நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

எழுத்தறிவிக்கும் பணியில்...


கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் மு.இ. உரை

தமிழகத்தில் கணினி நுட்பத்தை, இணையத்தை அறிமுகம்செய்யும் பணியைக் கடந்த பத்தாண்டுகளாக நான் ஆர்வமுடன் செய்துவருவதைத் தமிழார்வலர்கள் நன்கு அறிவார்கள். நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இப்பணி நடைபெற்றமையையும், பல்லாயிரம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களை இதன்பொருட்டுச் சந்தித்தமையையும் இங்கு நினைவுகூர்தல் வேண்டும். இப்பயிலரங்குகளின் ஊடாக எத்தனையோ பட்டறிவுகளைப் பெற முடிந்தது. தக்கவர்களும் தகவிலாதவர்களும் இப்பயணத்தில் எதிர்ப்பட்டதையும் இங்கு எண்ணிப்பார்க்கின்றேன்.

தொடக்க காலங்களில் எழுத்தாளர் திரு. மாலன் உள்ளிட்டோர் என் முயற்சியை ஊக்கப்படுத்தித் தம் ஏட்டில் அறிமுகம் செய்ததை என்றும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன். ’அக்காலங்களில் கிறித்தவப் பாதிரிமார்கள் ஊர் ஊராகச் சென்று கல்வியை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தமை போன்று மு.இளங்கோவனின் கணினி, இணையப்பணி அமைகின்றது’ என்று ஒரு கூட்டத்தில் திரு. மாலன் சொன்னமை எனக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது. தி இந்தியன் எக்சுபிரசு நாளிதழின் மதுரைப் பதிப்பில் அதன் செய்தியாளர் வந்தனா அவர்கள் என் பணியை அறிமுகம் செய்து விரிவாக எழுதி வெளிவந்தமையும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கணினி, இணையப் பயிலரங்கிற்காக அரங்கம் அமைத்துத் தந்தோர், தமக்கு அமைந்த வாய்ப்பை எனக்கு வழங்கி மகிழ்ந்தோர், நள்ளிரவில் காத்திருந்து வரவேற்றோர், வழியனுப்பி வைத்தோர், கைப்பொருள் தந்து காத்த பெருமக்கள், வைகறைப் பொழுதில் வரவேற்றோர், உண்டி தந்து உயிர் காத்தோர், ஆடைபோர்த்தி அன்பு செலுத்தியோர், நுட்பத்துணையில் இணைந்து நின்றோர், படம் எடுத்துப் பரிவுடன் அனுப்பியோர், எதிர்மறை வழியில் புறம்பேசிப் புடம்போட்டோர் என யாவரும் என் நினைவில் உள்ளனர். இது நிற்க.

இணையப் பயிலரங்க நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது உடனுக்குடன் என் வலைப்பதிவில் பதிவு செய்வது உண்டு. ஓரிரு நாள் கழிந்தேனும் நினைவாகச் சில பதிவுகளைச் செய்துவிடுவேன். பெரும்பாலான பயிலரங்க நிகழ்வுகள் அந்த வகையில் என் வலைப்பதிவில் பதிவாகி உள்ளன. எனக்குச் சிலநேரங்களில் அமையும் தொடர்ந்த வேலைகளால் சில இணையப் பயிலரங்க நிகழ்வுகளைப் பதிவுசெய்ய முடியாமல் போனமையும் உண்டு. நேரம் ஒரு காரணமாக இருந்தாலும் சிலபொழுது ஒளிப்படங்கள் சரியாகக் கிடைக்காமல் போவதும் பதிவுறாமைக்குக் காரணங்களாகும். அந்த வகையில் பதிவுறாமல் உள்ள இரண்டு பயிலரங்க நிகழ்வுகளை இணைத்து இந்தப் பதிவில் எழுதுகின்றேன்.


மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தின் வளங்களை அறிமுகம் செய்தல்

கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் 03.01.2017 இல் நடைபெற்ற பயிலரங்கம் குறிப்பிடத்தக்க ஒரு பயிலரங்கமாகும். பேராசிரியர் சந்திரா அவர்களின் தகு தலைமையில் இயங்கும் தமிழ்த்துறை மாணவிகளுக்குக் கணினி, இணைய நுட்பத்தைப் பயிற்றுவிக்க அழைக்கப்பட்டிருந்தேன். கல்லூரி முதல்வர், பிற துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மீண்டும் மீண்டும் எங்கள் கல்லூரிக்கு வந்து செல்லவேண்டும் என்று கல்லூரி முதல்வர் அன்று ஒரு வாய்மொழி ஆணையை வழங்கினார். இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்களுள் நகரப் பகுதியைச் சார்ந்தவர்கள் குறைவாகவும் அண்டை, அயலில் உள்ள சிற்றூர்களிலிருந்து வந்து பயில்வோர் மிகுதியாகவும் இருந்ததைப் பேராசிரியர்கள் குறிப்பிட்டனர். அத்தகு எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர்களுக்குப் பொழிவாகவும், செய்முறையாகவும் கணினி, இணையப் பயன்பாட்டை விளக்கினேன். அனைவரும் "பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி"  என்று நன்னூல் குறிப்பிடுவது போல் கற்று மகிழ்ந்தனர். இதுவும் நிற்க.

திருப்பூரில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ்க் கணினி, இணையப் பயிலரங்கம் குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு பயிலரங்கமாகும். இக்கல்லூரி கூட்டுறவு வீட்டுவசதித்துறையின் உறுப்புக் கல்லூரியாகும். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயிலும் இடமாக இக்கல்லூரி உள்ளது. மிகச் சிறந்த வனப்பார்ந்த கட்டடங்களும், ஆடரங்குகளும், கலையரங்கும், வகுப்பறைகளும், பேருந்து வசதிகளும் கொண்டு இக்கல்லூரி உள்ளது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கண்ணகி அவர்கள் இந்தப் பயிலரங்கிற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தார். பேராசிரியர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போதிய ஒத்துழைப்பு நல்கியதால் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கண்ணகி உரை, அருகில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மு.இளங்கோவன்


திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெறும் கணினி, இணையப் பயிலரங்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு முதல்நாளே சொல்லியிருந்தேன். எனவே தமக்கிருந்த பல்வேறு வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவரும் ஒரு மாணவரைப் போல் வந்து அமர்ந்து கற்றமை எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.

தொடக்க விழாவில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் எழுத்துப்பணிகளை அரங்கிற்கு நினைவூட்டினேன். பன்மொழி அறிஞரான சுப்ரபாரதிமணியன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமைகொண்டவர் எனவும் கனவு என்னும் இதழினை நடத்துபவர் எனவும் குறிப்பிட்டேன். இத்தகு பெருமைக்குரிய இவர் இங்கு வந்துள்ளமை நமக்குப் பெருமைதரத்தக்க ஒரு நிகழ்வு என்று கூறி, என் கடமையை நான்கு மணி நேரம் உரையாற்றி நிறைவுசெய்தேன். நிகழ்ச்சியின் நிறைவில் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்கள் வாழ்த்துரையாகவும், பின்னூட்ட உரையாகவும் இன்றைய பயிலரங்கம் குறித்து உரையாற்றினார். மாணவிகளும், பேராசிரியர்களும் பயிலரங்கம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நிறைவுப் பணிநாளிலும் கணினி, இணையப் பயிலரங்கில் ஊக்கமாகப் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி கூறித் திரும்பினேன்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் மு.இளங்கோவன் உரை

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள், மாணவிகள்

கருத்துகள் இல்லை: