நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 மார்ச், 2016

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்! – நாஞ்சில்நாடன் பேச்சு.

  

 எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உரை

 உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் தொடர் பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் இன்று (25.03.2016) மாலை நடைபெற்றது. பேராசிரியர் கு. சிவமணி தலைமை  தாங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் . பத்மநாபன் வரவேற்றார். மு.இளங்கோவன் தொடர்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார்.

  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் எளிய வடிவில் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று இல்லாமல் உலகில் பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் நூல்கள் சென்று சேர வேண்டும். இன்றைய நாளில் கல்விப்புலங்களில் தரமற்றவர்கள் அமர்ந்து தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர். தொல்காப்பியம் படைப்பாளிகள் மொழியைக் கையாளுவதற்குரிய வழிவகைகளைச் சொல்லியுள்ளது. கம்பராமாயணத்தில் கம்பர் பிறமொழிச் சொற்களை ஆளும்பொழுது தமிழ் இலக்கண மரபுகளை உள்வாங்கிக்கொண்டு ஆண்டுள்ளார். இதற்குத் தொல்காப்பியம் போன்ற நூல்கள் வகுத்துத் தந்த இலக்கணங்கள் உதவியுள்ளன என்று கூறினார்.

  புதுச்சேரி மாநிலம், ஏனாம், சர்வபள்ளி இராதாகிருட்டினன்  அரசு கலைக் கல்லூரி  முதல்வர் முனைவர் தி.செல்வம் தொல்காப்பியம் செய்யுளியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலில் உள்ள செய்யுளியல் என்னும் பகுதியை விளக்கிப் பேசினார். பழங்காலத்தில் இருந்த தமிழ் யாப்பு அமைப்பினைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார்.
                                                     
  பேராசிரியர் அரங்க. மு. முருகையன் நன்றியுரை வழங்கினார். புதுசேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

முனைவர் கு.சிவமணி உரை
முனைவர் தி. செல்வம் உரை

முனைவர் ப. பத்மநாபன் உரை
மு.இளங்கோவன் நோக்கவுரை

கருத்துகள் இல்லை: