நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி



 தி இந்து நாளிதழின் கட்டுரை(11.04.2017)

  தமிழ் ஆய்வுலகம்  கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், மொழியாராய்ச்சியிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம்  கொடுத்தார். அவரின் அன்பிற்குரிய மாணவரான . அறிவுநம்பிக்குத் தெருக்கூத்துத் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குத் தலைப்பை ஒதுக்கினார். இன்னொரு மாணவரான மு. இராமசாமிக்குத் தோல்பாவைக்கூத்து என்னும் தலைப்பை ஒதுக்கினார்.

 சங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அ. அறிவுநம்பி தெருக்கூத்துத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தவுடன் முழுநேரத் தெருக்கூத்து ஆய்வாளாரக மாறித் தமிழகத்தின் தெருக்கூத்து நடைபெறும் இடங்களுக்குக் களப்பணிமேற்கொண்டு மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளுடன் நெறியாளர் முன் நின்றார். நெறியாளர் சண்முகம் பிள்ளை, தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளைத் தம் மாணவர் கொண்டுவந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார். நெறியாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி தெருக்கூத்து ஆடும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார்.

 வலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டுகள் மதுரையில் பணிபுரிந்த அறிவுநம்பிக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. அறிவுநம்பி இன்னும் சில மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். இந்த நிலையில் திடுமென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 09.04.2017 இல் இயற்கை எய்தியமை தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 பேராசிரியர் பூ.அமிர்தலிங்கம், இராசலட்சுமி அம்மையாருக்கு மகனாக 10.11.1952  பிறந்தவர்தான் .அறிவுநம்பி. காரைக்குடி ஊரினர். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாஸ்நகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் .பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.

 அ. அறிவுநம்பி நாட்டுப்புறவியல், சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமையுடைவர். அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். சேதுபதி மன்னர்களின்மேல் சிற்றிலங்கியங்கள் எழுதிய பெருமைக்குரியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக்கழகங்களில் பெற்ற பேரறிவும் அ. அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது. உலக அளவில் அறிமுகமான தமிழறிஞராக இவர் விளங்கமுடிந்தது.

   அ. அறிவுநம்பி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மட்டும் தம் பணி என்று நிறுத்திக்கொள்ளாமல் அனைவரையும் உடன்பிறந்தாராக நினைத்துப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். ஆய்வு எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் பல்துறையிலும் நூல்களை எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள், ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களையும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.

  பாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி உலக அளவில் இருக்கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்குநராகவும், புலமுதன்மையராகவும், தமிழியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப்பின் செயலராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தவர்.

 
  பதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட்டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.


 அ. அறிவுநம்பியிடம் கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு இவர்தம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. இவர் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் தனிமுத்திரை பதிப்பதை வழக்கமாக கொண்டவர். நேர்முகத் தேர்வுகளில் தம் முடிவுகளைத் துணிவாக எடுத்துவைக்கும் இயல்புடையவர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளில் இவர் புறத் தேர்வாளராகக் கலந்துகொள்ளும்பொழுது, பார்வையாளர்கள் வரிசையிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆய்வாளரிடமிருந்து விளக்கம் பெறுவதை இலாவகமாகச் செய்வார். தமக்கு ஓய்வும் வாய்ப்பும் இருக்கும் பொழுது யார் அழைத்தாலும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

   அறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளிமையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள்.  சொல்ல வந்தவற்றை விளக்க இவர் எடுத்து முன்வைக்கும் உதாரணங்களும்,  இவரின் சொல்லாற்றலும் கற்பவரை வசியப்படுத்துவன. நடைமுறையிலிருந்து இவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் படிப்பவரைப் பரவசப்படுத்துவன. எழுத்துத்துறையில் மட்டுமல்லாம் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவரின் பேச்சினைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ்வொரு கல்லூரியிலும் உண்டு.  வகுப்புகளை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர் இவர். இவரிடம் பயிலும் மாணவர்கள்  தாங்கள் எழுதும் நூல்களுக்கு இவரிடம் அறிமுகச் செய்தி பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவர், ’தமிழர் தம் குடிப்பழக்கம்’ என்ற தம் நூலுக்கு அறிமுகச் செய்தி வாங்கிய பொழுது, ’போடாமலே இவர் ஆடுபவர்" என்ற தலைப்பில் இவர் வழங்கிய அறிமுகவுரை அனைத்து மாணவர்களாலும் இரசிக்கப்பட்டது. ஏனெனில் அந்த மாணவர் கரகாட்டம் ஆடுபவர் என்பதும், மாணவரின் நூல் தலைப்பு மது தொடர்பில் இருப்பதும் உணர்ந்து இருபொருளில் பேராசிரியர் எழுதியதே மகிழ்ச்சிக்குக் காரணங்களாகும். அதுபோல் இவரின் இன்னொரு மாணவரை அறிமுகப்படுத்தும் பொழுது, " இவர் போட்டி ஒன்றில் பங்கு கொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்பட வேண்டிய வினா, இரண்டாவது பரிசு யாருக்கு? என்று எழுதியதும் இவரின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும்.

  மாணவர்கள் இவர்களிடம் அணிந்துரை பெறுவதை வாடிக்கையாகக் கொள்வதுபோல் தம் நூல்களுக்கு மாணவர்களிடம் அணிந்துரை பெறுவதை அறிவுநம்பி வழக்கமாக கொண்டிருந்தவர். அறிவுநம்பியின் கையெழுத்துத் தமிழக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஓவியம்போல் இவரின் கையெழுத்து இருக்கும். எதனையும் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றலும், முடிவெடுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்படுவன.

 அறிவுநம்பி கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர்முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.

    தம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி விளங்கினார். தம் ஆசிரியர்களை மேடைதோறும் நினைவுகூர்ந்து அவர்களின் சிறந்த கருத்துகளை அவையினருக்கு நினைவூட்டுவது அவர்தம் பழக்கம்.  தம் பேராசிரியரான வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.

நன்றி:  தி இந்து (தமிழ்) நாளிதழ் 11.04.2017

குறிப்பு: இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் முழு வடிவம்

கருத்துகள் இல்லை: