நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 பிப்ரவரி, 2009

பி.எல்.சாமி அவர்களின் தமிழ் வாழ்க்கை

அறிஞர் பி.எல்.சாமி இ.ஆ.ப. (10.02.1925-03.06.1999)
 
  சங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் பார்த்து ஆராய்ந்து தமிழ் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர் பி.எல்.சாமி அவர்கள் ஆவார். லூர்துசாமி என்ற இயற்பெயர்கொண்ட இவர் தெலுங்குமொழி பேசும் மக்கள் நிறைந்த செகந்தராபாத்தில் சில காலம் அஞ்சல்துறையில் பணியில் இருந்தார். அம்மக்கள் இவர் பெயரை 'ல்வ்ருடுசாமி' எனப் பிழையாக அழைத்ததைக் கண்டு தம் பெயரை பி.எல்.சாமி என்று எழுதினார். பின்னாளில் பி.எல்.சாமி என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்திய ஆட்சிப்பணியில் தேர்வுபெற்ற இவர் புதுவை அரசில் உயர்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தமிழாராய்ச்சியை மறவாது 500 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும்,பன்னூல்களையும் உருவாக்கிய இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம். 
 
 பி.எல்.சாமி அவர்களின் முன்னோர்கள் சிவகங்கைப் பகுதியில் இருந்தனர் எனவும் பின்னாளில் கோவையில் தங்கியிருந்தனர் எனவும் அறியமுடிகிறது. கோவை சேடப்பாளையும், பள்ளப்பாளையும், சோமனூர் பகுதியில் இவரின் முன்னோருக்கு நிலபுலங்கள் இருந்துள்ளன. பி.எல்.சாமி அவர்களின் தந்தையார் பெயர் பெரியநாயகம் ஆகும். இவர் கோவை தூய மைக்கேல் பள்ளியில் வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவருக்கு எட்டாவது மகனாக வாய்த்தவர் பி.எல்.சாமி. கோவையில் 10.02.1925 இல் பிறந்தவர். பெரியநாயகம் அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருந்தார். இந்தச் சூழலில் திண்டிவனத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணிபெற்றுத் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். 
 
 பி.எல்.சாமி ஏழு வகுப்புவரை பிற ஊர்களில் படித்துப் பத்தாம் வகுப்பைக் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தூயவளனார் பள்ளியில் படித்தார். இவரின் தமிழாசிரியர் திருவேங்கடாச்சாரியார் மிகச்சிறப்பாகத் தமிழ்ப்பாடம் நடத்துபவர். புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கரும்பலகையில் எழுதிப், பாடம் நடத்திய பிறகு அழித்துவிட்டு அப்பாடலைக் கேட்டாராம். நம் பி.எல்.சாமியும் இன்னொரு லூர்துசாமியும் மனப்பாடமாக உடன் ஒப்புவித்தனராம். அப்பொழுதே தமிழில் நல்ல ஈடுபாட்டுன் பி.எல்.சாமி படித்துள்ளார். 
 
 திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் தாவரவியல் படித்த பி.எல்.சாமி பேராசிரியர் இரம்போலா மாசுகரனேசு அவர்கள் வழியாகத் தமிழுணர்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சுகளிலும் திராவிட இயக்க உணர்விலும் முன்னின்றார். குடியரசு உள்ளிட்ட ஏடுகளைப் படித்தமைக்காகக் கல்லூரி நிருவாகம் இவருக்குத் தண்டம் விதித்ததும் உண்டு. 
 
பி.எல்.சாமி அவர்கள் தொடக்கத்தில் காதல் கவிதைகள் எழுதும் இயல்புடையவர். கவிதை எழுதி அதனைப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களிடம் காட்டித் திருத்த நினைத்தார்." நீர் ஓர் அறிவியல் பட்டதாரி. அறிவியல் பற்றி நல்ல கட்டுரை எழுதும். காதல் கவிதை எழுதத் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்" என்று சொன்னதும் மடைமாற்றம் நடந்தது. பி.எல்.சாமி அவர்கள் தொடர்ந்து தமிழுக்கு உழைக்க ஆயத்தமானார். 1945-46 இல் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இளம் அறிவியல் பட்டம் பெற்றதும் சில ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார். பின்னர் அஞ்சல் துறையில் சில காலம் பணிபுரிந்தார். 
 
 புதுவை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக நெட்டப்பாக்கத்தில் சுதந்திரப் புதுவை அரசு நடந்தது. திரு.பால் அவர்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்னர்ச் சுதந்திரப் புதுவை அரசில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணிபுரிந்தார். அவ்வாறு பணிபுரியும்பொழுது அலுவலகத்தில் சங்க இலக்கியங்களை வாங்கி அனைவருக்கும் பார்வைக்கு உட்படும்படி செய்துள்ளார். பி.எல்.சாமி அவர்கள் 1978 இல் இ.ஆ.ப அதிகாரியாகப் பதவி பெற்றார். புதுவை ஆளுநரின் செயலாளராகவும், மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணிபுரிந்தவர். உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். 
 
செந்தமிழ்ச் செல்வி, தினமணி, தினமலர், ஆராய்ச்சி, அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் எழுதியவர். பி.எல்.சாமி அவர்களின் மனைவி பெயர் மங்களவதி. இவருக்கு நான்கு மக்கள் செல்வங்கள். மேரி மனோன்மணி, அருள்செல்வம், இளங்கோ பெரியநாயகம், சோசப் முத்தையா என்பது அவர்களின் பெயர்கள். 11.05.1981 இல் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் கிளையின் சார்பில் பி.எல்.சாமி அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிச் "சங்க நூல் பேரறிஞர்" என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தலைமையிலும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையிலும் இப் பாராட்டு விழா நடந்துள்ளது. 
 
 பி.எல்.சாமி அவர்களின் ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் ஆழமாக இருந்தன. சங்க இலக்கியங்களில் முயிறு, கடுந்தேறு என்னும் குளவி, சைவ சித்தாந்த இலக்கியத்தில் வேட்டுவன் என்னும் குளவி, கருங்குருவியும் திருவிளையாடலும், யானை உண்ட அதிரல் போன்ற அரிய கட்டுரைகளை வரைந்து அனைவராலும் பாராட்டப் பெற்றார். சங்க நூல்களில் 35 விலங்குகள்; 58 பறவைகள்; அதில் 22 நீர்ப்பறவைகள்; புறாவில் 5 வகை; வல்லூறுகளில் 3 வகை; காக்கையில் 2 வகை; ஆந்தையில் 6 வகை; கழுகினத்தில் 3 வகை எனப் பட்டியலிட்டுக் காட்டிய பெருந்தகை என வில்லியனூர் வேங்கடேசன் இவரைப் போற்றுவார். 
 
 பி.எல்.சாமி அவர்களின் அறிவியல் அறிவு, தமிழ் இலக்கியப் பயிற்சி கண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவான அறிவியல் களஞ்சியம் தொகுப்புப் பணியில் பணியமர்த்தினார். தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். உடல் நலம் குன்றியதால் அப்பணியிலிருந்து வெளிவந்தார். 
 
சிந்து சமவெளி எழுத்துகள் போல் உள்ள கீழ்வாலை பாறை ஓவியம் கண்டு வெளியுலகிற்கு வழங்க அனந்தபுரம் கிருட்டினமூர்த்தியுடன் பணிபுரிந்துள்ளமையும், மாகேயில் பணிபுரிந்த பொழுது நன்னன் பற்றியும் முருகன் பற்றியும் வெளியுலகிற்குத் தந்த தகவல்கள் என்றும் போற்றும் தரத்தன. ஓய்வின்றி உழைத்த இப்பெருமகனார் ஒருநாள் இரத்த வாந்தி எடுத்தார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். பின்பு அவரின் ஒருகால் ஒருகை செயல்படாமல் போனது. குழந்தையைப் பாதுகாப்பதுபோல் அவர் குடும்பத்தார் பாதுகாத்தனர். எனினும் தம் 73 ஆம் அகவையில் 03.06.1999 இல் இயற்கை எய்தினார். 
 
 புதுவையில் வரலாற்றுச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். இ.ஆ.ப. அதிகாரிகளுள் தமிழுக்குத் தொண்டாற்றி அனைவராலும் பாராட்டடப் பெற்றவராக பி.எல்.சாமி அவர்கள் விளங்கியுள்ளார். அவரின் நூல்கள் என்றும் அவர் பெருமையை நின்று பேசும். 
 
 
 


 


 
 
 அறிஞர் பி.எல்.சாமி இ.ஆ.ப.அவர்கள் 
 
 
 (இக்கட்டுரையை, படத்தை எடுத்தாள்வோர் இசைவு பெற்று உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். தழுவியோ, பெயர் மாற்றியோ வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்). 
 
 நன்றி: 
முனைவர் நா.கணேசன், அமெரிக்கா 
வில்லியனூர் சு. வேங்கடேசன் 
அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி,
 வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
 பிரஞ்சு நிறுவன நூலகம்(புதுச்சேரி)

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

அவரிருந்த பொழுது, புதுச்சேரி உப்பளம் கொலாசு நகர் சென்று நண்பரைச் சந்தித்து, சங்க இலக்கியம் குறித்துப் பல வயணங்கள் பேசியிருந்தேன். அதே பொந்திகையைத் தங்கள் சொற்சித்திரத்தில் உணர்ந்தேன். வாழ்த்துகள்!
-தேவமைந்தன்
(பேரா.அ.பசுபதி)