ஆவணப்படம் வெளியீடு திரு. கே.பி.கே. செல்வராஜ்,
முதல்படி பெறுதல் திரு. இராஜா எம். சண்முகம்
தமிழிசைக்குத் தம் வாழ்நாள் முழுவதும்
பணியாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்
ஆவணப்படம் மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலண்டன், குவைத்து,
இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் திரையிடப்பட்டதுடன் புதுச்சேரி, சென்னை,
பாளையங்கோட்டை, திருவண்ணாமலை, கோபி, குடந்தை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல்,
கோயம்புத்தூர், திருவையாறு, கடலூர் உள்ளிட்ட தமிழகத்துப் பேரூர்களில் திரையிடப்பட்டு,
தமிழிசை ஆர்வலர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் அண்மையில் திருப்பூரில்
திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
திருப்பூரிலும் அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழார்வலர்கள் ஐம்பதின்மர் இந்த நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு திரையிடலுக்குப் பெருமை சேர்த்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில்
மாலை 7 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் உரையாற்றினார்.
ஆவணப்படத்தை உருவாக்கிய முனைவர் மு.இளங்கோவன், ஆவணப்படம் உருவான வரலாற்றையும் தமிழ்
இலக்கிய உலகிற்கு இப்படத்தின் தேவையையும் நினைவுகூர்ந்தார். திருப்பூர் முத்தமிழ்ச்
சங்கத்தின் தலைவரும், தொழிலதிபரும், தமிழ் வள்ளலுமான திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்கள்
ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.
இராஜா. எம். சண்முகம் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். ஏற்றுமதியாளர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் திரு. விஜயகுமார், முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன்
முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு
திரையிடல் தொடங்கியது.
நிகழ்ச்சியின் நிறைவில் திரு. இராஜா. எம்.
சண்முகம் அவர்கள் ஆவணப்படத்தைப் பார்த்துத் தாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி,
ஆவணப்படத்தின் சிறப்பினை எடுத்துக்கூறி, ஆவணப்படம் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்ல
வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். திருப்பூர்
முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி. கே. செல்வராஜ் அவர்கள் அமெரிக்காவின் பெட்னா விழாவில்
குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நூற்றாண்டு விழாவினைக்
கொண்டாடியதை நினைவூட்டித் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல
வேண்டுவதற்குரிய வழிமுறைகளை விளக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச்
சார்ந்த திரு. ஈஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்தில் வெளிப்பட்டு நிற்கும் கலைநுட்பத்தையும்,
தமிழிசைச் சிறப்பையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாகப் பெரும்புலவரும், குடந்தை
ப. சுந்தரேசனாருடன் பழகியவரும், சைவ இலக்கியச் செம்மலுமாகிய சொக்கலிங்கனார் அவர்கள்
ஆவணப்படத்தில் மூழ்கித் திளைத்த தம் தமிழ் இசை ஈடுபாட்டை விளக்கி, குடந்தை ப.சுந்தரேசனாருடன்
தாம் பழகிய நாளினை நினைவூட்டி அரியதோர் உரை நிகழ்த்தினார். தமிழறிஞர்களின் நெஞ்சம்
நிறைந்த பாராட்டுகளும் ஊக்க மொழிகளும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூரில்
மீண்டும் திரையிடலுக்கு வழி செய்துள்ளது.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், விஜயகுமார், இராஜா எம். சண்முகம், மு.இ, கே.பி.கே. செல்வராஜ், ஈஸ்வரன்
கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்
இராஜா. எம். சண்முகம் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்
1 கருத்து:
மகிழ்ந்தேன் ஐயா
கருத்துரையிடுக