நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொகை!




பாவலர் ஆறு.செல்வன் அவர்களின் ஏறு! முன்னேறு! என்னும் தலைப்பில் அமைந்த கவிதைத் தொகுப்பைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவலர் ஆறு.செல்வன் அவர்களின் பாவியற்றும் ஆற்றலை முன்பே அவரின் நூல்கள் வழியும், பாவரங்கில் அவர்கள் வழங்கிய அருந்தமிழ்ப் பாக்கள் வழியும் அறிவேன்.

பாவலர் ஆறு. செல்வன் அவர்கள் கல்விப்புலத்தில் கடமையாற்றுபவர் அல்லர். பல்லாயிரம் மக்கள் நாளும் உடல்நலம்போற்ற நாடிச்செல்லும் நடுவண் அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் பெருமைபெற்றவர். நோயர்களையும், நோய்தீர்க்கும் மருத்துவர்களையும் அன்றாடம் காணும் பணிச்சூழலையுடைவர். ஆனால் இவரின் கவிதையுள்ளம் நாட்டுப்பற்றும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வேட்கையையும் கொண்டது. அதனால்தான் தன்னம்பிக்கையூட்டும் பாக்களை எழுதி இந்த நாட்டுமக்களுக்கு வழங்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.

தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, தோல்விகண்டு துவளாமை, அன்பு, எளிமை, கல்வி, மொழிப்பற்று, ஒழங்கு உள்ளிட்ட பொருண்மைகள் கொண்ட பாக்கள் இந்தத் தொகுப்பை அணிசெய்கின்றன. அதனால்தான் நாட்டு முன்னேற்றத்துக்கு நாளும் உழைத்த அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்த நூலை வெளியிட முன்வந்துள்ளார்.

இந்த நூல் எளிமையான சொல்லாட்சியும், உள்ளத்தில் பதியும் இனிய ஓசையும் கொண்டுள்ளது. மேலும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைந்த பொருண்மைகளைக்கொண்ட பாக்களைக் கொண்டுள்ளது. போட்டியும், விரைவும் அமைந்த இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மக்கள் பற்று இளைஞர்களுக்கு வேண்டும் என்று நம் பாவலர் விரும்புகின்றார். இளைஞர்கள் உழைத்து, முன்னேறி நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படத்தக்கவர்களாக வாழ்க்கையில் சுடர்விடவேண்டும் என்ற நோக்கில் இவர் தாயுள்ளத்துடன் இந்தப் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார்

 பழைய வரலாற்றை நினைவுகூறுவதையும், புதிய திசைகளைக் காட்டுவதையும் ஒருசேர இந்த நூலில் காணமுடிகின்றது. அயலகத்தார் நம் தேசத்து வளங்களை வகைதொகையின்றிக் கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு நமக்கு உரைக்கின்றது. ஆனால் அயலானுக்கு அடிமைவேலை செய்ய நாம் அயல்நாட்டுக்குப் பெருமையோடு செல்வதைப் புகழுக்கு உரிய ஒன்றாக நினைக்கின்றோம். இத்தகு மனநிலை உடையவர்களுக்கு நாட்டுப்பற்றை நினைவூட்டும் வகையில்,

வெள்ளை முதலைகள் விளையாடி
வேற்று நரிகளும் களவாடி
கொள்ளை யிட்டன பலகோடி
கொன்று விட்டன உயிர்நாடி

என்று நம் முந்திய வரலாற்றை நினைத்து இந்த நூலில் பாடியுள்ளார்.

காவி வண்ணம் ஒருங்கிணைக்க,
கனிவாய் வெள்ளைக் கரங்குலுக்க
பாவும் பச்சை வளங்குறிக்க
பறந்து சிரிக்கும் தேசக்கொடி

என்று தேசக்கொடியின் மேல் பற்றுக்கொண்டு எழுதியுள்ள பாடல் சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

தேசப்பற்றும் மக்கள் பற்றும் கொண்ட ஆறு. செல்வம் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனையும், கொள்கைத் தெளிவும் கொண்டவர். கடவுளர் குறித்த போலிப் பொய்யுரைகளை மறுப்பவர். கடவுளர் குறித்த பொய்ச்செய்திகளைப் பரப்பி இன்று போலித்துறவிகள் நாட்டைக் கொள்ளையிட்டு வருவதை நாளும் செய்தி ஏடுகளில் கண்டு வருந்துகின்றோம். இந்தச் சூழலில் கடவுள் பற்றியும் வழிபாடு குறித்தும் அமைந்த தம் உள்ளக் கிடக்கையை இந்த நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

கட்டுக்கதை தரும் கடவுள்களைநீ
விட்டுத்தொலை. அவை வெற்றுச்சிலை
இட்டு விளைத்திட்ட தெய்வங்களைநெஞ்சில்
ஏற்றிவளர்ப்பாய் இன்பநிலை

என்று கடவுள் குறித்து அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.

இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் அரிய வரிகள் இந்த நூலின் பக்கங்கள்தோறும் மின்னி மிளர்கின்றன. உழைப்பின் மேன்மை, உயர்ச்சியை அடைவதற்குள் ஏற்படும் பல்வேறு தடைகள், இவற்றை நினைவூட்டி, உயர்வதற்குரிய குறிக்கோளைத் தாங்கித் தொடர்ந்து உழைத்தால் முன்னேறலாம் என்பதை உவமை வழியாக உள்ளத்தில் பதியும்படி பாடியுள்ளார்.

எக்கி எக்கியே ஏறிடும் கொடிதான்
உச்சியை அடைகிறது!தான்
இருந்த இடத்திலே இருந்திடும் பொருள்தான்
மக்கியே மடிகிறது

என்று உயர்வுக்கும் தாழ்வுக்குமான காரணத்தை அடையாளம்கண்டு உரைக்கின்றார்.

மனிதனுக்கு முன்னோற்றத்தைக் கொடுப்பதும், தடுப்பதும் அவனது பண்பு நலன்களேயாகும். “தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்பது சங்கச்செய்யுள். ஒருவனின் முன்னேற்றத்தைத் தடுப்பது சோம்பல் என்பதாகும்.  இதனை “மடிஎன்று திருவள்ளுவர் குறித்தார். ஒருவனைக் கீழ்நிலைக்கு இட்டுச்செல்லும் கீழான பண்பு சோம்பல் என்பதை டையாளம் கண்ட ஆறு. செல்வன் அவர்கள்,

இனிப்பது போலே இருக்கும்- ஆனால்
உனக்குள்ள உயர்வைக் கெடுக்கும்
அணைப்பது போலே அணைக்கும்உன்னை
ஆயுதம் இல்லாமலே அழிக்கும்

என்று பாடியுள்ளமையைக் குறிப்பிடத்தக்க வரிகளாகக் காண்கின்றேன்.

அறிவியல் தொழில்நுட்பத்தால் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் திரைக்கூத்தர்களை வழிபடுதெய்வமாக இளைஞர்கள் நினைத்துக் கொண்டாடுவதை ஆறு. செல்வன் கண்டிக்கின்றார். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் திரைக்கூத்தர்களை இந்த அளவு மக்கள் கொண்டாடுவது இல்லை. ஆனால் நம் போகூழ் திரைக்கூத்தர்கள்தான் இன்று அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். அறிஞர்களை போற்றுவது, எழுத்தாளர்களைப் போற்றுவது என்ற நிலை இல்லாமல், நிழலை மெய்யாக எண்ணும் இளைஞர்களுக்கு விழிப்பு ஏற்படத் தம் பாட்டுத்திறனை ஆறு.செல்வன் பயன்படுத்தியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

திரையினில் ஆடும் நடிகனின் காலில்
தீபங்கள் காட்டுகின்றாய்- ஒரு
திருவிழாப் போலக் கூடிக்கொண் டாடித்
தெய்வமாய்ப் போற்றுகிறாய்!
மரவடிவான மாபெரும் உருவில்
பாலினை ஊற்றுகிறாய்அட!
மடையனே! ஏன்நீ பெற்றவர் தம்மைச்
சோறின்றி வாட்டுகிறாய்?”

என்று உணர்வுமேலிட்டுப் பாவலர் ஆறு.செல்வன் வரைந்தளித்த பாட்டுவரிகள் தமிழகம் முழுவதும் சென்று சேரவேண்டிய வரிகளாகும்.

உழைக்கும் மனிதர்களை உயரே செல்லவிடாமல் உற்றாரும் ஊராரும் தடுப்பது வழக்கம். வாழ்க்கையில் முன்னேறிய அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்பொழுது உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. அறிஞர் கலாம் அவர்கள் தொடக்கக் காலத்தில் தம் ஆய்வு முடிவு பொய்த்தபொழுது ஊடகங்கள் கிண்டலடித்துக் கருத்துப்படம் வெளியிட்டதை நினைவாகப் பதிவுசெய்துள்ளதை அவர் வரலாற்றைப் படிக்கும்பொழுது உணரமுடிகின்றது. ஆனால் அவர் மிக உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகு அனைத்து ஊடகங்களும் மீண்டும் புகழ்பாடி நின்றதை இவ்விடத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். இந்த உலகியல்  நிலையைத்,

திட்டம் போட்டுச் செயலை ஆற்று
சொட்டும் வியர்வை வெற்றிநீ
சிகரம் ஏறித் தொட்ட பின்னே
உலகம் வருமே சுற்றி

என்று பாடியுள்ளமை தன்னம்பிக்கை தரும் வரிகளாகும்.

பாவலர் ஆறு. செல்வன் அவர்களின் நூல் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை மக்கள் மன்றத்திற்கு அறிமுகம் செய்வது கற்றறிந்தார் கடமையாகும். பாவலர் ஆறு.செல்வன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

பணிவுடன்
மு.இளங்கோவன்

16.09.2015

நூல் கிடைக்குமிடம்:

பாவலர் ஆறு. செல்வன்,
கலைமுகில் பதிப்பகம்,
எண் 4, காமராசர் தெரு,
வி,பி,சிங். நகர், சண்முகாபுரம்,
புதுச்சேரி -605 009

கருத்துகள் இல்லை: