நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 மே, 2024

மருத்துவர் மு. குலாம் மொகிதின்

 

மருத்துவர் மு. குலாம் மொகிதின் 

[மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் எலும்பு, முதுகெலும்பு அறுவைப் பண்டுவத்தில் புகழ்பெற்ற வல்லுநர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் பிறந்தவர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயின்றவர். பணியாற்றிய சிறப்பிற்குரியவர். தமிழ் வழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர். மருத்துவத்தைச் சேவையாகச் செய்வதில் விருப்பம் உடையவர் ] 

திருவையாற்றில் கரந்தை செயக்குமார் அவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு, தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் சோழன் விரைவு வண்டியைப் பிடிப்பதற்குக் காத்திருந்தேன். பொலிவும் அறிவால் கவர்ந்திழுக்கும் தோற்றமும் கொண்ட ஒருவர் தம் மகனுடன் நடைமேடைக்கு வந்தார். ஓரிரு முறை என்னை உற்று நோக்கிய அவர், என்னை நெருங்கி, நீங்கள் மு. இளங்கோவன்தானே! என்றார். ஆம். என்றேன். 

ஐயா, நீங்கள் யார்? என்று வினவினேன். தம் பெயர் மருத்துவர் மு. குலாம் மொகிதின் எனவும் தஞ்சையில் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளதாகவும். தற்பொழுது புதுச்சேரிக்கு அருகில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். புலவர் இரா. இளங்குமரனார் அவர்களுடன் தாம் பழகிய பட்டறிவுகளைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். என் வலைப்பதிவுகளையும், தொல்காப்பியம் சார்ந்த காணொலிகளையும், முகநூல் பதிவுகளையும் படித்துள்ளதை ஆர்வம் பொங்க எடுத்துரைத்தார். 

எங்கள் உரையாட்டு நிகழ்ந்துகொண்டிருந்தபொழுதே சோழன் விரைவு வண்டியும் நடைமேடையில் வந்து நின்றது. நானும் அவரும் அடுத்தடுத்த பெட்டிகளில் செலவு செய்வதாக முன்பதிவு இருந்தது. தம் உடைமைகளை அவருக்கு உரிய பெட்டியில் கொண்டுபோய் வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி விடைபெற்றார் மருத்துவர் மு. குலாம் மொகிதின். 

நானும் என் பெட்டியில் ஏறி, எனக்குரிய இடத்தில் அமர்ந்தேன். ஆய்வர் வந்து இருக்கையை உறுதிசெய்து சென்றார். சிறிது நேரத்தில் சொன்னபடியே மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் என் இருக்கைக்கு வந்து உரையாடத் தொடங்கினார். தஞ்சையிலிருந்து கடலூர் வரை சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இடையில் வண்டி நிற்பதும் வண்டியில் இருப்பவர்கள் இறங்குவதும் புதியவர்கள் ஏறி அமர்வதுமாக இருந்தாலும் எங்கள் உரையாடலில் எந்தக் குறுக்கீடும் இல்லை.

 

மு.இளங்கோவன், முகுலாம் மொகிதின்

மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் எலும்பு, முதுகெலும்பு அறுவைப் பண்டுவத்தில் தலைசிறந்த வல்லுநர். தமிழகத்தின் பல ஊர்களில் அரசு மருத்துவமனைகளில், கல்லூரிகளில் தம் மருத்துவப் பணியைச் செய்தவர். தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் (சுவிசு, இங்கிலாந்து, செர்மனி, இத்தாலி) மருத்துவப் படிப்பைப் படித்துப் பட்டங்கள் பெற்றவர். பயிற்சிகளை மேற்கொண்டவர். ஒமன் நாட்டிலும் பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். தலைசிறந்த தமிழ் உணர்வாளர். மருத்துவத்தைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர். எலும்பு, முதுகெலும்பு மருத்துவம் சார்ந்த அரிய உரைகளையும் கட்டுரைகளையும் வழங்கியவர். 

மு. குலாம் மொகிதின் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில், 07-02-1959 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் முகமது இஸ்மாயில், அ. பாத்திமா பீவி ஆவர். 

குடும்பம் வணிகத்தின் பொருட்டு இலங்கைக்குச் சென்றதால் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள பண்டாரவளை, புனித தோமையர் பள்ளியில் குலாம் அவர்களின் இளமைக் கல்வி அமைந்தது. குடும்பம் மீண்டும் தமிழகம் திரும்பியதும் அன்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளியிலும் கல்வி பயின்றவர். பள்ளியில் படிக்கும்பொழுதே உயர்ந்த பண்புகள் அமைவதற்குக் காரணமாக விளங்கியவர் முனைவர் அ பன்னீர்செல்வம் அய்யா (சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல் இயக்குநர்) என்று மருத்துவர் குலாம் அவர்கள் நன்றிப் பெருக்குடன் தெரிவித்தார்.

பள்ளியிறுதி வகுப்பில் படித்தபொழுது (1975  ஆம் ஆண்டு, 11ஆம் வகுப்பு) தேர்வில் கணக்குப் பாடத்தில் 100 / 100 மதிப்பெண் பெற்றவர். இந்திய அரசின் கல்வி உதவித் தொகை (National Merit Scholarship) பெற்றவர். திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் பயின்று, புகுமுக வகுப்பில் தேறியவர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தம் மருத்துவப் படிப்பை (MBBS) (1976-1983) நிறைவுசெய்தவர். 1983-1989 புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றியவர். 

1989-90 இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எலும்பு அறுவைப் பட்டயப் படிப்பையும் (D.Ortho), 1991-1993 இல் பட்ட மேற்படிப்பை (MS Ortho), மதுரை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றவர். 

எலும்பு, முதுகெலும்பு அறுவையில் மேற்பயிற்சியினைக் கோவை கங்கா மருத்துவமனையில் பெற்றவர். 

கேண்டோன் மருத்துவமனை, கூர், சுவிட்சர்லாந்து; கேத்ரினன் மருத்துவமனை, சுடுட்கார்ட், ஜெர்மனி; பாஸல் மருத்துவமனை, சுவிட்சர்லாந்து; லேகோ மருத்துவமன, லேகோ, இத்தாலி; குயின்ஸ் மெடிக்கல் சென்டர், நாட்டிங்காம், இங்கிலாந்து ஆகிய புகழ்பெற்ற மருத்துவமனைகளில் பயிற்சிபெற்ற பட்டறிவு உடையவர். 

கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல ஊர்களுக்கும், சிங்கப்பூர், புருணை, ஹாங்காங், சௌதி அரேபியா, துபாய், ஓமான் நாடுகளுக்கும் சென்று தம் அறிவாராய்ச்சியை வெளிப்படுத்தியவர். 

மலேசியா, மக்கௌ (சீனா) நாடுகளுக்கும் சென்று வந்தவர். 

அண்டக்குளம், விராலிமலை, வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றி மக்கள் மருத்துவராக விளங்கியவர். மேலும், தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றிப் பல நூறு மருத்துவ மாணவர்களை உருவாக்கியவர். 

மருத்துவத்துறையில் மாமணியாக விளங்கும் குலாம் மொகைதின் அவர்கள் 28. 02. 2017 இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். 

அயல்நாட்டுப் பணி: 

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் அமைந்துள்ள கோலா மருத்துவமனையில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

தமிழ்ப் பணி 

எலும்பு அறுவை மருத்துவக் கருத்தரங்கு முதன் முதல் தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவச் சங்கம் சார்பில் தஞ்சாவூரில்  அக்டோபர், 2023, இல் நடைபெற்றபொழுது அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தியவர்.

தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவர்களின் மாநில மாநாடு (பிப்ரவரி,2024, ஈரோட்டில் நடைபெற்றபொழுது தமிழ் அமர்வுக்கு  ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகச் சிறப்பாக நடத்தியவர். 

மருத்துவத் துறையில் பேரீடுபாட்டுடன் விளங்கும் குலாம் மொகைதின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுத் தம் அறிவையும் துறைசார் ஈடுபாட்டையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அவ்வகையில் எலும்பு அறுவை மருத்துவமல்லாமல் ஆர்வத்தினால் பிறதுறை சார்ந்த படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி வழியாகப் படித்துள்ளார். அவை: 

Ø  PGDHM... மருத்துவ மனை மேலாண்மை பட்டயப் படிப்பு (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) 

Ø  PGDEA....கல்வியியல் நிர்வாகம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 

Ø  PGDCA... கணினி பயண்பாட்டியியல் பட்டயப்படிப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்) 

Ø  PGDNLP (இயற்கை மொழி செயலாக்கப் பட்டயப்படிப்பு, அண்ணாமலை பல்கலைக்கழகம்) 

Ø  முதுகலை இதழியல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) 

Ø  முதுகலை வணிகவியல் (கல்வியியல் மேலாண்மை, அண்ணாமலை பல்கலைக்கழகம்) 

பகுத்தறிவிலும், தமிழ்ப்பற்றிலும், சமூக நீதியிலும் பெரும்பிடிப்பினைக் கொண்டுள்ள மருத்துவர் குலாம் மொகைதின் அவர்கள் தாய்மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உடையவர். இவர்களைப் போன்ற மருத்துவர்களால்தான் தமிழ் மருத்துவத்துறை செழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

 

கருத்துகள் இல்லை: