பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன் (காப்பியதாசன்)
[பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் இலங்கையில் சிந்துபுரத்தில் பிறந்து, தொழில்கல்வி பயின்று, தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக இலக்கிய இலக்கணங்களைக் கற்றுப் பண்டிதராக விளங்கியவர். ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர், கலை ஆர்வலர், நாடகக் கலைஞர், சமூக சேவகர் என்ற பன்முகத் தன்மையுடன் விளங்கியவர். தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். தொல்காப்பியத்தின் மேல் தமக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாகக் காப்பியதாசன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்]
மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சிந்துபுரத்தில் 1947 திசம்பர் 10 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் மயில்வாகனம் நவரத்தினம் (ஆசிரியர்), பாக்கியம் என்பதாகும்.
பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் தமது தொடக்கக் கல்வியை வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள திருநாவுக்கரசு மகா வித்தியசாலையிலும், பின்னர் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் ஆங்கில வழி மூலம் பாடங்களைப் படித்தவர். பின்னர்த் தொழில் துறைக்காகக் கொழும்பு கட்டுப் பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றவர். எனினும் இவருக்கு இருந்த தணியாத தமிழ் விருப்பத்தால் தமிழறிஞர்களுடன் நெருங்கிப் பழகித் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆர்வமாகக் கற்றுத் தேர்ந்தவர்.
பண்டிதர் கடம்பேசுவரன் அவர்களின் தாயார் 1968 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அந்த வேளையில் தாயாரின் கடைசி ஆசையையும் தந்தையின் சொல்லையும் கேட்டு தாய்மாமன் குழந்தைவேலு-நல்லம்மா ஆகியோரின் மகள் மகேசுவரி என்பவரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். அந்த இனிய இல்லற வாழ்க்கையின் பயனாக 3/12/1975- அன்று மணிமார்பன், 08/02/ 1980 – இல் மகள் ஆரணி, 02/07/1987 இல் மகன் துளசிவர்மன் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து, உயர் பொறுப்புகளில் உள்ளனர்.
கடம்பேசுவரன் ஈழநாடு, தினக்குரல், வீரகேசரி, உதயன் உள்ளிட்ட இதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் பல்வேறு நிலைகளில் 1979 முதல் 1986 வரை கடமையாற்றியவர்.
1. பண்டிதமணி சுப்பையா பிள்ளை, 2. பண்டிதமணி செ . துரைராஜ சிங்கம், 3.கலாநிதி வித்துவான் க. ந. வேலன், 5. மகாவித்துவான் இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாய தேசிகர் 6.பண்டிதர் பொன்னுத்துரை, 7. வித்துவான் இ. பொன்னையா, 8. பண்டிதமணி மு கந்தையா, 9. பண்டிதமணி சோ. இளமுருகனார், 10.பண்டிதர் இலக்கணக்கொத்து சி. இராசையா முதலிய அறிஞர் பெருமக்களுடன் பழகித் தம் தமிழறிவை வளர்த்துக்கொண்டவர்.
1977 இல் கலாநிதி வித்துவான் க. ந. வேலனுடனான சந்திப்பால் தமிழ் கற்று, பால பண்டிதரானமையும், 1984 இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர், மட்டுவில் பொன்னுத்துரை பண்டிதர் ஆகியோரிடம் தமிழ் கற்றுப் பண்டிதரானமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.
1983- மாயன் என்னும் பெயரில் தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தினார். 1988 இல் ஈழநாடு பத்திரிகையில் இணைந்து எழுத்துப் பணிகளை ஆற்றினார்.
1990 இல் புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இணைந்து, மாணவர்கள் உள்ளம் பதியும் வகையில் தமிழைப் பயிற்றுவித்தார்.
1992 இல் இவரின் மூலவேர் புத்தகம் வெளியீடு கண்டது. 1994 இல் வட்டுக்கோட்டைத் தொகுதி தமிழ்ச் சங்கத்தில் இணைந்தார்.
1994 இல் தமிழறிஞர் சரித்திரம், வட்டுக்கோட்டைத் தொகுதி - தமிழ்ச்சங்கத்தார் (தொகுப்பாசிரியர்கள்), வட்டுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு: திசம்பர் 1994 வெளிவர முழுமையாக உதவினார். 1996 இல் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு அளப்பரிய பணிகளைச் செய்தவர்.
2000 இல் சுன்னாகம் அவைக்காற்றுகைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று எழுதிய நாடகங்கள் பலவாகும். மா. அருள்சந்திரனோடும் திருமதி கல்யாணி சுந்தரநேசனோடும் இணைந்து "ஓதல்லோ" "ஹாம்லெட்" “வெனிஸ் வணிகன்” "தூண்டில் புழுவினைப்போல்,” "ஓலங்கள்" ஆகிய நாடகங்கள் மேடையேறின. அந்த அவைக்காற்றுகைக் குழுவின் ஊடாகக் “கல்யாணி” நாடக இலக்கிய இதழ் வெளியீடு செய்யப்பட்டது .
தொடர்ந்து சங்கம் வளர்த்த ஆன்றோர்கள் பண்டிதர் தா. பொன்னம்பலவாணர், கவிஞர் சோ.பத்மநாதன் (சோபா) என்போருடன் இணைந்து பாலபண்டிதர், பண்டிதர் வகுப்பு நடத்தித் தமிழ் இலக்கண இலக்கியப் பரவலுக்குக் காரணமாக இருந்தவர் . இவ்வகுப்புகளால் பலர் தமிழ் கற்றனர்.
2000-2003 இல் இவர் எழுதிய நாடகங்கள் "பெண்மை கொல்லோ", "பெருமையுடைத்து", “வாழ்க்கைப் பயணங்கள் " "பாவலரும் காவலரும்" "பொறுப்பேனா யான்" , "ரமணி வள்ளல் " எனபன மேடையேற்றப்பட்டன.
2004 இல் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழாசிரியர் பணியிலிருந்து பணியோய்வு பெற்ற கடம்பேசுவரன் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி, மரபு இலக்கண நூல்களைப் பயிற்றுவித்தவர். சமய நிறுவனங்களில் அமைந்த இவரின் இலக்கண, இலக்கிய வகுப்புகளும் சமய இலக்கிய வகுப்புகளும் இலங்கைத் தமிழ் மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்டவையாகும்.
14/01/2009 இல் சிறுவர் இலக்கியம் "தீந்தேன்” வெளிவந்தது. இது இறுவட்டாகவும் வெளியீடு கண்டது. இசையாகப் பாடியவர் பொன் - வாமதேவன், இசையைத் தந்தவர் தவநாதன் ஆவார். றோபேர்ட் வாத்தியம் விமல் சங்கர் ஆவார். இந்த இறுவட்டின் பாடல்கள் இணையத்தில் கேட்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.
ம. ந. கடம்பேசுவரன் பெற்ற விருதுகள்:
கடம்பேசுவரனாரின் புலமையையும் பணிகளையும் அறிந்த தமிழமைப்புகளும் அரசும் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் பெருமைபெற்றன.
Ø
2005 கலைவாரிதி விருது (வடமாகாண கலாசார திணைக் கழகம், வடமாகாணம்)
Ø 2009 இல் இலக்கியப்பேரவை விருது
Ø 2010 இல் சாகித்திய விருது
Ø
2012 இல் வடமாகாண "ஆளுநர் விருது" – (கலை பண்பாட்டு இலக்கியம்)
Ø விளையாட்டுத் துறை அலுவல்கள் அமைச்சு வட மாகாணம்.
Ø 9 /12 /2012 அன்று ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிப்பு செய்யப்பட்டது.
Ø 2012 இல் கலா பூசணம் விருது (இலங்கை கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு)
Ø 17/01/ 2015 அன்று ஒஸ்லோவில் (Norway) நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் தமிழ்ச் சங்கத்தினால் சிறப்பிக்கப்பட்டார்.
Ø 2017 இலங்கை தமிழ் இலக்கிய நூலகமும் இலண்டன் தமிழ் இலக்கிய சங்கமும் இணைந்து கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்திய இலக்கியப் பெருவிழாவில் தமிழ் வளர்ச்சி இலக்கிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
Ø 16 /12/ 2017 இ. தா. உதயணன் இலக்கிய விருது
Ø 22/ 11 /2019 இல் வலிகாமம் - மேற்குக் கலாசார பண்பாட்டுப் பெருவிழாவின்போது பிரதேச கீதம் இயற்றியமைக்காகக் கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும், வலிகாமம்- மேற்குப் பிரதேச செயலகம் சங்கானையால் சிறப்பிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
Ø 2021 இரண்டாவது அனைத்து உலகத் தமிழில் ஆய்வு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபொழுது தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய பெரும் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுச் சின்னமும் இலக்கியப் பண்பாட்டு பொதுப் பணிகளுக்காக "கலைநேயப் பரிதி" என்ற விருதும் வழங்கப்பட்டன.
நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களின் வெளிவராத பாடல்கள் எனும் மூன்று புத்தகங்களும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சான்றோர்களால் வெளியீடு செய்யப்பட்டன.
சைவ இலக்கியங்களில் பேரீடுபாடும் பெரும் புலமையும் கொண்ட கடம்பேசுவரனார் அவர்கள் நாவலர் மகா வித்தியாலயத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளஞ்சைவப் புலவர், சைவப் புலவர் பட்டங்களைப் பெறுவதற்கு முனைந்த மாணவர்களுக்குச் சைவ சமய நூல்களைப் பயிற்றுவித்து ஈழத்தில் சைவப் பயிர் வளர்வதற்குத் துணை நின்றவர்.
தொல்காப்பியத்தைப் பயிற்றுவிப்பதைப் பெரும் ஈடுபாட்டுடன் செய்தவர். தொல்காப்பியத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தம் புனைபெயரைக் காப்பியதாசன் என்று அமைத்துக்கொண்டவர். தொல்காப்பியத்துடன் நன்னூல், நன்னூல் காண்டிகை உரைகளைக் கற்பித்து ஈழத்தில் தமிழ்ப் புலமை வேரூன்றக் காரணமாக விளங்கியவர்.
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றியவர்.
மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் 16-04-2024 செவ்வாய்க் கிழமை இலங்கையில் இயற்கை எய்தினார்.
யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், "ஈழத்து மரபுவழி பண்டிதக் கல்வியின் பேராசானைத் தமிழுலகம் இழந்து நிற்கின்றது. கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக மரபுவழித் தமிழ்க் கல்வி நிறுவனமான ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கத்தைப் பல்வேறு இன்னல்களின் மத்தியில் காத்து நின்ற செயல் வீரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பண்டிதர் ம. ந. கடம்பேசுவரனாரின் தமிழ்க்கொடைகள்:
v பொற்காலம்
v மூல
வேர்
(1993)
v தமிழ்
இலக்கியத்
திறனாய்வும்
கோட்பாடும்
(2014)
v தீந்தேன்
(இறுவட்டு)
v பொறுப்பேனா யான்
v காப்பியதாசன்
கட்டுரைகள்
v இலக்கண
மரபு
(வரலாற்றாய்வு வழிகாட்டி) (2013)
v நன்னூல் விருத்தியுரை: விளக்கமும் அகலவுரையும்(2023)
v செந்தமிழ்
காப்போம்
v முது
தமிழ்ப்
புலவர்
வெளிவராத
பாடல்கள்
v தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்
(உயர் கல்விக்கான வினா-விடை வழிகாட்டி) –(2021)
v தொல்காப்பியச்
செய்யுளியல் ஆய்வுச் சுருக்கம்
நன்றி:
திரு. லோகேந்திரலிங்கம், ஆசிரியர், உதயன், கனடா
முனைவர் விசாகரூபன், இலங்கை
கடம்பேசுவரனாரின் குடும்பத்தினர்கள்.
உதயன் இதழில் வெளியான கட்டுரையைப் படிக்க இணைப்பு இதோ:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக