நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 ஏப்ரல், 2017

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்


புலவர் வீ. சொக்கலிங்கம்


     இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை . சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி, கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளம் சென்ற கதையையும் அக்கலைஞரின் ஒத்துழைப்பால் புல்லாங்குழல் செய்தமையைப் படம் பிடித்தமையையும் குறிப்பிட்டேன். அப்பொழுது தமக்கு அறிமுகமான விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம் பற்றி சுப்ரபாரதிமணியன் எடுத்துரைத்தார்.

     அண்மையில் புலவர் வீ. சொக்கலிங்கம் நிகழ்த்திய பெரியபுராணச் சொற்பொழிவில் ஆனாய நாயனார் புராணத்தை விளக்கும்பொழுது ஒரு புல்லாங்குழல் கலைஞரை அழைத்துவந்து மேடையில் அருகமர்த்தி, புல்லாங்குழல் செய்வது பற்றியும், அதன் வாசிப்பு முறைகள் குறித்தும் அவையினருக்குச் செய்முறை விளக்கம் அளித்தார் என்று குறிப்பிட்டவுடன்  புலவர் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிட்டது. ஏனெனில் ஆனாய நாயனார் புராணம் புல்லாங்குழல் குறித்த அரிய உண்மைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பகுதியாகும்.

     என் ஆசிரியர் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆனாய நாயனார் புராணத்தில் பொதிந்துகிடக்கும் குழல்செய்யும் முறை, குழல் துளைகளின் அளவு, இடைவெளி, குழல் துளைகளின் பெயர், மாறுமுதல் பண்ணல், கோடிப்பாலை உருவாக்கும் முறை, துளைகளில் கைவைத்து ஊதும் முறை, இசைக்கு உயிரினங்கள் மயங்குதல் குறித்து எடுத்துரைத்த கருத்துகள் பலவாண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவிற்கு வந்தன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியிலும் (பக்.152, 179), மூன்றாம் தொகுதியிலும் இவை இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பிலும் ( III 290-291), புகல் நான்கு என்னும் தலைப்பிலும்( III பக். 288) வீ.ப.கா.சு. வரைந்துள்ள  விளக்கங்களை ஆர்வலர்கள் அங்கே காண்க.

     பெரியபுராணத்தின் துணைக்கொண்டு புல்லாங்குழல் குறித்து விளக்குவதற்குத் தமிழ்நாட்டில் ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்டதும் புலவரைக் காணும் வேட்கை மீதூரப்பெற்றேன். ஏனெனில் இன்றைய கல்விப்புலங்கள் தக்க அறிஞர்கள் இல்லாமல் இருண்டுக்கிடக்கும் அவல நிலையை எண்ணி எண்ணி உலைந்து வரும் எனக்குப் புலவரின் ஆற்றல் பளிச்செனத் தெரிந்தது.

     உடல்நலம் இல்லாமல் புலவர் வீட்டில் இருப்பதால் அவரைக் காணும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அடுத்த முறை பார்க்கலாம் என்றும் எனக்குச் சுப்ரபாரதிமணியன் கூறினார். திருப்பூருக்கும் புலவர் வீ. சொக்கலிங்கம் இல்லத்திற்கும் இருபது கல் தொலைவு இருக்கும் என்றும் அவர் இன்று வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு அமைதி கூறினார். அப்படி என்றால் நாம் சென்று புலவரைச் சந்திப்போம் ஐயா!; இது என் விடை.

     எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறுமுயற்சி எடுத்துப் புலவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வருகை பற்றியும் மாலையில் நடைபெறும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு பற்றியும் சொன்னார். என்னையும் புலவருடன் பேசும்படித் தூண்டினார். புலவரிடம்  நான் பேசினேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றியும் அவர்தம் தமிழிசை வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தேன். புலவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புலவர் அவர்கள் நம் பண்ணாராய்ச்சி வித்தகரை இரண்டுமுறை பார்த்துள்ளதாகவும், அவருடன் பழகிய நாள்கள் இன்னும் தம் மனக்கண்ணில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அப்பர் பெருமானின்

"கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே"

எனத் தொடங்கும் கொல்லிப்பண் பாடலைப் பாடியும், பண் விளக்கம் சொல்லியும் பண்ணாராய்ச்சி வித்தகர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை நினைவூட்டினார். அவர் பாடியபொழுது வயிற்றுவலி வந்தோன் அடையும் துன்பத்தைக் கண்முன் பாடிக்காட்டி நடித்துப் புலப்படுத்தியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் சிதம்பரத்தில்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

என்னும் பாடலை உழவாரப்பணியின் பொழுது, உழவாரம் கொண்டு புல்லைச் செதுக்கி எடுப்பதுபோல் பாடிக்காட்டியதாகப் புலவர் தொலைபேசியில் உரையாடியபொழுது குறிப்பிட்டமை எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது.

     புலவர் அவர்களின் உடல்நலம் நோக்கி, அவரை இல்லம் சென்று நாங்கள் பார்க்க நினைத்தோம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், தமிழிசையின்மேல் கொண்டு ஈடுபாட்டின் காரணமாகவும் தாமே உரிய இடத்திற்கு வருவதாகப் புலவர் அவர்கள் வாக்களித்தார். சொன்னபடியே ஆவணப்படம் திரையிடும் இடத்திற்கு முதலாமவராக வந்து  நம் புலவர் காத்திருந்தார். புலவர்முன் கைகுவித்து வணங்கி, ’மாறிப்புக்கு இதயம் எய்தினோம்’. தம் தமிழ்ப் புலமையையும் சமய ஈடுபாட்டையும் இலக்கியப் பயிற்சியையும் புலவர் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

விசயமகங்கம் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

     திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர் வீரபத்திரன், ஆச்சியம்மாள் ஆகியோரின் தலைமகனாக 22.05.1940 இல் வீ. சொக்கலிங்கம் பிறந்தவர். இவருடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக உடன் பிறந்தவர்கள் உண்டு. பிறந்த ஊரான செங்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர் (1958).  பெரும்புலவர்களை வாட்டும் வறுமைச்சூழல் காரணமாகச் சிலவாண்டுகள் கடையொன்றில் குற்றேவலராகப் புலவர் சொக்கலிங்கம் இளமையில் பணிபுரிந்தார். சிலவாண்டு இடைவெளியில் செங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ( 1960-62) பயிற்சி பெற்றவர்.

     1962 இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விசயமங்கலம் என்னும் ஊரை அடுத்துள்ள கினிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியில் இணைந்து, பணி நிறைவுக்காலம் வரை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இவரின் ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு அரசு நல்லாசிரியர் விருது(1994-95) வழங்கிச் சிறப்பித்துள்ளது. பணியில் இருந்தபடியே தம் புலமையை வளர்த்துக்கொள்ள, புலவர் (சென்னைப் பல்கலைக்கழகம்), இலக்கிய இளையர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), கல்வியியல் இளையர், முதுகலை(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)ப் பட்டங்களைப் பெற்றவர்.

     வாழ்வியல் தேவைக்கு ஆசிரியப் பணிபுரிந்தாலும் உள்ளம் முழுவதும் ஆன்மீக ஈடுபாட்டிலும், இலக்கிய இன்பத்திலும் மூழ்கிக் கிடந்தது. எனவே ஓய்வு நேரங்களில் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

     சமய இலக்கியங்கள், காந்தியம், பாரதிப் பாடல்கள், காமராசர் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதில் நம் புலவருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. "நீரதன் புதல்வர்" என்னும் பாரதியார் பாடலடிகளைத் தலைப்பாக்கி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியுரையாற்றுவதில் வல்லவர். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் கொண்டவர். ’ஆன்மீகமும் மக்கள் வாழ்க்கையும்’, ’ஒரு ஊதுகுழலின் உலாக்கோலம்’, ’தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளில் இவராற்றிய உரைகள் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவையாகும். சமய இலக்கியங்களில் அமைந்துள்ள கவிதை நயங்களையும் நுட்பங்களையும் எடுத்துக்காட்டும் பேராற்றல் கொண்டவர் என்பதும் அவற்றை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     பேரூர் திருமடத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மெய்த்தொண்டினை நினைவூட்டி, இவர் எழுதிய "தவம் செய்த தவம்" என்னும் நூல் அடியவர்களால் விரும்பிப் பயிலப்படும் நூலாகும். திருக்குற்றாலச் சாரலின் இயற்கை எழிலை வருணித்து இவர் வரைந்துள்ள "அருவிச்சரம்" என்னும் நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாகும். 32 கவிதைகள் இந்த நூலின் உள்ளடக்கமாக உள்ளன.

     சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இலக்கியப் பேருரையாற்றிய இவர் மலேசியாவுக்குச் சென்று இருபத்தைந்து நாள் தங்கிச் சமய நூல்கள் குறித்தும், இலக்கியச் சுவையுணர்வு குறித்தும் உரையாற்றி மீண்ட பெருமைக்குரியவர்.

     புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் எனினும் வடநாட்டிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணம் வரும் சமணர்கள் தங்கிச் செல்லும் வகையில் இவரின் வீட்டுக் கதவம் எப்பொழுதும் திறந்திருப்பதும் அவர்களை விருந்தோம்பி வழியனுப்புவதும், வருவிருந்துக்குக் காத்திருப்பதும் இவரின் உயர்ந்த மாந்த நேயத்தை வெளிப்படுத்துவன. சமயங்கடந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழும் தமிழுள்ளம் வாய்த்த புலவர் பெருமான் நலம்பல பெற்று, நீடு வாழ வாழ்த்துவம்!

குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை - படங்களை எடுத்தாளுவோர் எடுத்த இடம் சுட்டுங்கள். சிலர் இக்குறிப்புகளைச் சிற்சில மாற்றங்களுடன் நூலாக்கி நூலகத்துறை ஆணை பெற்று நூலடுக்குகளில் வைத்திருப்பதை யானும், நண்பர்களும் கவனித்து வருகின்றோம்!.

புலவர் வீ. சொக்கலிங்கம், கே.பி.கே.செல்வராஜ், மு.இளங்கோவன்

புலவருடன் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர்

கருத்துகள் இல்லை: