நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 ஜூன், 2010

தமிழ்த் திரைப்படக் களஞ்சியம் = அலிகான்


திரு.அலிகான்

புதுச்சேரிக்கு நண்பர் திரு.மு.இராசசேகர் அவர்கள் வரும்பொழுதெல்லாம் நம் வீட்டில் பாதுகாக்கப்படும் நாட்டுப்புறப் பாடல்கள்,தமிழ் இலக்கியம்,இலக்கணம் சார்ந்து பதிவுசெய்யப் பெற்ற அறிஞர்களின் பேச்சுகள் அடங்கிய பலநூறு ஒலிநாடாக்களைக் கண்டு இவற்றைக் குறுவட்டாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பார்.அதற்குத் தாம் இயன்ற வகையில் துணைநிற்பதாகவும் அடிக்கடி அவர் வலியுறுத்துவது உண்டு.அவ்வாறு நான் சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கவேண்டிய ஒரு துறைசார் வல்லுநர் உண்டு என்றும் அவருக்கு அகவை 75 ஐ நெருங்குகிறது என்றும், அவரை நான் மிக விரைந்துகாணவேண்டும் என்றும், அவரிடம் திரைப்படப் பாடல்கள் அடங்கிய குறுவட்டுகள் இலட்சக்கணக்கில் இருப்பதாகவும் கூறுவார்.நானும் சென்னைக்குப் பல முறை சென்றாலும் இதற்குரிய நேரம் கிடைக்காமல் திரும்பிவந்துவிடுவேன்.

இந்தமுறை நண்பர் இராசசேகரின் வலியுறுத்தல் மிகுதியானதால் இந்தக் கிழமை திடுமென ஒருநாள் நான் வருகிறேன் என்று இராசசேகர் அவர்களுக்குத் தொலைபேசியில் பேசினேன் (16.06.2010).அவரும் திரு.அலிகானைச் சந்திக்க முன் இசைவு பெற்றார்.புதுவையில் பதினொரு மணிக்குப் பேருந்தேறி,இரண்டு முப்பது மணியளவில் நண்பர் இசாக் அலுவலகம் சென்று அவரைக் கண்டு உரையாடினேன்.மூன்றரை மணிக்கு அவரிடம் விடைபெற்று, கலைஞர் நகரில் தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றும் கூழமந்தல் உதயகுமார் அவர்களை நான்கு மணிக்குக் கண்டேன்.நான்கரை மணி வரை சிற்றுண்டி உண்டபடி (பகலுணவும் அதுதான்) உரையாடினோம்.

நான் சென்னை வந்தால் உதயகுமார் அண்ணனுக்குப் பொங்கல் திருவிழாதான்.அவரின் கூழமந்தல்(சோழமண்டலம் என்பதை ஒலிக்கத்தெரியாத ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் chozhamandalam என்பதைக் கூழமந்தல் என்று ஒலித்து இன்றுவரை சோழமண்டலம் கூழமந்தலாகக் குறுகி அதன்பெருமை இழந்து நிற்கிறது கல்வெட்டில் சோழமண்டலம் என்று இந்த ஊர் குறிக்கப்பெறுகிறது.இவ்வூர் சிவன்கோயில் இராசேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.அழகிய சிலைகள் உள்ளன.நான் நேரில் கண்டு வியந்தவன்.கலையுணர்வுடன் கட்டப்பெற்றுள்ள கோயில் பற்றி பின்பு விரித்து எழுதுவேன்.இது நிற்க) இந்த ஊரில் ஆண்டுதோறும் தமிழ் விழாக்கள் நடத்தித் தமிழ் அறிஞர்களை, ஆர்வலர்களை அழைத்துப் பேசச்செய்து தமிழ்ப்பணியாற்றுவது திரு.உதயகுமாரின் இயல்பு.அவரையும் அழைத்துகொண்டு அலிகான் அவர்களின் அறைக்குச் சென்றோம்.


இராசசேகர்,அலிகான்,நான்,உதயகுமார்


அலிகான் அவர்களுடன் நான்

எங்களை வரவேற்க ஒரு புகைப்படக் கலைஞருடன் நண்பர் இராசசேகர் ஆயத்தமாக இருந்தார்.அலிகான் தவமிருக்கும் அந்த அலுவலகக் கட்டடத்தை ஒரு நிமையம் நின்று உற்றுநோக்கியபடி மாடிப்படியில் ஏறிச்சென்றோம். நண்பர் இராசா கொடுத்த குறிப்பின்படி அகவை முதிர்ந்தவரைப் பார்க்கப் போகின்றோம்.சில பழங்களை வாங்கி வந்திருக்கலாமே என்று நினைத்தபடி அலிகான் அறைக்குச் சென்றோம். முன்பே எழுபத்ததைந்து அகவை என்று அச்சமூட்டியிருந்ததால் அத்தகு தோற்றமுடையவரை அலுவலகத்தில் தேடினேன் ஆனால் யாரும் கண்ணில் தென்படவில்லை. நல்ல சிவப்புநிறத் தோற்றமுடைய திரைப்பட நடிகர்போல் தோற்றமுடைய ஒருவரைக் காட்டி இவர்தான் அலிகான் என்றார் நண்பர் இராசா.என்னால் நம்பமுடியவில்லை.அவரின் இளமை ததும்பும் கலையுள்ளம் கண்டு விடுதலறியா விருப்பினன் ஆனேன்.

அலிகான் அவர்கள் என்னைப் பற்றி தங்களுக்குத் தெரியும்தானே என்றார்.இராசா அவர்கள் சொன்னது மட்டும் தெரியும் என்றேன்.நிறைய செய்தி ஏடுகளில் வந்துள்ளதே என்றார். படித்ததில்லை என்றேன்.தொலைக்காட்சியில் பலமுறை நேர்காணல் வந்துள்ளது என்றார். தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகம் இல்லை என்றேன்.சரி என்று அவரை நேர்காணல் கண்ட பல தொலைக்காட்சிகளின் பதிவுகளைக் கண்முன் திரையில் காட்டினார். புதையலை மூடியிருந்த பொருள்கள் விலகப் புதையல் புலப்படுவதுபோல அலிகான் அவர்களின் ஆற்றலும் திறமையும் பளிச்சிடத் தொடங்கின.

பாரதிதாசன் பாடல்களைத் தாங்கள் தொகுத்துள்ளீர்களா?எத்தனைப் பாடல்கள் தங்களிடம் இருக்கின்றன என்றேன்.பாவேந்தர் பாரதிதாசன் 46 பாடல்களுக்கு மேல் திரைப்படத்திற்கு எழுதியுள்ளார்.36 பாடல்கள் தம்மிடம் இருக்கின்றன என்றார்.

"தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு" எனத் தொடங்கும் பாடல் யாரால் எந்தப் படத்துக்கு எழுதப்பெற்றது?என்று கேட்டு முடிப்பதற்குள் அமரதீபம் படத்தில்,மருதகாசியின் பாடல், சலபதிராவ் இசையில் வெளிவந்தது என்றதுடன் அந்தப் பாடலைத் திரையில் அடுத்த நொடி ஓடவிட்டார். மேலும் "உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்போதில்" என்ற பழைய பாடலை ஒலிக்கசெய்து எங்களுடன் ஒன்றிக் கேட்டார்."காற்றினிலே வரும் கீதம்" பாடலைப் பாடும் எம்.எசு.அவர்களின் பெயரைத் தவறுதலாக நான் சொன்னேன்.என்னைத் திருத்தினார். அந்தப் பாடலை அடுத்த நொடியில் எங்கள் பார்வைக்கு விருந்தானது."மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவுகண்டேன் தோழி" என்ற இன்பப் பாடலையும் துன்பப்பாடலையும் ஓளிபரப்பித் துன்பப்பாடலில் உள்ள இசையொழுங்குகளை வியந்தார்.வேறுபாடு எங்களுக்கு உணர்த்தினார்.

1931 அக்டோபர் 30 இல் காளிதாசு படம் வெளியானது என்றார்.அலிகான் அவர்களுக்கு 1959 இல் தொடங்கியத் திரைப்படப் பாடல் தொகுப்பு முயற்சி தம் இசையார்வம் தணிக்கவே தொடங்கியுள்ளது. ஆனால் அந்த ஆர்வம் படிப்படியே வளர்ச்சி பெற்று மற்றவர்களும் கேட்டு மகிழத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணமாக வளர்ச்சி பெற்றது.இவரிடம் ஒரு இலட்சம் திரைப்படப் பாடல்கள் குறுவட்டாகப் பாதுகாக்கப்படுகின்றன.தமிழ்,இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளிவந்த பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளார்.இதற்காக இவர் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று பாடல்களைத் தொகுத்துள்ளார்.

கோவை அய்யாமுத்து அவர்கள் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர்.அவரிடம் அவர் எடுத்த படத்தின் பாடல்கள் இல்லாதபொழுது அவருக்குக் கொடுத்து உதவியவர்.பழனி பாகீரதி என்ற திரைப்படப்பாடகியின் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தமணி"ப் பாடலை அவர் மகள் தேடிக்கேட்க, அன்புடன் கொடுத்து உவியுள்ளார் நம் அலிகான்.

முதலில் 'ரெக்கார்டர்களில்' தொகுத்த பாடல்களை ஒலிவட்டுகளில் ஏற்றினார். அந்தக் காலத்தேவைக்கு ஏற்பப் பாதுகாத்தார்.இன்று குறுவட்டுகளின் வருகையால் அனைத்துப் பாடல்களையும் குறுவட்டில் தொகுத்துப் பாதுகாக்கின்றார்.

அலிகான் திரைப்படப் பாடல் தொகுப்பதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்கின்றார். திகம்பரசாமியார் படத்தில் இடம்பெறும் பாடல்களைப் பெற அதற்குரிய "ரெக்கார்டர்" தட்டுகளுக்காக 'ஆங்காங்' நாட்டுக்குச் சென்றார் என்றால் அவர் ஆர்வத்தை நாம் விளக்க வேண்டிய தேவையில்லை.பவளக்கொடி படத்தின் பாடல்களைத் தேடிப் பல இடங்களில் அலைந்தவர்.

36000 பாடலகள் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளன என்கின்றார்.தனிப்பாடல்கள்,கர்நாடக இசைப்பாடல்கள்,இந்திப் பாடல்கள் என்று இவரிடம் உள்ள பாடல்கள் ஒரு நிறுவனம் தொகுத்துப் பாதுகாக்க வேண்டியது.தனி ஒருவராகத் தொகுத்துப் பாதுகாத்து வருகின்றார். இவர் அலுவலகத்துக்கு வராத திரைப்படப் பாடலாசிரியர்களே இல்லை.கண்ணதாசன் வைரமுத்து தொடங்கி இன்றுள்ள முத்துக்குமார் உள்ளிட்ட திரைப்படப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், வானொலி,தொலைக்காட்சி நிலையக் கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் நம் அலிகான்.

தமிழ்த் திரைப்படம் கடந்துவந்த பாதையை உண்மையாக அறிய வேண்டும் என்றால் அலிகான்தான் நமக்கு உடனடி பார்வை நூல்.

திரைப்பாடல்கள் பற்றிய புள்ளி விவரங்கள் இலங்கை வானொலியில் சிறப்பாக இருந்தது. அதற்கு அடுத்து நம் அலிகான் அவர்களைத் தொடர்புகொண்டால் நம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்.பழைய திரைப்படப் பாடல்களை அதன் அழகு குறையாமல் கேட்க, பார்க்க அலிகானை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.அந்த அளவு உதுவும் உள்ளத்துடன் இதனைத் தொண்டாகச் செய்து வருகின்றார்.

இவர் அலுவலகத்துக்கு வந்து தேவையான பாடல்களைக் குறிப்பிட்டுக் கேட்டால் அதனைக் கணிப்பொறி வழியாக அடுத்த நொடியில் பதிந்து வழங்கிவிடுவார்.குறைந்த அளவே இதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.தக்கவர்களுக்கு இலவசமாகவே பதிவு செய்து வழங்கிய வரலாறும் உண்டு.

தஞ்சாவூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலிகான் அவர்கள் 1939 சனவரி 20 இல் பிறந்தவர்.இவர் தந்தையார் முகம்மது இசுமயில் ஒரு சுந்திரப் போராட்ட வீரர்.இளமையில் தம் பகுதிக்கு வரும் தலைவர்களிடம் தந்தையார் அறிமுகப்படுத்தியுள்ளார். மேடையில் பேசும் பயிற்சியையும் வழங்கியுள்ளார்.அலிகான் இளமை முதல்கொண்டு கதை,கவிதை, கட்டுரை, நாடகம் என்று ஆர்வம் காட்டியவர்.அரசுப் பணியில் பலகாலம் இருந்து ஓய்வுபெற்றவர்.

தாம் சார்ந்த துறை மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தும் துறை என்பதால் மக்களின் உள்ளம் அறிந்து தம் கலையுணர்வால் தொண்டுசெய்துள்ளார். பொன்னி,தமிழ்நாடு,தென்றல் உள்ளிட்ட ஏடுகளில் எழுதிய பெருமைக்குரியவர்.கண்ணதாசன் உள்ளிட்ட மிகப்பெரிய கவிஞர்களிடம் நன்கு பழகியவர்.மருதகாசி,ஆலங்குடி சோமு, தஞ்சைபாசுகரதாசு, பாபநாசன் சிவன் உள்ளிட்டவர்கள் எழுதிய பாடல்களையெல்லாம் எழுத்துமாறாமல் பாடுகின்றார்.சென்னைப் பண்பலை வானொலியில் ஒன்றரை ஆண்டுகள் "அலிகான் டைம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி தொடர் ஒலிபரப்பாக நடந்துள்ளது.பல திரைப்படங்களுக்குப் பாடலும் எழுதியுள்ளார்.இவரின் கனவு திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்பது.அதற்காகப் பல திரைப்படத்துறை சார்ந்தவர்களை அணுகியுள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று திரைப்படத்துறையினர் அலிகானைச் சார்ந்து நிற்கின்றார்கள்.

தமிழ்த்திரைப்படத்தில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய எம்.கே.தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா,டி.ஆர்.மகாலிங்கம்,கே.ஆர்,இராமசாமி,என்.எசு.கிருட்டினன்,,கே.பி.சுந்தராம்பாள்,
எசு.எம்.சுப்பாய நாயுடு,டி.பி.இராசலட்சுமி,பி.பானுமதி,,எசு.சி.கிட்டப்பா,எம்.எம்.தண்டபாணி தேசிகர்,சிதம்பரம் செயராமன்,பாபநாசம் சிவன்,உடுமலை நாராயணகவி, மருதகாசி, பட்டுக்கோட்டடை கல்யாணசுந்தரம், கே.டி.சந்தானம், இராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், எசு.வி.வெங்கட்ராமன்(காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) உள்ளிட்ட இசையறிஞர்கள்,இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்களின் பாடல்களை நீங்கள் கேட்க வேண்டுமா?

நீங்கள் போக வேண்டிய இடம் அலிகான் தவமிருக்கும் கோடம்பாக்கம்தான்.


ஆவணக் காப்பகத்தின் முகப்பு


உள்ளே நுழைந்தால்...

தொடர்புக்கு
திரு.அலிகான் அவர்கள்,
திரைப்படப் பாடல் தொகுப்பாளர்,
பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஆவணக் காப்பகம்,
சீட்ராக்சு,பழைய எண் 91,ஆர்க்காடு சாலை,
வடபழனி,சென்னை-600 026

செல்பேசி:
+91 97911 61433
+ 91 94444 61400
+91 44 2481 4969

1 கருத்து:

கல்விக்கோயில் சொன்னது…

மிக அருமையான பதிவு மட்டுமல்ல. பயன் தரும் பதிவும் கூட.
வாழ்த்துக்கள்.