வெள்ளி, 6 பிப்ரவரி, 2009
தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...
இன்னிய அணி
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து "பேண்டு"இசைக்கருவிகள் முழங்குவதுதான் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.பிற பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் நடக்கின்றன.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அவ்வாறுதான் பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன.ஆனால் பல்கலைக்கழக ஆளவையின் இசைவுடன் தமிழர்களின் மரபுவழிப்பட்ட பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெரும்தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, சேகண்டி, அம்மனைக்காய், சவணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்கவும் தமிழர்களின் மரபுவழி உடையுடனும் இசைக்கலைஞர்கள் முன்னே வரப் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களைப் பழங்கால அரசர்களைக் குடிமக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் அழைத்து வருவதுபோல் இன்று நடப்பது தமிழர்களாகிய நமக்குத் தேன்பாய்ந்த செய்தியாகும்.(இன்னியம்= இன்-இனிமை,இயம்=இசைதரும் கருவி,வாத்தியம்).
அண்மையில் தமிழகத்தில் பட்டமளிப்பு விழாக்கள் இவ்வாறு நடைபெறவேண்டும் என ஒரு சுற்றறிக்கை அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.அந்த அறிக்கையில் பின்வரும் செய்தியும் இடம்பெறுவது சிறப்பு.
தமிழர்களின் இசைக்கருவிகள் முழங்க தமிழர்களின் உடையணிந்த கலைக்குழு விருந்தினர்களை வரவேகத் தக்க வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஈழத்தைப் போல இன்னிய அணி உருவாக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் இடம்பெறவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
கலை உணர்வுடைய பேராசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அடங்கிய இந்தக் கலைக்குழு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதன்மைபெறவேண்டும். பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்த வேற்றுநாட்டு மரபை விட்டு விலக்கித் தமிழ் மரபு மீட்டெடுப்போம்.
தமிழகத்தில் சங்கமம் என்ற பெயரில் தமிழர்களின் பழைமையான கலைகளை உயிர்பெறச் செய்த தமிழ் மையமும் தமிழக அரசும் இன்னிய அணி உருவாக்கத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்னிய அணி உருவாக்கிய இலங்கைப் பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் சில வினாக்கள்:
இன்னிய அணி உருவாக்க காரணம் என்ன?
எம் பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஒவ்வொரு ஆண்டும் நாடகவிழாக்கள் நடத்துவது உண்டு.சிறப்பு விருந்தினர்களை வரவேற்க மேளதாளத்துடன் வரவேற்போம்.ஈழத்தில் பலவகைப்பட்ட கலை,பண்பாட்டு மரபுகள் உண்டு.இவற்றை இணைக்கத் தமிழர்களின் வழக்கில் உள்ள அனைத்து இசைக்கருவிகளையும் கொண்ட ஒரு குழு உருவாக்க நினைத்தோம்.மேலை நாட்டாருக்கு இணையான ஓர் அடையாளம் காட்டவேண்டும் என்ற விருப்பம் இதற்கு அடிப்படையாகும்.
இன்னிய அணிக்கு உரிய உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்த இன்னிய அணியில் தமிழரது மரபுவழி மண்வாசைன மணக்க வேண்டும் என நாம் விரும்பினோம். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தயாரித்த இன்னிய அணியில் வரும் சர்வாணியும் தொப்பியும் எமக்குரியதல்ல. அவை இந்தியச் சாயலும் ஆங்கிலச் சாயலும் பொருந்தியவை. நாம் தமிழரின் பாரம்பரிய உடையைத் தேடினோம். வேற்றுநாட்டுப் பண்பாடு ஏற்படுமுன் நம்மவர் என்ன ஆடை அணிந்திருந்தனர்?
இன்னிய அணி உடை,அணி மாதிரிக்குக் காரணமாய் அமைந்த போடியார்(பண்ணையார்) படம்
நமக்கு ஒரு பழைய படம் கிடைத்தது. அதில் ஒரு தமிழ்ப் போடியாரும்(பண்ணையார்) மனைவியும் இருந்தனர். 1920ம் ஆண்டுப் படம் அது. அந்த உடையினையும் உடுக்கும் பாங்கினையும் தலைப்பாகையினையும் சற்றுப் புதுமைப்படுத்தி, முறைப்படி அமைத்தோம். இதனை அமைப்பதில் எமக்கு மிகுந்த துணை புரிந்தவர் ஓவியர் கமலா வாசுகி அவர்கள். ஆடைகட்கான நிற ஒழுங்கையும் ஆடையும் வடிவமைத்தவர் அவர்.
போடியார் அவரது மணைவி, அவரது மகள் அணிந்திருந்த மணிகளாலான மாலைகள், கையிலே கட்டும் தாயத்து கைகளில் கடகம், காதுகளுக்குக் கடுக்கன் என்பனதான் அணிகலன்கள். இவற்றை நாம் கிடைத்த சின்ன காய்களைக் கொண்டு செய்தோம். கடையில் வாங்கினோம். போடியாரின் தலைப்பாகை அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டு புதுத் தலைப்பாகையாக மாறியது. இங்கு காட்டப்பட்டுள்ள படம் இதனை உங்களுக்கு விளக்கும்.
இன்னிய அணியில் பயன்படுத்தப்படும் தாள அடவுகள் பற்றி...
இந்த இன்னிய அணி 1997 இல் ஆரம்பத்தில் மரபுவழி அண்ணாவிமார் 10 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் அன்று மத்தளம் மாத்திரமே பாவித்தனர்.
ததித்துளாதக ததிங்கிணதிமிதக தாதெய்யத்தாதோம்
என்ற தென்மோடித் தாளக்கட்டை அடித்தபடி அவர்கள் ஊர்வலத்தின் பின்னால் வந்தனர்.
1998ல் மாணவர்களை மட்டும் கொண்டதாகவும், ஆடை அணிகளுடனும் இது வடிவமைக்கப்பட்டதுடன் 1998ல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கும் பாவிக்கப்பட்டது. 1999, 2000 ஆண்டுகளில் மேலும் பல ஆட்டங்கள் புகுத்தப்பட்டன.
தகதகதகதிகுதிகுதிகு
தளாங்கு தித்தக தக ததிங்கிணதோம்
என்றதும்
தந்தத் தகிர்தத் தகிர்தத்தாம்
திந்தக் திகிர்தத் திகிர்தத் தெய்
என்ற வடமோடித் தாளக்கட்டுகளும் வீசாணம், பொடியடி, நடை போன்ற வடமோடி ஆட்டக் கோலங்களும் புகுத்தப்பட்டன.
நீண்டதொரு ஊர்வலத்திற் செல்லும் இவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்தர் போல கைகளை அசைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வார்கள். 2002ம் ஆண்டில் இன்னும் சில ஆட்ட நுட்பங்களை இணைத்தோம். கூத்தர் போல் சிலருக்கு முழங்காலிலிருந்து புறங்கால் வரை சதங்கைகளும் அணிவித்தோம். ஒவ்வொரு வருடமும் ஒரு சிறு முன்னேற்றம். பின்னாளில் கொடி ஆலவட்டம் எல்லாம் இதில் இணைத்துக் கொண்டோம்.
இன்னிய அணி உருவாக்க உதவியவர்கள் யார்?யார்?
துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத்,நுண்கலைத்துறையில் பணியாற்றிய பேராசிரியர் பாலசுகுமார் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு மிகுதி.
இன்னிய அணி கலைக்குழு
இன்னிய அணி
இன்னிய அணி
இன்னிய அணி
ஈழத்தமிழர்கள் பரவியுள்ள பிற நாடுகளில் நடைபெறும் பண்பாட்டு விழாக்களில் இந்த இன்னிய அணி செயல்படுவதாகவும் அறியமுடிகிறது.எனவே,தமிழகத்தில் உள்ள தமிழர்களின் இசைக்கருவிகளான பறை,உடுக்கை,பம்பை,மேளம்,தாளம்.குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளும் ஒயிலாட்டம்,புலியாட்டம்,கரகாட்டம் உள்ளிட்ட ஆடல்,பாடல்களும் தமிழகப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் இடம்பெறப் பாடுபடுவோம்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப்பெற்றுத் தன்னுரிமையுடையவர்களாக இருப்பதுபோன்று பிறநாட்டுக் கலைகளை விலக்கித் தமிழ்க்கலைகளுக்கு முதன்மையளிப்போம்.ஏனெனில் சிலப்பதிகாரம் படித்தால் நமக்குத் தெரியும் நாம் மிகப்பெரிய கலைக்களஞ்சியத்திற்கு உரிமையுடையவர்கள் என்று.தொடர்புடையவர்கள் முயன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு உள்ளிட்ட கல்விசார் விழாக்களில் இன்னிய அணி இசை கேட்கப் பாடுபடுவோம்.
நன்றி
பேராசிரியர் பாலசுகுமார்(கிழக்குப் பல்கலைக்கழகம்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
நல்ல கட்டுரை.
இன்னியம் போல் பல்லியம் என்றும் சொல்லலாம்
தமிழ் மரபைப் பாதுகாக்க இப்படி அணி இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
கருத்துரையிடுக