நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 பிப்ரவரி, 2009

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)


பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை

 ஈழப்போராட்டம் பல்லாயிரம் மக்கள் உயிரைக் காவு வாங்கியதுடன் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட நூலகங்களையும் இல்லாமல் செய்துவிட்டது. நிறுவன நூலகங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நூலகங்கள் பலவும் சிதைந்து போயின. மிகப்பெரிய நூல் வளத்தையும், செல்வவளத்தையும், நிலபுலங்களையும் இழந்து ஏதிலிகளாக அயல் நாட்டுக்குச் சென்றவர்களுள் அறிஞர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.

 தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக வளர்ந்த வேலுப்பிள்ளை அவர்கள் நற்பண்புகளும் பேரறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்ற பெருமைக்கு உரியவர். உலகப் புகழ்பெற்ற பர்ரோ முதலான பேராசிரியர்களிடம் பயின்ற பட்டறிவுடையவர். ஆசர் உள்ளிட்டவருடன் பழகியவர். இவர் இளம் அகவையிலேயே பேரறிவு பெற்று விளங்கியவர்.தமக்கு என ஒரு பின்கூட்டம் உருவாக்கத் தெரியாததால் அவர் பற்றி அடிக்கடி நினைவுகூர ஆள்இல்லை. எனினும் அவரின் ஆழமான அறிவுப் படைப்பால் என்றும் போற்றி மதிக்கக்கூடியவராக அவர் விளங்குகிறார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல் துறையில் இந்து மதம், புத்தமதம், சமண மதம் பயிற்றுவித்தல் பணிபுரியும் பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

 ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தென்புலோலியில் 21.11.1936 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆழ்வாப்பிள்ளை என்பதாகும். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த வேலுப்பிள்ளை பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றவர். 1955-59 இல் இளங்கலை (B.A.Hon)படித்தவர். முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். இதற்காக இவர் ஆறுமுக நாவலர் பரிசு பெற்றவர். கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது. 1959-62 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் நெறியாளர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆவார்.பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர்.


முனைவர் வேலுப்பிள்ளை, முனைவர் தாமசு பர்ரோ, பொன்.பூலோகசிங்கம்(1964)

 இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-64 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil) பட்டம் பெற்றவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை(கி.பி.800 - 920 ) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவர்தம் கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும் இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவர்தம் ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவர்தம் ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவர்தம் பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

 இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

 1973-74 காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப் பல்கைலக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1981-82 இல் பொதுநல நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்த பெருமைக்கு உரியவர். அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார். சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்(1990-2000). இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த.சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.


பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை,பேராசிரியர் ஆசர் அவர்களுடன்(எடின்பர்க்)

 தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைதமைபோல் இலங்கையிலும் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிய உதவும் இக் கல்வெட்டுகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக இவர் வெளியிட்டுள்ளார்(1971-72). கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவர் எழுதித் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டுள்ள நூல் மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது.

 "கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்" என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆங்கில நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.சாசனமும் தமிழும் என்ற பெயரில் 1951 இல் இவர் தமிழில் எழுதிய நூல் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்துகிறது.ஆய்வை அறிவியல் அடிப்படையில் செய்பவர் இவர் என்பதற்கு இந்த நூல் நல்ல சான்றாக விளங்குகிறது.

 சாசனமும் தமிழும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் கல்வெட்டுகளில் தமிழின்நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் அரிய நூலாகும்.இந்த நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகளை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுகளின் துணையுடன் மொழி,இலக்கியம் பற்றி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றிய ஆய்வு நூலாக இது உள்ளது.


ஆ.வேலுப்பிள்ளை(கல்வெட்டுக் களப்பணியில்)

 இந்த நூலின் இறுதிப்பகுதிகள் குறிப்பிடத் தகுந்த சிறப்பிற்கு உரியன. கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ்,பாளி என்னும் மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது என்ற குறிப்பைத் தருகின்றார். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்கிறார். தமிழகம் தவிர்ந்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை அந்த அந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பதுபோல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் இருந்துள்ளதைப் பேராசிரியரின் சில குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது.

 இலங்கையில் உள்ள தமிழ்க்கல்வெட்டுகளை ஆராய்ந்த பொழுது 85 கல்வெட்டுகள் இருந்தன எனவும் அவையும் குறிப்புகள் எதுவும் இன்றிப் பாதுகாக்கப்படாமல் இருந்ததையும் குறித்துள்ளார்.இலங்கைக் கல்வெட்டுகள் படிப்பதற்காக இந்தியா வந்துள்ள செய்தியும், பல செப்பேடுகள் இலங்கையில் கிடைத்துள்ள செய்தியும் இந்த நூலில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நிலவியிருந்தாலும் குறைந்த அளவு கல்வெட்டுகளே கிடைக்கின்றன எனவும், யாழ்பாணப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கத் தகுந்த கல் இல்லை எனவும்குறித்துள்ளார்.சிங்களக் கல்வெட்டுகள், சிங்களர் ஆட்சிமுறை பற்றி இடையிடையே விளக்கியுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொழியமைப்பைப் பற்றிய ஆய்வுக்கு இவரின் நூல்கள் பல முன்னோடியாக உள்ளன.

 தமிழ் வரலாற்றிலக்கிணம் என்ற பெயரில் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கியுள்ள நூல் பண்டைத் தமிழ் இலக்கணத்தை இன்றைய மொழியியல் கண்கொண்டு பார்க்கும் அரிய நூல். ஆயிரம் ஆண்டு இடைவெளியை மனத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த மொழியியல்துறை அறிவுகொண்டு இந்த நூலை வடித்துள்ளார். முகவுரை, தமிழிற் பிறமொழி, எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல்,தொடரியல், சொற்பொருளியல் என்ற பகுப்பில் செய்திகள் உள்ளன.

  தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அறிமுகப்படுத்தும் அமைப்பில் உள்ளதால் தமிழ் உலகம் இந்த நூலுக்கு முதன்மையளிப்பது உண்டு.இந்த நூல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கருத்து முதன்மை பெற்றிருந்தது என்பதை முன்வைக்கிறது.இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டித் தருவதே இலக்கிய வரலாறு என்று நினைத்த தமிழறிஞர்களுக்குப் புதிய சிந்தனையை உண்டாக்க இந்த நூலில் பேராசிரியர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

  1999 இல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) இவர் தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டிப் போற்றியுள்ளது. தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசு சார்பில் அழைக்கப்பட்டார்.உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நூல் இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்றுள்ளது. 1961 இல் இலங்கை ஆட்சிப்பணித் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றவர். கல்வித்துறையில் உள்ள ஈடுபாட்டால் அப்பணி ஏற்காமல் ஆய்வின் பக்கம் வந்தவர்.

  பல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகப் பணிபுரிந்தவர். இவர் மேற்பார்வையில் பலர் முனைவர்பட்டம் பெற்றுள்ளனர். பல பல்கலைக்கழகங்கள் இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பெற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். சமய நூல்கள், அகநானாறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களையும் திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம் உள்ளிட்ட சமயநூல்களையும் அயலகத்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேலுப்பிள்ளை அவர்கள் பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படிப்பதிலும் பலநூல்கள் வரைவதிலும் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.


(உப்சாலாவில் சிறப்புமுனைவர் பட்டம் பெற்ற பிறகு 
ஆ.வேலுப்பிள்ளை குடும்பத்தினருடன்)


நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 23,01.03.2009
முனைவர் பொற்கோ
முனைவர் தமிழண்ணல்
முனைவர் கி.நாச்சிமுத்து
முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)
முனைவர் விசயவேணுகோபால்,புதுச்சேரி
பிரெஞ்சு நிறுவன நூலகம்(புதுச்சேரி)

பி.எல்.சாமி அவர்களின் தமிழ் வாழ்க்கை

அறிஞர் பி.எல்.சாமி இ.ஆ.ப. (10.02.1925-03.06.1999)
 
  சங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் பார்த்து ஆராய்ந்து தமிழ் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர் பி.எல்.சாமி அவர்கள் ஆவார். லூர்துசாமி என்ற இயற்பெயர்கொண்ட இவர் தெலுங்குமொழி பேசும் மக்கள் நிறைந்த செகந்தராபாத்தில் சில காலம் அஞ்சல்துறையில் பணியில் இருந்தார். அம்மக்கள் இவர் பெயரை 'ல்வ்ருடுசாமி' எனப் பிழையாக அழைத்ததைக் கண்டு தம் பெயரை பி.எல்.சாமி என்று எழுதினார். பின்னாளில் பி.எல்.சாமி என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்திய ஆட்சிப்பணியில் தேர்வுபெற்ற இவர் புதுவை அரசில் உயர்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தமிழாராய்ச்சியை மறவாது 500 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும்,பன்னூல்களையும் உருவாக்கிய இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம். 
 
 பி.எல்.சாமி அவர்களின் முன்னோர்கள் சிவகங்கைப் பகுதியில் இருந்தனர் எனவும் பின்னாளில் கோவையில் தங்கியிருந்தனர் எனவும் அறியமுடிகிறது. கோவை சேடப்பாளையும், பள்ளப்பாளையும், சோமனூர் பகுதியில் இவரின் முன்னோருக்கு நிலபுலங்கள் இருந்துள்ளன. பி.எல்.சாமி அவர்களின் தந்தையார் பெயர் பெரியநாயகம் ஆகும். இவர் கோவை தூய மைக்கேல் பள்ளியில் வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவருக்கு எட்டாவது மகனாக வாய்த்தவர் பி.எல்.சாமி. கோவையில் 10.02.1925 இல் பிறந்தவர். பெரியநாயகம் அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருந்தார். இந்தச் சூழலில் திண்டிவனத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணிபெற்றுத் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். 
 
 பி.எல்.சாமி ஏழு வகுப்புவரை பிற ஊர்களில் படித்துப் பத்தாம் வகுப்பைக் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தூயவளனார் பள்ளியில் படித்தார். இவரின் தமிழாசிரியர் திருவேங்கடாச்சாரியார் மிகச்சிறப்பாகத் தமிழ்ப்பாடம் நடத்துபவர். புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கரும்பலகையில் எழுதிப், பாடம் நடத்திய பிறகு அழித்துவிட்டு அப்பாடலைக் கேட்டாராம். நம் பி.எல்.சாமியும் இன்னொரு லூர்துசாமியும் மனப்பாடமாக உடன் ஒப்புவித்தனராம். அப்பொழுதே தமிழில் நல்ல ஈடுபாட்டுன் பி.எல்.சாமி படித்துள்ளார். 
 
 திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் தாவரவியல் படித்த பி.எல்.சாமி பேராசிரியர் இரம்போலா மாசுகரனேசு அவர்கள் வழியாகத் தமிழுணர்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சுகளிலும் திராவிட இயக்க உணர்விலும் முன்னின்றார். குடியரசு உள்ளிட்ட ஏடுகளைப் படித்தமைக்காகக் கல்லூரி நிருவாகம் இவருக்குத் தண்டம் விதித்ததும் உண்டு. 
 
பி.எல்.சாமி அவர்கள் தொடக்கத்தில் காதல் கவிதைகள் எழுதும் இயல்புடையவர். கவிதை எழுதி அதனைப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களிடம் காட்டித் திருத்த நினைத்தார்." நீர் ஓர் அறிவியல் பட்டதாரி. அறிவியல் பற்றி நல்ல கட்டுரை எழுதும். காதல் கவிதை எழுதத் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்" என்று சொன்னதும் மடைமாற்றம் நடந்தது. பி.எல்.சாமி அவர்கள் தொடர்ந்து தமிழுக்கு உழைக்க ஆயத்தமானார். 1945-46 இல் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இளம் அறிவியல் பட்டம் பெற்றதும் சில ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார். பின்னர் அஞ்சல் துறையில் சில காலம் பணிபுரிந்தார். 
 
 புதுவை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக நெட்டப்பாக்கத்தில் சுதந்திரப் புதுவை அரசு நடந்தது. திரு.பால் அவர்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்னர்ச் சுதந்திரப் புதுவை அரசில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணிபுரிந்தார். அவ்வாறு பணிபுரியும்பொழுது அலுவலகத்தில் சங்க இலக்கியங்களை வாங்கி அனைவருக்கும் பார்வைக்கு உட்படும்படி செய்துள்ளார். பி.எல்.சாமி அவர்கள் 1978 இல் இ.ஆ.ப அதிகாரியாகப் பதவி பெற்றார். புதுவை ஆளுநரின் செயலாளராகவும், மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணிபுரிந்தவர். உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். 
 
செந்தமிழ்ச் செல்வி, தினமணி, தினமலர், ஆராய்ச்சி, அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் எழுதியவர். பி.எல்.சாமி அவர்களின் மனைவி பெயர் மங்களவதி. இவருக்கு நான்கு மக்கள் செல்வங்கள். மேரி மனோன்மணி, அருள்செல்வம், இளங்கோ பெரியநாயகம், சோசப் முத்தையா என்பது அவர்களின் பெயர்கள். 11.05.1981 இல் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் கிளையின் சார்பில் பி.எல்.சாமி அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிச் "சங்க நூல் பேரறிஞர்" என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தலைமையிலும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையிலும் இப் பாராட்டு விழா நடந்துள்ளது. 
 
 பி.எல்.சாமி அவர்களின் ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் ஆழமாக இருந்தன. சங்க இலக்கியங்களில் முயிறு, கடுந்தேறு என்னும் குளவி, சைவ சித்தாந்த இலக்கியத்தில் வேட்டுவன் என்னும் குளவி, கருங்குருவியும் திருவிளையாடலும், யானை உண்ட அதிரல் போன்ற அரிய கட்டுரைகளை வரைந்து அனைவராலும் பாராட்டப் பெற்றார். சங்க நூல்களில் 35 விலங்குகள்; 58 பறவைகள்; அதில் 22 நீர்ப்பறவைகள்; புறாவில் 5 வகை; வல்லூறுகளில் 3 வகை; காக்கையில் 2 வகை; ஆந்தையில் 6 வகை; கழுகினத்தில் 3 வகை எனப் பட்டியலிட்டுக் காட்டிய பெருந்தகை என வில்லியனூர் வேங்கடேசன் இவரைப் போற்றுவார். 
 
 பி.எல்.சாமி அவர்களின் அறிவியல் அறிவு, தமிழ் இலக்கியப் பயிற்சி கண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவான அறிவியல் களஞ்சியம் தொகுப்புப் பணியில் பணியமர்த்தினார். தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். உடல் நலம் குன்றியதால் அப்பணியிலிருந்து வெளிவந்தார். 
 
சிந்து சமவெளி எழுத்துகள் போல் உள்ள கீழ்வாலை பாறை ஓவியம் கண்டு வெளியுலகிற்கு வழங்க அனந்தபுரம் கிருட்டினமூர்த்தியுடன் பணிபுரிந்துள்ளமையும், மாகேயில் பணிபுரிந்த பொழுது நன்னன் பற்றியும் முருகன் பற்றியும் வெளியுலகிற்குத் தந்த தகவல்கள் என்றும் போற்றும் தரத்தன. ஓய்வின்றி உழைத்த இப்பெருமகனார் ஒருநாள் இரத்த வாந்தி எடுத்தார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். பின்பு அவரின் ஒருகால் ஒருகை செயல்படாமல் போனது. குழந்தையைப் பாதுகாப்பதுபோல் அவர் குடும்பத்தார் பாதுகாத்தனர். எனினும் தம் 73 ஆம் அகவையில் 03.06.1999 இல் இயற்கை எய்தினார். 
 
 புதுவையில் வரலாற்றுச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். இ.ஆ.ப. அதிகாரிகளுள் தமிழுக்குத் தொண்டாற்றி அனைவராலும் பாராட்டடப் பெற்றவராக பி.எல்.சாமி அவர்கள் விளங்கியுள்ளார். அவரின் நூல்கள் என்றும் அவர் பெருமையை நின்று பேசும். 
 
 
 


 


 
 
 அறிஞர் பி.எல்.சாமி இ.ஆ.ப.அவர்கள் 
 
 
 (இக்கட்டுரையை, படத்தை எடுத்தாள்வோர் இசைவு பெற்று உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். தழுவியோ, பெயர் மாற்றியோ வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்). 
 
 நன்றி: 
முனைவர் நா.கணேசன், அமெரிக்கா 
வில்லியனூர் சு. வேங்கடேசன் 
அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி,
 வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
 பிரஞ்சு நிறுவன நூலகம்(புதுச்சேரி)

வியாழன், 26 பிப்ரவரி, 2009

மயிலாடுதுறையில் கோபாலகிருட்டின பாரதியாருக்குப் படத்திறப்பு (27.02.2009 )

தமிழிசைக்குத் தொண்டு செய்தவர்களுள் கோபாலகிருட்டினபாரதியார் குறிப்பிடத்தக்கவர். நந்தனார் சரித்திரக்கீர்த்தனைகள் பாடியதன் வழியாக அனைவரலும் அறியப்பட்டவர். உ.வே.சாமிநாத ஐயர் இவர் பற்றி தம் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.இவர் பாடல்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.இவர்தம் வாழ்க்கை முழுமையாகப் பதிவாகாமலும்,இவர் படம் கிடைக்காமலும் உள்ளன.இவரின் படத்தை உ.வே.சாவின் குறிப்புகளைக்கொண்டு புதுச்சேரி ஓவியர் இராசராசன் அவர்கள் வரைந்துள்ளார்.அப்படத்திறப்பு நிகழ்ச்சி இன்று(27.02.2009)மயிலாடுதுறையில் நடக்கிறது.ஓவியரையும் பாராட்ட உள்ளனர்.

புதுச்சேரிக் கடைத்தெருவில் நான் வந்துகொண்டிருந்தபொழுது ஓவியர் இராசராசன் அவர்களைக் கண்டேன்.இந்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.கோபாலகிருட்டின பாரதியார் படத்தை மிகச்சிறப்பாக கற்பனையில் வரைந்துள்ளார்.உண்மைப்படம் எங்கேனும் கிடைத்தால் மேலும் சிறப்பாக வரையமுடியும்.பிரஞ்சுக்காரர் ஒருவர் காரைக்காலில் கோபாலகிருட்டின பாரதியாரைக் கண்டு அவர் பாடல்களை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கேட்டுச் சுவைத்ததாக ஒரு செய்தி கிடைத்தது.அவர் முயன்று படம் எடுத்திருந்தால் அல்லது வரையச் செய்திருந்தால் உண்மைமுகம் தெரிய வாய்ப்பு உண்டு.இல்லையேல் நம் ஓவியர் அவர்கள் வரைந்த முகத்தைதான் நாம் அவர் உருவமாகக் கருதவேண்டும்.

நடராசப் பெருமான் நாட்டியம் ஆடும் பின்புலத்தில் நீர் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இந்தப் படத்தைக் கண்ணாடியிடும் கடையில் கண்டேன்.ஓரிரு நாளில் அந்தப்படமும், கோபால கிருட்டின பாரதியார் வாழ்க்கைக்குறிப்பும்,ஓவியர் இராசராசன் அவர்களைப் பற்றியும் எழுதுவேன்.

வரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞரை ஓவியத்தில் நிலை நிறுத்திய ஓவியர் இராசராசன் அவர்களுக்கு நம் பாராட்டுகள்.மயிலாடுதுறையில் விழா எடுக்கும் ஆர்வலர்களுக்கு நம் வாழ்த்துகள்.

கோபாலகிருட்டின பாரதியார் பாடல்கள் பற்றி அறிய கீழுள்ள முகவரிக்குச் செல்க
http://www.shaivam.org/siddhanta/sta.htm

புதன், 25 பிப்ரவரி, 2009

பேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்கு

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும்,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவனமும்(நியு செஞ்சுரி)2009,பிப்ரவரி 24,25 நாள்களில் தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் எழுத்துரைகள் குறித்த இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.

தொடக்க விழாவில் தமிழியற்புல முதன்மையர் பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

முனைவர் மே.து.இராசுகுமார் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். இவர் தொடக்கவுரையில் நா.வானமாமலை மரபுவழி ஆய்வாளர் இல்லை எனவும், மார்க்சியத்தைத் தமிழ்த்துறையில் எந்த வழியில் பார்க்கவேண்டும் எனவும் உணர்ந்தவர் என்றார்.பலதுறைகளில் இயங்கியுள்ளதுடன் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அறிஞரை உருவாக்கித் தமிழாய்வுகளை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துள்ளார் என்றார்.மார்க்சியம் என்பது மார்க்சுக்குப் பிறகும் வளர்ந்துகொண்டுள்ளது.அதுபோல் நா.வா.ஆய்வுகள் என்றால் அவர் எழுத்துகளுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது.அவர் வழிப்படுத்தியவர்களின் ஆய்வுகளையும் மதிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நா.வா.அரசியல் சார்புடையவர்.எந்த ஆய்விலும் அவரிடம் மார்க்சியப் பார்வை வெளிப்படும் என்றார்.


மே.து.இராசுகுமார்


பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு நா.வானமாமலையின் பல்துறை சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.தம் உரையை எழுத்துரையாக அனைவருக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்இவர் உரையில் நா.வா.வின் ஆய்வுகள் பற்றி விளக்கினார்.அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளைப்போல் நா.வா.வின் எழுத்துகள் அந்நாளில் தரமுடன்,சிறப்புடன் விளங்கின.அவர் பதிப்பித்த பல்வேறு கதைப்பாடல்கள் நெல்லைப்பகுதியில் வில்லிசையில் பாடப்பட்டன.முத்துப்பட்டன் கதை 24 மணிநேரமும் பாடும் கலைவடிவமாக நெல்லைப் பகுதியில் பாடப்பட்டன என்று கூறி நா.வா.வின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், அவர்கள் மையவுரை யாற்றினார். நா.வா.இலக்கியம்(பண்டைய இலக்கியம்,இடைக்கால இலக்கியம், புதிய இலக்கியம்),அறிவியல்தமிழ்,வரலாற்றுத்துறை,சமூக மானுடவியல் துறை,நாட்டார் வழக்காற்றியல்துறை,தத்துவத்துறை(இந்தியத் தத்துவம்,மார்க்சியம்),அரசியல் ஈடுபாடு
கொண்டு விளங்கியவர் எனவும் மிகப்பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும் அவர் காலத்தில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வந்த வருவாய் கொண்டுதான் வாழவேண்டியிருந்தது என்றார்.


பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

நா.வா அவர்களுக்கு அ.சீனிவாசராகவன்,கு.அருணாசலக் கவுண்டர்,கார்மேகக்கோனார் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிப்படுத்தியவர்கள் என்று நா.வா.வின் இளமைக்கால வாழ்க்கை முதல் அவரின் ஆய்வுப் பின்புலங்கள் வரை எடுத்துரைத்தார்.தனியாக முதுகலை படித்தவர் எனவும் சைதாப்பேட்டையில் எல்.டி.என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றவர் எனவும் குறிப்பிட்டார்.

நெல்லை ஆய்வுக்குழு உருவாக்கியும் ஆராய்ச்சி இதழ் தொடங்கியும் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.இவர் வழியில் ஆய்வு செய்ய பலர் இன்று உள்ளனர் என்று மாணவர்கள், ஆய்வாளர்களுக்குப் பயனுடைய பல தகவல்களை வழங்கினார்.

தேவபேரின்பன்,பிலவேந்திரன்,கட்டளைக்கைலாசம்,விவேகானந்தகோபால்,பக்தவச்சலபாரதி,செல்லப்பெருமாள் ஆகியோர் கட்டுரை படித்தனர்.நிறைவு விழாவில் பொன்னீலன் உரையாற்ற உள்ளார்.

திங்கள், 23 பிப்ரவரி, 2009

நெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா.கண்ணையனார்


புலவர் கண்ணையன் அவர்கள்(படம்:மு.இ)

 பத்தாண்டுகளுக்கு முன்னர்(1997- 98) யான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்த பொழுது தினமணி அலுவலகம் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி அமையும் திரு.சுகதேவ் அவர்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்து எம்போலும் இளைஞர்களுக்கு அப்பொழுது எழுதுவதற்கு நல்ல வாய்ப்பு வழங்கி வந்தார்கள். ஆசிரியர் பொறுப்பில் இராம.திரு.சம்பந்தம் ஐயா அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது புலவர் கண்ணையன் என்ற பெயரில் வெளிவந்த படைப்புகளைக் கண்டு யான் மகிழ்ச்சியுற்று கண்ணையன் யார் எனச் சுகதேவ் அவர்களை வினவினேன்.

 மயிலம் பகுதி சார்ந்தவர் எனவும் ஓலைச்சுவடிகள் எழுதுவதில், படிப்பதில் வல்லவர் எனவும் நல்ல புலமையாளர் எனவும் எனக்குக் கண்ணையன் ஐயாவைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகும் புலவர் கண்ணையன் அவர்களின் ஆக்கங்கள் வெளிவரும் பொழுது ஆர்வமுடன் கற்பேன். அரிய செய்திகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுப் படிப்பவரை ஈர்ப்புறச் செய்யும். பழங்கால மரபுகள் அறிவதற்கு அவர் கட்டுரை எனக்கு உதவும். பழந்தமிழ்க் கணக்கறிவு,நில அளவை, கல்வெட்டறிவு, தமிழ் இலக்கண இலக்கியப் பேரறிவு புதியன கண்டுபிடிக்கும் ஆற்றல், ஓலைச்சுவடி எழுதுதல்,படித்தல் துறைகளில் வல்லவர். மாயக் கலைகளில் ஆற்றல் பெற்றவர்.

காலங்கள் உருண்டோடின.

 மூன்றாண்டுகளுக்கு முன்னர்ப் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் (வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில்) கீழ்த்தளத்தில் இருந்த அரங்கில் ஒரு புத்தகக் கண்காட்சியில் மாறுபட்ட சில பட விளக்கங்கள் இருந்தன. வியப்புடன் உற்று நோக்கினேன். இப்படக் காட்சிகளுக்கு விளக்கம் வினவினேன். அருகில் இருந்த முதியவர் என் ஐயங்களுக்கு விடை தந்தார். மயிலம் திருமடம் சார்ந்த சில இலக்கிய நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அவற்றை மக்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்தவில்லை. மாறாக மனை நெறிநூல், சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்களை அள்ளிச்சென்றனர்.

 என் வினாக்களுக்கு விடைதந்த முதியவர்தான் புலவர் கண்ணையன் ஐயா அவர்கள். அவர்களிடம் முகவரி அட்டை இருந்தது. பனை மடலில் எழுத்தாணி கொண்டு எழுதியிருந்தார்.எழுத்தாணி கையில் வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு எனக்கு எழுதப் பயிற்சியளிக்க வேண்டினேன். பின்பொருநாள் தருவதாகச் சொன்னார்கள். அத்துடன் தம் ஆய்வுப்பணிகள் பற்றிய பல தகவல்களைச் சொன்னார். மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். மறுநாள் முதல் தொடர்ந்து கண்காட்சிக்குச் சென்று கண்ணையன் ஐயாவைக் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.

 சில கிழமைகள் கழித்து அவரின் மயிலம் ஊரில் உள்ள பூந்தோட்டம் இல்லத்திற்குச் சென்றேன். திருமடத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கட்டடத்தில் புதர்மண்டிய காட்டுப் பகுதியில் ஓர் அறைகொண்ட வீடு(?) இலவசமாக இவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இருந்த சில பழயை படங்கள், உள்ளிட்டவற்றை எனக்கு எடுத்துக்காட்டினார். பலமணி நேரம் உரையாடிப் புதுவை திரும்பினேன்.எங்கள் இல்லத்திற்கும் சில முறை வந்துள்ளார்.

 இருவரும் இணைந்து ஒருநாள் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள பெருமுக்கல் மலைக்குச் சென்றோம். சிந்துச்சமவெளி காலத்திற்கு முற்பட்ட அரிய குறியீடுகள் கொண்ட மலைப்பகுதி அது.அழகிய சிவன்கோயில் பெருமாள்கோயில்கள் உள்ளன. பண்டைய படையெடுப்புகளால் அக்கோயில் சிந்தைந்து கிடக்கின்றன. மலைப்பகுதிகளை உடைத்துச் சாலை அமைக்க மலையைச் சிதைத்துவிட்டார்கள் (இது பற்றி தினமணி-கொண்டாட்டம் பகுதியில் முன்பு எழுதியுள்ளேன்). அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கற்கோயிலைக் காண விரும்புபவர்கள் பெருமுக்கல் மலைக்குச் செல்லலாம்.

 பல கல்வெட்டுகளைக் காட்டியும்,அந்த மலைப்பகுதியை வெளியுலகிற்குக் கொண்டு வந்த முறையையும் எனக்கு ஐயா எடுத்துரைத்தார்கள். அகவை முதிர்ந்த நிலையிலும் கடும்வெயிலைப் பொருட்படுத்தாமல் என்னுடன் வந்தார்கள். இருவரும் மலைமீது ஏறி ஒருநாள் தங்கியிருந்தோம். அந்த மலையின் ஒவ்வொரு கல் பற்றியும் கதை சொன்னார்கள். அரிய பயணப்பட்டறிவு எனக்குக் கிடைத்தது. இவர்தான் இம்மலை பற்றிய ஆய்வை வெளியுலகிற்கு ஆசியவியல் நிறுவனம் வழியாகக் கொண்டுவந்தவர். கீழ்வாளை உள்ளிட்ட வேறு சில ஊர்களின் அருமை பெருமைகளையும் ஐயாதான் எனக்கு எடுத்துரைத்தார்.

 அத்தகு பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய புலவர் கண்ணையனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிகிறேன். (கற்பவர்கள் உரியவகையில் இக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். களவாடித் தங்கள் பெயரில் வெளியிடவேண்டாம் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு என் படைப்புகளைத் தழுவியும் வஞ்சித்தும் பிறர் இதற்கு முன் தங்கள் பெயரில் வெளியிட்டு வரும் படைப்புகளையும் அவை தாங்கிய இலக்கிய ஏடுகளையும் தொகுத்து வைத்துள்ளேன். விரைவில் வெளியிட இருக்கும் என் புத்தகவெளியீட்டு விழாவில் இவை காட்சியாக வைக்கப்பட உள்ளது).

 புலவர் பா.கண்ணையன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலம் அருகில் உள்ள கொல்லியங்குணம் என்ற சிற்றூரில் 17.03.1932 இல் பிறந்தவர். பெற்றோர் ஆ. பாலசுப்பிரமணியப் பிள்ளை - அலமேலம்மாள். தற்பொழுது மயிலத்தில் உள்ள பூந்தோட்டத்தில் வாழ்ந்துவருகிறார். கொல்லியங்குணம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கிய கண்ணையன் அவர்கள் மயிலம் மாவட்டக்கழகத் தொடக்கப்பள்ளியிலும், திண்டிவனம் குசால்சந்து உயர் தொடக்கப்பள்ளியிலும் இளமைக்கல்வியை முடித்து, மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகம் வழியாக வித்துவான் பட்டம் பெற்றார்.

 ஓலைச்சுவடிகளைப் படித்தல், எழுதுதலில் வல்லவர். முகவரி அட்டையை ஓலையில் எழுதிவைத்திருப்பவர். கல்வெட்டுப் படிப்பதில் வல்லவர். கிராம கர்ணமாகப் பணியாற்றியவர். இவர் பணியாற்றிய 29 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் நற்சான்று பெற்றவர். தமிழ்நாடு அரசு 1980ஆம் ஆண்டு கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்புச்சட்டம் இயற்றியபொழுது பணியிழந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் 1988-1992 வரை திட்ட ஆய்வாளராகப் பணிபுரிந்தவர்.

 வழக்கொழிந்த தமிழ்க்கணிதத்தை நிலைநாட்ட "தமிழ்ச்சுவடிகளில் எண்கணிதம்" என்ற தலைப்பில் ஒரு கணக்கு நூலை வெளியிட்டுள்ளார். இப்பொழுது செம்மொழி நடுவண் நிறுவனம் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு தமிழ்க் கணக்குகளைப் பாடமாகப் பயிற்றுவித்து வருகின்றார். தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணியாற்ற ஊர் ஊராகச் சென்று பணிபுரிகின்றார்.

 இவருடன் பிறந்த தம்பி ஒருவர் உள்ளார்.இவருக்கு மூன்று ஆண்மக்கள் உள்ளனர்.

 தினமணி கதிரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் ஊரில் இன்றும் நடைபெறும் இந்திரவிழா பற்றி எழுதியுள்ளார். எழுதுகோல்கள், கல்வெட்டுக்கதைகள் முதலியவை முதன்மையானவை. தமிழ் ஓசை நாளிதழிலும் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதியவர்.

 திருவாலங்காட்டுச் செப்பேடு, விழுப்புரம் மாவட்டம் எசலம் செப்பேடு ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஊரெல்லையைக் கொண்டு அக்காலத்திய வரைபடம் தயாரித்துள்ளார்.

 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நில எல்லைகொண்டும் அப்போதைய ஆவணங்களைக் கொண்டும் ஆவணக் காப்பகத்திலுள்ள ஆவணங்களைக் கொண்டும் தற்பொழுதைய ஊர்க்கணக்குகளைக் கொண்டும் அந்த நிலத்தை அடையாளம் காட்டும் திறன்பெற்றவர்.

 சான்றாகக் கி.பி.1053 ஆம் ஆண்டு இராசாதி ராச சோழனால் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை இறைவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு 1948 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி 1951 ஆம் ஆண்டில் இரத்து செய்தது. அவ்வாறு செய்யப்பட்ட விவரத்தைக் கண்டுபிடித்து வெளியுலகிற்கு உணர்த்தி அந்த நிலம் இறைவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளது.

 செஞ்சி வட்டத்தில் உள்ள அண்ணமங்கலம் மலைக்குகையில் சிங்கச் சிற்பத்தின் கண்புருவம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டாக அமைந்திருப்பதையும் வடவெட்டி ஊரில் தேவனூர் கோயிலில் நாட்டியமாடிய மாணிக்கத்தாளுக்குத் தேவராயரால் வழங்கப்பட்ட நிலமானியக் கல்வெட்டில் அந்தப் பெண் நாட்டியமாடுவதை வரைகோட்டுச் சிற்பமாக அமைத்திருப்பதையும் இதுபோன்ற பல வியப்புக்குரிய கல்வெட்டுகளையும் கண்டுபிடித்திருப்பதை இவரின் தமிழ்ப்பணியாகக் குறிப்பிடலாம். இவரின் ஆய்வுகள் நீதி மன்றப் படிக்கட்டுகளுக்குப் பலரை அழைத்தது. பலர் வேலையிழந்தனர். சிலர் பணி மாறுதல் பெற்றனர்.

 77 அகவையிலும் இந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஓய்வின்றி உழைப்பதை உரியவர்கள் உணர்ந்து தமிழ்ப்பணிக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்வார்களாக!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்


பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

 தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை,கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

 நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள். இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985 இல் முனைவர் (Ph. D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.

 பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970-72-75)காலங்களில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975 ஆகத்து மாதம் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978 சனவரியில் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார். தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற இவர் படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத் துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயற்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டவர். இவர் தமிழ் - இந்து நாகரிகம் மற்றும் நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியவர். மேலும் முதுகலை முது தத்துவமாணி (M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர். இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் புலமையுடையதுடன் சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப் பணியிலும் வல்லவர்.

 நா.சுப்பிரமணியன் அவர்களின் குடும்பம் இயல்பிலேயே சமய ஈடுபாடுடைய குடும்பம். தந்தையார் வழியாக அமையப்பெற்ற சமயநூல் பயிற்சி இவருக்கு இயல்பாகக் கிடைத்தது. கந்தபுராணத்தை ஆழமாகப் பயின்ற இவர் இளம் அகவையிலேயே அதனைப் பொருள் உணர்ந்து மற்றவருக்கு விரித்துரைக்கும் திறன் பெற்றிருந்தார். சென்னையில் தங்கிக் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தியதும் அதனை மிகச்சிறந்த நூலாக வெளியிட்டுத் தமிழுலகிற்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க பணிகளாகும். சற்றொப்ப அறுபதாண்டுகள் கந்தபுராண ஈடுபாட்டால் விளைந்த நூல் "கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்" என்பதாகும்.இந்த நூலின் நடைநலம் தெளிந்த நீரோடைபோல் அமைந்து இவரின் புலமை காட்டி நிற்கிறது.

 இந்தியச் சிந்தனைமரபு என்னும் தலைப்பில் அமைந்த இவரின் புத்தகம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம் - ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியத் தத்துவங்களை நமக்கு ஒருசேரத் தொகுத்துத் தருகின்றது.

 வேதங்கள் சங்கிதைகள் உபநிடதங்கள் இவற்றின் துணைகொண்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார். மிகச்சிறந்த வரலாற்று உணர்வும் இலக்கியப்புலமையும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்களால்தான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்தமுடியும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம். பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் அவர்கள் முன்வைத்துள்ளது அவர்தம் சமகாலப் பார்வையைக் காட்டுகிறது.

 நால்வர் வாழ்வும் வாக்கும் என்ற இவரின் அரியநூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றை அழகுற எடுத்துரைத்துப் பகுத்தறிவுக்கண்கொண்டு பார்த்துள்ள பாங்கு போற்றத்தக்கது. மிகைச் செய்திகள் என சிலவற்றையும் சமயப்பூசலில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனச் சிலவற்றையும் சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளது அவரின் ஆய்வுத்திறம் சமயம் கடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.


பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் தரமான திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து 2002 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார். சிலகாலம் தங்கியிருந்துவிட்டுக் கனடாவில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார். கனடாவிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்து வருகின்றார்.

 ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் என்றும் சுப்பிரமணியனாரின் பெயரைச் சொல்லும்வண்ணம் அரிய நூல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், இந்தியச் சிந்தனைமரபு, தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி, நால்வர் வாழ்வும் - வாக்கும் கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதிகள் :1 மற்றும் 2), காலத்தின் குரல், திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள் ஆகிய நூல்கள் பேராசிரியரின் தமிழ்பணிக்குச் சான்றாகும்.

 பேராசிரியரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி ஈழத்திலும் தமிழகத்திலும் கனடாவிலும் பல்வேறு அமைப்புகள் பாராட்டு பரிசுகள் நல்கி மதித்துள்ளன. அவற்றுள் தமிழக அரசு சிறந்த நூலுக்காக இந்தியச்சிந்தனை மரபு என்ற நூலைத் தேர்தெடுத்துப் பரிசில் வழங்கியது. பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை என்ற நூல் இயற்றியமைக்கு இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது. முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது. கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

 கந்தபுராணத்தில் பேரறிவு பெற்றமைக்குத் தந்தையாரே காரணம் எனக் குறிப்பிடும் சுப்பிரமணியனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் வழிகாட்டல் பேருதவியாக அமைந்ததை நன்றியுடன் குறிப்பிடுவார். பேராசிரியரின் துணைவியார் கௌசல்யா அவர்கள் இவர்தம் ஆய்வுத்துறைக்குப் பேருதவியாக இருந்து உதவியவர். இருவரும் இணைந்தும் இலக்கியப் படைப்புகளை வழங்கியவர்கள்.

 இசையில் நல்ல புலமைபெற்ற அம்மையார் அவர்கள் தமிழிலக்கியத்திலும் நல்ல பயிற்சி பெற்றவர்கள். மேலும் இதழியில், நாடகவியல் துறைகளில் நல்ல அறிவு பெற்றவர். அறிவுடைய மனைவியாரைப் போலவே மக்கட் செல்வங்களும் பேராசிரியரின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது போற்றுதலுக்கு உரியது. 67 அகவையிலும் இந்தத் தமிழறிஞர் தமிழ்ப் பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார்.


நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், தொடர் 22, நாள்: 22.02.2009
திருவாட்டி கௌசல்யா சுப்பிரமணியன், முனைவர் பொற்கோ, பேராசிரியர் பசுபதி(கனடா), பிரஞ்சு நிறுவன நூலகம், புதுச்சேரி

சனி, 21 பிப்ரவரி, 2009

மக்கள் தொலைக்காட்சியில் மானம்பாடிகள் நிகழ்ச்சியில் வை.கோ.பேச்சு

மக்கள் தொலைக்காட்சியில் இன்று 21.02.2009காரி(சனிக்)கிழமை இரவு ஒன்பதுமணி முதல் பத்துமணி வரை "மானம்பாடிகள்" என்ற தலைப்பில் திரு.வை.கோ.அவர்கள் அரியதொரு சொற்போர் நிகழ்த்தினார்.

காலம்,இடம்,நேரம் உணர்ந்து பேசப்பட்ட அரிய பேச்சு.திரு.வை.கோ.அவர்கள் தமிழ் இலக்கியங்களில் நல்ல பயற்சியுடையவர் என்பதை அவரின் அரசியல் எதிரிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.அதுபோல் உலக அரசியல்,இலக்கியங்களில் தோய்ந்த அறிவுடையவர் என்பதும் அவரின் அறிவாற்றல் உணர்ந்தவர்களுக்கு விளங்கும்.

இன்றைய பேச்சில் மான உணர்வுக்கு முதன்மையளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க இலக்கியத்தின் புறநானூறு(சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல்), சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,திருக்குறள், இவற்றை மேற்கோள் காட்டிப் பேசியது எம்மை வியப்பில் ஆழ்த்தியது.தமிழ்ப்பேராசிரியர்கள் செய்யவேண்டிய வேலையை வை.கோ அவர்கள் செய்தமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.தமிழர்களின் மான உணர்வை நினைவூட்டி,தமிழர்கள் மான உணர்வுக்கு முதன்மையளிப்பவர்கள் என்றும் பழிச்சொல்லுக்கு இடம்தராதவர்கள் என்றும் அரிய மேற்கோள்களைக் காட்டிப் பேசினார்.

இந்திய விடுதலைக்கு உழைத்த சந்திரசேகர ஆசாத்,பகத்சிங்,சுகதேவ்,இராசகுரு, நேதாசி, வீரபாண்டிய கட்டப்பொம்மன்,பூலித்தேவன்,மருதுசகோதரர்கள் செய்த ஈகங்களை நினைவூட்டிப் பேசியமை மகிழ்ச்சி தந்தது.

இலியட் முதலான மேனாட்டுக் காப்பியங்கையும் பொருத்தமுற மேற்கோள் காட்டினார்.

கியூபா விடுதலைக்கு உழைத்த மாவீரன் சேகுவேரா பற்றியும் அரிய தகவல்கள் தந்தார். நிறைவாகக் கம்பராமாயணத்தை எடுத்து அதில் இடம்பெறும் இராமன் இராவணப் போர்க்காட்சிகளை விளக்கும்பொழுது அவரின் கம்பராமாயண அறிவு புலப்பட்டது.

இன்றைய நாட்டு நடப்புகளை நயம்படக்காட்ட வீடணன்,கும்பகர்ணன்,இராவணன் பாத்திரங்களை மிகச்சரியாக எடுத்துரைத்துப் பேசினார்.அரிய இலக்கியப் பாடம் படித்த பட்டறிவு எனக்கு உண்டானது.இப்பேச்சைப் படியெடுத்து மக்களுக்கு வழங்கினால் நல்ல இலக்கிய உணர்வுபெறுவர்.

நேரத்தைக் கொல்லும் பட்டிமன்ற அரட்டைகளிலும்,மாமியார் மருமகள் அழுகைகளிலும் மானாக மயிலாக ஆடும் வாலைக்குமரிகளின் பாலியல் குத்தாட்டங்களிலும் சிக்கிச் சிதறும் தமிழினத்திற்கு இந்த உரை ஓர் அருமருந்து.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

குடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...


கல்லூரி முகப்பு

குடந்தை (கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில் (பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும். பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார். ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி, இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார். பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர். பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர். அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு?. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம். கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர். நானும் துரை. மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி, இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி, ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.

நான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச் செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு, அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு தமிழில் தட்டச்சுச் செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.

மாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன் (கொரியா), யுவராசு (சென்னை), குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன் (சென்னை) முகுந்து (பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர். அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர். மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர். இப்பொழுது தமிழ் 99 விசைப்பலகை அறிமுகம் ஆனது. 99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செய்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன். அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன். முகுந்து அவர்களின் பங்களிப்பு, கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.

அடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.

தமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு, செப்பேடு, பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினேன்.

திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம். அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன், சுபா முயற்சி பற்றி விளக்கினேன். அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன். அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது. இணையப் பல்கலைக்கழகத்தின் தளம், காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.

புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன். மின் இதழ்கள், பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.

விக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன். என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.

வலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார், சௌந்தர், தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன். சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிசப் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, குடந்தை மகளிர் கல்லூரி, ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர்கள் சி.மனோகரன், முனைவர் சிற்றரசு, முனைவர் குணசேகரன், முனைவர் துரையரசன், முனைவர் சிவநேசன், முனைவர் காளிமுத்து முனைவர் துரை. மணிகண்டன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன். என் மாணவர் (கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார். அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


காட்சி விளக்கம் மு.இ


தமிழ்மணம் பற்றி விளக்குதல்


தமிழ்மணம் பற்றி விளக்குதல்

மீண்டும் அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று கண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன். இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் மின்மூலங்கள் குறித்த ஆய்வு மாநாடு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில்(ஆடவர்) அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் மாநில உயர்கல்வி மன்ற நிதியுதவியுடன் "மின்கற்றல் மூலங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி,இலக்கியங்களைத் திறம்படக் கற்பித்தல்" என்னும் பொருளில் ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது.

இடம் : அண்ணா கலையரங்கம், அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணம்
நாள் : 19,20-02-2009(வியாழன், வெள்ளி)

தொடக்கவிழா-19-02-2009 காலை 10 மணி

முனைவர் தி.அரங்கநாதன், முனைவர் க.துரையரசன், முனைவர் பழ.இராசமாணிக்கம், முனைவர் இராம.சந்திரசேகரன், பொறிஞர் சோ.அசோகன்,முனைவர் சா.சிற்றரசு உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டுக் கருத்துரையாளர்களாக முனைவர் ச.பாசுகரன் (இணையப் பயன்பாடுகளில் தமிழ்), முனைவர் மு.இளங்கோவன் (மின் நூலகங்கள்), முனைவர் சி.மனோகரன் (கல்விசார் இணையத்தளங்கள்), முனைவர் மு.பழனியப்பன் (இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்), முனைவர் தி.நெடுஞ்செழியன் (தமிழ் இணைய இதழ்கள்) ஆகியோர் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

20.02.09 வெள்ளிக் கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் சொ,இரவி அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற உள்ளார்.

மாநாட்டில் பங்குகொள்ள விரும்புவோர் அமைப்பாளர் முனைவர் க.துரையரசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம் (செல்பேசி எண் : 94424 26552)

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்(இலங்கை)

பேராசிரியர் ம. ஆ. நுஃமான் 

 இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார். இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் 10.08.1944 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் மக்புல் ஆலிம். அவர் ஒரு மௌலவி, அரபு ஆசிரியர்; தாயார் பெயர் சுலைஹா உம்மா ஆகும். 

     நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தவர். பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்றவர்(1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1982). 

     புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் நிகழ்த்தியவர். அதுபொழுது தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய மொழியியல்துறைப் பேராசிரியர்களிடம் நெருங்கிப்பழகியவர். கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் நல்ல உறவினைப் பேணியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியைத்தொடங்கிய (1976-82) நுஃமான் அவர்கள் பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணிபுரியலானார். 1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்து பேராசிரியர் நிலைக்கு உயர்ந்தார்(2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து(1988) இலக்கணநூல் ஒன்றை உருவாக்கி உதவினார். 

    இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(1999-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-08) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறுகல்விக்குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப்பணிபுரிந்தவர். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடுசெய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தவர்.இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்.
பேராசிரியர் ம.ஆ.நுஃமான் 

     இயல்பிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்ட நுஃமான் அவர்கள் பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதுடன் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை நூல்களாக்கி வெளியிட்டுள்ளார். இலங்கைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழகத்திற்குத் திறனாய்வுகளின் வழி அறிமுகப்படுத்தியுள்ளார். மொழியியல், இலக்கணம், திறாய்வு, நாட்டுப்புறவியல், சிறுகதை, திரைப்படம், நாடகம், புதினம், பதிப்புத்துறை எனப் பன்முக வடிவங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திடும் திறமை படைத்தவர் நுஃமான். மார்க்சிய வழியில் திறனாய்வதில் வல்லவர். பாரதியார் படைப்புகளை மொழியியல் கண்கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். இந்த நூல் இவர் நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு(A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ்சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால் குறிப்பிடப்படுகிறது. 

    தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்தகுறுகியகாலத் திட்டப் பணியாய்வில் "மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச்சொற்கள்" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்1984). "மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு" என்னும்தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக விளங்குகிறது. நுஃமான் இளமையில் ஓவியம் வரைவதில் ஈடுபாடு காட்டியவர்.அந்த அறிவு அவரைக் கவிஞராக மாற்றியது. 16 ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கியவர். கவிஞர் நீலவாணன் வழியாக இலக்கிய உலகில் அடி எடுத்துவைத்தவர். நீலவாணன்தான் நுஃமானுக்கு மகாகவி, முருகையன், புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார். 

    'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது. 1963 முதல் மகாகவி பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம் நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967 பிறகு இதிலிருந்து விடுபட்டுத் தனிமனித உணர்வுகள், சமூகப் பிரச்சனைகளை மையமிட்ட படைப்புகளைப் படைத்தார். 1969-70 இல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார். வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களை வெளியிட்டவர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது கவிதா நிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதை பாடியவர். கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்த ஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும். தமிழகத்தில் வெளிவந்த அனைத்துப் படைப்புகளையும் உற்றுநோக்கிப் படித்துள்ளார். திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக் கவிதை இதழ்கள் என்ற தலைப்பில் இவர் வரைந்துள்ள கட்டுரை ஒன்று ஈழத்தில் வெளிவந்த, கவிதைப் பணியாற்றிய பல இதழ்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. 

1955 இல் வெளிவந்த 'தேன்மொழி' என்ற முதல் கவிதை இதழ் பற்றியும், மகாகவியும் வரதர் ஆகிய இருவரும் இதனை நடத்தினர் எனவும் 16 பக்க மாத இதழாக இது வந்தது என்றும் குறிப்பிடும் நுஃமான் சோமசுந்தரப் புலவரின் பெருமை சொல்வதையும் விளக்கியுள்ளார். அதுபோல் சமகாலப் படைப்புகளான புதினங்கள், சிறுகதைகள் பற்றிய திறனாய்வையும் நுஃமான் நிகழ்த்தியுள்ளார். "ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி"என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பாங்கினைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க் காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். அதுபோல் ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ளார். 

     நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்துள்ளார். அவ்வகையில் மகாகவியின் படைப்புகளை உலகத் தமிழர்கள் அறியும் வண்ணம் பதிப்பித்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. மகாகவியின் கவிதைகள் குறித்த மிகச்சிறந்த திறனாய்வுகளை நிகழ்த்தியவர். நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். நுஃமானின் ஆளுமை பன்முகப்பட்டு இருந்தாலும் மொழியியல் துறையிலும் குறிப்பாக இலங்கையில் உள்ள முசுலிம்மகளின் வழக்கில் உள்ள தமிழ்குறித்த நல்ல ஆய்வுகளை நிகழ்த்தியவர் நுஃமான். 

 நுஃமான் பதிப்பித்த "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும்.ஈழத்தின் புதுமைப் படைப்பாளியான மகாகவி தொடங்கி அவர் மகன் சேரன் வரையிலான ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகளைக் காட்டி ஈழத்துக்கவிதை மரபை நாம் புரிந்துகொள்ள உதவியுள்ளார். இந்த நூலில் நுஃமானின் வைகறை நிலவு உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்... புகைவண்டிக்காகக் காத்திருக்கையில் இலைக்கறிக்காரி தாத்தாமாரும் பேரர்களும் என்ற ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் நுஃமானின் மிகச்சிறந்த கவிதையியற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இவரின் யாப்பியல் பயிற்சிகளையும் காட்டுகின்றது. 

    தமிழகத்துப் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மரபு அறிந்து புதுமை செய்ய நினைத்ததுபோல் நுஃமான் செய்துள்ள படைப்புகள் பாராட்டத் தகுந்தன. நுஃமான் சிறந்த கவிதைகளை வழங்கியதுடன் கவிதை குறித்த தெளிவான புரிதல் கொண்டவர். இதனால் கவிதை பற்றிய தம் எண்ணங்களை "அழியா நிழல்கள்" தொகுப்பில் பதிவுசெய்துள்ளார்.அழியா நிழல் தொகுப்பு 1964-79 காலகட்டத்தில் நுஃமான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது. கவிஞர்கள் சமூக உணர்வுடன் எழுதுவதுதான் கவிதை என்பவருக்கு விடைசொல்லும் முகமாகச் சில செய்திகளை முன்வைத்துள்ளார்." கவிஞனும் ஒரு சாதாரண மனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையில் சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதேவேளை அவன் தனியாகவும் இருக்கின்றான்.அவனுக்கென்று தனிப்பட்ட, சொந்த( personal) அனுபவங்களும், பிரச்சனைகளும் உண்டு. அவை கவிதைகளில் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. என்கிறார்(பக்.6). 

 பாலத்தீன நாட்டுக்கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ள பாங்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் நமக்குக் காட்டுகிறது. பாலத்தீன மக்கள் இசுரேல் படையால் பாதிக்கப்படுவதை அந்நாட்டுக் கவிஞர்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர்.நுஃமான் காலத்தேவையுணர்ந்து இந்தப் படைப்பினை வழங்கியுள்ளது பாராட்டிற்கு உரியது.

பேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)
பேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)
பேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)
பேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை) 

     அடிப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நுஃமானின் நூல் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படத் தக்க நல்ல நூல். தமிழ் இலக்கணங்களை மொழியியல் சிந்தனைகளின் துணைகொண்டு எழுதியுள்ளார். எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என்னும் நான்கு தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழுக்குத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் புதிய மரபுகள், மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படவில்லை என்ற நோக்கில் கற்பிக்கத் தகுந்த வகையில் இந்த நூல் உருவாகியுள்ளது. 

    இருபதாம் நூற்றாண்டில் மொழியியல் துறை மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது. பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றை மாணவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்ற நினைவுடன் புதிய இலக்கணநூலை நுஃமான் எழுதியுள்ளார். இலங்கையிலும் தமிழகத்திலும் ஆளப்படும் சொல் வழக்குகளை எடுத்துரைத்து இந்நூலில் விளக்கியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைவழங்கிய, பன்முக ஆளுமைகொண்ட நுஃமான் அவர்கள் தொடர்ந்து மொழியாய்வுகளிலும், தமிழாய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார். 

 பின் குறிப்பு 

 (தமிழ் ஓசையில் வெளிவந்து அதேநாளில் இணையத்தில் வெளியிடப்படும் என் கட்டுரையை சில முத்திரை எழுத்தாளர்கள், மேற்கோள் காட்டாமல் தழுவித், தமிழக இலக்கிய ஏடுகளில் எழுதி வருவதை நணபர்கள் எடுத்துரைக்கின்றனர். நானும் காண்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையத்தில் சான்றுகளுடன் வெளியுலகுக்கு அடையாளப் படுத்தப்படுவார்கள்) 

 நனி நன்றி:
 தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர், தொடர் 21,15.02.2009) 
முனைவர் செ.வை.சண்முகம் 
முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா) 
புதுவை இளவேனில்(நுஃமான் படங்கள்) 
மின்தமிழ்க்குழு 
நூலகம்(இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள தளம்) 
 பிரஞ்சு நிறுவன நூலகம், புதுச்சேரி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

அறிஞர் பி.எல்.சாமி அவர்களின் நூல்கள்

அறிஞர் பி.எல்.சாமி அவர்கள் புதுச்சேரியில் இ.ஆ.ப.அதிகாரியாகப் பணிபுரிந்தவர்கள், புதுவை அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்.சங்கநூல்களில் ஆய்வு நிகழ்த்தி அரிய நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கியவர்கள்.புதுவை அரசின் ஆட்சிக்கு உட்பட்ட மாகே பகுதியில்(மேற்குக் கடற்கரைப்பகுதி) இவர் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பழந்தமிழ் அரசனான நன்னன் பற்றிய செய்திகளைக் களப்பணியாற்றித் தமிழுலகுக்கு வழங்கியவர்.நன்னன் பற்றிய இவர் ஆய்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலாய்வுக்கு வழிவகுக்கும் தரத்தன.

விழுப்புரத்தை அடுத்த கீழ்வாளை ஊரில் உள்ள பழங்காலப் பாறை ஓவியங்களை அனந்தபுரம் கிருட்டிணமூர்த்தியுடன் இணைந்து வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர்.இவர் இயற்றிய நூல்களின் பட்டியலை முதற்கண் வழங்குகிறேன்.அடுத்த பதிவுகளில் இவரின் வாழ்க்கைக் குறிப்பு இணைப்பேன்.இவர் நூல்கள் கழகப் பதிப்பாகவும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் சேகர் பதிப்பகம் வழியாகவும் வெளிவந்துள்ளன.பி.எல்.சாமி அவர்களின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பி.எல்.சாமியின் படைப்புகள்(1967-2002)

01,சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967,மே
02.சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,1970,ஆகத்து
03.தாய்த் தெய்வ வழிபாடு,1975,செப்தம்பர்
04.சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்,1978,மே
05.சங்க நூல்களில் மீன்கள்,1976,மே
06.சங்க நூல்களில் மணிகள்,1990,டிசம்பர்
07.Common Names and Myths of the Flora and Fauna in Dravidian and Indo-Aryan Languages,1980,டிசம்பர்
08.இலக்கியத்தில் அறிவியல்,1981,மே
09.சங்க இலக்கியத்தில் விந்தைப்பூச்சி,1981,டிசம்பர்
10.சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை,1981,டிசம்பர்
11.இலக்கிய ஆய்வு,1982,டிசம்பர்
12.தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு,1983,டிசம்பர்
13.தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்,1984,டிசம்பர்
14.சங்க நூல்களில் முருகன்,1991,ஏப்ரல்
15.சங்க நூல்களில் செடி கொடிகள்,1991,டிசம்பர்
16.சங்க நூல்களில் மரங்கள்,1992,டிசம்பர்
17.சங்க நூல்களில் உயிரினங்கள்,1993,டிசம்பர்
18.அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்,2002,டிசம்பர்

புதன், 11 பிப்ரவரி, 2009

சென்னை வலைப்பதிவு நண்பர்களுக்கு வேண்டுகோள்!

சென்னை இலயோலா கல்லூரியில் பிப்ரவரி 12,13 நாள்களில் கணினி தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறுவதாக நேற்றுதான் அறிந்தேன்.முன்பே தெரிந்திருந்தால் கருத்தரங்கிற்குச் சென்று வந்திருக்கமுடியும்.

சென்னை வலைப்பதிவு நண்பர்கள் அந்தக் கருத்தரங்கிற்குச் செல்ல வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்பவர்கள் அங்குப் பேசப்படும் பொருள் பற்றியும் எந்த நோக்கில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்பது பற்றியும் உடனுக்குடன் பதிவிட வேண்டுகிறேன்.இயன்றால் வழக்கம்போல் படம்,காண்பொளி வசதியும் வழங்கலாம்.

பங்கேற்பு:

முனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் அனந்தகிருட்டினன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி
திரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்
திரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.
முனைவர் கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்
திரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, இலொயோலா கல்லூரி
திரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குநர், தேசியத் தகவல் நடுவம்
முனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி
முனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குநர், நியூ ஆரிசான் மீடியா
திரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்

இடம்:
இலொயோலோ கல்லூரி
இலாரன்சு சுந்தரம் கூடம்,
ஜூபிலி கட்டிடம், கீழ்த்தளம்,
சென்னை - 600 034
நாள்:
பிப் 12,13

திங்கள், 9 பிப்ரவரி, 2009

கலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve


பாலசுப்பிரமணி

 ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள். அல்லது நீங்கள் சொல்லும் தலைப்பில் ஆய்வு செய்கிறோம் என்பார்கள். தலைப்பு கொடுத்த பிறகு பல மாதங்கள் தலைமறைவாகி விடுவார்கள். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முந்திய கிழமை வந்து ஆய்வேடு எழுதுவது எப்படி என்பார்கள்.பழைய ஆய்வேடுகளை மாதிரிக்குப் பார்வையிடுங்கள் என்போம்.ஆய்வு பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுவோம். சிலர் ஆர்வமாகக் கேட்டு ஆய்வேட்டை எழுதுவதும் உண்டு. சிலர் ஆய்வை இடைக்கண் முறித்துத் திரும்புவதும் உண்டு.

 அலுப்பூட்டும் தலைப்புகள், பயனற்ற எளிய தலைப்புகள், சலிப்பூட்டும் பொருண்மைகளில் ஆய்வு செய்வதாகக் கூறிப் பட்டங்களையும் இன்று பெற்றுவிடுகின்றனர். தரமான ஆய்வுகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் இதழாளர் சுகுமாரன் அவர்கள் எனக்கு ஓர் அன்பரை அறிமுகம் செய்துவைத்தார். மின்னஞ்சல், தொலைபேசி என்று இருந்த அந்த அன்பரின் தொடர்பு அண்மையில் புதுச்சேரியில் கண்டு உரையாடும் வாய்ப்பையும் தந்தது.

 புதுவைக் கடற்கரையின் காற்றுவாங்கும் உலாவுக்குப் பிறகு ஓர் உணவு விடுதியில் சந்திக்க அழைத்தார்கள்.முன்பின் பாராத அந்த அன்பரைச் சுகுமாரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

 சற்று பருமனான உடற்கட்டுடன் திருக்குறள் எழுதப்பெற்ற ஓர் ஆடையை அணிந்துகொண்டு என் முன் நின்ற அவர்தான் பாலசுப்பிரமணி அவர்கள். ஒரிசாவில் வாழ்கிறார்.ஒரிசா பாலசுப்பிரமணியாக அவர் இருந்தாலும் அவர் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி-உறையூரில் பிறந்தவர் (07.04.1963). பெற்றோர் திருவாளர்கள் சிவஞானம் - இராசேசுவரி. விழுப்புரம், சென்னை, புதுச்சேரியில் கல்வி கற்றவர். சென்னை தியாகராசர் கல்லூரியில் இளம் அறிவியல் (இயற்பியல்) பயின்றவர். பொறியியல் பட்டம் பயின்றவர். இதில் கணிப்பொறித் தொடர்புடைய பாடங்கள் இருந்தன. இதில் இணைய வரைபடங்கள் குறித்து கற்றார். நூலகத் துறையில் பட்டமும் பெற்றவர்.


பாலசுப்பிரமணி

 கொரிய நிறுவனத்தின் குழுமத்தில் பணி கிடைத்து இந்தியா முழுவதும் சுற்றிப் பணி செய்யும் வாய்ப்பு அமைந்தது.1989 முதல் சுரங்கம் சார்ந்த இயந்திரங்கள் பழுதுபார்ப்புப் பணியில் இருந்தார். பின்னர் நீரியல் சார்ந்த பணியில் ஏழாண்டுகள் இருந்தார். c.r.management என்னும் அரசுக்குச் சார்பான பணிகளைச் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

 கடல்பாதை, மலைப்பாதை, துறைமுகம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு இணைய வரைபடங்கள் உருவாக்கும் பொறுப்பிலிருந்தவருக்குத் தமிழில் ஈடுபாடு ஏற்பட்டது. 1992 இல் ஒரிசா சென்ற இவர் ஒரிசா தமிழ்ச்சங்கப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டவர். இருபதாண்டுகளாக ஒரிசாவில் வாழ்ந்துவருகிறார். ஒரிசா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த சுந்தரராசன் இ.ஆ.ப.அவர்கள் இராமானுசர் ஒரிசா வந்தது குறித்து எழுதினார். தமக்குப் பிறகு இது பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என அடிக்கடி குறிப்பிடுவார். இதன் பிறகு தமிழ், ஒரிசா வரலாறுகளைப் பாலசுப்பிரமணி படிக்கத் தொடங்கினார்.

 இராசேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்த வழி, வரலாறு, பற்றியும் குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்து மேல் படையெடுத்த வரலாறு பற்றியும் விரிவாக ஆராயத் தொடங்கினார். கலிங்கப்போர் இரண்டு முறை நடந்துள்ளது (1096,1112) என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இதுபற்றி விரிவாக தகவல் தொழில்நுட்பம் துணைகொண்டு விரிவாக ஆராய்ந்து வருகிறார். ஒரிசாவில் களப்பணி செய்து கன்னியாகுமரி - ஒரிசா வரையுள்ள பகுதிகளை ஆராய்ந்தார்.இன்று கணிப்பொறி,செல்பேசி துணைகொண்டு இவர் ஆய்வுப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

 தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் உள்ளிட்ட அறிஞர்கள் காலத்தில் மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று ஆராய்ந்ததை யான் அறிந்துள்ளேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வாணதிரையன்குப்பம் என்ற ஊரில் தங்கிப் பண்டாரத்தார் மாட்டுவண்டிப் பயணம் செய்து பல ஊர்களை, கோயில்களைப் பார்வையிட்டதை மூத்தோர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் நம் பாலசுப்பிரமணி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், கல்வெட்டு அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், சொல்லாராய்ச்சி அறிஞர்கள், கணிப்பொறி,  இணையத்துறை அறிஞர்கள், கடலியல் அறிஞர்கள், வரைபடவியில் அறிஞர்கள், பழங்குடிமக்கள், அரச குடும்பத்தினர், கல்வித்துறையினர், கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், மீனவர்கள், ஆட்சித்துறையினர், காப்பகங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரியத் திட்டமிடலுடன் தமிழக வரலாற்றுத் தரவுகள் இந்தியா முழுவதும் உள்ளதை உறுதிப்படுத்திக் கண்டு பிடித்து ஆராய்ந்து வருகின்றார்.

 தம் கண்டு பிடிப்புகள் ஆய்வு முயற்சிகள் இவற்றை நண்பர்களுக்குத் தெரிவிக்க மேலாய்வுகள் நிகழக் கலிங்கத்தமிழ் என்ற இணைய இதழை நடத்துகிறார். இதன்வழி உடனுக்குடன் செய்திகள் உலகிற்குத் தெரிவிக்கப்படுகின்றன. கண்டுபிடிப்புகளை, அரியகுறிப்புகளை வெளியே தெரியாமல் வைத்திருக்கும் நம்மவர்களைப் போல் அல்லாமல் உடனுக்குடன் வெளியுலகிற்குத் தரும் பரந்த மனப்பான்மை கொண்டவராகப் பாலசுப்பிரமணி விளங்குகிறார்.

 ஒரிசாவில் பணிபுரிந்த திரு.பாலகிருட்டினன் இ.ஆ.ப.அவர்களின் ஆய்வுகளும் பாலசுப்பிரமணி அவர்களுக்குத் தூண்டுகோளாக இருந்தது.(திரு.பாலகிருட்டினன் அவர்கள் தமிழில் எழுதி இ.ஆ.ப.தேறியவர். தமிழ்க்குடிமகன் அவர்களின் மாணவர். வடநாட்டில் பல ஊர்ப்பெயர்கள் தமிழில் உள்ளதை வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர்.)

 ஒரிசாவில் உள்ள அரண்மனைகளை இணைத்து அரச குடும்பங்கள் ஆய்வுக்குத் துணை செய்யும்படி மாற்றியவர். அங்குள்ள பழங்குடி மக்களை ஒன்றிணைத்து ஒரிசா மக்களின் பண்பட்ட வாழ்க்கை தமிழ் வாழ்க்கையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்தியவர். தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கரை நுளையர்கள் (nolia) பற்றி இவர் ஆராய்ந்து கிழக்குக் கடற்கரையில் 250 கல் தொலைவுக்கு இவர்கள் ஒரிசா சார்ந்த பகுதிகளில் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இவர்கள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவருவதைக் குறிப்பிடுகிறார்.ஒரிசா கடற்கரை 480 கல் தொலைவு நீண்டது.

 பண்டைய சோழமன்னர்கள், சேரர்கள், பாண்டியர்கள் இன்று ஒரிசாவில் பழங்குடி மக்கள் இருக்கும் வழியாகத்தான் வடதிசைக்கும் தென்கிழக்குத் திசைகளுக்கும் சென்றுள்ளனர் என்கிறார். பாணர், கந்தா, குடியா, குயி, ஓரான், கிசான், பரோசா, கோலா, மால்டோ, கடாபா என்று பதினான்கு பழங்குடி மக்கள் இன்றும் ஒரிசாவில் உள்ளனர்.மால்டோ, கடவா என்னும் திராவிடக் குழுவினர் இன்றும் உள்ளனர் என்கிறார். தெலுங்குச் சோழர்கள், கரிகால்வளவன் காலந்தொட்டு ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்பதைச் செப்புப் பட்டயங்கள் மெய்ப்பிக்கின்றன.


அரிதுயில்காட்சி,பிராம்மனி ஆறு(கொள்ளடா)ஒரிசா

 வட இந்தியாவில் தமிழர்கள் பற்றிய சான்றுகள் சத்தீசுகர் மாநிலத்தில் சோளனார் என்ற ஊரிலும்,சார்கண்ட் மாநிலத்தில் கரிகாலா என்ற ஊரிலும் உள்ளது என்கிறார். வடக்கே காஞ்சி நதி உள்ளதையும் குறிப்பிடுகிறார். 1991 முதல் ஒரிசா தமிழ்ச்சங்கத்தில் இணைந்து பின்னர் பொறுப்புகள் வகித்துத் தமிழ் விழாக்கள், நாடகங்கள் நடத்தியுள்ளார். ஔவையார், அதியமான் உள்ளிட்ட சங்க இலக்கியக் கதைகளைத் தமிழிலும் ஒரியமொழியிலும் கலந்து அனைவரும் கண்டுகளிக்கும்படி செய்துள்ளார்.


அரிதுயில்(அனந்தசயனம்)கொள்ளடா ஆறு(ஒரிசா)

 கடலில் மூழ்கியுள்ள நகரங்கள் பற்றிய ஆய்வுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார். அவ்வகையில் கன்னியாகுமரிக்கு அருகில் கடியாப்பட்டினம், இரண்டரை கடல்கல் தொலைவில் ஆடு மேய்ச்சான் பாறை உள்ளதை ஆராய்ந்து வெளியுலகிற்கு இவை பற்றி அறிவித்தார்.


கடலாய்வுக் களப்பணியில் பாலு


கடலாய்வில் பாலு

 சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் நூற்றுவன்கண்ணனார் பற்றியும் கங்கை கடலுடன் கலக்கும் கங்கைசாகர் பற்றியும் நன்கு அறிந்துவைத்துள்ளார். ஒரிசாவில் பாலூர், மாணிக்கப்பட்டினம், தாமரா (தமிரா) என்ற மூன்று பழைய துறைமுகங்கள் இருந்துள்ளதை ஆராய்ந்து குறிப்பிடுகிறார்.

 தூத்துக்குடிக்கு அருகில் கடலுக்கு மேல் 30 அடி ஆழத்தில் புதையுண்ட நகரம் உள்ளது பற்றி ஆராய்ந்தவர். மரக்காணம், அரிக்கமேடு பகுதிகளில் கடலின் உள்ளே பழையநகரம் உள்ளது என்று பாலசுப்பிரமணி குறிப்பிடுகிறார். இடைக்கழிநாட்டுக்குக் கிழக்கே நாரக்குப்பம்-ஆலம்பராக்கோட்டைக்கு அருகில் ஒரு கல் தொலைவில் கடலுள் நகரம் இருக்கவேண்டும் எனக் கருத்துரைக்கிறார்.

 தமிழகத்தில் உள்ள ஒரியா பற்றிய தரவுகளையும் சேமித்துவருகிறார். தமிழர்களின் எல்லை வட எல்லை வேங்கடம் இல்லை இமயம் என்று உறுதிப்பட கூற பல சான்றுகள் உள்ளதைக் குறிப்பிடுகிறார். இமயமலையில் கார்த்திகைபுரம் என்ற இடம் உள்ளது. அங்கே கார்த்திகைசாமி கோயில் உள்ளது என்கிறார்.

 கங்கைகொண்டசோழபுரம் சிறப்புற்றிருந்த காலத்தில் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊர் கடற்கரை நகராக இருந்திருக்கவேண்டும் என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இணைய வரைபடங்கள், செயற்கைக்கோள் வரைபடங்கள் வழியாக அதற்குரிய தரவுகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

 ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சாவரம் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்க வேண்டும் என்கிறார். கங்கைகொண்ட சோழபுரத்தைச் சார்ந்த பல ஊர்களில் இருக்கும் கலிங்கச்சிற்பங்கள் இந்த ஊருக்குக் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் இங்கிருந்து கொள்ளிடம் வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு புதிய ஆய்வுச் சிந்தனையை முன்வைக்கின்றார். குலோத்துங்கன் காலத்தில் கடல்வழி சிறப்பாக இருந்திருக்கிறது.

 காசிக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக நல்ல தொடர்பு இருந்துள்ளது. கிருட்டினகிரி, குப்பம்,தக்கோலம். திருவாலங்காடு, மீஞ்சூர் பெரியபாளையம் உள்ளிட்ட இன்றை ஊர்ப் பகுதிகளில் பண்டைக்காலத்தில் பெருவழிகள் இருந்து வடபுலத்தை இணைத்துள்ளமைக்குச் செயற்கைக்கோள் வரைபட ஆய்வுகள் பேருதவியாக இருப்பதைப் பாலசுப்பிரமணி குறிப்பிடுகிறார்.

 பண்டைக்கால அரசர்கள் வள்ளல்கள் குறுநில மன்னர்கள் வாழ்ந்த பகுதிகள் தலைநகரங்கள் வழிகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்களுக்குத் தம் செயற்கைக்கோள் வழியிலான தரவுகளைத் தர முன்வருகின்றமை இவர்தம் பெருந்தன்மையைக் காட்டும். மேலும் அந்த ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வு சிறப்பாக நடைபெறவும் புதிய உண்மைகள் வெளிவரவும் உதவுகின்றார். அவ்வகையில் நன்னன், பாரி, அதியமான் உள்ளிட்ட அரசர்கள் பற்றிய ஆய்வு நிகழ்த்துபவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

 காலநிலை ஆய்வு,வரைபடம்,நில அளவை,புவி அறிவியல், வரலாறு, புவியியல், கல்வெட்டு, ஏரிகள் ஆய்வு, ஊர்ப்பெயர் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு, மானுடவியல் ஆய்வு, கடலாய்வு, மண்ணாய்வு உள்ளிட்ட பல துறைகளை இணைத்து இந்தியா முழுவதும் தமிழ், தமிழக வரலாற்றுக்கான தரவுகள் உள்ளமையைக் கண்டுபிடுத்துவரும் பாலசுப்பிரமணி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏன் உலக அளவில் உள்ள அறிஞர்களை ஒன்றிணைத்துவரும் பெரும்பணியைத் தமிழர்கள் அனைவரும் பாராட்டி
வரவேற்க வேண்டும்.

 பிற துறை சார்ந்த இவர்களின் தமிழாய்வுகள்தான் தமிழர்களுக்கு உலக அளவில் பெருமையைத் தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.

 ஒரிசாவில் இன்றும் "அருவா சாவல்" என்று தமிழர்களை நினைவூட்டிப் பச்சரிசியை குறிப்பிடுவர். அதே நேரத்தில் தமிழகத்திலும் கலிங்கச்சம்பா (நெல்வகை) என்று ஒரிசாவை நினைவூட்டும் வழக்கும் உள்ளது. முப்பது இலட்சம் ஒட்டர் இனமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.13 வகையர் உள்ளனர். போயர். சங்கு ஒட்டர், ஒட்டன் செட்டி போன்று பல குழுக்கள் 22 மாவட்டங்களில்  வாழ்ந்துவருகின்றனர் என்கிறார். இவை போன்ற அரிய செய்திகளை நா முனையில் வைத்துள்ளார்.

நனி நன்றி

தமிழ்க்காவல்,புதுச்சேரி
தமிழ் ஓசை களஞ்சியம் 08.02.2009
இதழாளர் சுகுமாரன்(மின்செய்தி மாலை)