நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 பிப்ரவரி, 2009

தனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும் இல்லை இன்றும் இல்லை! புதுச்சேரியில் பேராசிரியர் சிற்பி பேச்சு!


மேடையில் படைப்பாளிகள்


புதுச்சேரிப் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களுக்கு அகவை அறுபதாண்டு நிறைவை ஒட்டி அவரின் மாணவர்கள் ஏற்பாட்டில் மணிவிழா இன்று (07.02.2009) புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கில் நடைபெற்றது.கவிஞரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாராக இருந்தவரும் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சிற்பி தலைமை தாங்கினார்.

இன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் புதுச்சேரி சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்,ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.பேராசிரியர் பஞ்சாங்கத்தின் நூல்களையும் அவரின் மாணவர்கள் எழுதிய நூல்களையும் கவிஞர் சிற்பி வெளியிட்டார்.புதுவை அரசின் மேனாள் கல்வி அமைச்சர் சிவக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


பேராசிரியர் சிற்பி

சிற்பி தம் தலைமையுரையில் தனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும் இல்லை, இன்றும் இல்லை என்றார். மறைமலையடிகள் எழுதிய தமிழ் தனக்குப் படித்தால் புரிவதில்லை என்றார் (இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் பல்லாண்டுகள் தலைவர். இவர் தலைமையில்தான் சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு இயங்குகிறது).

இத்தகு கொள்கையுடைய எனக்கும் தமிழின் மீது பற்று கொண்ட பஞ்சு அவர்களுக்கும் நட்பு சிவகங்கையில் மீரா அவர்களின் அலுவலகத்தில் உரசலில் தொடங்கியது. உரசலில் தொடங்கிய காதல் நிலைபெறுவதுபோல எங்கள் நட்பு நிலைபெற்றுள்ளது. பஞ்சு கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என ஐந்து துறைகளில் வல்லவர். பஞ்சாங்கம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.திறனாய்வு என்பது தமிழில் பிறரைக் காயப்படுத்துவது என்று உள்ளது.

நோய்வாய்ப்பட்ட கவிஞர் கீட்சைத் திறனாய்வுதான் கொன்றது. கத்தியைத் தீட்டுவது அல்ல திறனாய்வு, புத்தியைத் தீட்டுவது. மார்க்சிய அடிப்படையில் திறனாய்வுத்துறையில் சிறப்புடன் விளங்குபவர் பஞ்சாங்கம்.திறனாய்வை முன்னெடுத்துச் செல்லும் பக்குவம் இவருக்கு உண்டு. பெண்ணியத் திறனாய்வு என்பது முழக்கங்களில் முடிந்துபோவதல்ல.பல்வேறு திறனாய்வுமுறைகள் அறிந்தவர் பஞ்சு.

தமிழ்ப்படைப்புகள் பற்றிய நல்ல புரிதல் உடையவர் பஞ்சு.பஞ்சுவின் திறனாய்வு படைப்பாகவே விளங்கும். திறனாய்வு வரிகளே தனித்துவம் கொண்டது. தமிழின் வேர்கள் எதுவோ அதன் பக்கம் நிற்பவர் பஞ்சு. சிலப்பதிகாரம் பற்றிய இவரின் திறனாய்வுநூல் குறிப்பிடத்தகுந்தது என்று பேசினார்.

எழுத்தாளர் செயப்பிரகாசம், கி.இராசநாராயணன், இரவிக்குமார்(ச.ம.உ) பாரதிபுத்திரன், பாலா, காவ்யா சண்முகசுந்தரம், த.பழமலய், கேமச்சந்திரன், ஆ. திருநாகலிங்கம், ந.முருகேசபாண்டியன், கேசவ பழனிவேலு, இரவி சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் பழ.அதியமான், கவிஞர் பச்சியப்பன், பேராசிரியர் ஆரோக்கியநாதன், பழ.முத்துவீரப்பன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் இரவிக்குமார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பேராசிரியர்கள், படைப்பாளிகள் வந்திருந்தனர்.


பச்சியப்பன், இரவி, பழமலை, பாரதிப்புத்திரன்

5 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

தனித்தமிழ் மீது எனக்கு மிகுந்த பற்றும் நம்பிக்கையும் உண்டு.

தனித்தமிழ் ஒன்றே தமிழனை மீட்டெடுக்க வல்லது என்பதில் உறுதியான நம்பிக்கை உண்டு.

தனித்தமிழால் இன்று பல ஆக்கங்கள் விளைந்துள்ளன. இனி வருங்காலத்திலும் இவ்வாக்கங்கள் தொடரும் என்பதில் நம்பிக்கை உண்டு.

தனித்தமிழ் மட்டுமே எமது இனத்தையும் மொழியையும் தனித்த விழுமியங்களோடு அடையாளப்படுத்தும் என்பதில் நம்பிக்கை உண்டு.

நான் உண்மை தமிழ் உள்ளத்தோடு வாழ்வதால்.. என்னிடம் இரட்டைத்தனம் இல்லாததால், என்னிடம் போலிமை இல்லாததால் தனித்தமிழை ஏற்றுக்கொள்கிறேன்.

சில வேளைகளில் புரியாமல் போனால், அகரமுதலிகொண்டோ அல்லது அறிந்தோரிடம் கேட்டோ புரிந்துகொள்வேன்.

என்னுடைய சிற்றறிவுக்குப் புரியவில்லை என்பதற்காக மிக நீண்ட மரபைக்கொண்ட எமது மொழியை நான் தாழ்த்துவதோ விட்டுக்கொடுப்பதோ இல்லை.

பெற்ற தாய், கட்டிய மனைவி, உடன்பிறந்த தமக்கை தங்கைகள், ஈன்ற மகள் என எமது பெண்ணிய உறவுகள் அனைத்தும் தூய்மையாக இருப்பதை பேணுவதும் உறுதிசெய்ய வேண்டியது எப்படி எமது கடமையாகிறதோ அதுபோலவே எமது தாய்த்தமிழின் தூய்மையைப் பாதுகாத்து அது தனித்தமிழாக இலங்க வகைசெய்வதையும் எமது கடமையாகக் கருதுகிறேன்.

காரணம், உணவில், உடையில், உறவில் என அனைத்திலும் தூய்மையைப் பேணும் நான் எமது மொழியிலும் தூய்மையைப் பேணவே விரும்புகிறேன்.

மறத் தமிழனுக்கும் கற்புடை தமிழச்சிக்கும் பிறந்தவன் என்பதால் என் மொழி எந்தக் கலப்பும் இல்லாமல் தனித்தன்மையோடு இருப்பதே சிறப்பென கருதுகிறேன்.

இது எமது பிறப்புரிமையும் கூட. யாருக்காகவும் எதற்காகவும் என்னுடைய பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. கூடாது!

பிறப்புரிமையை அடைமானம் வைத்து அடிமை பிழைப்பு நடத்துவதும் அவரவர் உரிமைதான். அதைப் பற்றி கேள்வி எழுப்ப எனக்கும் உரிமையில்லை.

செந்திலான் சொன்னது…

சிற்பி மீது எங்களுக்கு அன்றும் இன்றும் என்றும் நம்பிக்கை இல்லை...!

thamizhamallan சொன்னது…

thamizhal unbavargal thaniththamizh ethirppathu kandikkaththakkathu. thaniththamizh enbathu oru mathama nambuvatharkku?athu oru kappu eyakkam.surusurppullavar ertu seyalpaduvar.makkal tholaikkatchi vantha pinnum thirunthar aringara?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தனித்தமிழ் கொள்கை என்பது இன்று பல வெற்றிகளைக் குவித்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தைக் கடந்து வெளிநாடுகளிலும் தனித்தமிழ் எழுச்சி இன்றளவும் செழிப்பாக இருப்பதே இதற்கு நல்ல சான்று.

மறைமலையடிகள் தொடங்கிய இவ்வியக்கம் என்னைப் போன்ற மூன்றாம் தலைமுறையினரால் பேணப்பட்டு வருவதே அதன் வெற்றிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழால் பிழைப்பு நடத்திக்கொண்டே அந்தத் தமிழை இழித்தும் பழித்தும் பேசும் வஞ்சக நெஞ்சத்தார் தமிழகத்திலேயே இருப்பது வருந்தத்தக்கது.

எங்கள் நாட்டில் டூரி டாலாம் டாகிங் (Duri Dalam Daging) என்று ஒரு மலாய் பழமொழி உண்டு. அதாவது 'இறைச்சிக்குள் முள்ளைப் போல' என அதனை பெயர்க்கலாம்.

உண்ணும் இறைச்சிக்கு உள்ளே இருந்துகொண்டு உயிருக்கே உலைவைக்கும் முள்ளைப் போன்றவர்கள் என்பது இதன் பொருள்.

தமிழை பழித்தும் இழித்தும் பேசும் தமிழர்களுக்கு எங்கள் நாட்டு மலாய் பழமொழி மிக்க பொருந்தும்.

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் தமிழ் நலம் சூழ்க

பேராசிரியர் அவர்களின் கருத்தினை நான் வன்மையாக மறுக்கின்றேன். காரணம் தனித்தமிழ் ஒன்றே உலகத் தமிழர்களை அடிமை விலங்கிலிருந்து மீட்டெடுக்கும் ஆற்றல் பெற்றது. மொழியாலும் இனத்தாலும் சமயத்தாலும் தமிழராக, தமிழாக வாழ்பவருக்கே இவை விளங்கும். வெறுமனே தமிழால் பிழைப்புநடத்திக் கொண்டிருக்கும் பலருக்கு இவற்றில் நம்பிக்கை இருக்காது என்பது நாம் முன்னமே அறிந்ததுதான்.

தமிழனே தமிழுக்கு உயிராம்- அந்தத்
தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்