[பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரைகளை முழுமையாகக் கற்று, ஆய்வு செய்த பேரறிஞர். தம் ஆய்வுப் பரப்பாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களை அமைத்துக்கொண்டு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர் உள்ளிட்டவர்களின் உரைகளை ஆராய்ந்து தனித்தனி நூலாக வெளியிட்ட பெருமைக்குரியவர். களவியல் உரை, யாப்பருங்கல விருத்தியுரை குறித்தும் சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளவர். இராணி பதிப்பகம் என்ற பெயரில் இவர்தம் பதிப்பகம் வழியாக இவரின் நூல்கள் வெளிவந்துள்ளன.]
முனைவர் ச. குருசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி என்னும் ஊரில் 06.06.1951 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சி. கு. சர்வம் ஐயா – கெங்கம்மாள் ஆகும். இவர்தம் பெற்றோர் உழவுத்தொழிலைச் செய்துவந்த பெருமக்கள் ஆவர். எளிய குடும்பப் பின்னணியில் தோன்றித் தம் கடும் உழைப்பால் முன்னேறித் தமிழ் அறிஞராக மிளிர்ந்தவர் பேராசிரியர் ச. குருசாமி.
முனைவர் ச. குருசாமி அவர்கள் தம் இளமைக் கல்வியைப் பிறந்த ஊரான குட்டாம்பட்டியில் படித்தவர். புகுமுக வகுப்பினைச் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர்(1967-68). இளங்கலை வகுப்பினை ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் பயின்றவர் (1970-73). முதுகலைப் பட்டத்தைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, பெற்றவர்(1973-75). “சங்க காலச் சேரர் அரசியல் நெறிமுறைகள்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்(1991).
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1975 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து, 2009 இல் பணி ஓய்வு பெற்றவர்.
பணிச்சூழலும் ஆய்வுநூல் உருவாக்கமும்:
பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்பொழுதே இலக்கண ஈடுபாடு உடைய மாணவராக விளங்கியவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்கள் ஒருமுறை ’தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பீடும் வேற்றுமைகளும்’ குறித்து ஒரு கட்டுரை வரையுமாறு சொன்னபொழுது, மிகச் சிறந்த கட்டுரையை உருவாக்கிய இவரைப் பேராசிரியர் அறவாணனார் பாராட்டி ஊக்கப்படுத்தினார். பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், இரா. சீனிவாசன், கலைமாமணி இரா. குமரவேலன் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் பயின்றமையை இவர் நன்றியுடன் குறிப்பிடுவது உண்டு. இவர் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். முதுகலை மாணவர்களுக்கு இலக்கணத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைப் பெற்ற முனைவர் ச. குருசாமி அவர்கள் அப்பொழுது ஆர்வமாகத் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்தார். சற்றொப்ப இருபதாண்டுகள் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்த பட்டறிவு உடையவர்.
பச்சயைப்பன் கல்லூரியில் “பச்சையப்பன் ஆய்வரங்கம்” என்ற பெயரில் ஆய்வரங்கம் நடைபெறுவது வழக்கம். ஆய்வரங்கின் பயனாக ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் “தமிழ் ஆராய்ச்சி நூல்” உருவானது. அதில் “நிகண்டுகள்” குறித்து முனைவர் ச. குருசாமி ஆய்வுக்கட்டுரை எழுதினார். தமிழ் ஆராய்ச்சி நூலின் இரண்டாம் தொகுதிக்கு “உரையாசிரியர்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு பேராசிரியர் தெ. ஞா. நம் பேராசிரியர் குருசாமியாரைப் பணித்தார். இவர்களும் உரையாசிரியர் குறித்து ஆழமாகச் சிந்தித்தார். ஆனால் இரண்டாம் தொகுதி வெளிவரவில்லை. இவ்வாறு உரையாசிரியர்கள் என்று பொதுவாகச் சிந்தித்த குருசாமியார் பின்னாளில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறித்துத் தனித்தனியாக நூல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றார்.
2007 - 2008 ஆம் ஆண்டுகளில் இளம்பூரணர் உரைநெறி,
சேனாவரையர் உரைநெறி, பேராசிரியர் உரைநெறி, நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்த இவர்தம்
ஆய்வு நூல்கள் வெளிவந்தன. இச் சூழலில் அந்த நூல்களின் வெளியீட்டு விழா 2009 ஆம் ஆண்டில் பேராசிரியர்
இரா. குமரவேலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இளம்பூரணர் உரைநெறி நூல் குறித்து முனைவர் இராம. குருநாதனும், சேனாவரையர் உரைநெறி குறித்து முனைவர் இ. சுந்தரமூர்த்தியும், பேராசிரியர் உரைநெறி குறித்து முனைவர் க. ப. அறவாணனும், நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்து முனைவர் தெ. ஞானசுந்தரமும் அறிமுகவுரையாற்றினார். முனைவர் ஔவை. து. நடராசனார் அவர்கள் சிறப்புரையாற்றி, நூலாசிரியர் ச. குருசாமியைப் போற்றிப் பாராட்டினர்.
தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைநெறிகள் குறித்த நான்கு நூல்களையும் கண்ணுற்ற மொழியியல் அறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் செம்மொழி நிறுவனத்திற்காகத் தெய்வச்சிலையார் உரைநெறியை எழுதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பேராசிரியர் ப. மருதநாயகம், முனைவர் க. இராமசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நெறிகாட்டலில் தெய்வச்சிலையார் உரைநெறி நூல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக உலகுக்குக் கிடைத்தது.
முனைவர் ச. குருசாமியார் ஆய்வார்வம்:
ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து, பலர் பட்டம் பெறுவதற்குக் காரணமாக விளங்கியவர். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளதுடன், பல பயிலரங்குகளில் கருத்தாளராக அழைக்கப்பெற்று, உரையாற்றிய பெருமைக்குரியவர்.
புகுமுக வகுப்பில் படிக்கும் காலத்திலேயே (1967-68) மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்டு, தம் மொழிப்பற்றை வெளிப்படுத்தியவர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கிளைத் தலைவராகவும் சென்னை மண்டலச் செயலாளராகவும் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியவர். ஆசிரியர் இயக்கங்கள் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டு, உரிமைகளை மீட்பதற்குச் சிறைசென்றவர்.
இல்லற வாழ்வு:
பேராசிரியர் ச. குருசாமியார் அவர்கள் 02.06.1978 இல் திருவாட்டி இராணி அவர்களைத் திருமணம் செய்து, இல்லற வாழ்வை இனிதே நடத்தி வருபவர். இவர்களுக்குப் பனிமலர், இரேகா என்னும் இரண்டு பெண் மக்கள் வாய்த்தனர். இவர்கள் இருவரும் உயர்கல்வி கற்று, உயர் பணிகளில் உள்ளனர்.
ச. குருசாமியார் தம் வாழ்நாள் பணியாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளை நுட்பமாக ஆராய்ந்து, அவர்களின் தொல்காப்பியப் புலமையையும் உரைவரையும் பெரும்புலமையையும் தமிழுலகத்திற்கு நூல்களின் வழியாக அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இவர்போல் தொல்காப்பிய உரைகள் என்ற ஒற்றைப் புலத்தைத் தேர்ந்தெடுத்து, உழைத்து, ஆராய்ந்து, அறிவுமுத்துகளை வெளிக்கொணர்ந்த பேராசிரியர்கள் அரிது எனலாம். இவர்தம் பணிகளைப் போற்றிப் புதுவையில் உள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் இவருக்குப் பாராட்டு விழாவினை விரைவில் நடத்த உள்ளது.
முனைவர் ச. குருசாமி அவர்களின் நூல்களில் தொல்காப்பிய உரைகளின் பதிப்பு வரலாறு, உரையாசிரியர்களின் வரலாறு, உரைநெறிகள் யாவும் மிகவும் நுட்பமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அரிய குறிப்புகளை எடுத்துக்காட்டுவதும், பழைய இதழ்களில் வெளியான செய்திகளைத் தேடித் திரட்டி, ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதும் இவரின் ஆய்வு ஆர்வத்தைக் காட்டுவன. தம் ஆய்வுப்பணிகளுக்குப் பெரிதும் துணைநின்ற அறிஞர்களை நன்றியுடன் நினைத்து உருகும் முனைவர் ச. குருசாமி அவர்கள் தம்முடன் பணியாற்றிய முனைவர் ம. இரா. அரசு அவர்களின் துணையையும் ஒத்துழைப்பையும் தொல்காப்பிய ஆய்வுக்குத் தம்மை ஆற்றுப்படுத்தியமையையும் நன்றியுடன் போற்றுவது இவர்தம் சால்புக்குச் சான்றாகும்.
பேராசிரியர் ச குருசாமி அவர்களின் தமிழ்க்கொடை:
1. இளம்பூரணர் உரைநெறி (2007)
2. சேனாவரையர் உரைநெறி (2007)
3. நச்சினார்க்கினியர் உரைநெறி (2008)
4. பேராசிரியர் உரைநெறி (2008)
5. கல்லாடனார் உரைநெறி (2017)
6. தெய்வச்சிலையார் உரைத்திறன் (2019)
7. தெய்வச்சிலையார் உரைநெறி (2022), செ.த.ம.நிறுவனம்.
8. களவியல் உரைநெறி (2022)
9. விருத்தியுரைகாரர் உரைநெறி (2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக