நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மார்ச், 2016

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்! – நாஞ்சில்நாடன் பேச்சு.

  

 எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உரை

 உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் தொடர் பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் இன்று (25.03.2016) மாலை நடைபெற்றது. பேராசிரியர் கு. சிவமணி தலைமை  தாங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் ப. பத்மநாபன் வரவேற்றார். மு.இளங்கோவன் தொடர்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார்.

  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் எளிய வடிவில் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று இல்லாமல் உலகில் பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் நூல்கள் சென்று சேர வேண்டும். இன்றைய நாளில் கல்விப்புலங்களில் தரமற்றவர்கள் அமர்ந்து தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர். தொல்காப்பியம் படைப்பாளிகள் மொழியைக் கையாளுவதற்குரிய வழிவகைகளைச் சொல்லியுள்ளது. கம்பராமாயணத்தில் கம்பர் பிறமொழிச் சொற்களை ஆளும்பொழுது தமிழ் இலக்கண மரபுகளை உள்வாங்கிக்கொண்டு ஆண்டுள்ளார். இதற்குத் தொல்காப்பியம் போன்ற நூல்கள் வகுத்துத் தந்த இலக்கணங்கள் உதவியுள்ளன என்று கூறினார்.

  புதுச்சேரி மாநிலம், ஏனாம், சர்வபள்ளி இராதாகிருட்டினன்  அரசு கலைக் கல்லூரி  முதல்வர் முனைவர் தி.செல்வம் தொல்காப்பியம் செய்யுளியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலில் உள்ள செய்யுளியல் என்னும் பகுதியை விளக்கிப் பேசினார். பழங்காலத்தில் இருந்த தமிழ் யாப்பு அமைப்பினைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார்.
                                                     
  பேராசிரியர் அரங்க. மு. முருகையன் நன்றியுரை வழங்கினார். புதுசேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

முனைவர் கு.சிவமணி உரை
முனைவர் தி. செல்வம் உரை

முனைவர் ப. பத்மநாபன் உரை
மு.இளங்கோவன் நோக்கவுரை

செவ்வாய், 28 அக்டோபர், 2014

காரும் மாலையும் முல்லை…


படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்காட்சி

இலக்கியம் பயிலத் தொடங்கியதிலிருந்து கார்காலம், மாலைநேரம், மாலைநேரத்தில் பீர்க்கம்பூ பூக்கும், ஆநிரைகள் வீடு வந்து சேரும், ஆயர்கள் வரும்வரை இல்லில் பெண்டிர் காத்திருப்பர் என்பதைத் தொடர்ந்து கேட்கவும் படிக்கவுமாக இருந்துள்ளேன்.

அப்பொழுது மருத நிலத்தில் (வயலும் வயல்சார்ந்த இடமும்) இருந்தபடி முல்லைநில (காடும் காடு சார்ந்த இடமும்) வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தது. சிலபொழுது நெய்தல் நிலம் (கடலும் கடல்சார்ந்த இடமும்) சார்ந்த வாழ்க்கையையும் வாழ நேர்ந்தது. ஆனால் முல்லைநிலத்தைப் பார்த்ததோடு சரி. அங்கு வாழ்ந்தது இல்லை. அதனால் முல்லைநிலத்தில் ஒருநாளாவது வாழ்வோமே என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுதுதான் அது நேர்ந்தது.

பெரும்பாணாற்றுப்படையில் வரும் தொடுதோல் மரீஇ.. எனத் தொடங்கும் பாடலடிகள் முற்றாக ஆயர்மகன் ஒருவனின் வருணனையைக் கொண்டுள்ளதை அந்த அடிகளை ஆழமாகக் கற்கும்பொழுது அறிந்தேன். முல்லைநிலத்தில்தான் தமிழர்களின் இசைக்கருவிகள் தோன்றியுள்ளன என்ற குறிப்பையும் இப்பாடலடிகள் தருகின்றன. இந்த அடிகளை நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. அவர்கள் பாடிக்காட்டிய முறைமையை அறிந்ததிலிருந்து அதனைக் காட்சிப்படுத்திப் பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

முதலில் ஆயர்குல மகனாக யாரை நடிக்கவைப்பது என்று சிந்தித்தபொழுது திரைப்பட இயக்குநர் அண்ணன் வ.கௌதமன் அவர்கள் என் எழுத்தாளர் நண்பர் ஒருவரை நடிக்கவைக்கலாம் என்று கருத்துரைத்தார். அவர்தான் சரியான தேர்வாக எனக்கும் தெரிந்தது. ஆனால் அவருக்கு வேறொரு பணி இருந்ததால் அந்தத் தேர்வு பொய்த்தது. அதுபோல் ஒளி ஓவியர் யார் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். பழைய   ஒளி ஓவியர் கிட்டவில்லை. என் பொருள்நிலைநோக்கிப் புதியதாக ஓர் ஒளி ஓவியரைத் தேர்ந்தெடுத்தேன். வேறொரு சூழலில் புதியதாகக் கிடைத்த இலக்கிய நண்பர் ஒருவரை நடிக்க வரும்படி அழைத்தேன். அவர் உடனடியாக வருவதற்கு இசைவு தெரிவித்தார்.

நானூறுக்கும் குறையாத நாட்டு மாடுகள் தமிழகத்தில் ஓரிடத்தில் கிடைக்குமா என்று என் நண்பர்கள் பலரையும் தொடர்புகொண்டு கேட்டுப் பார்த்தேன். பலரும் மாடுதேடும் படலத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஒருமுறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளைக் கடந்ததைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. சாலைகளில் மாடுகள் கடக்கும் என்று அறிவிப்புப் பலகையும் அங்கு இருந்தது. மாடுகள் கடக்கும்வரை இடையூறின்றி நாம் காத்திருக்க வேண்டும். இலங்கைச் சாலைகளில் தயிர்ப்பானைகளும் விற்பனைக்கு இருந்தன.

என் கல்லூரி நண்பர் திரு. முத்து அவர்களிடம் படப்பிடிப்பு உரிய வகையில் நடக்க நானூறு நாட்டுமாடுகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் மாடு உள்ள இடத்தை அடையாளம் கண்டு இசைவும் பெற்றுவிட்டார். நாடு கிடைத்தாலும் கிடைக்கும். நாட்டுமாடு கிடைக்காது போலும். பாலுக்கு ஆசைப்பட்டு இனக்கலப்பு தமிழகம் முழுவதும் மாட்டிலும் நிகழ்ந்துவிட்டது.

மாடு கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு மகிழ்வுந்து அமர்த்திக்கொண்டு ஒளி ஓவியருடன் சேலம் நோக்கிப் புறப்பட்டோம். விழுப்புரத்தில் இரவுப்பொழுதில் செந்நிறப் பானைகள் இரண்டை வாங்கிக்கொண்டோம். ஆயர்மகன் தீமூட்டிக் குழல் செய்வதற்குத் தேவைப்பட்டது. இரவு உணவை உளுந்தூர்ப்பேட்டையில் உண்டோம். மூன்று மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஆத்தூரில் தங்கினோம். நண்பர் முத்து அவர்கள் எங்களை வரவேற்க விடுதிக்கு வந்திருந்தார். நண்பர்களுடன் உரையாடியவாறு காலையில் படப்பிடிப்புக்கு வேண்டியவற்றைச் சிந்தித்தோம்.

ஆயர்மகன் குடிப்பதற்குக் கூழ் தேவைப்பட்டது. இரவு பதினொரு மணிக்கு நண்பர் முத்து அவர்கள் கூழ் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வைகறை நான்கு மணிக்கு எங்கள் குழுவினர் எழுந்து கடன்முடித்தோம். ஆயர் மகனாக நடிக்கும் அறின் சென்னையிலிருந்து ஆத்தூருக்குத் தொடர்வண்டியில் வந்துசேர்ந்தார். காலை 5 மணிக்கு வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். மகிழ்வுந்து புறப்பட்டு திரு. முத்து அவர்களின் இல்லம் நோக்கிச் சொன்றது. அங்குக் கூழையும் பானையையும் எடுத்துக்கொண்டோம். கொல்லிமலைக் கேழ்வரகின் சுவையைச் சுவைத்து மகிழ்ந்தோம்.

எங்கள் வண்டி முல்லைநிலம் நோக்கிப் புறப்பட்டது. நண்பர்கள் சிலர் எங்களுக்காக வழியில் காத்திருந்தனர். திரு. செயராமன் அவர்கள் உள்ளூர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். திரு. பாம்பையன் அவர்கள் எங்களுக்காகத் தம் மாநாடுகளை ஒரு கறட்டில் தேக்கி வைத்திருந்தார்.

காலை 7 மணிக்கு நாங்கள் படப்பிடிப்புக் களத்திற்குச் சென்றுசேர்ந்தோம். இடையில் பாக்கும், மஞ்சளும், சோளமும் பசுமையைப் பரிசாக நீட்டி எங்களை வரவேற்றன. வரும்பொழுது நின்றுபேசுவோம் என்று இயற்கைக்குப் பதிலுரைத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். நான்கு பக்கமும் மலையும் காடுமான ஒரு முல்லைநிலப் பகுதி ஓவியத்தில் தீட்டியது போல் கண்முன் இருந்தது. இரவு மழைபெய்திருந்ததால் நிலம் குளிர்ச்சியாக இருந்தது. மழையின் காரணமாக மாடுகள் மேட்டுநிலத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாடுகள் மழையில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் தாங்கிக்கொள்ளும் வகையில் உடல்வாகு பெற்றிருந்தன. மாடுகளின் கால்கள் குதியப்பட்டு, குழுவாக இருந்தன. கன்றுகள் சில இளம் வெயில் தாங்காமல் நிழல்தேடித் தாயின் நிழலில் அடைந்து கிடந்தன. சில நிழல்தேடி மெதுவாக நடந்து பார்த்தன. புல்லைக் கொறித்துப் பார்த்தன சில. கன்றுகள் எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பல நாள்களாகத் தேடிய இயற்கை அழகு எங்கள் கண்களைக் குளிர்வித்தன. நண்பர்கள் திரு. முத்து, திரு. செயராமன் உள்ளிட்டோர் எங்களைத் திரு. பாம்பையன் பொறுப்பில் விட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

புகைப்படக் கருவியை ஒளி ஓவியர் எடுத்து, இருந்தும், கிடந்தும், நின்றும், ஓடியம், தவழ்ந்தும் பல கோணங்களில் படமாக்கினார்.  மாடுகளும், கன்றுகளும் எங்கள் கருவிகளுக்குள் சிறைப்பட்டன. தேவையான கோணங்களில், விருப்பங்களில் காலை பதினொரு மணி வரை படமாக்கினோம். கதிரவனின் வெப்பக்கதிர்கள் தன் சினத்தை வெளிப்படுத்தியபொழுது மாடுகள் மேய்ச்சலுக்குப் புறப்பட்டன. காடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினோம்.

அதற்குள் காலை உணவை எங்கள் ஓட்டுநர் எங்களுக்காக  வாங்கி வந்திருந்தார். மணிமேகலையில் இடம்பெறும் காயசண்டிகையின் யானைத்தீ போன்று பசி எங்களை வாட்டி வதைத்தது. ஆர்வமுடன் கிடைத்த உணவை உண்டுமுடித்தோம். காலை உணவுக்குப் பிறகே அனைவருக்கும் நல்ல “நெகா” வந்தது. அடுத்து, இருந்தஇடத்தில் எடுக்கும் காட்சிகளைத் திட்டமிட்டு எடுத்துமுடித்தோம். ஆயர்மகன் கூழார் இடையனாக அமைந்த காட்சி, செந்தீ தொட்ட காட்சி, படலைக் கண்ணியனாக நடமாடும் காட்சிகள் படமாயின.  அதற்குள் பகலுணவையும் எங்கள் ஓட்டுநர் வாங்கிவந்தார்.

அந்த ஊரில் மாவு அடைதான் பகலுணவாகக் கிடைத்தது. ஆளுக்கு நாலு மாவுஅடை(பரோட்டா) வந்து சேர்ந்தது. உண்மையாக மாடுமேய்க்கும் பாம்பையன் குழுவுக்கும் மாவு அடை வாங்கி வந்தோம். அனைவரும் மகிழ்ச்சியாக ஒரு சிறுகுடில் அருகிருந்த மாமர நிழலில் வயிறார உண்டோம். பிற்பகல் மூன்று மணியானது. இனி மாடுகள் காட்டிலிருந்து தண்ணீர்குடிக்க நீர்நிலைக்குத் திரும்பும் என்றார்கள். புதுச்சேரிக்குப் புறப்படுவதற்கு அணியமாக எங்கள் உடைமைகளைப் மகிழ்வுந்தில் வைத்துவிட்டு மீண்டும் மாடுகளை வரவேற்க, காட்டைநோக்கிப் புறப்பட்டோம். மாடுகள் எங்களைப் பார்த்து விரட்ட வாய்ப்பு இப்பொழுது உள்ளது என்று திரு. பாம்பையன் குறிப்பைச் சொல்லிவிட்டு, மாடுகளைக் கீழிறக்க, காட்டை நோக்கிச் சொன்றிருந்தார். அனைவரும் பாதுகாப்பாக உரிய இடங்களில் இருந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

மாடுகளும் கன்றுகளுமாக ஒவ்வொன்றாக நீர்நிலை நோக்கி வந்தன. பெரிய காளைகள் இப்பொழுது மாடுகளுக்குப் பாதுகாவலர்கள் போல் வந்தன. அதன் திமில்களும், கொம்புகளும் எங்களுக்கு அச்சத்தைத் தந்தன. ஆனாலும் அவை அழகிய ஆவின் மையலில் இருந்ததால் எங்களை அது பொருட்படுத்தவில்லை. கன்றுகள் சில புதியதாகத் தெரிந்தன. அங்கு வந்த திரு. பாம்பையன் சொன்னார்: நேற்று மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு மாடு திரும்பவில்லை. சினை மாடு. இரவு மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் கன்றுபோட்டு, இரவு முழுவதும் கன்றைப் பாதுகாத்து, காலையில் மேயச் சென்ற மாடுகளுடன் இணைந்து இப்பொழுது வந்துள்ளதைச் சொன்னார். அந்த மாட்டையும் கன்றையும் பார்த்தபொழுது ஈன்றணிமைத்தாய் இருந்தது. நேற்றுப் பிறந்த இளம் கன்று மெதுவாகத் தாயுடன் நடந்து சென்றமையைக் கவனித்தபொழுது சீறாப்புராணத்தில் நபிபெருமானைக் காண்பதற்குப் புறப்பட்ட இளம் மறியாகத் தெரிந்தது.

மாலைநேரம் என்பதால் மழைக்கு உரிய கருமுகில்கூட்டங்கள் வானுக்கு அழகுசேர்த்து நின்றன. மயில்கள் அங்குமிங்கும் அகவிக்கொண்டே இருந்தன. சில மயில்களைப் பார்த்தோம். மழைநேரத்தில் கூட்டமாகத் தோகைவிரித்தாடும் என்றார்கள். சோளங்களை வீசியெறிந்தால் அவற்றை உண்ணக் கூட்டமாக வரும் என்ற குறிப்பையும் அறிந்தோம். வேண்டிய காட்சிகளைப் படமாக்கிக்கொண்டு அனைவரிடமும் நீங்கா விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

இடையில் மஞ்சள்செடிகளும் சோளப்பயிர்களும் எங்கள் ஓளிப்படக் கருவிக்குள் கட்டுண்டன. தொடுதோல் என்று பெருபாணாற்றுப்படையில் வரும் செருப்பைப் படமாக்க மறந்தது அப்பொழுதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

காலையில் செருப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். என்றாலும் படம் எடுக்கும் பரபரப்புகளுக்கு இடையில் செருப்புக்காட்சி எடுக்காமல் விடுபட்டிருந்தது. கடைத்தெருவை அடைந்து 98 அகவையுடைய திரு. இராசு நாயுடு அவர்களைக் கண்டு அவரிடம் இருந்த பழைமையான தோல்செருப்பைக் கேட்டபொழுது அருகிலிருந்த வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்று தேடிப்பார்த்தார். கைப்பற்றி நடந்த அகவை முதிர்ந்த அவரின் அன்புமொழிகளும், ஆர்வமும், எங்களுக்கு உதவத் துடித்த உள்ளமும் புரிந்தது. மாலை மங்கிவிட்டது என்று ஒளி ஓவியர் குறிப்பு கொடுத்தார். எங்கு தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. அவர் வீட்டில் இருவரும் தேடிப்பார்த்தோம். கடைசிவரை தோல் செருப்பு கிடைக்கவில்லை. அந்தச் செருப்பு குமிழ் ஆணிகள் அடிக்கப்பட்டு அவர் மாடு மேய்க்கப் பயன்படுத்தியது. தா.பழூர், மதனத்தூர், கும்பகோணம் வரை கொள்ளிடக்கரையில் அவர் வந்து மாடுமேய்த்த கதைகளை இடையில் எனக்குச் சொன்னார்.


நேற்று மாலை இந்த இடத்தில்தான் செருப்பை வைத்திருந்தேன் என்று நாயுடு அவர்கள் சத்தியம் செய்தார். அவர் மனைவியார் அண்மையில்தான் மறைந்தார். அந்தச் சடங்கிற்கு வந்தவர்கள் யாரோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது இரவுபெய்த மழையில் தோல்செருப்புகள் அடித்துச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று திரு. நாயுடு அவர்கள் எனக்கு ஆறுதல்சொன்னார். 

 படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்குழு


படப்பிடிப்புக் குழு


 படப்பிடிப்புக் காட்சி


 படப்பிடிப்புக் காட்சி




செவ்வாய், 28 ஜனவரி, 2014

பேராசிரியர் பெ. மாதையன்


பேராசிரியர் பெ.மாதையன் 

தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் தகுதியான கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிஞர்கள் அடிக்கடி நினைவூட்டி வருகின்றனர். கல்வியார்வமும், தொடர் உழைப்பும், பெரும் புலமையும் கொண்டவர்கள் சரிவரப் போற்றப்படாமையால் தமிழகத்தின் ஆராய்ச்சிப் புலமும், கல்விப் புலமும் வனப்பிழந்து நிற்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தொடர்ந்து ஆராய்ச்சித் துறையில் பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர்களுள் புலமையாலும் உழைப்பாலும் அனைவராலும் போற்றக்கூடியவராக விளங்குபவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் ஆவார். 

சற்றொப்ப அரை நூற்றாண்டுகளாகச் சங்க இலக்கிய ஆய்வுகள், அகராதியியல் ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள் என்று ஒரே சிந்தனையில் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நுட்பத்தை உள்வாங்கிய கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்டவர்களின் பாராட்டைப் பெற்றதுடன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் தமிழ் ஆய்வுப்பரப்பில் வலம் வருகின்றார். மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழாய்வுலகிற்குக் கிடைத்தவர் பேராசிரியர் பெ.மாதையன் ஆவார். செயல்திறமும் பழகுதற்கு இனிய பண்பும் கொண்ட பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திருவாளர் கு.பெருமாள் கவுண்டர், நல்லதங்காள் ஆகியோருக்கு மகனாக 15. 01. 1952 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மேட்டூர் பொது சன சேவா சங்கத் தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை அரசு தொடக்கப் பள்ளியிலும் பயின்றவர்.

சேலம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பும் (1970), தமிழ் இளங்கலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1977-80) முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய (1982-87) முனைவர் பெ. மாதையன் அவர்கள் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் பதிப்புத்துறைப் பொறுப்பாளர், பதிவாளர், தேர்வு நெறியாளர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் முனைவர்பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபத்தாறுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்விக்குழுக்களில் அறிவுரைஞராகவும், புறநிலைத் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணிபுரிந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் வழியாகவும் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு தமிழாராய்ச்சித்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மர இனப் பெயர்த்தொகுதி (இருதொகுதிகள்), சங்க இலக்கியச் சொல்லடைவு, சங்க இலக்கிய அகராதி, வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை உருவ உள்ளடக்க ஆய்வுகள், அகராதியியல், தமிழ் அகராதிகளில் பல்பொருள் ஒருசொல் பதிவமைப்பு, தமிழ் அகராதிகளில் சொற்பொருள்,  A Dictionary of Standardized Technical Terms of Computer Science (English-Tamil), அகராதியியல் கலைச்சொல் அகராதி, அகத்திணைக்கோட்பாடு, நற்றிணை - ஆய்வுப்பதிப்பு முதலியன இவர் ஆய்வுத்திட்டங்களின் வழியாக உருவாக்கிய நூல்களாகும். இவை தவிரப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் பாட நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்ட உருவாக்கக் குழுவிலும் இவர் பணியாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பேரகராதித் திட்டத்தில் இப்பொழுது இணைந்து பணிபுரியும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் பல்வேறு அகராதி உருவாக்கக் குழுக்களில் வல்லுநராக இருந்து கருத்துரை வழங்கியுள்ளார்.

சங்க கால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும் சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெண்டிர் காதல் கற்பு, தமிழில் வினையெச்சங்கள் வரலாற்றாய்வு, தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் கவிதையியல் சமுதாயவியல் நோக்கு, தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும், சங்க இலக்கியத்தில் குடும்பம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும், தமிழாய்வு, பெருஞ்சொல்லகராதி, அகராதியில் கலைச்சொல்லகராதி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 



பாவலரேறு ச. பாலசுந்தரனார் அவர்களின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை(மூன்றுதொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழியாக வெளியிட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.



பேராசிரியர் பெ.மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நூல்கள் பல பரிசில்களைப் பெற்றுள்ளன. இவை ஆய்வுலகிற்குப் பெருங்கொடையாக விளங்குகின்றன. தொடர்ந்து தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு நூல்களை வெளியிட்டுவரும் பேராசிரியர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்பது நம் அவா!.





திங்கள், 2 டிசம்பர், 2013

சங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன்


முனைவர் ச.பொ.சீனிவாசன்

முனைவர் ச. பொ. சீனிவாசன் அவர்கள் மதுரையை அடுத்த சக்குடியில் பெருமைமிகு வாழ்வு வாழும் பொன்னுசாமி - கல்யாணி அவர்களின் மகனாகப் பிறந்தவர் (03.11.1973). இவருடன் பிறந்தோர் எழுவர். நால்வர் ஆண்கள். மூவர் பெண்கள். இவர்தம் குடும்பம் அன்புக்கும் ஒற்றுமைக்கும் பெயர்பெற்ற குடும்பம். இன்னும் கூட்டுக்குடும்பம் மேன்மையுடன் விளங்குகின்றது என்பதற்கு இவர்களின் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.

ச. பொ. சீனிவாசன் அவர்கள் பிறந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றவர். மேல்நிலைக் கல்வியை மதுரை ஐக்கிய கிறித்தவ மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் (1989 - 91) மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்(எம்.ஃபில்) வகுப்புகளில் தமிழ் இலக்கியம் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் குளோறியா சுந்தரமதி அவர்களின் மேற்பார்வையில் நிகழ்த்தியவர்.

சங்க இலக்கியத்தில் அகவுணர்வு உயிரினப் பயன்பாடு - நற்றிணை என்ற தலைப்பில் இவரின் முதல் நூல் வெளிவந்தது. அண்மையில் பத்துப்பாட்டில் வருணனை மரபு என்ற தலைப்பிலும், பத்துப்பாட்டு- பொருளடைவு என்ற தலைப்பிலும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் பார்வை நூல்களாகப் பயன்படுத்தப்பெறும் தகுதியைப் பெறுவன. சங்க இலக்கியத்தை ஆழமாக ஆய்வுசெய்த நூல்களாகவும் இவை விளங்குகின்றன.


ச. பொ. சீனிவாசன் அவர்கள் தமிழகத்திலும் கேரளத்திலும் நடந்த பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் கலந்துகொண்டு கட்டுரை படைத்த பெருமைக்குரியவர். அதுபோல் கல்வித்துறை சார்ந்து பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றிய சிறப்பிற்குரியவர். சங்க இலக்கிய ஆய்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ச. பொ. சீனிவாசன் அவர்கள் இப்பொழுது மூணாறு அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர்தம் சங்க இலக்கிய ஆய்வுப்பணி தொடர என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.






வியாழன், 6 ஜூன், 2013

பட்டினப்பாலை - தமிழ்நாட்டின் ஆவணம்


சதுக்க பூதம்

பத்துப்பாட்டு நூல்களை நுண்ணிதின் கற்கும்பொழுது ஒவ்வொரு நூலும் தனித்த பெருமைக்குரியனவாக விளங்குகின்றன. ஆயிடை அரிய ஆய்வுக்கு இடந்தருவனவாகவும் இலங்குகின்றன.

திருமுருகாற்றுப்படையைக் கற்கும்பொழுது சங்கநூல்களில் குறிக்கப்படும் முருகனின் வரலாற்றிலிருந்து கூடுதலான செய்திகளைக் கொண்டு நிற்கின்றது. குறிஞ்சிப் பாட்டைக் கற்கும்பொழுது பழந்தமிழக இயற்கை வளங்களை அறியமுடிகின்றது. மலைபடுகடாமைக் கற்கும்பொழுது சேயாற்றின் சிறப்பு, செங்கண்மா நகர், அதனை ஆண்ட நன்னன், அவனின் நவிரமலைச் சிறப்புகள் புலப்படுகின்றன. சிறுபாணாற்றுப்படையைக் கற்கும்பொழுது கிழக்குக் கடற்கரையின் நடுவிடமான இடைக்கழிநாடு, எயில்பட்டினம், நல்லியக்கோடனின் நாட்டு வளம், கிடங்கில் நகர், மாவிலங்கைச் சிறப்பு உள்ளிட்ட அரிய செய்திகள் நமக்கு மகிழ்வை ஏற்படுத்துகின்றன.

அதுபோல் பொருநராற்றுப்படை அந்நாளைய பொருநர்களின் கலைத்திறத்தையும், அவர்களின் வாழ்க்கை நிலையினையும் காட்டி நிற்கின்றது. பெரும்பாணாற்றுப்படை தொண்டைநாட்டின் சிறப்பினையும், மக்கள் வாழ்க்கையையும் காட்டி நிற்கின்றது. மதுரைக்காஞ்சி நூல் நிலையாமை என்னும் அறநெறி பற்றியும், மதுரை மாநகர் பற்றியும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியும் வேறுபல அரிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. இந்நூல்களைப் போல் பட்டினப்பாலை என்னும் நூல் தமிழக வரலாற்றுக்குரிய அரிய சான்றுகள் பலவற்றைத் தாங்கி நிற்கின்றது. பண்டைத் தமிழர்களின் வாழ்வியலையும், வணிகநிலையையும் குறிப்பிடுகின்றது.

பட்டினப்பாலை என்னும் அரிய நூலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமகனார் ஆவார். இந்நூல் திருமாவளவன் என்னும் அரசர்பெருமானையும் அவனது நாட்டினையும், காவிரிப்புகும்பட்டின நகரினையும்(பூம்புகார்) போற்றியுரைக்கும் வகையில் உள்ளது. திருமாவளவனும் கரிகாலன் என்னும் அரசனும் ஒருவரே எனவும், இருவரும் வேறு வேறானவர் எனவும் தமிழறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. திருமாவளவன் காலத்தில் உறையூர் தலைநகராகவும், பூம்புகார் கடற்கரை நகராகவும் விளங்கியிருக்க வேண்டும் என்று உய்த்தறிய சான்றுகள் பல உள்ளன.

பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் இப் புலவர் பட்டினப்பாலையே அன்றிப் பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைத்தில. இவர் பெயருக்கு அடையாக வரும் கடியலூர் என்னும் ஊர் தமிழகத்தின் எப்பகுதியில் உள்ளது என அறிய இயலாமல் அறிஞருலகம் மயங்குகிறது. “ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தி யவையவை பெறுமே” (தொல்.மரபு. 74) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் உரை வரையும்பொழுது, ”ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன” என விளக்குவதால் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அந்தணர் குலத்தில் பிறந்தவராக இருத்தல்கூடும்.

பட்டினப்பாலை நூலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு அரசன் சிறப்பு செய்த குறிப்பு பட்டினப்பாலையில் இல்லை. ஆனால் பதினாறு நூறாயிரம் பொன் வழங்கினான் என்ற குறிப்பு பிற்கால நூலான இராசராசன் உலாவில் பதிவாகியுள்ளது. கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழிலும் திருவெள்ளறைக் கல்வெட்டிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது.

பட்டினப்பாலை நூலின் பாடலடிகளின் எண்ணிக்கை 301 ஆகும். 302 எனக் கொள்வாரும் உண்டு. இந்த நூல் யாப்புவகையான் ஆசிரியமும் வஞ்சியுமாக ஓரினத்து இருவகை யாப்பால் அமைந்து, வஞ்சிநெடும் பாடலாக அமைகின்றது. குறளடி 167 எனவும், அளவடி 134 எனவும் ஈற்றயல் சிந்தடி 1 எனவும் கொண்டு அறிஞர்கள் கணக்கிடுவது உண்டு.

பட்டினப்பாலை நூல் தமிழறிஞர்கள் பலரின் உள்ளங் கொள்ளைகொண்ட நூலாகும். இந்த நூலுக்குப் பண்டைத் தண்டமிழாசிரியர் நச்சினார்க்கினியரும், இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்களான தவத்திரு மறைமலையடிகளாரும், அறிஞர் இரா. இராகவையங்காரும், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் வரைந்துள்ள உரைப்பகுதிகளைக் கற்கும்பொழுது பட்டினப்பாலை என்னும் இப்பனுவல் அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தை உணரலாம்.

பட்டினப்பாலையைக் கற்கும் முன்பாக…

பட்டினப்பாலையைத் தமிழ்க்கண்கொண்டு நயம்சார் பார்வையில் கற்பதினும் அரசியல், வரலாறு, புவியியல், கடலியல், தொல்லியல், அகழாய்வியல், கடலகழாய்வியல் கண்கொண்டு உற்றுநோக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காவிரியாறு இன்றைக்கு ஓடிவரும் போக்கில் பண்டைக்காலத்தில் ஓடவில்லை என்று  தொலை உணர்வுத்துறையின் பேராசிரியர் எஸ். எம். இராமசாமி அவர்கள் குறிப்பிடுவார். (S.M. Ramasamy: “Remote sensing and Ecstatic changes along the east cost of TamilNadu and its possible influence in poompuhar’s submergence”. Paper presented at seminar on Marine Archaeology – 1994, held at Chennai. மேற்கோள். நடன.காசிநாதன், பூம்புகாரும் கடல் அகழாய்வும்). அதுபோல் பூம்புகாரும் இன்றைக்கு உள்ள பூம்புகாரின் வடகிழக்கே ஐந்துகல் தொலைவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுரைத்துள்ளனர். இன்றைய அறிவியல் தொழில்நுட்ப உதவியால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகாரை அறிய முற்பட்டால் வியத்தகு உண்மைகள் வெளிவரும்.

            மேலும் “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரியாறு” இன்று கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் உரிமையுடையது போன்ற சூழல் அரசியல்காரர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வறண்ட காலத்தில் மட்டும் தமிழக மக்களால் காவிரி என்ற சொல் ஒலிக்கும் சொல்லாக உள்ளது. ஆனால் காவிரியின் வரலாற்றைப் பார்க்கும்பொழுது காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு, உரிமை பன்னெடுங்காலமாக உள்ளது.

“நீயே தண்புனல் காவிரிக் கிழவன்” (புறம்)
“கரிகாலன் காவிரி சூழ் நாடு” (பொருநராற்றுப்படை- பிற்சேர்க்கைப் பாடல்)
“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர்” (புறம்- 385:8-9)
“பழஞ்சோ றயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
“காவிரிக் கிழவன்”- (புறம். 399:11-12)
முதலான பாடலடிகள் காவிரியாற்றின் உரிமையாளர்களாகப் பண்டைத் தமிழ்ச் சோழ மன்னர்கள் இருந்துள்ளதைக் காட்டுகின்றன.
காவிரியாறு ஆழமான நீர்நிறைந்தோடும் சிறப்போடு விளங்கியதை,
“ பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
“கழைநிலை பெறாக் காவிரி நீத்தம்” – (அகம்.-6)
“கழையளந் தறியாக் காவிரி” (அகம். 32)
“ கழைமாய் காவிரி” (அகம். 10)
“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்” (அகம். 177)
“பல்வேல் மத்தி கழாஅர் முன்றுறை” (அகம். 226)

என்னும் பாடலடிகள் காவிரி நீர்நிறைந்தோடியமையை நினைவூட்டும். இன்று வறண்டு கிடக்கும் மணல்வெளியைக் காண்போர் இவ்வரிகளை நம்ப மறுப்பர்.

வானம் இயற்கையாகப் பெய்யும் மழையைப் பெய்யச் செய்யாமல் பொய்த்தாலும் காவிரியாறு தொடர்ந்து ஓடிவந்து சோழநாட்டு மக்களைக் காக்கும் தாயாக விளங்கியதைத் தமிழ்நூல்கள் எடுத்துரைக்கின்றன.

காவிரியாறு குடகு மலையில் தோன்றிக் கீழைக் கடலில் கலக்கிறது என்பதை “மலைத்தலையக் கடற்காவிரி” என்பர். இத்தகு காவிரி பாயும் சோழநாட்டினைச் சோழமன்னர்கள் பண்டைக்காலம்தொட்டு ஆட்சி செய்துவந்துள்ளனர். இச்சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் கடல்வணிகமும் சிறப்பாக நடைபெற்றுள்ளதைச் சான்றுகளால் அறியமுடிகின்றது. சோழநாட்டின் தலைநகராக உறையூர் விளங்கியமை போன்று கடற்கரை நகராகப் பூம்புகாரும் வேறுபல ஊர்களும் இருந்துள்ளன. பூம்புகாரின் சிறப்பினைப் போற்றியுரைக்கும் நூல்களுள் பட்டினப்பாலை தலைசிறந்து விளங்குகின்றது. அந்த நூலில் இடம்பெறும் செய்திகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

பட்டினப்பாலையில் காவிரியின் சிறப்பு, பூம்புகாரின் சிறப்பு, திருமாவளவனின் வீரம் பேசப்படுகின்றன.

பூம்புகார் சிறப்பு:

பூம்புகார் நகரம் சங்க காலச் சோழமன்னர்களின் கடற்கரைத் துறைமுகப்பட்டினமாக விளங்கியுள்ளது. இந்நகரை இருமுறை கடல்கொண்டமைக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான நூல்கள் கடல்கோள் பற்றி பேசுகின்றன. மணிமேகலையில் இரு இடங்களில் கடல்கோள் ஏற்படும் என்ற குறிப்பு உள்ளன.

“தீவகச் சாந்தி செய்யா நாள்உன்
காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம்” (மணி: 24:62-63)
(இந்திரவிழா கொண்டாடத் தவறினால் கடல்கோள் நிகழும்) என்றும்,

ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில் காவிரிப் பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்டதை மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் தீவதிலகை,

“மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅல்
அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்டதிதுவால்
கடவுள் மாநகர் கடல்கொள” (மணி: 25:198-201)

என்று குறிப்பிடும் பகுதிகள் இதனை மெய்ப்பிக்கும்.

காவிரியின் சிறப்பு

காவிரியாற்றின் சிறப்பினை மிகச்சிறப்பாக விதந்தோதும் நூல் பட்டினப்பாலை ஆகும். பட்டினப்பாலை நூலின் வழியாக அக்காலத்தில் இருந்த நில அமைப்பு, கடற்கரையமைப்பு, துறைமுகம், பண்டமாற்று, செல்வச்செழிப்பு, இறைவழிபாடு, சடங்குமுறை, உணவுமுறை, மக்களின் பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை, வணிகச்சிறப்பு உள்ளிட்ட பல செய்திகளை அறியமுடிகின்றது. காவிரியாற்றின் வரலாற்றையும், பெருமையையும் இந்த நூலில் விரிவாகக் காணலாம்.

வெள்ளிக்கோள் தான் நிற்பதற்குரிய வடதிசைக்கண் நில்லாமல் தென்திசைக்குச் சென்றாலும், மழைத்துளியையே உணவாக உண்ணும் வானம்பாடி வருந்தும்படி முகில் மழையைப் பொய்த்தாலும் குடகு மலையில் தொடங்கிக் கடலில் புகுவதாகிய காவிரிப் பேரியாறு சோழ நாட்டை வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் பெருமைக்குரியது. இச்செய்தியில் தமிழரின் வானியல் அறிவு மிளிர்ந்து நிற்கின்றது. காவிரி பாய்வதால் கழனிகளில் மிகுதியாகக் கரும்பு விளையும்; கரும்பு ஆலைகளில் மணம் கமழும் பாகினை அடுவதால் எழும் புகை சுடுதலால் வயலில் நிறைந்து நின்ற நெய்தல் பூக்கள் வாடும். அந்த வயல்களில் விளைந்த கதிரைத் தின்ற எருமை மாடுகள் ஈன்ற கன்றுகள் உழவர்களின் நெற்கூடுகளின் நிழலில் உறங்கும். இக்கருத்துகள் தமிழகத்தில் பண்டைக்காலத்திலேயே கரும்புகள் விளைவுக்கு வந்துவிட்டதைக் குறிப்பிடுகின்றது.

தெங்கு, வாழை, கமுகு, மணம் வீசும் மஞ்சள், மா மரம், பனை, சேம்பு, இஞ்சி முதலியவற்றை உடையதாகச் சோழ நாட்டின் மருத நிலம் கொண்ட சிற்றூர் விளங்கியது. சோழநாட்டின் விளைபொருள்களைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இந்த நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். செல்வம் மிக்க வீடுகளின் முன்றிலில் அணிகலன்களை அணிந்த மகளிர் உலரும் நெல்லைத் தின்ன வரும் கோழியை வெருட்டுதற்கு எறிந்த மகரக்குழையானது இளம் சிறுவர்கள் குதிரை பூட்டாமல் உருட்டி விளையாடும் சிறிய தேர்களின் வழியை விலக்கும். இவ்வாறு வளம் வாய்ந்த பலவாகிய ஊர்களை உடையதாகச் சோழ நாடு விளங்கியது என்பதைப் பட்டினப்பாலை உணர்த்தி நிற்கின்றது.


காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள பொழில்களும், தோட்டங்களும்

பூம்புகாரின் கழிமுகப் பகுதிகளில் படகுகள் வரிசையாக நிற்கும். அந்தப் படகுகள் பந்தியிலே வரிசையாகக் குதிரைகளைப் பிணித்து வைத்தது போல் இருக்கும். பொழில்களையும் சோலைகளையும் கொண்டு ஓவியத்தின் அழகினைப் பெற்றது போல் பொய்கைகளும், ஏரிகளும் நிறைந்திருந்தன. சோழனின் புலிச்சின்னத்தை அடையாளமாகக் கொண்டு பலகைகள் நன்கு பொருந்திய கதவினை உடையதாக மதில்கள் விளங்கின.

பூம்புகாரில் உணவுச் சாலைகள் மிகுந்திருந்தன. அந்த உணவுச் சாலைகளில் வடித்த கஞ்சி தெருக்களில் ஆறு போல் ஓடியது. அந்த இடத்தில் காளைகள் தம்முள் போர் செய்வதால் சேறாய் மாறியது. அவ்வழியில் பல தேர்கள் ஓடியதால் அத்துகள்கள் எங்கும் பரவின. இதனால் அரண்மனைகள் புழுதியை மேலே பூசிக்கொண்ட களிறு போல் அழுக்குடன் விளங்கின. எருதிற்கு வைக்கோல் இடும் சாலைகளும், தவம் செய்வோர் உறையும் பள்ளிகளைக்கொண்ட பொழில்களும் பூம்புகாரில் இருந்தன. தாபதர்கள் தீயில் நெய் முதலியவற்றை இட்டு வளர்த்தலால் உருவாகும் புகையை வெறுத்த குயில்கள் தம் பேடைகளுடன் அந்த இடத்தைவிட்டு நீங்கும் என்ற குறிப்பு அக்காலத்தில் நிலவிய வைதீகச் சடங்குகளை நினைவூட்டுகின்றன.

காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு

அகவை முதிர்ந்த மரங்கள் கடற்கரையெங்கும் காணப்படும். பொய்ப்போர் செய்வதற்கு என அமைக்கப்பட்ட மணல் திட்டுகளில் அமர்ந்து மறவர்கள் கடலின்கண் கிடைத்த இறால் மீன்களின் சூட்டு இறைச்சியைத் தின்று மகிழ்வர். மற்றொரு பிரிவினர் வயலில் கிடைத்த ஆமையைப் புழுக்கி அதன் இறைச்சியைத் தின்றும் ஒரு பிரிவினர் அடப்பம் பூவைத் தலையில் சூடியும், மற்றொரு பிரிவினர் நீரில் நின்ற ஆம்பல் பூவைப் பறித்துச்சூடியும் மகிழ்வர்.

இந்த உணவு வகைகளைக் கொண்டு நிலத்தைப் பாகுபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது என்பதைப் பெருமழைப் புலவர் உரையால் அறியமுடிகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பகுதிகள் இருந்தன. மருவூர்ப்பாக்கம் என்பது கடற்கரையருகேஅமைந்த நெய்தல் நிலப் பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது காவிரிக்கரையில் மருதநிலத்தில் உள்ளது. அதனால் மருவூர்ப்பாக்கத்து மறவர்கள் நெய்தல் நிலத்தில் கிடைக்கும் கடல்சுறாவின் சூட்டினைத் தின்று அடப்ப மலர்களை அணிந்துகொண்டனர். பட்டினப்பாக்கத்து மறவர் வயலாமையைப் புழுக்கிப் புனலாம்பல் சூடினர் என்று விரித்துரைக்கும் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்பை அவர் உரையால் மேலும் அறிக.

நெய்தல் நிலத்தின் அம்பலங்களில் கையாலும் கருவிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பெருஞ்சினத்தோடு போர் செய்வர். தம் வலிமையை அளத்தற் பொருட்டு பனை மரங்களை இலக்கு வைத்துக் கவண் கற்களை வீசுவர். அக்கற்களுக்கு அஞ்சி பறவைகள் அந்த இடத்திலிருந்து நீங்கும். இவ்வாறு செய்வோர் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என இரு ஊர்ப் பாக்கங்களில் வாழ்பவர் ஆவர். இக்குறிப்புகளைக் கொண்டு பண்டைத்தமிழர்களின் வாழ்க்கைமுறையை  ஒருவாறு உணரலாம்.

புறஞ்சேரியின் தன்மை

சேரிப்புறம் என்பது புறஞ்சேரி என்று மாறி வந்தது. புறஞ்சேரிப் பகுதிகளில் உறைக்கிணறு இருக்கும். மேலும் புறஞ்சேரியில் குட்டிகளை உடைய பன்றிகளும், பல்வேறு வகை கோழிகளும் துருவ ஆட்டின் கிடாய்களும், கௌதாரிகளும் விளையாடுவது உண்டு. இவை உணவின் பொருட்டு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

பரதவர் இருக்கை

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் எடுப்பது பண்டைய வழக்கம். அவ்வாறு நடும் கல்லைச் சுற்றிலும் வேலினை ஊன்றிக் கிடுகைக் கட்டி அரண் போலச் செய்வர். அதுபோல் நெடிய கோல் சார்த்திய கூரைகளை உடைய குடியிருப்புகள் இருந்தன. நிலவினைச் சேர்ந்த இருள் போல வலை கிடந்து உலரும் மணல்வெளிகளுடன் பரதவர் மனைகள் இருந்தன. சுறா மீனின் கொம்பை நட்டுத் தம் மனையில் சேர்த்த தெய்வமாகிய வருணனுக்கு வழிபாடு செய்வர். அந்தத் தெய்வத்திற்கு இட்ட தாழை மலரைத் தாம் சூடியும், படைத்த பனையின் கள்ளைப் பருகியும் மகிழ்வர். கடலிடத்துத் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துத் தாம் விரும்பும் உணவை உண்டு மனம் போனவாறு பரதவர்கள் விளையாடுவர். காவிரிப்புகும்பட்டினத்து மக்களிடம் பண்டைக்காலத்தில் நிலவிய வாழ்வியல் கூறுகளைப் பல நூறு ஆண்டுகளானாலும் பட்டினப்பாலை இன்றும் வரலாற்று ஆவணமாக இருந்து சுட்டிக்காட்டுகின்றது.

பூம்புகாரின் பகல்காட்சி

காவிரிப்புகும்பட்டினக்கடற்கரையில் மீன்படு பரதவர் தொழிலில் கொணர்ந்த மீன் உலர்த்தலால் மணல்வெளியில் மீன் நாற்றம் இருக்கும். மேலும் அங்குப் பலவகையான சோலைகள் இருப்பதால் மலர்மணமும் கமழும். இக்கடற்கரையிடத்து மலையைச் சேர்ந்த மேகம் போலவும், தாய்முலை தழுவிய குழவிபோலவும் காவிரி கடலுடன் கலக்கும். இத்துறையில் தீவினைகள் நீங்க மக்கள் கடல்நீரில் குளிப்பர். கடலில் குளித்த உப்புநீர் நீங்கக் காவிரியில் குளிப்பர். மேலும் மகிழ்ச்சிக்காக நண்டினைப் பிடித்து விளையாடியும், அலைகளில் விளையாடியும், பாவைகள் செய்து மகிழ்ந்தும் பகற்பொழுதில் மகிழ்வர். சுவர்க்க உலகம்போலும் பெருமை மிக்க பூம்புகார் கடற்கரையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.

பூம்புகாரின் இரவுக் காட்சி

பூம்புகாரில் வதிந்த மகளிர் இரவுக்காலத்தில் தம் கணவரைக் கூடிய இன்ப மயக்கத்தில் தாம் முன்பு உடுத்தியிருந்த பட்டாடையை நீக்கித் தம் கணவரின் துகிலை உடுத்தி நிற்பர். மேலும் தாம் பருகுதற்கு அமைந்த மட்டினைப் பருகாமல் தம் கணவர் பருகுதற்குரிய மதுவினைப் பருகுவர். இன்னவண்ணமே மைந்தர் சூடுதற்குரிய கண்ணியை மகளிர் சூடவும், மகளிர் கோதையை மைந்தர் அணியவும் இருந்தனர். ஒருபகுதி மக்கள் இசைப்பாடல்களைப் பாடியும், ஒருசார் மக்கள் நாடகம் கண்டும், ஒருசிலர் நிலவு இன்பம் நுகர்ந்தும் விளங்கினர். இவை யாவும் கடையாமத்து நிகழ்வாக இருந்தது. இவ் இரவுக்காலத்து நிகழ்வுகளை விரித்துரைக்குமிடத்துப் பெருமழைப்புலவரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்டு நின்று பொருள் உரைப்பதை அவரவர் உரைகற்று இன்பம் நுகரலாம்.

சுங்கப்பொருள் கொள்வோர் நிலை

சோழ அரசனின் நாட்டகத்தில் விற்பனைக்கு வரும்பொருள்களுக்குச் சுங்கவரி விதிப்போர் கடையாமத்தில் சிறுபொழுது உறங்கி மற்ற அமையங்களில் விழித்திருந்து காவல் செய்வர். அரசனுக்கு உரிய பொருளைப் பிறர் கொள்ளாமல் காக்கும் இவர்களின் செயல் கதிரவனின் தேர்பூண்ட குதிரைபோல் தொடர்ந்து இயங்குவதுபோல் இருக்கும் என்ற உவமைவழி விளக்கப்பட்டுள்ளது.

இயற்கை வாழ்க்கை

பூம்புகாரில் வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் இயற்கை வாழ்க்கை வாழ்ந்துள்ளதைப் பல சான்றுகளின் வழியாக உணரமுடிகின்றது. கடற்கரையை ஒட்டிய பரதவ மக்கள் கடல்படு பொருளான மீனையும், மீன் உணங்கலையும், கள்ளையும் உண்டு அங்குக் கிடைத்த மலர்களைச் சூடி, தம் உறவினருடன் விளையாடியும் பொய்ப்போர்புரிந்தும், நடுயாமத்தும், கடை யாமத்தும் இன்பம் துய்த்தும் வாழ்ந்துள்ளனர்.

முழுநிலவு நாளில் விழாவெடுப்பது வழக்கமாகத் தெரிகின்றது. சுறா மீனின் கொம்பை நட்டு வழிபட்டுள்ளனர். வருணனுக்கு விழா எடுத்துள்ளனர். வணிகக்குடியினர் நடுநிலையில் இருந்து வணிகம் செய்துள்ளனர். வேளாண் மக்கள் தம் குலத்தொழிலைச் செய்து அறவாழ்வு வாழ்ந்துள்ளனர்.

அரசனின் படை மறவர்கள் காவல் காத்துள்ளதும், அரசனின் பணியாளர்களும் அமைச்சர்களும் அவரவர்களுக்கு உரிய கடமைகளையாற்றியுள்ளனர் என்பதும் இந்நூலால் விளங்குகின்றன. இன்றைய நாகரிக உலகுபோல் பண்டைப் பூம்புகார் பன்னாட்டு மக்கள் கூடும் இடமாகவும், பல நாடுகளுக்குச் சென்று பேரறிவு பெற்றவர்கள் கூடும் இடமாகவும் இருந்துள்ளதையும் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகாரின் சிறப்பை உரைப்பதுடன் இல்லாமல் அக்காலத்தில் ஆட்சி செய்த பெருவீரனான திருமாவளவனின் இளமை வாழ்க்கை, அவனின் போர்ச்செயல் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி இறக்குமதி

காவிரிப்புகும்பட்டினக் கடற்கரை பொருள்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக எந்த நாளும் இருக்கும். அளந்து அறியாப் பல பண்டங்கள் குவிக்கப்பட்டிருந்ததையும், அவற்றை அருங்கடிப் பெருங்காப்பினர் காவல் செய்ததையும் பட்டினப்பாலை கவனமாகப் பதிவு செய்துள்ளது. வெளியேறும் பொருட்களுக்கும், சோழநாட்டுக்குள் வரும் பொருள்களுக்கும் சோழனின் புலிச்சின்னம் இலச்சனையாகப் பொறிக்கப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது இன்றைய சுங்கத்துறை நடைமுறைகளுக்கு முன் காட்டுகள் பட்டினப்பாலையில் உள்ளதை அறியலாம்.

பொருள்கள் மிகுதியாகக் குவிக்கப்பட்டிருந்ததால் அப்பொருள்களின் குவியலில் மலைகளில் வாழும் வருடைமான்களைப் போல் ஆட்டுக் கிடாய்களும், ஏற்றை நாய்களும் ஏறிக்குதித்து விளையாடும். இவை செல்வப்பெருக்கம் காட்டும் உவமை. கார்காலத்தில் கடலின்நீரை முகந்துகொண்டுவந்து முகில்கள் மலையில் பொழிவதும், மலையின்கண் உருவான நீரை யாறுகள் கடலில் கொண்டுவந்து பரப்பவும் ஒரே அமையத்தில் நிகழ்வதுபோல் பிற நாட்டிலிருந்து கொண்டுவந்து பொருளைக் கரையில் ஏற்றவும், நான்கு நிலங்களிலிருந்தும் கொண்டு வந்த பொருள்களைக் கலத்தில் கொண்டு சேர்க்கவுமான காட்சியைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சிறப்பாகக் காட்டியுள்ளார்.

அங்காடித்தெரு

திண்ணைகளையும், பல கட்டுகளையும், சிறு வாயில்களையும், பெரு வாயில்களையும் உடைய உயர்ந்த மாடங்களைக் கொண்ட வீடுகள் பூம்புகாரில் இருந்துள்ளன. அந்த வீட்டின் மாடத்தில் மயில்போன்ற சாயல் உடைய பெண்கள் கிளிபோலும் மழலைமொழி மிழற்றுவர். தம் காந்தள் மலர்போலும் கைகளைக் குவித்துத் தொழுது, முருகவேளுக்கு வெறியாட்டு எடுப்பர். மகளிர் பாடும் பாடலுடன் குழலும் யாழும் முழவும் ஒலிப்ப நாளும் திருநாள் நிகழும் அங்காடித்தெருக்கள் பூம்புகாரில் உண்டு.

அங்காடித்தெருக்களில் தெய்வக்கொடிகளும் கரும்பின் பூ போன்ற வீரக்கொடிகளும், நல்லாசிரியர்கள் வாதுசெய்தலைக் கருதி உயர்த்திய அச்சந்தரும் கல்விக்கொடிகளும் ஏற்றப்பட்டிருக்கும். யானைபோன்ற மரக்கலங்களில் கட்டப்பட்டிருக்கும் கொடிகளும், கள் விற்றலைக் குறித்தற்கு ஏற்றப்பட்டக் கொடிகளும், ஏனைய பண்டங்களை விற்றலுக்கு ஏற்றப்பட்ட கொடிகளும் மிகுந்து காணப்படும். இன்றைக்கு விளம்பரப்பலகைகள் செய்யும் பணியைப் பண்டைக்காலத்தில் கொடிகள் அடையாளமாக இருந்து செய்தன போலும்.

காவிரிப்புகும்பட்டினத்தில் கடல்வழியில் கலத்தில் சுமந்து கொண்டுவந்த பொருள்களும், நிலத்தில் சகடங்களில் வந்த மிளகுப் பொதியும் குவித்துவைக்கப்பட்டிருந்தன. மேலும் மேருமலையில் பிறந்த மாணிக்க மணியும், சாம்பூநதம் என்னும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும், அகில்மரமும், தென்கடலில் பிறந்த முத்தும், கீழ்த்திசைக்கடலில் பிறந்த பவளமும், கங்கையாற்றில் பிறந்த பொருள்களும் காவிரியாற்றில் பிறந்த பொருள்களும் மிகுதியாகக் கிடைத்தன. மேலும் ஈழத்தில் கிடைத்த பொருள்களும், கடாரத்துப் பொருள்களும் இவையொத்த பெறுவதற்கு அரியனவும் பெரியனவுமான பொருள்களும் மிகுந்து விளங்கியபடி காவிரிப்புகும்பட்டினம் விளங்கியது.

இவ்விடத்து ஈழத்துணவும் என்று உரையாசிரியர்கள் பலரும் பாடம்கொள்ள அறிஞர் இரா.இராகவையங்கார் “ ஈழத்துளவும்” என்று பாடங்கொண்டதை எடுத்துரைக்கும் பெருமழைப்புலவர் இந்த இடத்தில் நுட்பமான விளக்கம் வரைந்துள்ளார்.

பூம்புகாரில் வாழ்ந்த குடிமக்கள்

பூம்புகார் நீர்புக்க நிலமாக மாறினாலும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வழியாக அவர் பாட்டுத்திறத்தால் என்றும் வாழும் ஊராக நிலைபெற்றுவிட்டது. இவ்வூரில் வேளாளர், வணிகர் உள்ளிட்ட பலகுடியினரும் வாழ்ந்துள்ளனர். காவிரிப்புகும்பட்டினத்து வேளாண் மக்கள் பிற உயிர்களை நலித்தல் செய்யாதவர்கள். உழவுத்தொழிலை விரும்பிச் செய்கின்றவர்கள்.

உயிர் கொல்லுந்தொழிலுடையவர்க்கும் நெல்லை வழங்கும் இயல்பினர். தெய்வம் போற்றியும் தெய்வங்களுக்கு அவியுணவு வழங்கியும், நான்மறை வல்லோர் போற்றும் படியாகவும் வாழ்ந்துவந்தனர். நல்ல பசுக்களையும் எருதுகளையும் பாதுகாத்து வாழ்ந்தனர். விருந்தினர்க்கு உணவு முதலியவற்றை வழங்கிப் போற்றினர் என்று குறிப்பிடப்படுவதால் வேளாண் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பட்டினப்பாலை ஓவியமாய்த் தீட்டி வைத்துள்ளது எனலாம்.

வணிகர்குடி

புகாரில் வாழ்ந்த வணிகர்கள் தம் குடிக்குப் பழி வராதபடி நேர்மையான முறையிலும் நடுவுநிலையுடனும் வணிகம் செய்தனர். தாம் கொள்ளும் பொருள் மிகையாக இல்லாமலும், கொடுக்கும்பொருள் குறைவுபடாமலும் வழங்கியுள்ளனர். பல பண்டங்களையும் உண்மைவிலைகூறி, தாம் பெறக்கிடந்த ஊதியத்தை வெளிப்படையாகக் கூறி விற்பதும் வாங்குவதுமாக இருந்தனர் என்பதை அறியும்பொழுது பண்டைக்கால வணிகமுறை நமக்குப் புலனாகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகம் சிறந்திருந்ததாலும், பலவகைத் தொழில்கள் நடைபெற்றதாலும், கடற்கரைப் பட்டினமாதலாலும் பலமொழி பேசிடும் பலநாட்டு மக்கள் இருந்துள்ளமையையும் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகாரில் இருந்த மக்கள் பிறநாட்டுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்ததால் பிறநாடுகளுக்குச் சென்றனர். அதன் காரணமாகவும், பல்வேறு உலகியல் அறிவு நிரம்பியவர்களாக இருந்ததாலும் “வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்” என்று ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் விதந்தோதினார்.

அயல்நாட்டுத்தொடர்புடைய மாந்தர் பிறமொழி பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அயலகத்தார் வணிகம்பொருட்டுப் புகாரில் இருந்ததால் பன்மொழி பேசுவோர் கலந்த வணிக இடமாக ( International Trading centre)  இருந்துள்ளதைப் பட்டினப்பாலை வழியாக அறியமுடிகின்றது.

“பல் ஆயமொடு பதி பழகி, 
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்   
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,  
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்   
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,           
முட்டாச் சிறப்பின், பட்டினம்” - பட்டினப்பாலை (213-218)

என்னும் பாடலடிகள் பழங்காலத்தில் பன்னாட்டு வணிகத்தளமாகப் புகார் விளங்கியதை விளக்கும் சான்றாவணமாக உள்ளன. இத்தகு புகழ்பெற்ற நகரையும் அதுகொண்ட நாட்டையும் வலிமை வாய்ந்த அரசன் திருமாவளவன் ஆட்சிசெய்துள்ளான்.

திருமாவளவனின் வரலாறு

பட்டினப்பாலை பூம்புகாரின் சிறப்பைக் கூறுவதுடன் அக்காலத்து அரசனான திருமாவளவனின் வரலாற்றையும் சுமந்து நிற்கின்றது. கூர்மையான நகத்தினையும், வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி கூட்டில் வளர்வதுபோன்று  இளமைப்பொழுதில் பகைவரின் சிறைக்கோட்டத்தில் சிலபொழுது வாழ்ந்தான். பெருமைக்குரிய குணங்களைப் பெற்ற களிற்று யானை குழியில் வீழ்ந்தவிடத்து, அக்குழியைத் தம் வலிமையால் தூர்த்துக் கரையேறிப் பிடியானையிடத்துச் சென்றது போல் தன் அறிவால் பகைவரிடமிருந்து தப்பித் தம் அரசுரிமையைப் பெற்றான். யானை பிடிக்க விழைவார் குழிவெட்டி வஞ்சகமாகப் பிடிப்பதுபோல்  திருமாவளவனை இளையனாக இருந்தபொழுது அவன் பகைவர் சூழ்ச்சியால் சிறைப்பிடித்தனர் என்பதை இந்த உவமை வழியாக அறியமுடிகின்றது.

தமக்கு உரிமையான தாயத்தைப் பெற்று ஆட்சி செய்ததுடன் மட்டும் அமையாமல் பகைவரின் நாடுகளைக் கவர்ந்து, அவர்களின் மருதநிலத்து ஊர்களில் வாழ்ந்த குடிகளைத் துரத்தினான். அதன் காரணமாகக் கரும்பும் செந்நெல்லும் விளைந்து குவளையும் நெய்தலும் மயங்கிக்கிடந்த வயல்களும் பொய்கையும் இப்பொழுது அறுகம்புல்லும், கோரைப்புற்களும் வளர்ந்து இது வயல் அல்லது பொய்கை என்று அறியமுடியாதபடி ஒன்றாகிக் கிடந்தன. அதனால் அத்தகு வளம்வாய்ந்த இடங்களில் மான்கள் விளையாடின.

பூம்புகாரில் உள்ள பொது அம்பலங்களில் பகைநாட்டிலிருந்து கொணரப்பட்ட கொண்டி மகளிர் இறைத்தொண்டில் ஈடுபட்டனர். எதிரிகளின் நாட்டில் முன்பு பூக்கள் எங்கும் படிந்து, கூத்தரின் முழவு, யாழிசை கேட்டவண்ணம் இருக்கும். இன்று அவ்விடம் நெருஞ்சிமுள், அறுகம்புல்லுடன் மண்டிக்கிடக்க நரிகள் ஊளையிடவும், கூகைகளுடன் கோட்டான்கள் கூப்பிடவும், ஆண்பேய்களுடன் பெண்பேய்களும் மயிரைத் தாழவிட்டு நிறையவுமாக இருந்தது. இவற்றால் திருமாவளவனின் பகைநாடு அடைந்த ஊறு ஒருவாறு புலனாகும்.

திருமாவளவன் படைநடத்துவதற்கு முன்பாக அவன் பகைவர்நாட்டில் தலைவாயிலில் விருந்தினர்கள் இடையறாது உண்டு மகிழ்ந்திருந்தனர். கிளிகள் மழலைமொழி பேசும். ஆவின்பால் சிறக்க இருக்கும். இன்று கொடிய வில்லையுடைய வேடர்கள் பொருள்களைக் கொள்ளைகொண்டு போனமையால் நெற்கூடுகள் வறிதே கிடக்கும். அதனுள் கூகைகள் நண்பகல்பொழுதிலும் குழறிக்கொண்டு இருக்கும். இவ்வாறு பகைவரின் பகைநாடுகளைப் பாழ்படுத்தும் இவன் சினம் தணியாதவனாய் உலகத்தோர் பலபடியாகப் புகழும்படி தாம் கருதியதைக் கருதியவாறு முடிக்கும் மனவலிமை பெற்றவன். திருமாவளவனின் வீரத்தின் முன் பாண்டியர்கள், ஒளிநாட்டார், அருவாள நாட்டார், வடநாட்டு அரசர், குடநாட்டு அரசர், முல்லைநில வேந்தர், இருங்கோவேள் உள்ளிட்ட பகைநாட்டார் பல்வேறு இடுக்கண் எய்தினர்.

திருமாவளவன் தன் நாட்டில் இருந்த காடுகளை வெட்டி நாடாகச் செய்தான். குளங்களை அகழ்ந்து வளம்பெறச்செய்தான். பெரிய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுப்படுத்தினான். அங்குக் கோயில்களை எடுப்பித்துக் குடிமக்களை நிலைபெறச்செய்தான்.

திருமாவளவன் பகை மன்னர்கள் வீழ்ந்து வணங்கும்படியாகப் பேராற்றல் பெற்றிருந்தான். பகைவர் தலையில் உள்ள பசுமணி உறிஞ்சப்பெற்ற வீரக்கழல் அணிந்த காலினை உடையவன். பொன்தொடி அணிந்த தம் மக்கள் ஏறி விளையாடுதலானும், மகளிரின் முகைபோன்ற முலை புணர்தலால் செஞ்சாந்து அழியப்பெற்ற மார்பினையுடையவன். ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்தவனாகவும், வலிமையுடையவனாகவும் திருமாவளவன் இருந்தான். திருமாவளவன் பகைவர்மேல் ஓச்சிய வேலை விடக் கடியனவாக  இருந்தன தாம் செல்லும் காட்டுவழி எனவும் அவனின் செங்கோலைவிடக் குளிர்ச்சியாக இருந்தது தலைவியின் தோள் எனவும் தலைவன் கூறுவதாகப் பட்டினப்பாலை நிறைவுகொள்கின்றது.

மிகச்சிறந்த பெருமையுடைய திருமாவளவனால் ஆளப்பட்ட பூம்புகார்ப் பட்டினத்தைப் பரிசிலாகத் தந்தாலும் தலைவியைப் பிரிந்து வாரேன் என்றமையால் தலைவியைப் பிரியும் பிரிவுக்கொடுமையை இந்நூலுள் வைத்துப் பாலைத்திணையின் ஒழுக்கத்தை இந்த நூலில் உருத்திரங்கண்ணனார் சிறப்புடன் பாடியுள்ளார்.

பட்டினப்பாலை அகவொழுக்கம் அறிய விழைவார்க்கு அதனை இலக்கியச்சுவையுடன் விளக்கும் நூலாகவும், யாப்பியல் நுட்பம் அறிய விழைவார்க்கு வஞ்சிப்பா விராய ஆசிரியத்தால் அமைந்த செய்யுளாகவும் விளங்குகின்றது. மேலும், பண்டைத்தமிழரின் வாழ்வியல் அறிய விழைவார்க்கு வாழ்வியல் விளக்கும் நூலாகவும், பண்டைக்கால வாணிகம் அறிய விழைவார்க்கு வாணிகம் அறிவிக்கும் நூலாகவும், வரலாறு அறிய விழைவார்க்குக் காவிரியின் வரலாறு, திருமாவளவனின் வரலாறு தாங்கி நிற்கும் நூலாகவும் விளங்கி நிற்கின்றது. மொத்தத்தில் தமிழர்களின் பண்டைக்காலத் தமிழ் ஆவணமாக இந்நூலைக் குறிப்பிடலாம்.