நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 மே, 2024

முனைவர் க. இரவிசங்கர் மறைவு

முனைவர் க. இரவிசங்கர் 

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னைப் பேராசிரியர் முனைவர் . இரவிசங்கர் அவர்கள் இன்று (04.05.2024) அதிகாலை 1.30 மணிக்குப் புதுச்சேரியில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.  பேராசிரியர் க. இரவிசங்கர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்று மாலை 4 மணிக்கு க.இரவிசங்கர் அவர்களின் உடல் புதுச்சேரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 பேராசிரியர் க. இரவிசங்கர் அவர்கள் 07.06.1954 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். பழகுதற்கு இனிய பண்பாளர். மொழியியல் அறிஞராகத் தமிழாய்வு  உலகில் அறியப்பட்டவர். பல்வேறு நூல்களின் ஆசிரியர். இவரின் ஆய்வேடு  Intonation Patterns in Tamil என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. தமிழ் ஒலிப்பு முறை குறித்து விரிவாக ஆராயும் நூல் இதுவாகும். இந்திய மொழிகளைக் குறித்து, குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஒலிப்புமுறை குறித்து ஆராயும் அறிஞர்களுக்குப் பெரும்துணைபுரியும் முன்னோடி நூல் இதுவாகும். இத் துறையில் ஆய்வு செய்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். பல்வேறு ஆய்வரங்குகளில் – பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியவர்.

 தெற்குக் குசராத்துப் பல்கலைக்கழகத்தில் தம் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பாட நூல்களை உருவாக்கியதுடன் பலருக்குத் தமிழ் கற்பித்த பெருமைக்குரியவர். புதுச்சேரியில் பணியாற்றும் பிற மாநிலத்து உயரதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் பெரும்பணியைச் செய்தவர். முனைவர் க. இரவிசங்கர் அவர்களின் மறைவு ஆய்வுலகிற்குப் பேரிழப்பாகும்.





முனைவர் க. இரவிசங்கர்

அயல்நாட்டு மாணவர்களுடன் முனைவர் க. இரவிசங்கர்

 


 

 

 

கருத்துகள் இல்லை: