திண்டுக்கல் மாநகரில் தமிழ்ப்பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழமுது அறக்கட்டளை சிறப்பாக இயங்கி வருகின்றது. தமிழாசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தமிழமுது அறக்கட்டளையை ஏற்படுத்தித் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழமுது அறக்கட்டளையின் சார்பில் 25.01.2026 (ஞாயிறு) காலை 10.31 மணிக்குத் திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்துக் கட்டடத்தில் “நாவுக்கரசர்” சு. நஞ்சப்பனார் தலைமையிலும் இலக்கணச் செம்மல் புலவர் துரை. தில்லான் அவர்கள் முன்னிலையிலும் புலவர் பெருமக்கள் ஏற்பாட்டில் தமிழமுது அறக்கட்டளையின் செயற்குழுக் கூட்டமும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் பன்னெடுங்காலத் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி, தமிழ் இணையச் செம்மல் என்னும் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. தமிழ் இணையத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசென்ற மாண்புக்காகவும், இணையத்தில் தமிழறிஞர்களின் வாழ்வைப் பதிவுசெய்துவரும் தொண்டினுக்காகவும் முனைவர் மு. இளங்கோவனுக்குத் தமிழ் இணையச் செம்மல் என்னும் உயரிய சிறப்பாரம் (விருது) நல்கி இந்த விழாவில் பாராட்டினர்.
இந்த நிகழ்வின் பெருமைமிகு அங்கமாக மூத்த புலவர் பெருமக்களும், தமிழ்த்தொண்டில் முன்னின்று உழைத்தவர்களுமான அறிஞர் பெருமக்கள் கடலூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, கிருட்டினகிரி, திருப்பூர், புதுக்கோட்டை முதலான மாவட்டங்களிலிருந்து வருகைபுரிந்து நிகழ்வுக்குப் பெருமைசேர்த்தனர்.
புலவர் பெருந்தகையும் காப்பியக் கவிஞருமான அருணா பொன்னுசாமியார் (கருவூர்) அவர்கள் அழகுதமிழில் கவிதைபொழிந்து நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்றார். ஆன்மீகச் செம்மல் புலவர் க. வீ. வேதநாயகம் (ஈரோடு), புதுவெள்ளம் த. இராமலிங்கம் (நெய்வேலி), கவிஅருவி கரு. சின்னத்தம்பியார் (உடுமலைப்பேடை), இலக்கணச் செம்மல் பெ. கறுப்பண்ணனார் (கருவூர்), புலவர் பெருமான் ப. பா. கோபால் (திண்டுக்கல்) , காட்டுமன்னார்கோயில் இரா. வெங்கடேசனார் முதலான சான்றோர்கள் உரைநிகழ்த்தி, தமிழ் இணையச் செம்மல் விருதுபெறும் முனைவர் மு. இளங்கோவனையும் அவர்தம் பணிகளையும் பாராட்டினர்.
தமிழகத்
தமிழாசிரியர் கழகத்தின் முன்னைப் பொதுச்செயலாளரும் தமிழமுது அறக்கட்டளையின் நிறுவுநருமான புலவர் சு. நஞ்சப்பனார்
பழகுதமிழில் இலக்கிய நயம் தோன்ற அழகியதோர்
உரையாற்றி, முனைவர் மு. இளங்கோவனின்
பன்முகத் திறமையையும் தமிழ்ப் பணிகளையும் அவையினருக்கு
அறிமுகம் செய்துவைத்தார். மு. இளங்கோவன் அண்மையில்
எழுதியுள்ள தகைசால் தமிழ்த்தொண்டர்கள் நூலினைச்
சான்றோர்களுக்கு அறிமுகம் செய்து, இந்த நூலின்
சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
புலவர் துரை. தில்லான் அவர்களின் வாழ்த்துரை. அருகில் புலவர் நஞ்சப்பனார், புலவர் அருணா பொன்னுசாமியார்.
தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலினைத் திண்டுக்கல் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ப் புரவலர் திருவாளர் கோ. சுந்தரராசனார் வழங்க, தமிழ்ப் புரவலர் முனைவர் சு. கதிர்வேல் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொண்டார். அவர்களைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்ப் புலவர் பெருமக்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு, நிகழ்வுக்குப் பெருமைசேர்த்தனர். இந்த நிகழ்வின் வழியாக மு. இளங்கோவனின் நூல்கள் தமிழ்ப் புலவர்களின் இல்லங்களுக்குச் சென்றுசேர்ந்தன.
புலவர் சு. நஞ்சப்பனார், புலவர் துரை. தில்லான், புலவர் வேதநாயகம், தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னை உதவி இயக்குநர் முனைவர் சந்திரா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இணைந்து தமிழ் இணையச் செம்மல் என்னும் உயரிய விருதினை முனைவர் மு. இளங்கோவனுக்கு வழங்கி மகிழ்ந்தனர். இவர்தம் பணிகளுக்குத் தமிழமுது அறக்கட்டளை தொடர்ந்து துணைநிற்கும் என்று சு. நஞ்சப்பனாரும், கருவூர் புலவர் அருணா பொன்னுசாமியும் உறுதிகூறி, ஊக்கப்படுத்தினர்.
மதுரையிலிருந்து வந்து, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட
குரு செயச்சந்திரன் அவர்கள் தொல்காப்பிய உருவமும் தொல்காப்பிய நூற்பாவும் பொறித்த துணிப்பையையும்,
தொல்காப்பியர் மரச்சிலையையும் முதன்மை விருந்தினர்களுக்கு அளித்து மகிழ்ந்தார். இந்த
நிகழ்வுக்காகச் சென்னையிலிருந்து மருத்துவர் முத்துராமன் அவர்களும் ஊத்தங்கரையிலிருந்து
முருகன் அவர்களும் வந்திருந்து, வாழ்த்தினர். புலவர் கோவிந்தராசனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
புலவர் ப. பா கோபால் நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. நண்பகல் உணவுக்குப்
பிறகு “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்(394)” என்னும் தமிழ்
மறையை நினைவிலேந்தி, அனைவரும் விடைபெற்றனர்.
நன்றி: அந்திமழை இணைய இதழ்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக