[முனைவர் க. அன்பழகன் ’ஹரணி’ என்னும் புனைபெயரில் எழுதுபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககத் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “ஒரு பொருட் பல சொற்கள் (பெயர்கள்)” குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழாய்வுலகில் முப்பது ஆண்டுகளும் படைப்புலகில் நாற்பது ஆண்டுகளுமெனத் தொடர்ந்து இயங்கி வருபவர். சிறுகதை, குறுங்கதை, புதினம், கவிதைகள் இவரின் படைப்புத் தளங்களாக உள்ளன]
தஞ்சை மாவட்டம் கலையும் இலக்கியமும் செழித்த
பகுதியாகும். புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் இப்பகுதியில்
தோன்றித் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் தஞ்சாவூரில்
பிறந்து வளர்ந்த முனைவர் க. அன்பழகன் அவர்கள் ஹரணி என்ற பெயரில் கடந்த நாற்பதாண்டுகளாகத்
தொடர்ந்து எழுதி வருபவர். சிறுகதை, புதினம், கவிதை, ஆய்வு என்று பல முனைகளில் இயங்கி
வருபவர். பழகுதற்கு இனிய பண்பாளர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் ஆழமான பயிற்சியும்,
மாணவர்களுக்கு உள்ளம் உவகையுறும் வகையில் கற்பித்தலில் மிகப்பெரும் பட்டறிவும் உடையவர்.
பல்வேறு தமிழறிஞர்களுடனும், எழுத்தாளர்களுடனும் பழகிய பட்டறிவுடையவர்.
வேலூர் மாவட்டம் கலவை ஆதிபராசக்தி அறிவியல்
கல்லூரியில் நான் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியபொழுது (1999-2005), வேலூர் ஊரிசு
கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும்
வாய்ப்பு அமைந்தபொழுது முனைவர் க. அன்பழகன் அவர்களைச் சந்திக்கவும், கலந்துரையாடவும்
வாய்ப்பு முதன்முதல் வாய்த்தது. அதன்பிறகு பல்வேறு இலக்கியச் சந்திப்புகளில் எங்களின்
நட்பு வளர்பிறைபோல் வளர்ந்து, இன்று முழுநிலவாக முழுமைபெற்று விளங்குகின்றது. பல நாள்
பழகினாலும் தலைநாள் பழகியதுபோல் அன்புசெலுத்தும் இப்பெருமகனாரின் வாழ்வியலையும் பணிகளையும்
அறிந்தபொழுது வளரும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று அவற்றைப் பகிர்ந்துகொள்ள
விரும்பினேன்.
க. அன்பழகனின் இளமைக் கல்வி
தஞ்சாவூரில் வாழ்ந்த பொ. கலியபெருமாள், க.
ஞானாம்பாள் ஆகியோரின் மகனாக க. அன்பழகன் 02.06.1961 இல் பிறந்தவர். இவருடன் மூன்று
பெண் பிள்ளைகளும் ஓர் ஆணும் உடன் பிறப்புகளாகப் பிறந்தனர். கரந்தை உமாமகேசுவரனார் உயர்நிலைப்பள்ளியில்
பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.
புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் (வேதியியல்)
வகுப்புகளைத் தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரியில் பயின்றவர். முதுகலைத் தமிழ் இலக்கியப்
பட்டத்தினைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று பெற்றவர். இளம் முனைவர் பட்டம்,
முனைவர் பட்டங்களைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழியாகப் பெற்றவர். முனைவர் பா. மதிவாணன்,
முனைவர் பெ. மாதையன் ஆகியோர் இவரின் நெறியாளர்களாக அமைந்தனர். இவர் முனைவர் பட்டத்திற்குத்
தேர்ந்த தலைப்பு “ஒரு பொருட் பல சொற்கள் (பெயர்கள்)” என்பதாகும்.
1982 முதல் 1999 வரை தஞ்சாவூர்த் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் அலுவலக நிலையில் பல பணிப்பொறுப்புகளில் இருந்தவர். முனைவர் ஔவை து. நடராசனார்.
முனைவர் கி. கருணாகரன் உள்ளிட்ட துணைவேந்தர்களின் உதவியாளராக இருந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது முனைவர் க. இராசாராம் அவர்களின் உதவியாளராக இருந்து,
மாநாடு வெற்றிபெற உழைத்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப்
பணி
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில்
தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில்
பணியாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அஞ்சல்வழிக் கல்வி வகுப்புகளில்
கலந்துகொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்களாக நடத்திய பெருமைக்குரியவர். அஞ்சல்
வழிக் கல்விக்காகப் பல்வேறு பாட நூல்களை எழுதியவர். பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம்,
சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்காகவும் பல்வேறு பாட நூல்களை எழுதி
வழங்கியவர்.
படைப்புப் பணி
க.அன்பழகனின் தந்தையார் பொ. கலியபெருமாள்
அவர்கள் மருந்தாளுநராகப் பயிற்சி பெற்று, பணியாற்றியவர். ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம்
அறிந்தவர். தஞ்சையில் இவர் பணியாற்றியபொழுது தம் மகனை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வதை
வழக்கமாகக் கொண்டவர். நூலகப் பேழைகளில் உள்ள நூல்களை அறிமுகம் செய்வதுடன், வீட்டுக்குத்
தினத்தந்தி, இராணி உள்ளிட்ட நாளிதழ், வார இதழ்களை வாங்கிவரும் வழக்கம் உடையவர். இந்த
இதழ்களின் அறிமுகம் படிப்பார்வம் கொண்ட க.அன்பழகனுக்குப் படைப்பார்வம் வருவதற்குக்
காரணங்களாக இருந்தன. க. அன்பழகன் ஆறாம் வகுப்பில் பயிலும்பொழுதே எழுதத் தொடங்கியவர்.
1979 இல் முதல் கவிதை வெளியானது. 1983 - 84 இல் இவரின் சிறுகதை வெளிவரத் தொடங்கியது.
தீபம், ஆரண்யா, கொல்லிப்பாவை, சுபமங்களா உள்ளிட்ட சிற்றிதழ்கள் இவர் படைப்பைத் தாங்கி
வெளிவந்துள்ளன. இதயம் பேசுகிறது இதழில் “பறக்க மறந்த சிறகுகள்” என்ற கதையை எழுதி அனைவரின்
கவனத்தையும் பெற்றவர்.
தஞ்சாவூரில் வாழ்ந்த தஞ்சை பிரகாஷ் அவர்களின்
தொடர்பு அன்பழகனுக்குச் சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களின் படைப்புகளைப்
படித்து, அதுகுறித்து உரையாடவும் பெரும் வாயில்களைத் திறந்துவிட்டன. சுந்தர ராமசாமி, சுஜாதா,
பாலகுமாரன், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் தொடர்பும் சந்திப்பும் படைப்புலகில்
க. அன்பழகனுக்கு ஈடுபாடு வளர்வதற்குக் காரணங்களாயின.
1990 முதல் 1995 வரை தமிழகத்தில் வெளிவந்த
பல்வேறு சிற்றிதழ்களில் க.அன்பழகன் என்ற பெயரிலும் ஹரணி என்ற பெயரிலும் தொடர்ச்சியாக
எழுதிவந்தார். இவரின் சிறுகதை எழுதும் ஆற்றலை அறிந்த முனைவர் ஔவை. து. நடராசன் இவரின் படைப்பாற்றலைப் பல வகையில் ஊக்குவித்தார். இவரின் ஊக்கத்தால் 1993 இல் உயிர்க்குடில் என்ற சிறுகதைத்
தொகுப்பினை ஔவை. நடராசனின் அணிந்துரையுடன் வெளியிட்டார். உயிர்க்குடில் என்ற சிறுகதை
குங்குமம் இதழில் நட்சத்திர சிறுகதையாக வெளிவந்த பெருமைக்குரியது. ஆயிரம் கதைகளுக்கு
மேல் எழுதி, அன்பழகன் சிறுகதைச் செங்கதிராக மிளிரவேண்டும் என்று ஔவை பாராட்டினார்.
அந்த வாக்கு மெய்யாகும் வகையில் அன்பழகனின் 1200 சிறுகதைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவர்தம் படைப்புகளை
ஆராய்ந்து இதுவரை ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
இளம் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
2021 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து
ஓய்வுபெற்ற பிறகு தொடர்ந்து எழுத்துத்துறையில் க. அன்பழகனின் பணிகள் தொடர்ந்தவண்ணம்
உள்ளன.
முனைவர் க. அன்பழகனின் தமிழ்க் கொடைகள்:
சிறுகதைத் தொகுப்புகள்
- உயிர்க்குடில் (1993)
- ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
- மறுபடியும் நதி வரும் (2003)
- வலை (2004)
- புரண்டு படுக்கும் வாழ்க்கை (2011)
- செல்லாத நோட்டு (2012)
- காலம் தின்றவர்கள் (2014,)
- அப்பா (2020)
- மிட்டாய் வண்டி (2016)
- காந்தியும் குமரேசனும் (2017)
- மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் (2021)
- செல்போன் வாங்கப்போன முயல்குட்டி (2021)
- சதிகார நரியும் அதிகார ஓநாயும் (2021).
- சான்றோர் இளமையியல் (2022)
- தீம்பெயல் (2024)
- நதியின் பிழையன்று (2024)
நாவல்கள்
- ரௌத்ரம் பழகு (1996)
- பேருந்து (2014)
- அப்பிராணி (2016)
- வாழ்ந்தே தீருவேன் (2021)
- கனையெரி (2021)
குறுநாவல்கள்
- சரஸ்வதி (1995)
- நெருப்பில் புதைந்த கனவுகள் (1997)
- நிழல்கள் (1998)
- பெரிதினும் பெரிது கேள் (1999)
- சாபப் பட்சிகள் (1999)
- காக்கை விருட்சம் (1999)
- பெண் எனும் நல்லாள் (2021)
- பிச்சைக்காரர்கள் (2024)
- முல்லை (2024)
- பூக்கள் பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024)
இணைய நூல்கள்
ஜால்ரா,
என்னமோ நடக்குது,
நத்தைகள் (2022)
கவிதைத் தொகுப்புகள்
உதிரிலைகள் (2017)
விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி
(2019)
வானம் விழுங்கும் வானவில் (2021)
வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் (2022)
தமிழாய்வு நூல்கள்
மின்மினித்தடங்கள் (2004)
ஒருபொருட்பல சொற்கள் (2004)
வண்ணச்சிறகுகள் (2005)
தமிழ் நாவல்களில் பெண்கள் (2005)
சொல்லும்பொருளும் (2009)
திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார்
(2015)
தண்டியலங்காரம் (2015)
இலக்கிய நிழல் (2024)
கட்டுரை நூல்கள்
பெண்ணியல் கட்டுரைகள் (2004)
பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா
(2010)
நத்தையோட்டுத் தண்ணீர் (2012)
மாண்புமிகு வள்ளுவம் (2016)
விழையாமை என்னும் பேராண்மை – திருக்குறள்
நூல் (2022)
The Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்), செம்மொழி அறங்கள் – (2022) (இணைய நூல்கள்)
க. அன்பழகன் பெற்ற விருதுகள்
வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை விருது
(1995)
செழுந்தமிழ்ச் செம்மல் விருது
(2009)
கரூர் சிகரம் விருது (2012)
தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க விருது
(2013)
மண்ணின் சிறந்த படைப்பாளி விருது
(2014)
சென்னைக் கம்பன் கழகம் – தமிழ் நிதி விருது (2016)
வானதி விருது (2016)
உலகத் திருக்குறள் பேரவை – குறள்நெறிச் செல்வர் விருது (2017)
திருப்பூர் இலக்கிய விருது (2022).
பொதிகை மின்னல் சிறந்த நூல் இலக்கிய விருது
மற்றும் பொற்கிழி (2023),
வண்டல் சிறுகதைப்போட்டி பரிசு
(2023)
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறந்த
நூல்விருது (2023)
சிறந்த எழுத்தாளருக்கான திருக்கருகாவூர், அக்கினி அறக்கட்டளை விருது (2024)
புதுச்சேரி பனுவல் நூல் போட்டி 2023 - க்கான விருது (2024)
அமெரிக்க மின்னிதழ் ஆனந்தச் சந்திரிகை மற்றும் சென்னை நூலேணிப் பதிப்பக விருது.
சிறப்புப் பரிசு
கவிதை நூல் - வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் இருந்து கூடுகளாய்..(2024).
இவரது படைப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதியியல், அறிவியல், உளவியல், அறிவியல் தமிழ், சிறுவர் இலக்கியம் எனப் பல தளங்களில் செயற்பட்டு இத்துறைகளுக்கு வளமூட்டி வருபவர்.
படைப்புகள் விவரம்
1. சிறுகதைகள்
இதுவரை வெளிவந்தவை 1200
2. கவிதைகள்
– 200 - க்கு மேற்பட்ட கவிதைகள்.
3. குறுநாவல்கள்
– 20 - க்கு மேற்பட்டவை.
4. தொடர்கள்
– 5 - க்கு மேற்பட்டவை.
5. கட்டுரைகள்
– பொது மற்றும் இலக்கியக் கட்டுரைகள் 50 க்கு மேற்பட்டவை.
6. தினமணி
தமிழ்மணியில் வெளியான கட்டுரைகள் – 25
7. தினமலர்
பட்டம் பகுதியில் வெளியான தமிழாய்வுக் கட்டுரைகள் – 30
8. ஆங்கிலக் கவிதைகள் பிரசுரம் – 10
10பாடநூல்கள்
எழுதியமை – இளங்கலை மற்றும் முதுகலை – 7 நூல்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப்
பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்).
11. பெற்ற
பரிசுகள் – 100 க்கு மேற்பட்ட பரிசுகள்.
12. பெற்ற
விருதுகள் – 10
13. வகித்த பொறுப்புகள் – தமிழ்ப்பிரிவுத் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர், வல்லுநர்க்குழு உறுப்பினர், வினாத்தாள் தயாரிப்புக்குழுத் தலைவர், விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத் தலைவர் உள்நாடு மற்றும் வெளிநாடு.மானிட்டரிங் கமிட்டி உறுப்பினர், விடைத்தாள் தயாரிப்புக்குழு உறுப்பினர், நடுவர் – படைப்பிலக்கிய நூல்கள் தேர்வு (உள்நாடு மற்றும் வெளிநாடு), வாழ்நாள் உறுப்பினர் (உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்), ஒருங்கிணைப்பாளர் (தேசியக் கருத்தரங்குகள்) மற்றும் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர் (எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள்), தலைவர் (இணைய வழித்தேர்வுகள்), சோதிடவியல் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை வாய்மொழித்தேர்வுகள்.
14சென்ற
நாடுகள்
Ø
இலங்கை – உலக இந்து மாநாடு (2003),
Ø மலேசியா, ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு(2015).
15. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள படைப்புகள் விவரம்.
Ø
மேனிலைப்பள்ளிப் பாடத்திட்டம் (1995 முதல்
ஐந்தாண்டுகள் ),
Ø
இருளில் இரு பறவைகள் எனும் சிறுகதை,
Ø
வண்ணச்சிறகுகள் (இலக்கியக் கட்டுரைகள்
அடங்கிய ஆய்வுநூல் – (2006) கோபி கலை அறிவியல் கல்லூரிப் பாடத்திட்டம்,
Ø
செல்லாத நோட்டு எனும் சிறுகதை (வேலூர்
ஊரிஸ் மகளிர் கல்லூரி பாடத்திட்டம்) (2007),
Ø
மூக்குத்தி எனும் சிறுகதை ( மன்னர் சரபோசி
கல்லூரி பாடத்திட்டம்) (2009),
Ø
செல்லாத நோட்டு சிறுகதை (நஞ்சப்பா மகளிர்
கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டம், பொள்ளாச்சி)(2010),
Ø
காலம் தின்றவர்கள் சிறுகதைத்தொகுப்பு
– தொலைநிலைக் கல்வி, பாரதியார் பல்கலைக்கழகம், (2011 முதல் மூன்று ஆண்டுகள் )
Ø
பேருந்து நாவல் , திருச்சி, பாரதிதாசன்
பல்கலைக்கழகப் பாடத்திட்டம் 2015 இலிருந்து ஏழாண்டுகள் ,
Ø
பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (மொரிசியஸ்
கல்வி நிறுவனத்தில் பார்வை நூல்) (2009),
Ø
மாண்புமிகு வள்ளுவம், வள்ளுவம் குறித்த
ஆய்வு நூல் (சரபோசி அரசு கல்லூரிப் பாடத்திட்டத்தில்) (2018 முதல் மூன்றாண்டுகள்),
Ø
அப்பா சிறுகதைத்தொகுப்பு (அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி பாடத்திட்டத்தில்)
(2022-2023 முதல் மூன்றாண்டுகள்)..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக