நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 23 பிப்ரவரி, 2009

நெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா.கண்ணையனார்


புலவர் கண்ணையன் அவர்கள்(படம்:மு.இ)

 பத்தாண்டுகளுக்கு முன்னர்(1997- 98) யான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்த பொழுது தினமணி அலுவலகம் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி அமையும் திரு.சுகதேவ் அவர்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்து எம்போலும் இளைஞர்களுக்கு அப்பொழுது எழுதுவதற்கு நல்ல வாய்ப்பு வழங்கி வந்தார்கள். ஆசிரியர் பொறுப்பில் இராம.திரு.சம்பந்தம் ஐயா அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது புலவர் கண்ணையன் என்ற பெயரில் வெளிவந்த படைப்புகளைக் கண்டு யான் மகிழ்ச்சியுற்று கண்ணையன் யார் எனச் சுகதேவ் அவர்களை வினவினேன்.

 மயிலம் பகுதி சார்ந்தவர் எனவும் ஓலைச்சுவடிகள் எழுதுவதில், படிப்பதில் வல்லவர் எனவும் நல்ல புலமையாளர் எனவும் எனக்குக் கண்ணையன் ஐயாவைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகும் புலவர் கண்ணையன் அவர்களின் ஆக்கங்கள் வெளிவரும் பொழுது ஆர்வமுடன் கற்பேன். அரிய செய்திகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுப் படிப்பவரை ஈர்ப்புறச் செய்யும். பழங்கால மரபுகள் அறிவதற்கு அவர் கட்டுரை எனக்கு உதவும். பழந்தமிழ்க் கணக்கறிவு,நில அளவை, கல்வெட்டறிவு, தமிழ் இலக்கண இலக்கியப் பேரறிவு புதியன கண்டுபிடிக்கும் ஆற்றல், ஓலைச்சுவடி எழுதுதல்,படித்தல் துறைகளில் வல்லவர். மாயக் கலைகளில் ஆற்றல் பெற்றவர்.

காலங்கள் உருண்டோடின.

 மூன்றாண்டுகளுக்கு முன்னர்ப் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் (வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில்) கீழ்த்தளத்தில் இருந்த அரங்கில் ஒரு புத்தகக் கண்காட்சியில் மாறுபட்ட சில பட விளக்கங்கள் இருந்தன. வியப்புடன் உற்று நோக்கினேன். இப்படக் காட்சிகளுக்கு விளக்கம் வினவினேன். அருகில் இருந்த முதியவர் என் ஐயங்களுக்கு விடை தந்தார். மயிலம் திருமடம் சார்ந்த சில இலக்கிய நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அவற்றை மக்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்தவில்லை. மாறாக மனை நெறிநூல், சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்களை அள்ளிச்சென்றனர்.

 என் வினாக்களுக்கு விடைதந்த முதியவர்தான் புலவர் கண்ணையன் ஐயா அவர்கள். அவர்களிடம் முகவரி அட்டை இருந்தது. பனை மடலில் எழுத்தாணி கொண்டு எழுதியிருந்தார்.எழுத்தாணி கையில் வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு எனக்கு எழுதப் பயிற்சியளிக்க வேண்டினேன். பின்பொருநாள் தருவதாகச் சொன்னார்கள். அத்துடன் தம் ஆய்வுப்பணிகள் பற்றிய பல தகவல்களைச் சொன்னார். மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். மறுநாள் முதல் தொடர்ந்து கண்காட்சிக்குச் சென்று கண்ணையன் ஐயாவைக் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.

 சில கிழமைகள் கழித்து அவரின் மயிலம் ஊரில் உள்ள பூந்தோட்டம் இல்லத்திற்குச் சென்றேன். திருமடத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கட்டடத்தில் புதர்மண்டிய காட்டுப் பகுதியில் ஓர் அறைகொண்ட வீடு(?) இலவசமாக இவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இருந்த சில பழயை படங்கள், உள்ளிட்டவற்றை எனக்கு எடுத்துக்காட்டினார். பலமணி நேரம் உரையாடிப் புதுவை திரும்பினேன்.எங்கள் இல்லத்திற்கும் சில முறை வந்துள்ளார்.

 இருவரும் இணைந்து ஒருநாள் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள பெருமுக்கல் மலைக்குச் சென்றோம். சிந்துச்சமவெளி காலத்திற்கு முற்பட்ட அரிய குறியீடுகள் கொண்ட மலைப்பகுதி அது.அழகிய சிவன்கோயில் பெருமாள்கோயில்கள் உள்ளன. பண்டைய படையெடுப்புகளால் அக்கோயில் சிந்தைந்து கிடக்கின்றன. மலைப்பகுதிகளை உடைத்துச் சாலை அமைக்க மலையைச் சிதைத்துவிட்டார்கள் (இது பற்றி தினமணி-கொண்டாட்டம் பகுதியில் முன்பு எழுதியுள்ளேன்). அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கற்கோயிலைக் காண விரும்புபவர்கள் பெருமுக்கல் மலைக்குச் செல்லலாம்.

 பல கல்வெட்டுகளைக் காட்டியும்,அந்த மலைப்பகுதியை வெளியுலகிற்குக் கொண்டு வந்த முறையையும் எனக்கு ஐயா எடுத்துரைத்தார்கள். அகவை முதிர்ந்த நிலையிலும் கடும்வெயிலைப் பொருட்படுத்தாமல் என்னுடன் வந்தார்கள். இருவரும் மலைமீது ஏறி ஒருநாள் தங்கியிருந்தோம். அந்த மலையின் ஒவ்வொரு கல் பற்றியும் கதை சொன்னார்கள். அரிய பயணப்பட்டறிவு எனக்குக் கிடைத்தது. இவர்தான் இம்மலை பற்றிய ஆய்வை வெளியுலகிற்கு ஆசியவியல் நிறுவனம் வழியாகக் கொண்டுவந்தவர். கீழ்வாளை உள்ளிட்ட வேறு சில ஊர்களின் அருமை பெருமைகளையும் ஐயாதான் எனக்கு எடுத்துரைத்தார்.

 அத்தகு பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய புலவர் கண்ணையனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிகிறேன். (கற்பவர்கள் உரியவகையில் இக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். களவாடித் தங்கள் பெயரில் வெளியிடவேண்டாம் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு என் படைப்புகளைத் தழுவியும் வஞ்சித்தும் பிறர் இதற்கு முன் தங்கள் பெயரில் வெளியிட்டு வரும் படைப்புகளையும் அவை தாங்கிய இலக்கிய ஏடுகளையும் தொகுத்து வைத்துள்ளேன். விரைவில் வெளியிட இருக்கும் என் புத்தகவெளியீட்டு விழாவில் இவை காட்சியாக வைக்கப்பட உள்ளது).

 புலவர் பா.கண்ணையன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலம் அருகில் உள்ள கொல்லியங்குணம் என்ற சிற்றூரில் 17.03.1932 இல் பிறந்தவர். பெற்றோர் ஆ. பாலசுப்பிரமணியப் பிள்ளை - அலமேலம்மாள். தற்பொழுது மயிலத்தில் உள்ள பூந்தோட்டத்தில் வாழ்ந்துவருகிறார். கொல்லியங்குணம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கிய கண்ணையன் அவர்கள் மயிலம் மாவட்டக்கழகத் தொடக்கப்பள்ளியிலும், திண்டிவனம் குசால்சந்து உயர் தொடக்கப்பள்ளியிலும் இளமைக்கல்வியை முடித்து, மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகம் வழியாக வித்துவான் பட்டம் பெற்றார்.

 ஓலைச்சுவடிகளைப் படித்தல், எழுதுதலில் வல்லவர். முகவரி அட்டையை ஓலையில் எழுதிவைத்திருப்பவர். கல்வெட்டுப் படிப்பதில் வல்லவர். கிராம கர்ணமாகப் பணியாற்றியவர். இவர் பணியாற்றிய 29 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் நற்சான்று பெற்றவர். தமிழ்நாடு அரசு 1980ஆம் ஆண்டு கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்புச்சட்டம் இயற்றியபொழுது பணியிழந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் 1988-1992 வரை திட்ட ஆய்வாளராகப் பணிபுரிந்தவர்.

 வழக்கொழிந்த தமிழ்க்கணிதத்தை நிலைநாட்ட "தமிழ்ச்சுவடிகளில் எண்கணிதம்" என்ற தலைப்பில் ஒரு கணக்கு நூலை வெளியிட்டுள்ளார். இப்பொழுது செம்மொழி நடுவண் நிறுவனம் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு தமிழ்க் கணக்குகளைப் பாடமாகப் பயிற்றுவித்து வருகின்றார். தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணியாற்ற ஊர் ஊராகச் சென்று பணிபுரிகின்றார்.

 இவருடன் பிறந்த தம்பி ஒருவர் உள்ளார்.இவருக்கு மூன்று ஆண்மக்கள் உள்ளனர்.

 தினமணி கதிரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் ஊரில் இன்றும் நடைபெறும் இந்திரவிழா பற்றி எழுதியுள்ளார். எழுதுகோல்கள், கல்வெட்டுக்கதைகள் முதலியவை முதன்மையானவை. தமிழ் ஓசை நாளிதழிலும் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதியவர்.

 திருவாலங்காட்டுச் செப்பேடு, விழுப்புரம் மாவட்டம் எசலம் செப்பேடு ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஊரெல்லையைக் கொண்டு அக்காலத்திய வரைபடம் தயாரித்துள்ளார்.

 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நில எல்லைகொண்டும் அப்போதைய ஆவணங்களைக் கொண்டும் ஆவணக் காப்பகத்திலுள்ள ஆவணங்களைக் கொண்டும் தற்பொழுதைய ஊர்க்கணக்குகளைக் கொண்டும் அந்த நிலத்தை அடையாளம் காட்டும் திறன்பெற்றவர்.

 சான்றாகக் கி.பி.1053 ஆம் ஆண்டு இராசாதி ராச சோழனால் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை இறைவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு 1948 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி 1951 ஆம் ஆண்டில் இரத்து செய்தது. அவ்வாறு செய்யப்பட்ட விவரத்தைக் கண்டுபிடித்து வெளியுலகிற்கு உணர்த்தி அந்த நிலம் இறைவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளது.

 செஞ்சி வட்டத்தில் உள்ள அண்ணமங்கலம் மலைக்குகையில் சிங்கச் சிற்பத்தின் கண்புருவம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டாக அமைந்திருப்பதையும் வடவெட்டி ஊரில் தேவனூர் கோயிலில் நாட்டியமாடிய மாணிக்கத்தாளுக்குத் தேவராயரால் வழங்கப்பட்ட நிலமானியக் கல்வெட்டில் அந்தப் பெண் நாட்டியமாடுவதை வரைகோட்டுச் சிற்பமாக அமைத்திருப்பதையும் இதுபோன்ற பல வியப்புக்குரிய கல்வெட்டுகளையும் கண்டுபிடித்திருப்பதை இவரின் தமிழ்ப்பணியாகக் குறிப்பிடலாம். இவரின் ஆய்வுகள் நீதி மன்றப் படிக்கட்டுகளுக்குப் பலரை அழைத்தது. பலர் வேலையிழந்தனர். சிலர் பணி மாறுதல் பெற்றனர்.

 77 அகவையிலும் இந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஓய்வின்றி உழைப்பதை உரியவர்கள் உணர்ந்து தமிழ்ப்பணிக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்வார்களாக!

3 கருத்துகள்:

தேவநேயன் - தோழமை சொன்னது…

VANAKKAM, VERY EXCELLENT ARTICLE, NEED OF THE HOUR, CONGRATES ANNA

Devaneyan

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல கட்டுரை.நீங்கள் அரிது முயன்று தொகுத்துப் போடும் கட்டுரையைப் பிறர் திருடி போடுவது மனதிற்கு வருத்தத் தருகிறது.

செல்வா சொன்னது…

இன்றே படிக்க நேர்ந்தது. அருமையான பதிவு இளங்கோவன்! தொடர்ந்து நற்றமிழில் எழுதுங்கள்!