நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஆய்வாளர் இரா. வீரமணிக்குத் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் முதல் பரிசு!

  

இரா. வீரமணி

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைப்போட்டி நடத்தப்பெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான (2025-26) கட்டுரைப்போட்டி “பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவனின் புலமைத்திறம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. 

இப்போட்டியில் தமிழகத்தின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆய்வு மாணவர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரையை அளித்தனர். போட்டிக்கு வரப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தக்க அறிஞர்கள் குழு மதிப்பீடு செய்தது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் ஆய்வுசெய்யும் ஆய்வாளர் இரா. வீரமணி அவர்கள் ஒப்படைத்த 156 பக்கம் கொண்ட ஆய்வுக் கட்டுரையை முதல் பரிசுக்கு உரியதாகத் தெரிவுசெய்துள்ளனர். முதல்பரிசாக ஒரு பவுன் மதிப்புடைய தங்கப்பதக்கமும், அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் அளித்துப் பாராட்ட உள்ளனர். பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் 2026 பிப்ரவரித் திங்கள் ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று பேராசிரியர் பா. வளன் அரசு தெரிவித்துள்ளார். 

ஆய்வாளர் இரா. வீரமணி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்துள்ள மல்லப்பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் எம். கே. இராசா, இரா. இராதா என்பனவாகும். 05.06.1998 இல் பிறந்த இரா. வீரமணி அவர்கள் மல்லப்பள்ளியில் தொடக்க, உயர்நிலைக் கல்வி கற்றவர். மேல்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அறிந்தவர். 

திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலைத் தமிழும், புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழும் பயின்றவர். பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்ததன் (UGC NET) வாயிலாக, இளங்கலைப் பட்டம் பெற்ற கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராக ஓராண்டு (2021-22) பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவர். 

பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்றதற்காக, ‘கோசலை விருது’ (தங்கப் பதக்கம்) பெற்றவர். இளங்கலைத் தமிழிலும் முதல்நிலை மாணவராகத் தேர்ச்சிப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றவர். முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்.  தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு உதவித் தொகையுடன் (UGC NET JRF), புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில்தமிழிலக்கியத் திறனாய்வுச் செல்நெறிகள்குறித்த பொருண்மையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தி வருபவர். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழிலக்கியங்கள், இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், தமிழ் மற்றும் மேலைத் திறனாய்வுக் கோட்பாட்டுச் சிந்தனையாளர்கள் குறித்துப் பயில்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். 

தொழில்நிலைத் தகுதிகள் 

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும், தேசிய அளவிலான UGC – NET (NATIONAL ELIGIBILITY TEST), உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வில், தமிழ்ப் பாடப்பிரிவில் திசம்பர் 2018, சூன் 2019, திசம்பர் 2019, சூன் 2020, திசம்பர் 2020-சூன் 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஐந்து முறை தேர்ச்சியடைந்துள்ளார். 

மத்தியக் கல்வி அமைச்சகமும் பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து வழங்கும் இளநிலை ஆய்வு உதவித்தொகைக்கான (JRF) தேர்விலும் தேர்ச்சியடைந்துள்ளார்

பரிசுகள் / தேர்ச்சிகள் / பதக்கங்கள் 

திருநெல்வேலி, தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 2025ஆம் ஆண்டுக்கானமாநில அளவிலான ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், முதல் பரிசு பெற்று, தங்கப் பதக்கமும், வெள்ளி சுழற்கோப்பையும் (ஒரு இலட்சம் மதிப்பிலானது) வென்றுள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம் நடத்திய முதுகலைத் தமிழுக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் வென்று, ரூ.10,000 ஊக்கத்தொகை பெற்றுள்ளார். 

தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயின்றபோது, 2016, 2017, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

உயர்நிலைக் கல்வியில் 2013 ஆண்டு பள்ளியளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி அடைந்துள்ளார். IVDP தன்னார்வத் தொண்டு நிறுவனம்கோசலை விருது” (தங்கப்பதக்கம்) வழங்கிச் சிறப்பித்தது. 

இதழியல் பங்களிப்புகள் 

புதுவை மத்தியப் பல்கலைக்கழகச் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் செயல்பாடுகளை வெளிக்கொணரும்செய்திமடல்இதழுக்கு, தொடர்ந்து 2021-2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் துணைப் பதிப்பாசிரியராகப் பங்களிப்பு நல்கியவர்

தூயநெஞ்சக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயிலும் காலக்கட்டத்தில், ‘எழுதுகோல் தெய்வம்’ (2017) என்னும் மாணவர் இதழுக்கு முதன்மைப் பொறுப்பாசிரியராக விளங்கியவர். 

நூல் வெளியீடுகள்: 

1. வாழ்க்கை எனும் மொழிவிளையாட்டு (தமிழில் நவீனத் திறனாய்வுக் கோட்பாட்டு வாசிப்புகள்), 2025

2. மொழித்திறன் -பயிற்சி நூல் (பிழையின்றித் தமிழ் எழுதுவோம்), போதிவனம், 2023 




இரா. வீரமணி எ. கேமாவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் வீ. மித்ரன் என்னும் மழலைச்செல்வம் வாய்த்துள்ளார். 

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் பரிசு பெற உள்ள இரா. வீரமணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். 

 

கருத்துகள் இல்லை: