நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 மார்ச், 2016

தமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பியம் - மானிடவியல் அறிஞர் ஆ. செல்லப்பெருமாள் உரை!



முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி, நீட ராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் தொல்காப்பியம் குறித்த இரண்டாம் தொடர்பொழிவு இன்று நடைபெற்றது.

16.03.2016, புதன்கிழமை, மாலை 6.30. மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப. பத்மநாபன் நோக்கவுரையாற்றினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மானிடவியல்துறை அறிஞருமான முனைவர் ஆ.செல்லப்பெருமாள் தொடர்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பிய நூலில் இடம்பெறும் மானிடவியல் சார்ந்த செய்திகளை முனைவர் ஆ. செல்லப்பெருமாள் விளக்கமாக எடுத்துரைத்தார்.  

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம்பெறும் நிலம், ஒழுக்கம் சார்ந்த செய்திகள் உலக இலக்கியங்களிலிருந்தும் இலக்கணங்களிலிருந்தும் வேறுபட்டுச் சிறப்பாக உள்ளதைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கினார்.

தொல்காப்பியத்தின் ஒவ்வொரு வரியிலும் உலகத்தின் அனைத்துக் கூறுகளையும் வகை தொகைப்படுத்தித் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். தொல்காப்பியம் எதார்த்தங்களை வகை தொகைப்படுத்தி விளக்கும் நூல். கற்பனை, நெறிமுறைகளுக்குத் தொல்காப்பியர் முதன்மை தரவில்லை.  பழங்காலச் சமூகத்தின் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நூலாக உள்ளது. தமிழகத்தில் வழக்கிலும், செய்யுளிலும் இருந்த செய்திகளை மனத்தில் கொண்டு தொல்காப்பியர் தம் நூலை எழுதியிருந்தாலும் தொல்காப்பியச் செய்திகள் உலகம் முழுமைக்கும் பொருந்தும் செய்திகளைக் கொண்டுள்ளது என்று தம் உரையில் குறிப்பிட்டார்.

தொல்காப்பியர் காலத்தை மனத்தில் கொண்டு தொல்காப்பியத்தை அனுகவேண்டும். நம் காலத்தின் கொள்கைகளை மனத்தில் கொண்டு அனுகினால் தொல்காப்பியரின் உள்ளத்தை அறிய இயலாது. தொல்காப்பியர் காலம் வேறு; உரையாசிரியர்கள் காலம் வேறு; நாம் வாழும் காலம் வேறு. தொல்காப்பியர் தம் காலத்துச் சமூகத்தைப் பார்த்துத் தம் நூலைச் செய்துள்ளார் என்று மானிடவியல் நோக்கில் உரையாற்றினார்.

சுலை. அகமதியன் நன்றி கூறினார்நிகழ்ச்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




திரு. தூ. சடகோபன் அவர்களும் பேராசிரியர் இரா. ச.குழந்தைவேலனார் அவர்களும் முனைவர் ஆ.செல்லப்பெருமாள் அவர்களைச் சிறப்பித்தல்


பேராசிரியர் கு.சிவமணி அவர்களின் தலைமையுரை


முனைவர் ப. பத்மநாபன் உரை


ஆர்வமாய் உரைகேட்கும் அறிஞர்கள்


செவிச்செல்வர்கள்


மு.இளங்கோவன் வரவேற்புரை

கருத்துகள் இல்லை: