[மலேசியாவில் திருமகள் அச்சகத்தை நடத்திய தமிழாசிரியர் சி. வேலுசுவாமியின் தலைமகனார் வே.கிருஷ்ணன் ஆவார். இவர் திருமகள், பக்தி இதழின் வெளியீட்டாளராக விளங்கியவர். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மலேசியாப் பதிப்பில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து, மொழிபெயர்ப்புச் செய்திகளை அவ்விதழுக்கு எழுதி வழங்கியவர் (1970-1974). விளையாட்டு, திரைப்படச் செய்திக் கட்டுரைகளையும் எழுதியவர். மலேசியப் பதிப்பு வரலாற்றில் இவர்தம் பணிகள் நினைவுகூரப்படும் தரத்தினவாகும்].
மலேசியாவுக்கு நான் செல்லும்பொழுது மகிழ்ச்சியுடன் சந்திக்க நினைக்கும் நண்பர்களுள் பதிப்பாளர் வே. கிருஷ்ணன் அவர்கள் முதன்மையானவர். இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும் தமிழறிஞருமான சி. வேலுசுவாமி அவர்களின் தலைமகனார் ஆவார்.
மலேசியாவில் வாழ்ந்த சி. வேலுசுவாமி அவர்களின் தமிழ்ப்பணியை அவரின் மறைவுக்குப் பிறகே என்னால் அறியமுடிந்தது. அன்பர் வேங்கடரமணி அவர்கள் வழியாக வேலுசுவாமி குறித்த விவரங்கள் எனக்குக் கிடைத்தன. சி. வே. அவர்கள் திருக்குறளுக்கு உரை வரைந்த பெருமைக்குரியவர். இவர்தம் உரை குறித்து ஒரு அறிமுகக் கட்டுரையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியமையும், இந்து தமிழ் நாளிதழில் வேலுசுவாமியாரின் இலக்கியப் பங்களிப்பினை அறிமுகம் செய்து ஒரு அறிமுகக் கட்டுரையை எழுதி வெளியிட்டமையும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. இப்பணிகளை அறிந்த வேலுசுவாமியாரின் மகனார் வே. கிருஷ்ணன் அவர்கள் நான் மலேசியாவுக்குச் செல்லும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு உரையாடுவதும் உயர்தர உணவகங்களுக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பி என்னை அனுப்பிவைப்பதும் வழக்கமாகும். சிலவாண்டுகளுக்கு முன்னர் வேலுசுவாமியாரின் நூல்கள் சிலவற்றை அஞ்சலில் அனுப்பிப் படித்துப் பார்க்குமாறு கூறியதை நன்றியுடன் இன்றும் போற்றுகின்றேன். வேலுசுவாமியார் தொடங்கி நடத்தி, வே. கிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் நடந்த திருமகள் அச்சகத்தை ஒருமுறை சென்று பார்த்தமையும் நினைவுக்கு வருகின்றது. இவை யாவும் எனக்கும் கிருஷ்ணன் ஐயாவுக்கும் இடையில் அமைந்த அன்பினை வெளிப்படுத்தும் சில சான்றுகளாகும்.
சிலவாண்டுகளுக்கு முன்னர் மலேசியா செல்லும்பொழுது என் வருகையை அவருக்குத் தெரிவித்திருந்தேன். தாம் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வெளியில் அதிகம் செல்வதில்லை எனவும் எனவே இந்த முறை தங்களைச் சந்திக்க வாய்ப்புக் குறைவு என்பதுபோல் எனக்குத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டு, தம் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் என்னைச் சந்திக்க வந்து, வழக்கம்போல் என்னை அழைத்துச் சென்று உணவருந்த வைத்த அப்பெருந்தகையின் அன்புக்கு இணை ஏது?.
தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தேடி ஒருமுறை மலேசியாவுக்குச் சென்றபொழுது வே. கிருஷ்ணன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது அவரின் பணிகளை அறியும் நோக்கில் வாழ்க்கைக் குறிப்பினை எனக்கு விடுத்துவைக்குமாறு சொன்னேன். அப்பொழுது நடைபெற்ற உரையாடலில், தாம் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழில் மலேசியப் பதிப்பின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய (1970 முதல் 1974 வரை) தம் பட்டறிவைப் பகிர்ந்துகொண்டார். எனக்கு வியப்பு மேலிட்டது. தமிழ் முரசு அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். நேரக் குறைவின் காரணமாக விரிவாக எங்கள் உரையாடல் அப்பொழுதுத் தொடர இயலாமல் போனது. மலேசியப் பயணத்தை அன்றைய நாளில் முடித்தக் கையுடன் சிங்கப்பூருக்கு அப்பொழுது செல்ல நேர்ந்தது.
சிங்கப்பூரில் தங்கியிருந்தபொழுது தமிழ்முரசு
அலுவலகம் சென்று தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) நூலினை
ஆசிரியர் த. இராஜசேகர் அவர்களிடம் கையளிக்க நினைத்தேன். செம்மொழி இதழாசிரியர் அண்ணன்
திரு. எம். இலியாஸ் அவர்களும் மக்கள் மனம் ஆசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும்
சந்திப்புக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அவர்களும் தமிழ் முரசு அலுவலகத்திற்கு உடன்
வந்து உதவியமை - உரையாடியமை என் வாழ்வின் இனிய பொழுதுகளாகும்.
இர்ஷாத் முஹம்மது, இராஜசேகர், மு.இளங்கோவன், பிச்சினிக்காடு இளங்கோ
மு.இளங்கோவன், தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர்
மு.இளங்கோவன், தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர்
தமிழ் முரசு ஆசிரியர் த. இராஜசேகர் அவர்கள் எங்கள் வருகையை அறிந்து, வாயிலில் வந்து வரவேற்று அன்புடன் அழைத்துச் சென்று உரையாடியமை என் வாழ்வில் தமிழ் தந்த பேறாக நினைக்கின்றேன். அந்நேரத்தில் தமிழ்முரசின் தமிழ்த்தொண்டு என்ற பெயரில் நூல் வெளியிட்டுள்ள நெல்லை இரா. சண்முகம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் முரசு ஆசிரியர் த இராஜசேகர் அவர்கள் மிக மகிழ்ந்து, தமிழ் முரசு இதழ் நூற்றாண்டை நோக்கி நடையிடும் இதழ் எனவும், இதில் தொடக்கக் காலத்தில் பணிபுரிந்தவர்களின் விவரங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது கிடைத்துவருகின்றது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தமிழ் முரசுவின் சிறப்பு வெளியீடுகளை எனக்குப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார்கள். அந்த நேரத்தில் நான் மலேசியாவில் தமிழ் முரசு இதழின் செய்தி ஆசிரியராக 1970 முதல் 1974 வரை பணியாற்றிய வே. கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தமை பற்றியும், தமிழ் முரசு இதழுக்கு அமைந்த அவரின் மொழிபெயர்ப்புப் பங்களிப்புகளையும் பகிர்ந்துகொண்டேன். இயன்றால் வே. கிருஷ்ணன் குறித்த விவரங்கள் கிடைத்தால் அனுப்பிவைக்கின்றேன் என்று கூறித் தமிழ் முரசு ஆசிரியரிடமிருந்து விடைபெற்று மீண்டேன். காலங்கள் உருண்டோடின.
கடந்த ஆறு திங்களுக்கும் மேலாக வே. கிருஷ்ணன் அவர்களைக் குறித்த விவரங்களைக் கேட்டும் அவர்களின் உடல்நலத் தளர்ச்சியால் எனக்கு அனுப்பிவைக்க அவரால் இயலவில்லை. சில திங்களுக்கு முன்னர் மீண்டும் வே. கிருஷ்ணன் அவர்களை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. தம் தந்தையார் குறித்து ஐந்நூறு பக்க அளவில் சிறப்பு மலர் ஒன்று வெளியிட உள்ளதாகத் தெரிவித்து, அம்மலரைப் பார்வையிட்டு, வாழ்த்துரை வழங்குமாறு தெரிவித்தார்கள். தமிழகம் திரும்பிய பிறகு சிறப்பு மலரின் மென்படி மின்னஞ்சலில் வந்தது. படியெடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அன்பு மேலீட்டால் அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் மலரைச் செப்பமிட்டு, வாழ்த்துரையுடன் அஞ்சலில் அவருக்கு அனுப்பிவைத்தேன். அது தொடர்பில் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, வே. கிருஷ்ணன் அவர்கள் மலேசிய இதழியல் வரலாற்றில் ஒரு முதன்மையான ஆளுமை என்பதை மீண்டும் அறிந்துகொண்டேன். பதிப்புத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
வே. கிருஷ்ணன் அவர்களின் தந்தையார் சி. வேலுசாமி குறித்த சிறப்பு மலர் வெளிவந்தால் மலேசியாவில் வெளிவந்த பல இதழ்களைப் பற்றியும் அவற்றைப் பொறுப்பேற்று நடத்திய இதழாசிரியர்கள், அச்சகங்கள் குறித்த விவரங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். உண்மைகளைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்தும் ஆய்வறிஞர்கள் குறைந்துவரும் தமிழகச் சூழலில் எனக்கு உரையாடக் கிடைத்த வே. கிருஷ்ணன் அவர்களிடம் பெற்ற செய்திகளை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
வேலுசுவாமி கிருஷ்ணன்
வே. கிருஷ்ணன் அவர்கள் 05. 12. 1947 இல் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பானில் வாழ்ந்த சி. வேலுசுவாமி, மு. இலெட்சுமி ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர். இவருடன் நாகேசுவரி, உமா மகேஸ்வரி, பாலச்சந்திரன், நந்தகுமார், செந்தமிழ்ச்செல்வி, முரளிதரன், ஜோதிமலர் ஆகியோர் உடன்பிறப்புகளாகப் பிறந்தனர்.
வே. கிருஷ்ணன் அவர்கள் இளம் அகவையில் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்று ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக விளங்கியவர். இவருக்குத் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழி நன்கு தெரியும். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் உள்ள La Salle பள்ளியில் பயின்றவர். இடைநிலைக் கல்வியை St John’s Institution – இல் பயின்றவர். 1963 இல் இளநிலைக் கல்வியியல் சான்றிதழ்ப் படிப்பினையும் (Lower Certificate of Education), 1965 இல் முதுநிலை கேம்பிரிட்ஜ் படிப்பினையும் (Senior Cambridge) முடித்தவர். 1967 இல் உயர்நிலைச் சான்றிதழ்ப் படிப்பைப் படித்து முடித்தவர் (Higher School Certificate). படிப்பு நிறைவுற்றதும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி ஆசிரியராகவும், தற்காலிக ஆசிரியராகவும் மூன்றாண்டுகள் பணியாற்றியவர்.
தமிழ் முரசு அலுவலகத்தில் ஏதேனும் பணிபுரியலாம்
என்று சென்று வேலை கேட்டவருக்கு, அப்பொழுது தமிழ் முரசுவின் மலேசியாப் பதிப்பின் ஆசிரியராக
இருந்த இரமாகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலத்தில் இருந்த சில செய்திகளைத் தமிழில் பெயர்த்து
வழங்குமாறு வே. கிருஷ்ணனிடம் கூறினார். இவரும் அதனை மறுக்காமல் செய்தார். அந்தச் செய்திகள்
நாளிதிழில் இடம்பெறத் தொடங்கின. அப்பொழுது மொழிபெயர்ப்புப் பிரிவில் இருந்த திரு. கேசவன்
அவர்கள் வே. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு ஆற்றலை அறிந்து, ஆலோசனைகள் வழங்கி, தமிழ் முரசு
இதழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார். செய்திக் கட்டுரைகள் எழுதவும், முதன்மை விருந்தினர்களைச் சந்திக்கும் செய்தியாளர்
சந்திப்புகளுக்குச் செல்லவுமாகத் தமிழ் முரசுவில் இவரின் பணி மிகச் சிறப்பாக இருந்தது.
அவ்வகையில் இந்தியக் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி மலேசியாவுக்குச் சென்றபொழுது (1973
மார்ச்சு 4 முதல் 09.03.1973 வரை) அவரின் பயணம் குறித்த விரிவான செய்திகளை வெளியிடும்
பொறுப்புக் கிருஷ்ணனுக்கு அமைந்தது. கோலாலம்பூரிலிருந்து பினாங்குவரை விமானத்தில் வி.
வி. கிரியுடன் சென்ற செய்தியாளர் குழுவில் வே. கிருஷ்ணனும் இடம்பெற்றிருந்தார் என்பது
இவரின் செய்தி சேகரிக்கும் திறனுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.
வே. கிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். கால்பந்து, இறகுப்பந்து விளையாடுவதில் பெரும் நாட்டம் கொண்டவர். எனவே இத்துறை சார்ந்த செய்திகளைத் தமிழ் முரசு இதழில் ஆர்வமாக எழுதி வெளிவரச் செய்தவர்.
அக்காலத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மலேசியாவுக்குச் சென்றால் அவர்களை நேர்கண்டு எழுதும் பணியையும் வே. கிருஷ்ணன் செய்துள்ளார். அவ்வகையில் "நடிகவேள்" எம். ஆர். இராதா, ஹேமமாலினி, வீணை வித்துவான் பாலச்சந்தர், எஸ். பி. பாலசுப்பிரமணியன், ஏ. எம் இராஜா, ஜிக்கி, சந்திரபாபு, சோ இராமசாமி, டனால் தங்கவேல் சரோஜா, சி.ஐ.டி. சகுந்தலா, ஆர் எஸ். மனோகர் (இலங்கேஸ்வரன் நாடகம்) முதலான கலைஞர்களைக் கண்டு உரையாடி செய்தி வெளியிட்டதை வே. கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கின்றார்.
மலேசியா, சிங்கப்பூரில் Shaw Brothers திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியிலும் திரையிடும் துறையிலும் முன்னணியில் இருந்தனர். இவர்களின் தலைமையகம் ஹாங்காகாக இருந்தது. பின்னர் 1930 அளவில் சிங்கப்பூரிலும் இவர்களின் தொழில் விரிவடைந்தது. இவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற ஊர்களான கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, சோகூர்பாரு முதலான ஊர்களில் திரையரங்குகளைக் கட்டித் திரைப்படங்களை வெளியிடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இவர்கள் பத்திரிகையாளர்களுக்குத் திரைப்படத்தின் முதல் காட்சியைத் திரையிட்டுக் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் படங்களைப் பார்த்து, வே. கிருஷ்ணன் பல திரைப்படங்களுக்கு அறிமுகம் (விமர்சனம்) எழுதியுள்ளார். அவ்வகையில் கோலாலம்பூரில் இருந்த இந்துஸ்தான் தியேட்டர் புகழ்பெற்ற திரையரங்கமாகும்.
சிங்கப்பூரிலிருந்து Indian Movi News என்ற பெயரில் திரைப்படச் செய்திகளைத் தாங்கிய இதழ் வெளியானது. அதன் ஆசிரியர் சர்மா என்பவர் ஆவார். செய்தித்தாளின் பாதிப்பகுதித் தமிழிலும் மீதிப் பகுதி ஆங்கிலத்திலும் இருக்கும். இந்த நாளிதழைத் திரைப்பட ஆர்வலர்கள் விரும்பிப் படிப்பார்கள். இதுபோன்ற இதழ்கள் வே. கிருஷ்ணன் அவர்களுக்குத் திரைத்துறைச் செய்திகளை எழுதுவதற்கு முன்மாதிரி இதழ்களாகப் பயன்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து வெளிவரும் பல்வேறு இதழ்களைப் படிக்கவும் உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் வே. கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழ்முரசு இதழ்ப்பணி பேருதவியாக இருந்துள்ளது.
தமிழ் முரசு மலேசியப் பதிப்பு இதழில் இடம்பெற்ற திரைத்துறைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் முதலியவற்றை எழுதுவதும், இராய்டர் நிறுவனம் ஆங்கிலத்தில் அனுப்பும் பன்னாட்டுச் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதும் வே. கிருஷ்ணனின் பணியாக இருந்தது. அதுபோல் மலேசியாவில் வெளியான Star, State Echo, State Times முதலான ஆங்கில நாளேட்டுச் செய்திகளைப் படித்தும் தேவையான செய்திகளை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்தவர். வே .கிருஷ்ணன் தமிழ்முரசு மலேசியப் பதிப்பு இதழில் அக்காலத்தில் பணியாற்றிய இராமகிருஷ்ணன், மொகைதீன், இராஜா, மு. சு. மணியம், கேசவன் முதலான பத்திரிகையாளர்களை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்.
வே. கிருஷ்ணன் அவர்கள் 1969 இல் பார்வதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார்.
தமிழ் முரசு இதழிலிருந்து விலகியதும் வே.
கிருஷ்ணன் அவர்கள் தம் தந்தையார் நடத்தி வந்த அச்சுக்கூடத்தின் பொறுப்பினை ஏற்றார்.
தந்தையார் விரும்பியவாறு திருமகள், பக்தி முதலான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்து இதழினைத்
தரமுடன் நடத்தினார். கையால் அச்சுக் கோர்க்கும் முறையிலிருந்து அச்சுத்தொழில் கணினித்
துறைக்கு மாறிய பொழுது, கணினி வசதியுடைய அச்சகமாகத் தம் அச்சகத்தை மாற்றினார். பாரதி,
ஸ்ரீலிபி முதலான எழுத்துருக்களைப் பயன்படுத்தி, அழகிய வண்ண அச்சில் தாம் நடத்திய இதழ்களை
வே. கிருஷ்ணன் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்தார். அதுபோல் மலேசியாவில் வெளியிடப்பட்ட
கோவில் அழைப்பிதழ்கள், சிறப்பு மலர்கள், பள்ளிப் பாட நூல்களையும், பல்கலைக்கழகத்தின்
கருத்தரங்கக் கட்டுரைகளையும் அச்சிட்டு, மலேசியாவில் பதிப்புத்துறையில் புகழ்பெற்ற
பதிப்பாளராக வே.கிருஷ்ணன் விளங்கி வருபவர். இவர்தம் மேற்பார்வையில் மலேசியாவில் நூற்றுக்கணக்கான
நூல்கள் திருமகள் அச்சகத்தின் உதவியால் வெளிவந்துள்ளன. முதுமையும் உடல்தளர்வும் பணிசெய்ய
விடாமல் தடுத்தாலும் தம்மால் இயன்ற அச்சுப் பணிகளைத் தொடர்ந்து செய்து, பிறருக்கு உதவியாக
வாழ்ந்துவருகின்றார் இந்தப் பதிப்புத்துறை ஆர்வலர்.


.jpeg)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக