நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 1 மே, 2017

கன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுரையும்


ஈழத்துப்பூராடனார்

(கட்டுரை விளக்கம்: அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலைத் தமிழகத்தில் மறுபதிப்புச் செய்ய ஐயாவிடம் இசைவு வேண்டினேன். ஐயா அவர்களும் இசைவு வழங்கியிருந்தார்கள். நூல் அச்சிட்டு, மேலட்டை அச்சிட்டு ஐயாவின் பார்வைக்கும் அனுப்பியிருந்தேன். பொருள் முட்டுப்பாடு காரணமாக நூலை அச்சிடாமல் இருந்தேன். 13.12.2007 இல் எழுதிய நூல் பதிப்புரை இன்று கண்ணில் தென்பட்டது. யாருக்கேனும் பயன்படும் என்று பதிப்புரையை மட்டும் என் வலைப்பதிவில் பதிகின்றேன். யாரேனும் முன்வந்தால் கன்னங்குடா உழுதொழிற் பள்ளினை வெளியிடலாம்).

கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார் ஆவார். இவர் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமை இவருக்கு உண்டு. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, நாட்டுப்புறவியல், சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை நூல்களை இவர் தந்துள்ளார். பல களஞ்சியங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு என்பது பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது. கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க, இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத் தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நெல்வகை, மாட்டுவகை, உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு, காதல்வாழ்க்கை, உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார்.

கன்னங்குடா  நூல்பெயர்

கன்னங்குடா என்பது தென் ஈழத்தின் மட்டக்களப்பு அடுத்த உழுதொழில் ஊர். பாரதக்கதையில் குறிப்பிடப்படும் கன்னன்(கர்ணன்) நினைவாக இவ்வூர் பெயர்பெற்றதை ஆசிரியர் 'ஈகையாலே உயிர்துறந்த இரப்பார்க்குக் கொடையளித்த மாகையன் கன்னனவன் மாட்சியுள்ள பெயர்பூண்டு' என்று குறிப்பிடுவர். இவ்வூரில் பண்டைத்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும், பண்பாடுகள், கூத்துக்கலைகள் வழிபாட்டுமுறைகள் இன்றும் சிதைவுறாமல் உள்ளன. கன்னங்குடா கூத்துக்கலையின் தொட்டில் என்னும் சிறப்புடையது என்று சி.மௌனகுரு மதிப்பிடுவர்.

இவ்வூர் நெய்தல் சார்ந்த மருதநில ஊர். இங்கு 350 குடும்பங்களாக ஏறத்தாழ 1500 சிவனிய வழிபாட்டு மக்கள் வாழுகின்றனர். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள் (தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர். இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர். அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச் சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும்,அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் அமைந்த இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

உள்ளடக்கச் செய்திகள்

கடவுள் வணக்கம், பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு,போடியாரின் வருகை, வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்) தோற்றம், உழவர்களின் மனைவிமார் தோற்றம், கழனிக் கன்னியர் நாட்டுவளம் பாடுதல், போடியார் படியளத்தல், போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல், மழைபொழிதல், வெள்ளம் வடிதல், மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள், வயல்வேலை தொடக்கம், மாட்டுவகைகள், போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு, நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல், பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல், போடியார் முருகனைக் கண்டித்தல் - தண்டித்தல், இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல், இரு மனைவியரும் புலம்பல், போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல், வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து, போடியாரின் அன்புரை, கள்ளுண்டு மகிழல், புதுப்புனலாடல், போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

நூலின் புதுமைச்செய்திகள்

ஈழத்துப்பூராடனார் 'பள்ளு' என்னும் பழையவடிவத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் பல புதுமைகளைக் காலச் சூழலுக்கு ஏற்பச் செய்துள்ளார். கடவுள்வாழ்த்து, குடும்பக்கட்டுப்பாடு, சாதிமறுப்புத் திருமணம் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஈழத்துப்பூராடனார் வயற்களச் சொற்கள் அழியாமல் காக்கவும், வயற்கள மக்களின் வாழ்க்கையமைப்பும், அதில் தொடர்புடைய கலைகளைப் பாதுகாக்கவும் இப்பள்ளு நூலைப் படைத்துள்ளார். இந்நூலுள் ஈழத்தில் வழங்கும் பல கலை வடிவங்களைக் குறிப்பிட்டும் விளக்கமாக எடுத்துரைத்தும் உள்ளார். மழைக்காவியம்,  குரவையிடல்,  வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கொம்பு விளையாட்டு, கண்ணகையம்மன் வழிபாடு, வதனமார் சடங்குவசந்தன்கூத்து (வேளாண்மை வெட்டு), கும்மி, புனலாட்டு, பப்புருவாகன் கூத்துநம்பிக்கைகள், குறிகேட்டல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் (மேலும்இதுபற்றி அறியஎன் வாய்மொழிப்பாடல்கள் நூலில் ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்னும் கட்டுரையைக் காண்க).

ஈழத்துப்பூராடனார் மக்களிடம் வழங்கும் பல வழக்குச் சொற்களையும்வழக்குத் தொடர்களையும் தம் நூலில் பதிவுசெய்துள்ளார். 'தம்பியுள்ளான் படைக்கஞ்சான்', தானாடாவிட்டாலும் தன் தசைகளாடும்', 'பிஞ்சிலே பழுத்துவிட்டாய்', 'தலைபோக வந்தது தலைப்பாகையோடு போனதடா', 'ஆட்டு மாட்டைக்கடித்தபுலி ஆயனையே எதிர்த்தாற்போல' என்னும் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.

ஈழத்துப்பூராடனார் வயற்களமக்களின் உழுதொழிற் சொற்களைப் பதிவு செய்யும் நோக்கமும் இந்நூலில் நிறைவேறியுள்ளது. போடியார், முல்லைக்காரன், அதிகாரி, வட்டை, கமக்காரன், வட்ட விதானையார், இழவான், கடியன், சலவைக்காரன், பதக்கடை, துமி, வதனமார் சடங்கு, உம்மாரி, வேளாண்மை வெட்டு முதலான எண்ணிறந்த சொற்களை நூலாசிரியர் இந்நூலில் பதியவைத்துள்ளார். அகரமுதலிகளில் இணையவேண்டிய ஈழத்தின் பேச்சுவழக்குச்  சொற்களை இந்நூல் தாங்கியுள்ளது.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எனவே அண்மைக் காலமாகத் தமிழிலக்கிய வரலாறு உலக அளவில் விரித்து எழுதப்பட்டு வருகின்றது. கல்லூரி மாணவப் பருவத்திலேயே உலக அளவில் தமிழ்இலக்கிய வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி பற்றி அறிந்த நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபொழுது அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் தலைப்பட்டேன்.

1997 இல் அயலகத்தமிழ் என்னும் ஏடு தொடங்க முயன்றேன். அவ்வேட்டை மனத்தில் கொண்டே அயலகத்தமிழ் என்னும் ஒரு கட்டுரையை அந்நாளில் வெளியிட்டேன்(..நி). இவ்வாறு அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் வித்திட்டது அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்களின் நூல்களாகும். அப்பெருமகனாரின் கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலில் உழுதொழில் மக்களின் வாழ்வினை அறிந்து மகிழ்ச்சியுற்றிருந்தேன். உழவர்குடியில் பிறந்த எனக்கு  அந்நூலில் வேட்கை ஏற்பட்டமை வியப்பன்று. இந்நூல் தமிழகத்து மக்கள் அறியவேண்டும் என்னும் நோக்கில் மறுபதிப்பாக வெளியிட நினைத்தேன். அவ்வாறு வெளியிட இசைவு தந்ததுடன் தமிழகப் பதிப்பிற்கான வழிகாட்டலையும் ஈழத்துப்பூராடனார் வழங்கினார். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் நன்றி உரியவாகும்.

முதற்பதிப்பில் இருந்த சில எழுத்துப்பிழைகள் இப் பதிப்பில் களையப்பட்டுள்ளன. வடிவமைப்பில் சில செப்பங்களைச் செய்துள்ளேன். எழுத்து வடிவம் முதற்பதிப்பில் பழைய எழுத்து வடிவில் இருந்தது. இப்பதிப்பில் தமிழக அரசு பின்பற்றும் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டுள்ளது.


கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலை அச்சிட உதவிய அண்ணன்மார் கே.அறிவுமதி, வே.இளங்கோ, .தேவநேயன், பொறியாளர் இராச.கோமகன், கணேசமூர்த்தி (சோதி எண்டர்பிரைசசு), வடிவமைப்பில் உதவிய வசந்தகுமார், தட்டச்சில் உதவிய தங்கை இரமா ஆகியோர்க்கு என்றும் நன்றியன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி-605 003

13.12.2007

கருத்துகள் இல்லை: