நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 5 ஜூலை, 2010

இலங்கை எழுத்தாளர் கலாபூசணம் புன்னியாமீன் நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன...

கலாபூசணம் புன்னியாமீன் 

     இலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர்.உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன்.இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள். தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

    1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும், ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன். 1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

     கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான 'ஞாயிறு தினக்குரலில்' எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது. இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’ எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர். 

     பயிற்றப்பட்ட கணித, அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது, பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர். ‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

புன்னியாமீன் ஐயா அவர்களின் இணைய முகவரி தந்தால் உதவியாக இருக்குமே!