நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 மார்ச், 2016

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…

பேராசிரியர் வீ..கா. சுந்தரம்  அவர்கள்

    2003, மார்ச்சு 9 இல் நம் இசைமேதை வீ..கா. சுந்தரம் அவர்கள் நம்மையெல்லாம் பிரிந்து, இயற்கை எய்தினார். இன்று அவரின் நினைவுநாள். ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும். அவரின் உழைப்பையும், ஆராய்ச்சி வன்மையையும் நினைக்கும்பொழுதெல்லாம் நான் வியப்படைவேன். தமிழிசையை மீட்பதில் அவர் மேற்கொண்டிருந்த பணிகள் என் நினைவில் தோன்றி, கண்ணில் நீர் உகுக்கின்றன. மிகப்பெரும் இசைப் பெருமையைக் கொண்டிருந்த இத்தமிழினத்தார் தன் சிறப்பை உணராமல் இன்றும் இருந்துவருகின்றனர். இச் சூழலில் ஆபிரகாம் பண்டிதர். சுவாமி விபுலானந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார், வீ..கா. சுந்தரம் போன்ற அறிஞர்களின் உழைப்பைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடாமல் வீணர்களின் ஆர்ப்பாட்ட இரைச்சல்களுக்கு மயங்கிக் கிடப்பது வருத்தம் தருகின்றது.

  இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமிழிசை ஆய்வினைத் தொடர்வதற்கு அறிஞர்கள் யாரும் இன்று நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாரேனும் ஆய்வில் ஈடுபட முன்வந்தாலும் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க அண்ணாமலை அரசர், அருட்செல்வர் நா. மகாலிங்கம் போன்ற வள்ளல்களும் இன்று இல்லை.

  திரைக்கூத்தர்கள், அரசியல்காரர்கள், பணத்தில் புரளும் கல்வியாளர்கள் நடுவே வீ.ப.கா.சுந்தரம் போன்ற இசை மேதைகளின் ஆராய்ச்சியை விளங்கிக்கொள்ள நூற்றாண்டுகள் தேவைப்படும். அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் வழியில் ஆய்வை முன்னெடுக்க இயலும். அவர்தம் பிற நூல்களைப் புரிந்துகொண்டால் பரந்துபட்ட ஆராய்ச்சிக் களங்களை அடையாளம் காணலாம். உலக அளவில் எந்த மொழியிலும் இசைக்கெனக் கலைக்களஞ்சியம் இல்லை என அறிகின்றேன். குறிப்பாக இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் கலைக்களஞ்சியம் இல்லை என்று வீ.ப.கா.சுந்தரம் கூறி, தமிழில் மட்டும் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பெருமிதம் பொங்க எடுத்துரைப்பார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் பணிகளை மதிப்பிடும்பொழுது, மறைந்து கிடந்த பழந்தமிழிசை உண்மைகளைத் துலக்கிக் காட்டியமையை முதன்மைப் பணியாகக் குறிக்கலாம். அதுபோல் அறிஞர்கள் இசைகுறித்துத் தவறான விளக்கம் சொன்ன இடங்களை நமக்கு அடையாளம்காட்டி, அதற்குரிய உண்மையை நிறுவியுள்ளமையை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.


  மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினை(1981)ஒட்டி வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆக்கிய, “இன்று இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொல்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ்ச்சொல்கள்” என்னும் நூலில் நமக்குத் தொகுத்து வழங்கியுள்ள இசைத்துறையில் புழக்கத்தில் உள்ள வடசொற்களும், அவற்றிற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் அவர்தம் தமிழிசைப் பற்றைக் காட்டும் சான்றாக உள்ளன.

  தமிழக அரசு பலதுறை அகராதிகளை வெளியிட்டது. ஆனால் இசைத்துறை அகராதியை வெளியிடவில்லை என்று கவலைகொண்டு இந்த அகராதியை வீ.ப.கா.சு. வெளியிட்டுள்ளார். 1.கோவை(சுரம்) 2. ,பண்ணுப் பகுப்பு இயல், 3. பண்ணுப்பெயர்த்தல் இயல், 4. பொருந்து இசைக் கோவை இயல், 5. பண்ணில் சில இயல்கள், 6. ஆளத்தி இயல், 7. தாள உறுப்பு இயல், 8. முழக்குக் கோல இயல், 9. முழக்குப் பரப்பு இயல் என்ற தலைப்புகளில் இசையுலகில் செல்வாக்குடன் உள்ள வடசொற்களை அடையாளம் காட்டி, அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து தென்னக இசையை மீட்கும் ஒரு கருவி நூலாக இதனை ஐயா அவர்கள் தந்துள்ளார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைப் பணியையும் வாழ்வையும் இத் தமிழுலகுக்கு ஆவணப்படுத்தி வழங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று அவரின் நினைவுநாளில் உறுதியேற்போம்!


கருத்துகள் இல்லை: