நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 ஜூன், 2010

தென்னாப்பிரிக்கத் தமிழர் வெ.துரையனார் அடிகள்


வெ.துரையனார் அடிகளின் தன்வரலாற்று நூலின் மேலட்டை

 தென்னாப்பிரிக்காவில் பிறந்து, இந்திய விடுதலையில் பங்குகொண்டு கடைசிவரை காந்தியின் உண்மையான சீடராக விளங்கியவர்.வெ.துரையனார் அடிகள் ஆவார். இவர் பெற்றோர் திரு.வெங்கடாசலம் பிள்ளை, தாயார் திருவாட்டி செல்லத்தாச்சி. இவர்களுக்கு மகனாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால்(Transvaal) என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு (Roodeport) என்ற ஊரில் 12.05.1891 இல் துரையனார் அடிகள் பிறந்தவர்.

 இவரின் இளமைப்பெயர் துரைசாமி என்பதாகும். தமிழறிஞர் மறைமலையடிகளாரிடம் தமிழ் படிக்க வந்த பிறகு தம் பெயரைத் துரையனார் அடிகள் என மாற்றிகொண்டவர். வெங்கடாசலம் பிள்ளையின் முன்னோர்கள் மொரீசியசு, தென்னாப்பிரிக்காவிற்கு வாணிகம் செய்யச் சென்றவர்கள். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்காவும் இந்தியர்களின் தன்மானத்திற்காகவும் பாடுபட்டவர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் நடத்திய கால்பந்து கிரிக்கெட், குத்துச்சண்டை முதலிய தற்காப்புக் கலைகளில் நன்றாகப் பயின்றவர் துரையனார் அடிகள். எதற்கெடுத்தாலும் முரட்டுத்தனமாகத் தாக்கும் நீக்ரோக்கள் நிறைந்த தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் இவ்வாறு தற்காப்புக்காகப் பல கலைகளைக் கற்றனர்.

 தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராகச் சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தன. வீட்டை விட்டு வெளியில் செல்வதென்றால் அடையாள அட்டை அல்லது வெள்ளையர்கள் எழுதித் தந்த அனுமதிச்சீட்டு வைத்திருக்கவேண்டும். இரவு 9.00 மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லக்கூடாது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அடையாள அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இதை எதிர்த்துக் காந்தியடிகள் அமைதிவழி சட்டமறுப்பு இயக்கம் (Passive Resistance Movement) நடத்தினார். அதன்படி எல்லா இந்தியர்களும் சோகன்சுபர்க் நகரில் ஓரிடத்தில் மசூதி அருகில் கூடி, எல்லோருடைய அடையாள அட்டைகளையும் காந்தியடிகளிடம் கொடுத்தனர். அந்தச் சீட்டுகள் எல்லாம் கொளுத்தப்பட்டன. அந்த இயக்கத்தில் ஈடுபட்டதற்காகத் துரையனார் அடிகள் சிறை சென்றார்(1909).

 துரையனார் அடிகள் சோகன்சுபர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு திங்கள் அந்தச் சிறையில் இருந்த பிறகு நீதியரசர் வெர்னோன் முன்னிலையில் நிறுத்தபட்டு, அடையாளச் சீட்டு கொளுத்தியமைக்கும், இல்லாமைக்கும் ஆறு மாதம் தண்டிக்கப்பெற்று, உள்ளூர்ச் சிறைச்சாலையில் பதினைந்து நாளும் டீப்குளுப் (Dipcloof) சிறையில் ஆறு திங்களும் அடைக்கப்பெற்றார். துரையனார் அடிகளுடன் சிறைச்சாலையில் இருந்தவர்கள் காந்தியடிகளின் இரண்டாவது புதல்வர் மணிலால் காந்தி, சோசப் ராயப்பன் (Josep Royappan B.A. Cambridge), பி.கிருட்டினசாமி நாயுடு, முகமத் பயாத் முதலியவர்கள் ஆவர். சோசப் ராயப்பன் காந்தியடிகளால் பொருளுதவி செய்யப்பெற்று காம்பிரிச் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

 தென்னாப்பிரிக்காவிற்கு வந்த கோபாலகிருட்டின கோகலே அவர்களுக்குக் கொடுக்கப்பெற்ற வரவேற்பில் கலந்துகொண்ட பெருமைக்குரியவர் துரையனார் அடிகள். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த துரையனார் அடிகள் தம் முன்னோர்கள் நாட்டைக் காணவும் தமிழ் படிக்கவும் தம் தாயாருடன் தமிழகம் வந்தார். கப்பல் தூத்துக்குடி வந்தது. தூத்துக்குடியிலிருந்து நேராகச் சென்னையில் பால்லாவரத்தில் வாழ்ந்த மறைமலையடிகளாரைக் காணச் சென்றார். அப்பொழுது அடிகள் ஊரில் இல்லை. காசிக்குச் சென்றிருந்தார். எனவே துரையனார் அடிகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்த கோயில்களுக்குச் சென்று இறைவழிபாடு நிகழ்த்தி மீண்டும் பல்லாவரம் மீண்டார்.

 மறைமலையடிகளிடம் நன்கு தமிழ் கற்ற துரைசாமியார் அடிகளாரிடம் கருத்து மாறுபட்டு வெளியேறி, சுவாமிமலை வந்து 1912 முதல் தங்கியிருந்தார். சுவாமிமலையில் தங்கியிருந்த பொழுது கும்பகோணம் பகுதியில் நடந்த பல்வேறு இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு கடமையாற்றினார். 1922 இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி அந்தப் பகுதியில் விடுதலை உணர்வு பெறச் செய்தார். தந்தை பெரியாரின் கருத்துகளில் துரைசாமியார் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. பெரியார் துரைசாமியார் அவர்களை நன்கு மதித்தவர். அதுபோல் காமராசர், தமிழ்த்தென்றல் திரு.வி.க உள்ளிட்டவர்களின் நட்புக்கு உரியவராக விளங்கியவர்.

 இந்தியா வந்த பிறகு காந்தியடிகளின் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு குறிப்பாகக் கிலாபத்து இயக்கம், மதுவிலக்கு இயக்கம், தீண்டாமை இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். 1930 இல் திருச்சியில் டாக்டர் இராசன் வீட்டில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்.

 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தியபொழுது கைதுசெய்யப்பட்டு, கடலூர்ச்சிறையில் அடைக்கப்பெற்றவர். கடலூர்ச்சிறையில் துரைசாமியாருடன் கோவை அவினாசிலிங்கம் செட்டியார், வேதரத்தினம் பிள்ளை, மட்டப்பாறை வெங்கடராம ஐயர், சிறுகுவடா நரசிம்மராவ், மன்னார்குடி மகாலிங்கம் பிள்ளை, நடராசப்பிள்ளை ஆகியோர் இருந்தனர். பின்னர் துரைசாமியார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

 வேலூர் சிறையில் தியாகிகளுக்கு இடையே மாலையில் சிறு பொதுக்கூட்டம் நடக்கும். ஒருமுறை பட்டாபி சீத்தாராமையா ஆங்கிலத்தில் பேசினார்.உடனே ஆந்திரர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்றனர். அதன்படி தெலுங்கில் பேசினார். மறுநாள் தமிழர்கள் சார்பில் இராசாசி ஆங்கிலத்தில் பேசினார். துரைசாமியார் தமிழில் பேச வேண்டும் என்றார். அதற்கு இராசாசி உங்களுக்குதான் ஆங்கிலம் நன்கு தெரியுமே மொழிபெயர்த்துவிடுங்கள் என்றார்.(துரைசாமியாருக்குத் தமிழ், ஆங்கிலம், டச்சு மொழிகள் நன்கு தெரியும்). காந்தி இர்வின் ஒப்பந்தப்படி கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.

 சிறையிலிருந்து மீண்ட துரைசாமியாரைக் கும்பகோணத்தில் வாழ்ந்த இராசகனி நாடார் தனது காரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று சிறப்பித்தார்.

 துரைசாமியார் சட்டமறுப்பு இயக்கத்தில் (1932) ஈடுபட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, திருச்சியிலும் பிறகு மதுரைச் சிறையிலும் இருந்தார்கள். மதுரைச்சிறையில் இருந்தபொழுது தியாகியின் துணைவியார் துளவம்மாள் அவர்கள் இறந்துவிட்டார்.இதை அறிந்த ஆங்கிலேயே சிறைத்துறை அதிகாரி மன்னிப்பு எழுதிக்கொடுத்துவிட்டு, மனைவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும்படி வேண்டினார். ஆனால் துரைசாமியார் அதனை ஏற்காமால் தான் மன்னிப்பு கோரினால் இந்தியத் தேசியக் காங்கிரசே மன்னிப்புக் கேட்டது போலாகிவிடும் என்று நினைத்து சிறையில் இருந்துவிட்டார். அவர் மனைவி இறந்த பிறகு அவர் தம் குழந்தைகள் பாதுகாப்புக்குப் போதிய ஆள் இல்லாத நிலையில் அவர் உறவினர்கள் வீட்டில் இருந்தனர். வீடும் நெல் அறவை ஆலையும் பெரும் சிக்கலுக்கு உள்ளானது. அப்பொழுது காமராசர் உள்ளிட்ட தம் நண்பர்கள் ஆறுதுல் கூறித் துரைசாமியார் அவர்களைத் தேற்றினர்.

 அதன் பிறகு 1936 இல் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரசு கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 இல் குடந்தை நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 முதல் உலகச் சண்டை முடிந்த 1945 வரை மிக நீண்டகாலம் நகர அவை இருந்தது. கும்பகோணத்தில் நகராட்சியில் சாதிவாரி இட ஒதுக்கீட்டுக்குக் குரல்கொடுத்துக் குடந்தையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் வேலை வாய்ப்பு பெற உதவியவர். சாலையமைத்தல், பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட நகர் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். குடந்தையின் இன்றைய வளர்ச்சிக்குத் துரைசாமியார் அவர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.

 1939 இல் குடந்தையில் தேசியத் தொழிற்சாலை, இரும்பு வார்ப்புச்சாலை தொடங்கினார். இப்போது இரண்டாவது உலகப்போர் நடந்தது. இரும்பு ஆலைக்கு உரிய கச்சாப்பொருள்கள் கட்டுப்பாட்டில் இருந்து. துரைசாமியார் அரசிடம் "பர்மிட்" கேட்டார். அதற்கு நீங்கள் போருக்குரிய கருவிகள் செய்து தந்தால் தங்களுக்கு இசைவு வழங்கப்படும் என்றனர். ஆங்கிலயே ஆட்சியை ஆதரிக்க மனம் இல்லாமையால் மறுத்துவிட்டார். அதன்பிறகு இந்திய விடுதலைக்குப் பிறகு தொழிற்சாலை நல்ல வளர்ச்சி கண்டது. அதன்பிறகு அரசியல் இயக்கங்களிலிருந்து விலகி இறைத்தேடலில் ஈடுபட்டும், தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டும் தம் வாழ்நாளைச் செலவிட்டார்.

 1960 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு 5 ஏக்கர் இலவச நிலங்கள் மானியம் என்ற பெயரில் வழங்கப்பட்டன. துரைசாமியார் அதனை வாங்க மறுத்துவிட்டார். இதனை அறிந்த ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். அவருடைய அறிவுரைப்படி ஐந்து ஏக்கர் நிலம் மன்னார்குடி எடமேலையூர் கிராமத்தில் கொடுக்கப்பட்டது.

 அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி எடமேலையூர் கிராமத்தில் வாழும் ஏழை வேளாண்மைக்காரர்கள் 20 பெயரின் பெயரை எழுதிச், சீட்டு போட்டு அதில் 5 சீட்டு எடுத்து அந்த 5 பேருக்கு ஒரு ஏக்கர் என்ற வகையில் 12.12.1961 இல் மன்னார்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இனாம் சாசனமாக எழுதிக்கொடுக்கப்பெற்றது (ஆவண எண் 3798,1961 திசம்பர் 12).

 துரைசாமியார் ஓய்வூதியம் பெற பலர் வலியுறுத்தியும் ஏற்கவில்லை. அரசிடமிருந்து இலவசமாக எதனையும் ஏற்றுக்கொள்ளாத உண்மையான காந்தியத்தொண்டராகவும் நாட்டுப்பற்றாளராகவும் வாழ்ந்து 05.01.1973 இல் இறைவனடி சேர்ந்தார். இவர் இறந்த செய்தியை இந்து முதலிய எல்லா நாளேடுகளும் வெளியிட்டன. குடந்தை நகர மண்டபத்தில் இவரின் படம் திறந்து வைக்கப்பெற்றது.

 துரைசாமியார் இந்திய விடுதலைப் போரில் ஈடுப்பட்டதுபோல் தமிழாராய்ச்சிப் பணியிலும், இறைத்தேடலிலும் ஈடுபட்டவர். இவர் இயற்றிய திருவியன் மதியம் என்ற நூலும் (திருக்குறள் போலும் அறவாழ்வு வலியுறுத்தும் நூல். இது துரையனாரின் தமிழ்ப்பேரறிவு காட்டும் நூல்), திராவிடத் தமிழர்களின் பண்டைக்கால வரலாறு என்ற நூலும், துரைசாமியார் எழுதி நான் பதிப்பித்த (1995) விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் தன் வரலாறு நூலும் இவர்தம் சிறப்பை இந்த உலகில் என்றும் கூறிக்கொண்டிருக்கும்.


திருவியன் மதியம் நூல்


வெ.துரையனார் அடிகளின் நூல்

 துரைசாமியார் அவர்களின் ஆண் மக்கள் மூவர்; துரை. திருச்சிற்றம்பலம், துரை.அருள்நந்தி சிவம் (85வயது), துரை. திருநாவலர் காந்தி ஆகியோர் தந்தையார் வழியில் இரும்பு வார்ப்புச்சாலை, நெல் அறவைச்சாலைகளைக் குடந்தை, மயிலாடுதுறைகளில் நடத்தி வருகின்றனர். இவர்களின் பெரும் முயற்சியால் குடந்தையில் துரைசாமியார் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. துரைசாமியார் வேதரத்தினம் பிள்ளை அவர்களின் சம்பந்தி உறவுடையவர்கள்.

காந்திய கொள்கையில் வாழ்ந்த இந்தத் தியாகியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் நீங்கள் படித்த நாள் முதல் புதியவராக மாற வாய்ப்பு உண்டு.

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூல் கிடைக்குமிடம்:

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்ட சோழபுரம்(வழி)
அரியலூர் மாவட்டம்
612 901
செல்பேசி + 91 9442029053

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

I have not known about Duraiyanaar Adigal so far. Thank you for helping us learn about such great people. I have been in Botswana for 2 decades and have frequented South Africa but have not heard about him there from other Indian friends. Perhaps they are also not aware of Duraianaar Adigalaar. It is so heartening to learn that such noble minds lived amongst our forefathers. The degeneration of values among the current personalities in public life brings great sorrow and gloom to us. I wish that at least the common man learns from such great personalities that showed us the right way to lead our lives. THANK YOU ONCE AGAIN or this wonderful article.

Kanags சொன்னது…

விக்கியில்:
வெ. துரையனார். நன்றி

Info-farmer சொன்னது…

அடிகளாரின் வரலாறு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இது போன்ற அயலக தமிழறிஞர் குறித்தக் கட்டுரைகளை, விக்கிப்பீடியாவில் பதிவேற்றினால் பலரும் அறிந்து கொள்வர்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

இதுவரை நான் அறிந்திராத விடுதலைப்போராட்ட வீரர்/தமிழறிஞர் குறித்த வியத்தகு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

தகவலுழவன் கூறியது போல இது போன்ற கட்டுரைகளை விக்கிபீடியாவில் பதிவேற்றினால் நன்று.