நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 5 மார்ச், 2016

தேவார இசையாளர் ப. சம்பந்தம் குருக்கள்..



ப. சம்பந்தம் குருக்கள்


ஓராண்டுக்கு முன்பு இலண்டனிலிருந்து திரு. தம்பு அண்ணன் தொலைபேசியில் அழைத்து, உங்களிடம் சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண் இருகின்றதா? என்று கேட்டார்கள். சம்பந்தம் குருக்கள் யார்? என்றேன். தேவாரம் பாடக்கூடியவர்; புதுச்சேரியில் உள்ளார் என்று மறுமொழி சொன்னார். புதுவையில் உள்ள சிவனிய நெறியில் சேர்ந்தொழுகும் பேராசிரியர் சிவ. மாதவன் அவர்களிடம் விவரம் சொல்லியதும் திரு. சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண்ணை எனக்குத் தந்தார்கள். சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண் உடன் இலண்டனுக்குச் சென்றது. ஓரிரு மாதங்களில் இலண்டன் அன்பர்களின் அழைப்பில் நம் குருக்கள் அவர்கள் இலண்டன் பறந்து, திருமுறை ஓதித் திரும்பினார் என்பது பழைய செய்தி.

திரு. சம்பந்தம் குருக்கள் அவர்களின் செல்பேசி எண் தெரிந்தவுடன் அவருடன் தொலைபேசியில் பேசி அவர்களின் இசையீடுபாடு அறிந்தேன். தமக்கு ஏற்பட்ட இசை ஈடுபாட்டையும், தாம் திருமுறைகளையும், திருப்புகழையும் பாடக் கற்றுக்கொண்ட முறைகளையும் இயல்பாக எனக்குச் சொன்னார்கள். ஓய்வாக இருக்கும்பொழுது சந்திக்க  நினைக்கும் என் விருப்பத்தைச் சொன்னதும் என் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஓராண்டாகியும் ஒரே ஊரில் இருந்தும் அவரைச் சந்திக்கும் செவ்வி அமையாமல் இருந்தது. இடைப்பொழுதுகளில் அவரின் பாடல்களைக் கேட்கும்பொழுதெல்லாம், செல்பேசியில் உரையாடி அவரைப் பாராட்டுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன்.

திருவாளர் ப. சம்பந்தம் குருக்கள் அவர்களின் திருமுறை இசையமிழ்தை இணையதளங்களின் வழியாகக் கேட்டு மகிழ்ந்தேன். படியெடுத்துப் பிள்ளைகளையும் கேட்கச் செய்தேன். எங்கள் மழலைச் செல்வங்கள் திருவாசகத்தில் இடம்பெறும்,

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்” (திருவாசகம்),

எனவும்,

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய் (திருவாசகம்),

எனவும் வரும் அம்மானைப் பாடல்களைக் கேள்வியறிவால் மனப்பாடம் செய்து, திருவாளர் ப. சம்பந்தம் குருக்கள் அவர்களின் வழியில்பாடி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். அதுபோல் திருவாசகத்தின் சிவபுராணத்தையும் அதே அமைப்பில் பாடி எங்களைத் திக்குமுக்காடச் செய்தார்கள். இப்பாடல்களை நாங்கள் பயிற்றுவிக்காமல் கேள்வியறிவால் மட்டும் அவர்கள் பாடினார்கள் என்று கூறுவதன் வழியாகப் . சம்பந்தம் குருக்கள் அவர்களின் தேனொத்த குரலின் சிறப்பை அறியும்படி அன்புடன் வேண்டுவன்.  ஆயிரம்முறை கேட்டாலும் ப. சம்பந்தம் குருக்களின் இன்னிசை நமக்குத் திகட்டாது. திருவாசகத்தை அவர் பாடும்பொழுது கரைந்துருகிப் பாடுவதைக் கேட்டார்க்கு அல்லால் அதன் இனிமை புலப்படாது.
ப.சம்பந்தம் குருக்கள்

ப. சம்பந்தம் குருக்கள் அவர்கள் சிதம்பரத்தை அடுத்துள்ள ஆடூரில் 02.06.1948 இல் பட்டீசுவர சிவாச்சாரியார் அவர்களுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர். காட்டுமன்னார்கோயில் அடுத்த இலால்பேட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். அதன் பிறகு 1966 இல் புதுச்சேரி வந்து, 1969 இல் வங்கியில் உதவியாளராகப் பணியில் இணைந்து, படிப்படியே மேலாளர் வரை உயர்ந்து 2007 இல் ஓய்வு பெற்றவர். தருமபுரம் சுவாமிநாதன் உள்ளிட்ட ஓதுவார்களிடம் முறைப்படி திருமுறை இசை பயின்ற இவர், இனிய குரலில் பாடிப், பலமணி நேரம் கேட்கக்கூடிய வகையில் பல ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். மூவர் தேவாரம்  8 மணி நேரம் கேட்கும் வகையிலும், திருவாசகம்(முழுவதும்) 9.30 மணி நேரம் கேட்கும் வகையிலும், திருப்புகழ் 3 மணி நேரம் கேட்கும் வகையிலும் சுந்தரர் தேவாரம்  4 மணி நேரம் கேட்கும் வகையிலும் பாடியுள்ளார். மேலும்  வண்ணச்சரபம் தண்டபாணி சாமிகள் கதிர்காமம் முருகன் தோத்திரப் பாடல்களையும் பாடியுள்ளார்.

. சம்பந்தம் குருக்கள் பாடிய திருமுறைப்பாடல்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி - ஒளிபரப்பப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், மொரீசியசு, இலங்கை, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று தம் இசைப்பணியைச் செய்துள்ளார். திருமுறை இசைநம்பி, தேன் தமிழிசையால் உருக்கும் தெய்வக் குரலோன், தெய்வத் தமிழிசைச் செல்வர், ஆதி சைவ அருளிசை மணி, திருமுறை இசைக் கலைநிதி, முதலான விருதுகள், பதக்கங்கள், பொற்கிழியினைப் பெற்றுள்ளார். சென்னை அண்ணாமலை மன்றத்தில் மூவர் தேவாரம் பண்முறையில் ஓதி ஆயிரம் உருபா பரிசு பெற்றவர். மதுராந்தகம் திருக்குறள் பீடம் சார்பில் இசைத்தென்றல் விருது பெற்றவர். திருமுறை இசைமாமணி, திருத்தொண்டர் மாமணி, தமிழ் வேத இசைமாமணி, பண்ணிசைக் கலாநிதி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர்.

சென்ற கிழமை நான் ஏதோ ஓரு முதன்மைப் பணியில் மூழ்கிக் கிடந்தேன். ஒரு குறுஞ்செய்தி வந்தது. “புதுச்சேரியில் ஈசுவரன்கோயிலில் திருமுறைப் பாடல்களை இசைக்க உள்ளேன். வருக. . சம்பந்தம் குருக்கள்என்று இருந்தது. ஆர்வமுடன் சென்று, முதல் ஆளாக அமர்ந்து திருமுறைப் பாடல்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டேன். “தோடுடையை செவியன்தொடங்கி, “தந்தது என்தன்னை”, “நமச்சிவாய வாழ்கஎன்று அடுத்தடுத்துப் பாடி இசைவிருந்து வைத்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் தமிழ் பயின்றபொழுது, அருகில் இருந்த செஞ்சடையப்பர் கோவிலில் நாளும் மாலைப்பொழுதில் ஓதுவார் மூர்த்திகள் பாடிய பாடல்களைக் கேட்ட பொழுதுகளும், திருமடத்து அதிபர்களின் சமய உரைகளைக் கேட்ட நினைவுகளும் வந்துபோயின.


தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்கு மட்டும் உரியன அல்ல. சுவைப்பதற்கு உரியன என்று தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்கள் சொன்ன சொற்கள், இலக்கியங்களைப் . சம்பந்தம் குருக்கள் போன்ற இசையறிஞர்கள் இசையோடு பாடக் கேட்கும்பொழுது உண்மை என்று உணரலாம்.

2 கருத்துகள்:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

புதுவை.ப. சம்பந்தர் பொங்குபுகழ்ப் பாட்டால்
மதுவை வழங்குமிசை வாணர்! - பொதுமையொளிர்
நீதி மணக்கும் நெடுந்தமிழைக் காக்கின்றார்
ஓதி மணக்கும் உளத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்லறிஞர் ஒருவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தங்களது பணி தொடர வாழ்த்துகள்.