நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் முத்தமிழ் மன்ற விழா!

முத்தமிழ் மன்ற விழா உரை மு.இ.

 பெரியகுளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முத்தமிழ் மன்ற விழாவைத் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றும் வாய்ப்பு எனக்கு அண்மையில் அமைந்தது.

     திண்டுக்கல் தேனி சாலையில், பெரியகுளம் நகருக்கு அண்மையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. சற்றொப்ப முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பில்  பழம், கறிகாய், வாசனைப்பொருள், பூக்கள் சார்ந்த பல்வேறு துறைசார்ந்த படிப்புகளையும், ஆய்வுகளையும் கொண்ட தோட்டக்கலைக் கல்லூரியில் உரையாற்றிய நினைவு என் வாழ்வில் என்றும் பசுமையாக இருக்கும். 

     பேராசிரியர்களும், மாணவர்களும் விழா குறித்த விவரங்களை எனக்குத் தெரிவித்து, இசைவுபெற்றதிலிருந்து, என்னை வரவேற்றமை, விருந்தோம்பியமை, வழியனுப்பியமை வரை அனைத்தையும் முறைப்படச் செய்தனர்; அவர்கள் இராணுவப் பயிற்சிபெற்றவர்களைப் போல் சிறப்பாக நடந்துகொண்டு செயலாற்றியமையை நினைக்கும்பொழுது அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் எனக்குப் புலப்பட்டது.

     விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த நான் விழா நடைபெறும் நாளின் காலைப்பொழுதில் எழுந்து, மாணவர்களுடன் தோட்டக்கலைக் கல்லூரியை ஓர் உழவனைப் போல் ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தேன். எலுமிச்சை, சப்போட்டா, மா, பலா, வாழை, தென்னை, புளி உள்ளிட்ட பல நூறு மரங்களும், செடிகளுமாக இருக்கும் தோட்டங்கள் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. இம் மரம், செடி, கொடி, பூக்கள் சார்ந்த ஒவ்வொன்றின் வகையிலும் பல நூறு வேறுபட்ட பயிர்கள் அங்கிருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இவற்றை உருவாக்கிப் பாதுகாக்கும் பணியில் எத்தனையோ ஆய்வறிஞர்களும், உழைப்பாளர்களும் மாணவர்களும் உழைத்திருப்பார்கள் என்று வியந்தவாறு கல்லூரித் தோட்டத்தில் நடைபயின்றேன். பல ஆய்வுத்திட்டங்கள் நடைபெற்று வருவதையும் அதன் வழியாகத் தோட்டப்பயிர் சார்ந்த புதிய வேளாண்மை நடைபெற்று வருவதையும் அங்குள்ள அறிவிப்புப் பலகையில் கண்ணாரக் கண்டேன்.

     மூன்று நாள் நடைபெறும் வகையில் முத்தமிழ் மன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்நாள் காலையில் நடைபெற்ற முத்தமிழ் மன்ற நிகழ்வில் நான் உரையாற்றினேன். உழவர் குடியில் பிறந்து வளர்ந்த என் வேளாண்மைத் தொடர்பை நினைவூட்டி, மாணவர்களுக்கு இயற்கை, வேளாண்மை சார்ந்த செய்திகளை இலக்கியங்களிலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் எடுத்துக்காட்டிப் பேசினேன். வேளாண்மையுடன் தொடர்புகொண்டுள்ள நீர்நிலை, நிலம் இவற்றின் பாதிப்பால் உ.வுத்தொழில் கெட்டுள்ளதை எடுத்துக்காட்டி, உழவுத்தொழிலுடன் தொடர்புடைய நம் கலைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் அழிந்துவருவதை எடுத்துரைத்து, நடவுப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இலக்கிய இன்பத்தை அறிமுகம் செய்து ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.


     பேராசிரியர் இராசாங்கம், முனைவர் தங்க செல்வ பாய், முனைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பேராசிரியர்களின் ஒருங்கிணைப்பிலும், தோட்டக்கலைக் கல்லூரியின் பலதுறைப் பேராசிரியர்கள், மாணவர்களின் திட்டமிடலிலும் முத்தமிழ் மன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மூன்றுநாள் நிகழ்ந்த இலக்கிய நிகழ்வுகளில் என்னையொத்த பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். மாணவர்களின் படைப்புணர்வை வெளிக்கொணரும் இதுபோன்ற நிகழ்வுகளை ஆண்டுதோறும் சிறப்புற நடத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.

பேராசிரியர்கள், மாணவர்களுடன் மு.இ.

மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பார்வையிடல்

கருத்துகள் இல்லை: