நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
யாழ்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

சிட்னியில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலைத் திறப்பு…

  

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி (29.03.2024)
குணரத்தினம் ஐயா, மனோ அம்மா, பேராசிரியர் பாலசுந்தரம், சந்திரிகா சுப்பிரமணியம், அனகன் பாபு, மன்னர் மன்னன், மு.இளங்கோவன்

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி

  ஆத்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டும் என்று அங்கு வாழும் உதயசூரியன் இதழாசிரியர் திரு. குணரத்தினம் அவர்கள் பலவாண்டுகளாக முயற்சி செய்துவந்தார்கள். 2019 ஏப்ரல் திங்களில் நான் முதல் முறையாக ஆத்திரேலியா சென்றபொழுதும் என்னிடம் நேரில் நினைவூட்டினார்கள். அன்று முதல்  ஒற்றை மாந்தராகக் கடுமையாக உழைத்து, ஒரு சிலையை நிறுவுவதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து, நிறைவாகச் சிலையைத் திறப்பதற்கு நாளும், நேரமும் குறித்தார்கள். சிலைத்திறப்பின் பொழுது அடிகளாரின் பெருமைகளை நினைவுகூரும் கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகளைத் திரட்டி, நினைவு மலர் ஒன்று வெளியிடவும் முனைந்தார்கள். 

விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு நிகழ்வில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என்ற வகையில் பலரையும் மகிழ்ச்சியுடன் விழாக்குழுவினர் அழைத்தார்கள். அவ்வகையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கி, அடிகளாரின் பெருமைகளை உலக அரங்கில் அனைவரும் மீண்டும் நினைவுகூர்வதற்கு வழியேற்படுத்திய நானும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி, திருவாளர் குணரத்தினம் ஐயா  அவர்களும் அவர்களின் துணைவியார் மனோ அம்மா அவர்களும் எனக்கும் அன்பு அழைப்பு விடுத்தார்கள்.  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும் பணிச்சுமையும், முன்பே ஏற்றுக்கொண்ட சில பணிகளும், குடும்பப் பொறுப்புகளும் மனத்துக்குள் தயக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும் திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் அன்பும் அம்மா அவர்கள் என் மீது காட்டும் பாசமும் ஆத்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தன. 

அந்த நாட்டிற்குச் செல்வதற்கு நுழைவுச் சீட்டு எடுக்கும் பணியில் முனைந்தபொழுது என் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் நலம் என்று பயண முகவர் குறிப்பிட்டார். உடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இரண்டு கிழமையில் கடவுச்சீட்டின் புதுப்பித்தல் பணி முடிந்தது. பின்னர் நுழைவுச்சீட்டினைப் (விசா) பெறுவதற்குரிய ஆவணங்களைத் திரட்டி, அதனையும் குறிப்பிட்ட நாளுக்குள் பெற்றேன். இவை யாவும் முடிவதற்குள் விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. இறுதி நேரத்தில் பயணத்தை உறுதிப்படுத்தியதால் வானூர்திச் சீட்டு விலை அதிகமாக இருந்தது. எனினும் ஆத்திரேலியா நாட்டிற்குச் செல்வதையும் அடிகளார் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதையும் மகிழ்ச்சியான தமிழ்க் கடமையாக ஏற்றுக்கொண்டு, புறப்பட்டேன். 

ஆயிடை, 

சிட்னியில் 29.03.2024 இல் நடைபெறும் விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு விழாவில் கனடா நாட்டிலிருந்து பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களும், அவர்களின் துணைவியாரும், மலேசியாவிலிருந்து ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும், இலங்கையிலிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்துப் பொறுப்பாளர்களும், மெல்பர்ன் நகரத்திலிருந்து எழுத்தாளர் செயராம சர்மா, பொறியாளர் நடேசன் சுந்தரேசன், வழக்கறிஞர் “பாடும்மீன்” சிறீ கந்தராசா உள்ளிட்ட தமிழ் அன்பர்களும் கலந்துகொள்ள உள்ளதை அறிய முடிந்தது. அனைவரும் முதல் நாளே சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

29.03.2024 மாலை 5 மணிக்கு, சிட்னி, துர்க்கையம்மன் கோவிலின் அரங்கத்தில் விழாவில் கலந்துகொள்ளும் நோக்கில் விபுலாநந்த அடிகளார் மீது அன்புகொண்டிருந்த தமிழன்பர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். எழுத்தாளர் மாத்தளை சோமு ஐயா, வழக்கறிஞர்  மாறன் நந்தன் சிதம்பரம், வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன், தொழிலதிபர் அனகன் பாபு, “இன்பத் தமிழ் ஒலி” பிரபாகரன் பாலசிங்கம், “தாயகம் ஒலிபரப்புச் சேவை” பாலா விக்னேஸ்வரன், ஒளி ஓவியர் இலாவண்யன், கண்ணன் உள்ளிட்ட நண்பர்களை அரங்கில் கண்டு உரையாடியமை மகிழ்ச்சியளித்தது. அரங்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விபுலாநந்த அடிகளாரின் சிலை, அறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மலர்தூவி அனைவரும் அடிகளார் படிமத்தை வணங்கினோம். பின்னர் அரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்வில் அடிகளாரின் பெருமைகளை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களாகிய நாங்கள் அரங்கில் இருந்த ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தோம். விழா மலரும், நினைவு விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டன. 

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் உருவாக்கியமையாலும், சிவாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைத் தோற்றுவித்ததாலும், இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக இருந்து, சமயப்பணிகள் பல ஆற்றியதாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, அளப்பரிய தமிழ்த்தொண்டாற்றியதாலும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைபெற்று வாழ்வார். அடிகளாரின் சிலையைச் சிட்னியில் நிலைபெறச் செய்தமையால் திரு. குணரத்தினம் அவர்களும் நீடுபுகழ் பெற்று, நெடுவாழ்வு வாழ்வார் என்பதில் ஐயமில்லை.


குணரத்தினம்  அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்


விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி


மாத்தளை சோமு, ந. சுந்தரேசன், மு.இளங்கோவன், இலாவண்யன்








ஒளி ஓவியர் கண்ணன், மு.இளங்கோவன்



 

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இசைத் தமிழின் இலங்கை முகம்!



பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர்.

1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவு என்னும் ஊரில் விபுலாநந்தர் பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன். காரைத்தீவு, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், கொழும்பில் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர். ‘கேம்பிரிட்ஜ்’ தேர்வு எழுதி இளம் அறிவியல் பட்டமும் பெற்றிருக்கிறார். தனது 24-வது வயதில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இலங்கைக் குடிமகன் இவர்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தி யாழ்ப்பாணம் சென்றபோது அவரை வரவேற்ற பெருமை விபுலாநந்தருக்கு உண்டு.

துறவறம்

திருவிளங்கம் எனும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வாழ்வின் மீது பற்றிழந்த நிலைக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் 1922 முதல் 1924 வரை துறவறப் பயிற்சி பெற்றார். பிரமச்சரிய காலத்தில் ‘பிரபோத சைதன்யர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. 1924-ல் சிவானந்தரால் ஞான உபதேசம் பெற்றார். அவருக்கு ‘விபுலாநந்தர்’ என்ற பெயர் அமைந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

பின்னர், 1925 முதல் 1931 வரை இலங்கையில் பல்வேறு பள்ளிகளை ஏற்படுத்தினார். தனக்கு ஞான உபதேசம் செய்த குருநாதர் நினைவாக மட்டக்களப்பில் ‘சிவானந்த வித்யாலயம்’ என்ற பெயரில் பள்ளியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற வழிவகுத்தார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கருத்துகளை இலங்கையில் பரப்பி, ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

அண்ணாமலை அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் அழைப்பின் பேரில் 1931 முதல் 1933 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது, விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பதஞ்சலி யோகசூத்திரம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதிலும் முன்னோடியாக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கும் அவர், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

தமிழறிஞர்களின் நட்பு

உ.வே.சா, ஞானியார் அடிகள், திரு.வி.க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை. துரைசாமிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பேராசிரியர் க.வெள்ளைவாரணன் உள்ளிட்ட அறிஞர்களுடன் நல்லுறவு கொண்டவர்.
ராமகிருஷ்ண விஜயம், பிரபுத்த பாரதம் (ஆங்கிலம்), வேதாந்த கேசரி, விவேகானந்தன் (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிந்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், ஞானியார் மடம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும், சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களிலும் இசைத் தமிழ்ச் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றியவர். அவரது உரைகளை அக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழ் பதிவுசெய்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் யாழ் குறித்த குறிப்புகளையும், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் யாழ் பற்றிய குறிப்புகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து, ‘யாழ்நூல்’ என்ற நூலை 1947-ல் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்குப் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த கோனூர் ஜமீன்தார் இராம. பெரி. பெரி. சிதம்பரம் செட்டியார் பொருளுதவியும் ஆதரவும் தந்துள்ளார். விபுலாநந்தரின் மீது பற்றுகொண்ட சிதம்பரம் செட்டியார், பதினோராயிரம் சதுரஅடி பரப்பளவுகொண்ட தனது வீட்டினை வழங்கி, ஆய்வுக்கு உதவினார். அந்தச் சமயத்தில் விபுலாநந்தரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இறுதி ஆசை

அந்த நூல் வெளியிடப்பட்டால் தனது உடல்நிலை தேறிவிடும் என்று விபுலாநந்தர் நம்பினார். அவரது விருப்பம் அறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழியாக நூல் அச்சேற வழிவகை செய்தார் சிதம்பரம் செட்டியார். அவரைப் போன்ற பலரும் விபுலாநந்தருக்கு உதவி செய்தனர்.

பேராசிரியர் க.வெள்ளைவாரணன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரின் உதவியுடன் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலில், 1947-ல் ‘யாழ்நூல்’ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, விபுலாநந்தர் உருவாக்கிய யாழினைச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை இசைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

‘யாழ்நூல்’ வெளிவந்த 44-வது நாள், கொழும்பு மாநகரில் உள்ள மருத்துவமனையில் இயற்கை எய்தினார் விபுலாநந்தர். அவரின் உடல் மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதைக்கப்பட்டு, சமாதி அமைக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் பல மதத்தவரும் கலந்துகொண்டு திருமறைகளை ஓதி வழிபட்டனர். அவரது நினைவு தினத்தைத் தமிழ்மொழி தினமாக அனுசரித்தது இலங்கை அரசு. அவரது கல்விப் பணியும் ஆன்மிகப் பணியும் இலங்கையில் பல்வேறு அறிவார்ந்த மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விபுலாநந்தர் உருவாக்கிய பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் இன்று கல்வியில் முன்னேறி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவரது வாழ்வின் மேன்மையைச் சொல்லும் செய்தி இது!

- மு.இளங்கோவன்,
புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர்.
விபுலாநந்தரைப் பற்றிய விரிவான ஆவணப்படத்தை உருவாக்கிவருபவர்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

நனி நன்றி: 
படம்: ஓவியக் கலைஞர் இரவி(புதுச்சேரி)

செவ்வாய், 4 அக்டோபர், 2016

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!




அன்புடையீர், வணக்கம்.

தமிழ் இலக்கியப் பரப்பினுள் யாழ் குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து, அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
வயல்வெளித் திரைக்களத்தினர்
புதுச்சேரி – 605 003
தொடர்புக்கு: 9442029053

நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன் அவர்கள்
வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்
தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்
(தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)

முன்னிலை: புலவர் . திருநாவலன் அவர்கள், திரு. சிவ. வீரமணி அவர்கள்

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைத் தொடங்கிவைத்தல்:
மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள்
முதலமைச்சர், புதுச்சேரி அரசு

திருக்குறள், இணையம் கற்போம் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை
 மாண்புமிகு வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்
(சட்டப்பேரவைத் துணைத்தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)

நூலின் முதல் படியினைப் பெறுபவர்:
 திரு. கி. வா. கா. பெருமாள் அவர்கள்
(துணைத்தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்)

அயல்நாட்டு விருந்தினர்கள்:
திரு. . மன்னர் மன்னன் அவர்கள் (மலேசியா)
திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் (கனடா)

வாழ்த்துரை

முனைவர் கு. சிவமணி அவர்கள் (ஆய்வறிஞர்)
முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்(புதுவைப் பல்கலைக்கழகம்)
முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்)
முனைவர் அரங்க பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

ஏற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
நன்றியுரை: முனைவர் உரு. அசோகன் அவர்கள்


அனைவரும் வருக!

வியாழன், 8 செப்டம்பர், 2016

சுவாமி விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு உதவுங்கள்!




யாழ்நூல் என்னும் அரிய நூலினைப் படைத்த தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பணிகள்(1892-1947) போதிய அளவு தமிழுலகுக்குத் தெரியாமல் உள்ளதை அண்மைக்காலமாக அறிகின்றேன். விபுலாநந்தரின் பன்முக ஆற்றலும் வெளிப்படும் வகையில் அவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். எனவே விபுலாநந்தர் தொடர்புடைய அறிஞர்கள், துறவியர்கள், ஆய்வாளர்கள், அன்பர்கள், பற்றாளர்கள், ஊரினர், உறவினர் தங்களிடம் உள்ள குறிப்புகள், படங்கள், கையெழுத்துப்படிகள், மடல்கள், நூல்கள் குறித்த விவரங்களை muelangovan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்டு பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தவத்திரு விபுலாநந்த அடிகளார் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்!







விபுலாநந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது க. வெள்ளைவாரணனார் மாணவராகப் பயின்றவர் ஆவார். இவர் விபுலாநந்தரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கியவர். விபுலாநந்தரின் யாழ்நூல் வெளியீட்டுக்கு உற்றுழி உதவியவராக க. வெள்ளைவாரணர் விளங்கியுள்ளார். யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வரைந்தவர் நம் க. வெள்ளைவாரணர் ஆவார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற மடல் போக்குவரவை அறியும் வகையில் அண்மையில் சில மடல்கள் கிடைத்தன. யாழ்நூல் வெளியிட நம் விபுலாநந்த அடிகளார் பட்ட பாடுகளை இந்த மடல்கள் நமக்குக் காட்டுகின்றன. சான்றுக்குச் சில மடல்களை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். விபுலாநந்தர் மடல்களைத் தேடியபொழுது வெள்ளைவாரணர் அவர்களுக்கு உ.வே.சாமிநாதையர், நாவலர் சோமசுந்தர பாரதியார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வரைந்த மடல்களும் கிடைத்தன. ஓய்வில் அனைத்தையும் பார்வைக்கு வைப்பேன்.

விபுலாநந்தர் 23.09.1943 இல் எழுதிய மடல்:

முதல் பக்கம்:

ஆண்டவன் திருவருளை முன்னிட்டு அன்புள்ள தம்பி வெள்ளைவாரணத்துக்கு ஆசிர்வதித்து எழுதுவது. 17.08.43 கடிதம் உரிய காலத்திற் கிடைத்தது. 11.08.43 முதலாகப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றிவருகிறேன். தொடக்கமாதலினாலே நிரைப்பிடிக்க வேண்டியன பலவுள. பொதுவாகப் பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கும், சிறப்பாகத் தமிழ்ப் பகுதியின் ஆக்கத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் பல. ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமாகப் பிறநாட்டாருக்குத் தமிழின் பெருமையினை அறிவுறுத்தும்பணி இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாக அமையலாம். நிற்க.

நமது அண்ணாமலைப் பல்கலைக்கழக றிஜிஸ்டிறார் அவர்கள் இசை சார்பாக  மூன்று சிறப்பு விரிவுரைகள் செய்யவேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தார்கள். 2ஆந்தேதியிடப்பட்ட அவர்கள் கடிதம் 6ஆந்தேதி கோயம்புத்தூருக்குப் போய் 7 ஆந்தேதி அங்கிருந்து திரும்பி 9ஆந்தேதி கொழும்பிற்கு வந்தது. 12 ஆந்தேதி விடையெழுதினேன்.

பக்கம் 2

இம்மாதம் 25 க்கும் 28 க்கும் இடையில் விரிவுரைகளை வைத்துக்கொள்ளலாம் என்பது விடை. கடிதம் பிந்துதல்கூடுமாதலின் தந்திச்செய்தி அனுப்பினேன். அக்டோபர் 18 இன் பின் தேதி குறிக்கும்படி றிஜிஸ்டிறார் அவர்கள் எழுதினார்கள். அக்டோபர் 12 இல் இங்கு கலாசாலை தொடங்கிறபடியால் டிசம்பர் 11 இன் பின்வரலாம் என விடையெழுதினேன். இப்பொழுது வந்தால் ‘யாழ்நூல்’ பதிப்பையும் தொடங்கிவிட்டு வரலாமென எண்ணியுள்ளேன். அவ்வெண்ணம் முற்றுப்பெற்றிலது. உருவப்படங்கள் சில தயாராகியிருக்கின்றன. யாழ்க்கருவியை ஓரளவிற்கு உருப்படுத்தி அதிலிருந்து உருவப்படம் செய்யவேண்டுமென முயன்றுகொண்டிருக்கிறேன். அச்சிற்கு வேண்டிய தாள் கொஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது, இன்னும் வாங்க வேண்டுமெனத் திரு. அ. க. அவர்கள் எழுதினார்கள். அச்சுப்பிரதி மாதிரித்தாள் அனுப்புவதாகச் சொன்னார்கள். அதுவுங் கிடைத்திலது.

அண்மையிலே யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் போகிறேன்.

பக்கம் 3

இக்கடிதத்திற்கு விடை கீழே தந்திருக்கும் மேல்விலாசத்திற்கும் எழுதலாம். கொழும்புத் தமிழன்பர்கள் நகரமண்டபத்திலே பெருந்தொகையினராகக் கூடி வாழ்த்துரை பகர்ந்தார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலும் அவ்வாறு செய்ய அங்குள்ளோர் முயன்றுகொண்டிருப்பதாக அறிந்தேன். பல்கலைக்கழக ஏழை மாணவர் நிதிக்குப் பணம் திரட்டும் வாயிலாதல் கருதி நானும் இவ்வாழ்த்துக் கூட்டங்களுக்கு உடன்படலாயிற்று.

அன்புள்ள

விபுலாநந்தர்

தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் க. வெள்ளைவாரணருக்காக வரைந்த பரிந்துரைக் கடிதம்



நன்றி: பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் குடும்பத்தினர்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் தொடர்புடைய அரிய மடல்…



விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் பதிப்பித்தல் தொடர்பான மடல் 


தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் 1947, 1974, 2003 ஆகிய ஆண்டுகளில் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது. யாழ்நூல் உருவாக்கத்திற்குப் பத்தாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது என விபுலாநந்த அடிகளார் தம் முன்னுரையில் குறித்தாலும் (பக்கம்.27:1947) முன்னுரை எழுதிய ஐந்தாண்டுகள் கழித்துதான் நூலுக்கு முடிவுரை எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. எனவே சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விபுலாநந்தரின் அறிவு, உழைப்பை ஈடாகப் பெற்றே யாழ்நூல் வெளிவந்துள்ளது.


யாழ்நூலை எழுதி முடிக்க அடிகளார் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திதுள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல்(1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல்(1943 - 47), கடுங்காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் அடிகளாரை வாட்டியுள்ளன. ஆயின் யாழ்நூலை அச்சிடுவதே தம் நோய்தீர்க்கும் மருந்து என்று நண்பர்களிடம் குறிப்பிடவும், புதுக்கோட்டையில் வாழ்ந்த தமிழ்வள்ளல் இராம. சிதம்பரம் செட்டியார் அவர்கள் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து ஏந்துகளையும் செய்து தந்து ஆதரித்தார். 14,000 சதுர அடிகொண்ட தம் இராம நிலையவளமனையின் முன்பகுதியை அடிகளாரின் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்கள், உதவியாளர்களை அமர்த்தியும், யாழ்க் கருவியை உருவாக்க உதவும் தச்சர்கள், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்த அடிகளார் தங்கி ஓய்வெடுக்கவும் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவும் இலங்கையில் இருந்த தம் தேயிலைத் தோட்ட வளமனையை வழங்கியும் திரு. செட்டியார் அவர்கள் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்களுக்கும் அகவையில் குறைந்த திரு. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கும் மிகச்சிறந்த நட்பும் உறவும் இருந்துள்ளமையை இருவரின் எழுத்துகளையும் ஊன்றிக் கற்கும்பொழுது உணரலாம். இராம. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு நம் சுவாமிகள் வரைந்த மடல் ஒன்று அண்மையில் என் பார்வைக்குக் கிடைத்தது. அந்த மடலில் யாழ்நூலை அச்சிட நம் அடிகளார் வழங்கிய திட்டமும், யாழ்நூல் அச்சேறத் துணைநின்ற அ. கணபதிப்பிள்ளை அவர்களின் சிறப்பும் தெரியவருகின்றது. அடிகளார் வரைந்த மற்ற கடிதங்கள், குறிப்பேடுகள் கிடைத்தால் யாழ்நூல் சிறப்பை உணர மேலும் வழிகிடைக்கும்.



விபுலாநந்த அடிகளின் யாழ்நூல் வெளியீடு குறித்த அரிய மடல்
9.5.45
Camp
Woodstock Estate,
Rogele

பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு
ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

நலம். 25/4 இல் சென்னையிலிருந்து எழுதிய கடிதமும், 5/5 இல் புதுக்கோட்டையிலிருந்து எழுதிய கடிதமும் கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இன்று ஒருங்கு கிடைத்தன.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கிடமுண்டு.

1944 ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது  வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுரையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்.


விபுலாநந்த சுவாமிகள்

யாழ்நூல்


YAL NUL
By
Swami Vipulanda

கரந்தை தமிழ்ச்சங்கம்
தஞ்சாவூர்

ஒருவாரத்தில் இங்கிருந்து புறப்படுகிறேன். 21- ஆந்தேதி கொழும்பில் ஒரு கூட்டமுண்டு. அடுத்த நாளே புதுக்கோட்டைக்கு புறப்படலாம். குழந்தைகளுக்கும் தங்களுக்கும் எனது அன்பு.

அன்புள்ள விபுலாநந்தர்.

ஐந்தியல்களை இப்பொழுது வெளியிடலாம். அரங்கேற்று விழா வேண்டுமானால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இரண்டாம் பாகம் வெளியிடும்போது வைத்துக்கொள்ளலாம்.
வி.

**அ.க. என்று குறிக்கும்பெயர் அ. கணபதிப்பிள்ளை என்னும் அன்பராவார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றிய பெருந்தகை. திரு. உமாமகேசுவரம் பிள்ளையின் உற்ற நண்பர்; நம்பிக்கைக்குரியவர். உமாமகேசுவரானர் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டபொழுது உடன் சென்றவர். உமாமகேசுவரனார் வடநாட்டில் இயற்கை எய்தியபொழுது அவரை அடக்கம்செய்து, இறுதிக்கடன்களை நிறைவேற்றித் தமிழகம் திரும்பியவர்.

## சுவாமிகளின் கடிதத்தில் தட்டச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. சுவாமிகளில் திருவாய்மொழியை உதவியாளர் தட்டச்சிட்டிருப்பார் என்று தெரிகின்றது.

## எழுதுகோலால் இரண்டாம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள கணக்கு விவரம் மடலைப் பாதுகாத்தோரின் செயலாகத் தெரிகின்றது.

நன்றி: ஒன் இந்தியா - தமிழ் இணையதளம் 
http://tamil.oneindia.com/cj/mu-illangovan/rare-letter-vipulananda-swamigal-259828.html