல், அரசியல் சார்ந்த பல நூல்களை மார்க்சியப் பார்வையில் எழுதியுள்ள சிவத்தம்பி அவர்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் புதிய வீச்சுகளை வழங்கியவர் எனில் மிகையன்று. இவர்தம் ஆய்வுப் போக்குகளைத் தாங்கி அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் சிவத்தம்பியின் பணிகளைத் தமிழுலகில் நிலைநாட்டுவர்.
1. இலங்கைதமிழர் -யார்,எவர்?
2. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
3. தமிழில் இலக்கியவரலாறு
4. இலக்கணமும் சமூக உறவுகளும்
5. மதமும் கவிதையும்
6. தமிழ் கற்பித்தலில் உன்னதம்
7. தமிழ்ப்பண்பாட்டில் சினிமா
8. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி
9. ஈழத்தில் தமிழ் இலக்கியம்
10. யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்
11. சுவாமி விபுலானநந்தரின் சிந்தனைநெறிகள்
12. திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
13. தமிழ் கற்பித்தல்
14. தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா(பாட விமர்சனவியல் நோக்கு)
15. தமிழின் கவிதையியல்
16. தொல்காப்பியமும் கவிதையும்
17. உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.1851-கி.பி.2000)
18. சசியாக்கதை
19.யாழ்ப்பாணம் சமூகம்-பண்பாடு, கருத்துநிலை
முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன
நனி நன்றி:
தமிழ் ஓசை நாளேடு, களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், வரிசை 5
(26.10.2008)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


