நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டில் முதல்நாள்


கணிப்பொறி அறிஞர் பாலாபிள்ளை

கோவையில் செம்மொழி மாநாடு திட்டமிட்டபடி 23.06.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், மையநோக்கப் பாடலும் இசைக்கப்பட்டன. தமிழகத் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் உணர்வு ததும்பும் வரவேற்புரையாற்றி மக்கள் உள்ளங்களில் தமிழ்க்கனல் ஏற்றினார்.தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்.பேராசிரியர் சார்ச்சு கார்ட்டு,முனைவர் வா.செ.குழந்தைசாமி,பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்க,பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தகுதியுரையாற்றி,ஆசுகோ பார்ப்போலா அவர்களின் ஆய்வுமுயற்சிகளை நினைவுகூர்ந்தார்.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையுரையாற்றினார். கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப் பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா அவர்களுக்கு இந்தியக் குடியரசுத்தலைவர் திருவாட்டி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். நிறைவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிறீபதி இ.ஆ.ப.அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தமிழகத்திலிருந்தும் அயல்மாநிலங்களிலிருந்தும்,பிற நாடுகளிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள், பேராளர்கள்,தமிழ் மக்கள் எனப் பலரும் வந்திருந்தனர்.மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த பந்தலில் அனைவரும் அமர்ந்து பார்க்க வசதி இருந்தது. தொலைக்காட்சி,செய்தி ஊடகத்துறை சார்ந்தவர்கள் நேரலையாக நிகழ்வை ஒலி-ஒளி பரப்பினர்.

நான் என் புகைப்படக்கருவியைப் பாதுகாப்புக் காரணத்திற்காக அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து அறையில் வைத்துவிட்டுச் சென்றதால் படம் எடுக்கமுடியவில்லை.பின்னர்தான் தெரிந்தது அனைவரும் புகைப்படக் கருவி வைத்திருந்தது.நான் என் கைபேசியில் எடுக்க முயன்றும் பயன் இல்லை.

மாநாட்டுக் கூட்டம் புறப்பட்டுச் சென்ற பிறகு கட்டுரையாளர்கள் பலரைக் கண்டு உரையாடும் பேறுபெற்றேன்.தமிழ்க்கணினித்துறை சார்ந்தும்,தமிழ் இலக்கியம்,இலக்கணத்துறை சார்ந்தும் பலதுறை அறிஞர் பெருமக்களைக் காணும் வாய்ப்பு அமைந்தது.பிறநாட்டுப் பேராளர்கள் பலர் எனக்கு அறிமுகமானவர்களாக வந்தமை மகிழ்ச்சி தந்தது.

பகலுணவுக்காகக் கொடிசியா அரங்கிற்குச் சென்றோம்.முதலில் நானும் அம்மா யோகரத்தினம் அவர்களும் அடையாள அட்டைக்குப் படம் எடுத்துக்கொண்டோம்.முன்பே எங்களுக்கு அட்டை ஆயத்தமானாலும் எங்கள் கையினுக்குக் கிடைக்காததால் நாங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டோம். பலரும் அடையாள அட்டை வாங்கப் பெரும் பாடுபட்டனர்.மாலை 5 மணி வரை அடையாள அட்டைக்கு முயற்சியில் இருந்தோம்.என்றாலும் நாங்கள் 5.15 மணிக்கு அரங்கை விட்டு வெளியேறி எங்கள் அறைக்கு வந்துசேர்ந்தோம்.நல்ல பேருந்து ஏற்பாடுகள் இருந்தன.

பகலுணவுக்கூடத்தில் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் அறிஞர்களுடன் உடன் இருந்து உணவு ஏற்பாடுகளைக் கவனித்தமை அனைவராலும் பாராட்டும்படியாக இருந்தது.

முத்தெழிலன்(முரசு),பாலாபிள்ளை,மணி.மணிவண்ணன்,இராம.கி.செல்வா,பத்ரி,நா.கண்ணன்,
சுபாசினி, மணியம்,வெ.இராமன்,நக்கீரன்,கல்யாண்,ஆண்டவர்,டேவிட்பிரபாகர்,அண்ணாகண்ணன், பொற்கோ,மன்னர்மன்னன்,மனோன்மணிசண்முகதாசு,சண்முகதாசு,சிவாப்பிள்ளை,உள்ளிட்ட கணினி, இணையத்துறை,இலக்கியத்துறை நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. நாளை கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன.நாளை நானும் கட்டுரை படிக்கிறேன்.படத்துடன் வருவேன்.


மு.இ,தெய்வசுந்தரம்,பாலா,முத்து,மணிவண்ணன்


மு.இ,மணிவண்ணன்,பாலா,முத்து,இராம.கி

1 கருத்து:

Murugeswari Rajavel சொன்னது…

உங்களின் பங்களிப்பு மாநாட்டிற்கு சிறப்புச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை