நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 ஜூன், 2010

இருபதாம் நூற்றாண்டு: பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை
தமிழ்க்கவிதைகள் காலந்தோறும் உருவம்,உள்ளடக்கம், உத்திமுறைகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கண்டு வந்துள்ளன.இதற்கு அவ்வக் காலங்களில் வாழ்ந்த திறமையான புலவர்களும் சமூக அமைப்பும் காரணமாக அமைந்தனர்.இருபதாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை தமிழ்க்கவிதைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் கண்ட படிநிலை வளர்ச்சியைக் காட்டிலும் இருபதாம் நூற்றாண்டில் கண்ட வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாகத் தெரிகின்றது.

பாரதியார், பாரதிதாசன் என்ற இரு பெரும் சுடர் மணிகள் தோன்றித் தமிழ்க்கவிதையின் பன்முக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.'சொல் புதிது சுவை புதிது சோதி மிக்க நவகவிதை' என்று பாரதியார் தம் கவிதையை நமக்கு அடையாளப்படுத்தினார்."புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான் பாரதிதாசன்; உன் பாடல்கள் எதுகைகளின் பட்டியல்கள் அல்ல;பொங்கும் எரிமலையின் முகவரிகள்"என்று பாரதிதாசனைப் புலவர் புலமைப்பித்தன் அறிமுகப்படுத்துவார்.அந்த அளவு நெருப்புக் கவிதைகளை எழுதித் தமிழர்களுக்கு இனமான உணர்வூட்டிவர் பாவேந்தர் ஆவார்.

பாவேந்தரின் பாடல்கள் தொடக்கத்தில் பக்திப் பாடல்களாகவும்,தேசியப் பாடல்களாகவும், திராவிட இயக்க உணர்வுப்பாடல்களாகவும் விளங்கிப் பின்னர்த் தனித்தமிழ் உணர்வூட்டும் பாடல்களாக மலர்ந்தன.பாரதியோ பக்தியிலும் தேசியத்திலும் ஊறியப் பாடல்களைத் தந்து அழியாப் புகழ்பெற்றான்.பாரதியின் பாடல்களைப் படித்து அவர்க்கு ஒரே வாரிசாகப் பாரதிதாசன் மட்டும் தோன்றினார்.ஆனால் பாரதிதாசனின் கவிதைகளில் தோய்ந்து ஒரு பாட்டுப்படையே தோற்றம் பெற்றுள்ளது.அந்தப் படையினரைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிஞர் உலகம் அழைக்கும்.

பாரதியார் இளமையில் மறைந்தமை தமிழ்க் கவிதைத்துறைக்குப் பேரிழப்பாகும்.உயிருடன் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் பல காப்பியங்களையும் உயிரோட்டமான பாடல்களையும் தந்திருக்க வாய்ப்புண்டு.அதற்குரிய தமிழ்மொழியாளுமையும், யாப்பிலக்கணத் தேர்ச்சியும் பாரதியாரிடம் இருந்துள்ளதை அவர் படைப்புகள் வழியாக அறியலாம்.

மக்கள் பயன்படுத்தும் இசை வடிவங்களை உள்வாங்கிக்கொண்டு மக்களுக்குப் பாட்டு வடிப்பவர்களையே மக்கள் நினைக்கிறார்கள். பாரதியாரிடம் சிற்றூர் மக்களின் இசையும், செவ்வியல் இசையும் கையிருப்பாக இருந்ததால் அவர் பாடிய பாடல்கள் யாவும் இசை நயம் கொண்டு மக்களுக்கு விருப்பமான இசைப்பாடல்களாக மிளிர்ந்தன.

பாரதியாருக்குப் பிறகு தமிழ்க்கவிதையுலகினை வழிநடத்திய பெருமை பாவேந்தருக்கு உண்டு.பாரதியாரின் தொடர்பு பாவேந்தரின் பாட்டுக்குப் புதுமுறை,புதுநடை காட்டியது.தந்தை பெரியாரின் தொடர்பு பாவேந்தரை 'நானொரு நிரந்தர நாத்திகன்' என்று மாற்றியது.1936 இல் பாவேந்தரின் 'பாரதிதாசன் கவிதைகள்' முதல்தொகுதி வெளியானது.பாவேந்தரை இக்கவிதைத் தொகுதி நன்கு அறிமுகம் செய்தது.கடவுள் மறுப்பு,சமய எதிர்ப்பு,சமுதாய நிலை, பொதுவுடைமை,தொழிலாளர் நலன் முதலியன இந்நூலின் பாடு பொருளாகும். இக்கருத்துகளின் ஈர்ப்பினால் பல இளங்கவிஞர்கள் தோன்றினர்.

பாரதிதாசன் பாடல்கள் சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளை எதிர்த்தவையாகும். இந்திமொழித் திணிப்பு,பெண்ணுரிமை வேண்டல், பகுத்தறிவுப் பாடல்களைப் பாவேந்தர் எழுதினார்.இதனைக் கற்ற இளைஞர்கள் பலர் பாவேந்தரின் பாடல்களைப் பரப்பவும் அதன் வழியில் எழுதவும் தோன்றினர்.அவர்களுள் முருகு.சுப்பிரமணியன்,அரு.பெரியண்ணன் என்னும் இரண்டு செட்டிநாட்டு இளைஞர்கள் பாவேந்தர் புகழ் பரப்புவதற்கு என்று பொன்னி என்ற பெயரில் இலக்கிய இதழொன்றைத் தொடங்கினர்(1947).புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த அந்த இதழ் பின்னாளில் சென்னையிலிருந்து வெளிவந்து நின்றது.அந்த ஏட்டில் (1947 பிப்ரவரி தொடங்கி 1949-அக்டோபர் வரை) 48 கவிஞர்களைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.அப்பட்டியலில் இடம்பெறும் சுரதா, முடியரசன், வாணிதாசன், புதுவைச்சிவம், வா.செ.குலோத்துங்கன், மு.அண்ணாமலை, பெரி.சிவனடியான், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற பாவலர்களாக வலம் வந்தனர்.

இப்பட்டியலில் இடம்பெறாமல் பாவேந்தர் கவிதைகளைக் கற்று அவர் வழியில் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அன்றும், இன்றும் பாடல்புனையும் பாவலர்கள் உண்டு.இவ்வகையில் பெருஞ்சித்திரனார்,கோவேந்தன்,தங்கப்பா,சாலை இளந்திரையன், எழில்முதல்வன்,காசி ஆனந்தன்,புலவர் புலமைப்பித்தன்,கடவூர் மணிமாறன், பாளை எழிலேந்தி,மகிபை பாவிசைக்கோ, தரங்கை. பன்னீர்ச்செல்வன், தமிழியக்கன், பொன்னடியான் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.பாவேந்தரின் கொள்கைகளில் ஆழமான பற்றுக்கொண்டு அவர் வழியில் பாடல் புனைந்து பின்னாளில் புதுப்பாக்களில் தமிழ் உணர்வூட்டும் படைப்புகளை நல்கும் ஈரோடு தமிழன்பன்,மரபுப் பாடலில் செழுமையான தொகுதிகளை உருவாக்கிய வேழவேந்தன் உள்ளிட்ட பாவலர்களை நாம் சுட்டியாக வேண்டும்.

கவியரசு கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கம்பதாசன் ஆகியோரின் பாடல்களில் பாவேந்தரின் சாயலைப் பல இடங்களில் காணமுடியும்.

பாரதிதாசன் பரம்பரையினர் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே இணைப்புத்தொடராக விளங்கினர். இவர்கள் சங்க இலக்கியங்களுக்குப் பிறகு இலக்கிய உலகில் இழந்துவிட்ட தமிழ் மரபுகளை மீண்டும் வளரச் செய்த பெருமைக்கு உரியவர்கள்.சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட கருப்பொருளான இயற்கைப் பொருள்களைத் தனித்தனியாக விரிவாகப் பாடியுள்ளனர்(காடு,நிலா,புறா முதலான தலைப்புகளில்).

சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இடைக்கால நூல்களில் சமற்கிருதச் சொல்லாட்சிகளைக் காணமுடிகிறது. பாரதிதாசன் பரம்பரையினரின் படைப்புகள் மீண்டும் தனித்தமிழ்ப் பெயர்கள் தாங்கி வெளிவந்துள்ளன.சங்க இலக்கியங்களில் சமயச் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன.பிற்கால நூல்களில் மதக்கருத்துகளும் மூட நம்பிக்கைக்குத் தூபமிடும் சாத்திரக் கூறுகளும் மண்டிக்கிடந்தன.பாரதிதாசன் பரம்பரையினரின் எழுச்சி தமிழிலக்கியங்களில் சமயம் சாரா இலக்கியங்கள் வகுக்க வழிகோலின. சங்க இலக்கியங்கள் வீர உணர்ச்சியையும்,தமிழர் பண்பாட்டையும் ஊட்டியதுபோலப் பரம்பரையினர் படைப்புகள் தமிழ்,வீர உணர்ச்சியை ஊட்டின.எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக அறுபட்டுக் கிடந்த தமிழ் மரபுகளை இணைத்துச்சேர்த்த பெருமை பாரதிதாசன் பரம்பரையினர்க்கு உண்டு.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் குறிப்பிடப்படும் சுரதா அவர்கள் பாவேந்தருடன் நெருங்கிப் பழகியவர். பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இயற்கையைப் பாடவும்,சொற்செறிவைக் கவிதையில் அமைக்கவும்,வரலாற்றுச் செய்திகளைப் பாட்டில் வடிக்கவும் பாவேந்தரிடம் கற்றவர் சுரதா.அதுபோல் பாவேந்தரின் காப்பியம் புனையும் போக்கினையும், மொழியாளுமையையும், தமிழ்ப்பற்றையும், தமிழிசை ஈடுபாட்டையும் முடியரசன் கவிதைகளில் காணமுடிகின்றது.முடியரசனின் பூங்கொடி காவியம் தமிழ்க்காப்பிய உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்ட வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசனின் நேரடி மாணவராக விளங்கி,அவர்தம் வழியில் இயற்கை குறித்த கவிதைகளைப் பாடியவர்களுள் வாணிதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவ்வகையில் வாணிதாசனின் எழிலோவியம்,எழில் விருத்தம் நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.பாவேந்தர் வழியில் வாணிதாசன் மொழியுணர்வு, இன உணர்வு சார்ந்த பல பாடல்களை வழங்கியுள்ளார். இந்தி எதிர்ப்புப் பாடல்களை வாணிதாசன் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். வாணிதாசனிடம் திராவிட இயக்க உணர்வு,பொதுவுடைமைச் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதை அவர்தம் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.வாணிதாசன் பாவேந்தர் வழியில் பல சிறுகாப்பியங்களையும்,கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

புதுவைச்சிவம் பாவேந்தரின் மாணவராகவும் நண்பராகவும் விளங்கியவர்.பாவேந்தர் அரசுப்பணியில் இருந்த காரணத்தால் புதுவைச்சிவம் பெயரில் இதழ் நடத்தியும்,பதிப்பகம் நடத்தியும் இயக்கப்பணிகளில் ஈடபட வேண்டியிருந்தது.தம் மாணவர் சிவத்தைக் கவிதை எழுதும்படித் தூண்டிக் கவிதை நூலுக்குத் தாமே வாழ்த்துப் பாவும் பாவேந்தர் வழங்கியுள்ளார். சிவம் பாவேந்தரின் வழியில் நின்று கைம்மை வெறுத்த காரிகை என்ற பெயரில் கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்தும் பாட்டுத்தொகுதியை வெளியிட்டுள்ளார். மேலும் பெரியார் வாழ்வியலைப் பாட்டாக வடித்த பெருமை சிவத்துக்கு உண்டு(1944).

பாவேந்தரின் கவிதைகளை ஆழமாகப் படித்ததுடன் பாவேந்தரின் உதவியாளராகச் சிலகாலம் இருந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார்.பட்டுக்கோட்டை அழகிரியிடம் பரிந்துரைக்கடிதம் பெற்றுப் பொதுவுடைமைத் தலைவர் வ.சுப்பையா வழியாகப் பாவேந்தரின் தொடர்பைப் பெற்றவர் நம் பட்டுக்கோட்டையார்.

1952 இல் இச்சந்திப்பு நடந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எதனை எழுதத் தொடங்கினாலும் "வாழ்க பாரதிதாசன்" என்று எழுதித் தொடங்கும் அளவிற்குப் பாரதிதாசன் மேல் பற்றுக்கொண்டவர். பாவேந்தரிடம் இலக்கண இலக்கிய நுட்பம் அறிந்தவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவியில் இடம்பெறும் "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை" என்னும் பகுதி "ஆடைகட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ" என்று கல்யாணசுந்தரம் வழியாக மறுவடிவம் கண்டுள்ளது.

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்" என்று பாவேந்தர் பாடியதை

"இலங்கை மாநகரத்திலே இன்பவல்லி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்"

என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார்.

இதுபோன்ற எண்ணற்ற கவிஞர்களின் வரிகளைச் சான்றுகளாகக் கண்ட பாவேந்தர் பாரதிதாசன் பின்னொரு நாளில் பின்வருமாறு எழுதினார்.

"என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்மர்
என்நடை தம் நடை; என்யாப்புத் தம்யாப்பென்(று)
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்
திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவ(ர்)

இருப்பிடம் என்றன் இருப்பிடம்"(பாரதிதாசன் படைப்புத்திறன்,பக்கம்,12).

அந்த அளவு பாவேந்தரின் கவிதைத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் பரவி நிற்கின்றது.கட்டுரையைத்
த சண்டே இந்தியன் இதழில் நேரடியாகப் படிக்க இங்கே

நனி நன்றி:
இக்கட்டுரையைச் செம்மொழிச் சிறப்பிதழில் வெளியிட்ட
த சண்டே இந்தியன்(27,சூன்,2010) இதழுக்கு!

கருத்துகள் இல்லை: