நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 ஜூன், 2010

மலேசியச்செலவு-தொடர் 2


செயிண் மேரித் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர்,மாணவர்களுடன் நான்

21.05.2010 காலை 7.45 மணிக்குத் திரு.க. முருகையன் அவர்கள்(பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்) என் அறைக்கு வந்தார்.இருவரும் புறப்பட்டு ஐயா சுப.நற்குணர் பணிபுரியும் செயிண்மேரித் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றோம். 1905 ஆம் ஆண்டு சற்றொப்ப 20 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் கொண்டு தொடங்கப்பட்ட பள்ளி அதுவாகும்.இன்று 375 மாணவர்களுடனும் 25 ஆசிரியர்களுடனும் இப்பள்ளி இயங்குகிறது.இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோவிந்தராசலு அவர்கள் ஆவார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் இவர்.

இப்பள்ளியில் நூலகம்,பேரணி மண்டபம்,அறிவியல்கூடம்,ஆசிரியர் அறை,அலுவலகம், நூலகம்,கணினிக்கூடம்,நடவடிக்கை அறை போன்றவை குளிர்சாதன வசதியுடன் உள்ளன. இந்தப் பள்ளியின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமுறத் தமிழ்ப்பெயர்கள் இட்டு வழங்குவது நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாகும்.வள்ளுவர் அறிவியல் கூடம்,நீலாம்பிகை மழலையர் மன்றில், முத்தெழிலன் கணினியகம்(முரசு அஞ்சல் நிறுவுநர்),வள்ளலார் அறிவியல்கூடம், தமிழ்த்தாத்தா நாடிக்கற்றல் நடுவம்,பஞ்ச்.குணாளன் உடற்கல்வி இருப்பகம்,பாவேந்தர் பாடநூல் அறை,துன்.வீ.தீ.சம்பந்தன் குறைநீக்கல் அறை, தமிழவேள் கோ.சா.அறை,ஔவை கட்டொழுங்கு அறை,கம்பர் கருவள நடுவம், என்று யாவும் தமிழ் மணக்க உள்ளதைக் கண்டு அவற்றை நினைவாகப் படம்பிடித்துக்கொண்டோம்.

அந்தப் பள்ளியின் அழகிய தோற்றம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.எங்கும் தூய தமிழ்ப் பெயர்ப்பலகைகள் கண்டு உள்ளம் பூரித்தேன்.நம் நாட்டில் தேசியப் போர்வையில் நம்மவர்களை ஒதுக்கிவிட்டு வடநாட்டார் பெயர்களை நம்மூர் சாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வைத்து மகிழும் நம் அடிமைகள் நிலை நினைத்து வருந்தினேன். ஒரு பள்ளிக்குள் தமிழுக்கு உழைத்தவர்களின் பெயர்களைப் பொருத்தமான இடங்களில் வைத்து நன்றிசெலுத்தியுள்ள தமிழுள்ளங்கள் இருக்கும் வரை தமிழ் நிலைபெறும் என்ற நம்பிக்கை வந்தது.ஒரு தண்ணீர்ச்சுனைக்குப் பாரதி தண்பொழில் என்று வைத்துள்ள மலையகத் தமிழ் உள்ளங்களை என்றும் நினைவிற்கொள்வேன்.

அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.அது நம் நாட்டில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் அலுவலகத்தின் மேலாண்மை இயக்குநர் அலுவலக அறையைவிடவும் தூயதாகவும் ஏந்தாகவும் இருந்தது.எத்தனை கணிப்பொறிகள்,உயரிய இருக்கைகள்,வளிக்கட்டுப்பாட்டு ஏந்து,அவரவர்களும் அமர்ந்து பணிபுரியும் கடமை உணர்வு கண்டு மகிழ்ந்தேன். அனைவரிடமும் தலைமையாசிரியர் அவர்கள் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள்.

பள்ளியில் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் பாவாணர் பேரணி மண்டபத்தில் என் உரை கேட்கத் திரண்டிருந்தனர்.நண்பர் சுப.நற்குணன் அவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க.முருகையன் அவர்களும் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியாசிரியர்கள் ஒன்றுகூடி என் உரை நடக்க ஏற்பாடு செய்திருந்தனர்.நானும் அனைவருக்கும் வாழ்த்தும் வணக்கமும் சொல்லி என் உரையைத் தொடங்கினேன்.முக்கால் மணி நேரம் என் உரை சிறிய மாணவர்களுக்குப் புரியும்படி கதையாகவும் பாட்டாகவும் அமைந்தது.அனைவரும் மகிழ்ச்சியுடன் கேட்டனர்.கணிப்பொறி,இணையம் பயில வேண்டியதன் தேவையை வலியுறுத்தி என் உரையை நிறைவு செய்தேன்.மாணவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் என்னிடம் கையொப்பமும் வாழ்த்தும் பெற்றுக்கொண்டனர்.அந்த நாள் அவர்கள் வாழ்வில் ஒரு மறக்க இயலாத நாளாகவே இருந்திருக்கும்.


பாருங்கள் தமிழர்களே! வள்ளுவர் வாசிப்புக் குடிலை!


நண்பர் நல்லாசிரியர் சுப.நற்குணன் அவர்களுடன் நான்


ஆசிரியர்களுடன் நான்


ஆசிரியர்களுடன் உரையாடுகிறேன்

தலைமையாசிரியர், மாணவர்களிடம் விடைபெற்றுச் சுப.நற்குணர் மகிழ்வுந்தில் நாங்கள் திருச்செல்வம் ஐயா இல்லம் சென்றோம்.அங்கு நற்குணர் மகிழ்வுந்தை விட்டுவிட்டுத் திருச்செல்வம் அவர்களின் வண்டியில் எங்கள் செலவு தொடர்ந்தது.திருச்செல்வம் அவர்கள் பன்னூலாசிரியர்.வேர்ச்சொல் ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.அன்பும் அமைதியும் கொண்ட தமிழ் உணர்வாளர்.மலேசியா செல்லும் தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் இல்லம் பாசறையாகும்.ஐயா திருமாலனாரின் பெருமைமிகு தயாரிப்புகளில் அவரும் ஒருவர்.அவர் முதலாமவர்.மலேசியாவில் தமிழ் உணர்வு குறையாமல் காப்பவர்களுள் ஐயாவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இன்னொருவர் ஐயா திருமாவளவன்.அவர்களை இந்தமுறை நான் சந்திக்க இயலாமல் போனது.திருச்செல்வம் அவர்கள் தம் வீட்டில் ஒரு பெரிய நூலகம் வைத்துள்ளார்கள். அதனை விரைவு காரணமாக மேலோட்டமாகப் பார்வையிட்டு மகிழ்வுந்தில் உரையாடியபடியே செலாமா சர் சூலான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றோம். சோழன் என்பதைத்தான் மலாய்மொழியில் சூலான் என்கிறார்கள்.


திருச்செல்வம் அவர்களின் நூலகத்தில் அவர்களுடன்

அங்கு நண்பர் மதிவரன் அவர்கள் எங்கள் வருகைக்குக் காத்திருந்தார்.சோழர்களின் பெயரை நினைவூட்டுவதாக அந்த ஊர்ப்பெயர் இருந்தது.மதிவரன் அவர்களின் துணைவியார் அந்தப் பள்ளியில் பணிபுரிவதுடன் ஐயா திருமாலனார் அவர்களின் மகள் தமிழரசி அவர்களும் அங்குப் பணி புரிகின்றார்கள்.அந்தப் பள்ளி மாணவர்கள் விரும்பும் வகையில் குள்ளநரிப் பாடல் கதை சொல்லி என் உரையை 20 நிமிடங்கள் நிகழ்த்தினேன்.அங்கு எங்களுக்கு உணவு ஆயத்தமாக இருந்தது.


சூலான் பள்ளி


சூலான் பள்ளி ஆசிரியர்கள்


சூலான் பள்ளி மாணவர்கள்

எனினும் வேறு பல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க வேண்டியிருந்ததால் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.இந்தப் பள்ளி இன்னும் பொருளாதார வசதிக்குக் காத்துள்ளதாக அறிந்தேன்.தமிழ்க்குழந்தைகள் ஆர்வமுடன் இந்தப் பள்ளியில் தமிழ் கற்று வருகின்றனர்.அந்தப் பள்ளியிலிருந்து புறப்பட்ட நாங்கள் ஐயா திருமாலனார் நினைவிடத்துக்குப் புறப்பட்டோம்.


திருமாலனார் நினைவிடத்தில் நான்


திருமாலனார் இல்லத்தில் துணைவியார் மகளுடன் நான்

மலேசியாவில் தமிழ்ப்பற்று இன்று தழைத்து நிற்பதற்கு ஐயா திருமாலனார் முதன்மையான காரணமாவார்.அயலகத் தமிழறிஞர்கள் என்ற என் நூலில் ஐயா பற்றி எழுதியுள்ளேன்.அவரின் கல்லறைக்குச் சென்றோம்.அது அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்தது.தமிழ் வள்ளல் ஐயா மாரியப்பன் ஆறுமுகனாரின் பொருட்செலவின் அந்தக் கல்லறை நினைவிடமாகக் கட்டப்பட்டுள்ளது. என்னே வனப்பு!என்னே அழகு!என்னே பளிங்கு வேலைப்பாடு!அந்த நாட்டின் உயரிய தலைவருக்குக்கூட இதுபோன்ற நினைவிடம் இருக்குமா? என்பது ஐயமே.அந்த அளவு மலேசியத் தமிழர்கள் திருமாலனாரை நேசிப்பதை உணர்ந்தேன்.அங்கு அகவணக்கம் செலுத்தினோம்.நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

பின்னர் திருமாலனார் இல்லம் சென்று அவர்களின் துணைவியாரைக் கண்டு வணங்கினேன். அவரின் தமிழர் வாழ்வறத்தில் தாலி என்ற நூலினை அம்மா கொடுத்தார்கள்.மீண்டும் அடுத்த முறை வந்து ஒரு நாள் தங்கிச் செல்வதாக உறுதியளித்து,திருமாலனாரின் தமிழ்நெறிக்கழக அலுவலகத்தையும் நண்பர்கள் எனக்குக் காட்டினார்கள்.

பிறகு நாங்கள் மீண்டும் பாரிட் புந்தாருக்குத் திரும்பி பகலுணவுக்குப் பிறகு 2.00 மணிக்கு, பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் ‘தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் தலைப்பில் பொழிவுரை ஆற்றினேன். தமிழறிஞர் இர.திருச்செல்வம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் உடனிருந்தார். முக்கால் மணி நேரம் என் உரை அமைந்தது.வினா விடையும் இருந்தது.என் நினைவு முழுவதும் அனைவரிடமும் விடைபெற்று கிள்ளான் திரும்புவதில் இருந்தது.


பாரித் புந்தார் இலக்கிய நிகழ்வில் பார்வையாளர்கள்


பாரித் புந்தார் இலக்கிய நிகழ்வில் பார்வையாளர்கள்

ஏனெனில் இரவு 7.30 மணிக்கு நான் அங்கு நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து உரையாற்ற மாரியப்பனார் ஏற்பாடு செய்திருந்தார்.எனவே 220 கி.மீ.தொலைவுள்ள ஊருக்குப் பயணமானோம். அங்கிருந்த திருச்செல்வம் குடும்பத்தார்,தமிழ்ச்செல்வம், முருகையன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களிடம் விடைபெற்று எங்கள் மகிழ்வுந்து கோலாலம்பூர் அடுத்த கிள்ளான் நோக்கிச்செலவு தொடர்ந்நது.ஐயா மதிவரன் வண்டியை ஓட்டி வந்தார்கள்.நான் சிறிது கண்ணயர்ந்து ஓய்வெடுக்கும் விருப்பத்தைத் தெரிவித்தேன்.சுப.நற்குணன் ஐயாவும் மதியும் என்னை ஓய்வு கொள்ளச்சொன்னார்கள்.இரண்டு இரவாக யாருக்கும் தூக்கம் இல்லை. எனவே வண்டியைப் பாதுகாப்பாக இயக்கும்படி சொல்லி யான் சிறிது ஓய்வெடுத்தேன். பேச்சுத்துணைக்கு இருந்த நற்குணர் அவர்களும் அவரையறியாமல் கண்ணயர்ந்தார்கள் என்பதறிந்து நான் விழித்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் நற்குணரும் எழுந்து தமிழ்,தமிழகம்,பற்றி எங்கள் உரையாடல் நீண்டது. சாலையில் இருந்த ஓய்விடத்தில் வண்டியை நிறுத்தி இளைப்பாறி மீண்டும் அரை மணி நேரத்தில் கிள்ளான் வந்தோம்.எங்களுக்காக மாரியப்பனார் தமிழமுது பருகும் வாய்ப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

கிள்ளானில் முரசு ஐயா,மன்னர்மன்னன்,முனியாண்டி உள்ளிட்ட அன்புக்குரியவர்கள் வந்திருந்தனர்.அருள்முனைவர் தலைமையில் என் பேச்சு 8 மணிக்குத் தொடங்கியது.9.30 மணியளவு என் பேச்சு நிறைவு.அதன் பிறகு கலந்துரையாடல். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம், பாரதியார்,பாவேந்தர்,இன்றையத் திரைப்படப்பாடல்கள் வரை தமிழிசையான நாட்டுப்புற இசையின் செல்வாக்கைப் பாடிக்காட்டி விளக்கினேன்.மாரியப்பனார் நான் மூச்சு இழுத்து விட்டால்கூடப் பதிவு செய்து பாதுகாக்கும் உள்ளன்பினர்.அனைத்தையும் பதிவுசெய்துகொண்டார்.


கிள்ளானில் இலக்கியப் பொழிவு அரங்கில்

என் உரையைக் கேட்டவர்கள் தமிழில் நல்ல பயிற்சியுடையவர்கள் என்பதால் ஆழமான சில கருத்துகளையும் முன்வைத்தேன்.அனைவரும் உரைநிறைவில் மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம். உணவுக்கூடத்திலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.மறுநாள் 22.05.2010 பந்திங் என்ற பகுதியில் தமிழ் இணையப் பயிலரங்கு.எனவே மாரியப்பனாரின் இல்லத்தில் தங்கி மறுநாள் பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களின் மகிழ்வுந்தில் பந்திங் செல்வது என்ற திட்டத்துடன் இரவு படுக்கும்பொழுது மணி 12 இருக்கும்.

கருத்துகள் இல்லை: