நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
உலகத் தொல்காப்பிய மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தொல்காப்பிய மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கவிழா!





      தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

      கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

      இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

      பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

      பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

      பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

தொடர்புக்கு: 9442029053 /  9786332261

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

ம. செயராம சர்மாவுக்கு ஏம்பலம் செல்வம் அவர்கள் விருது அளித்துச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் புதுவைத் தமிழறிஞர்கள்.

      புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

      வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

      ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையைச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

      முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் அவர்கள் திருவாட்டி சாந்தி சர்மா அவர்களுக்கு நூல்பரிசு அளித்தல்.

தமிழாகரர் தெ. முருகசாமி அவர்களின் சிறப்புரை

முனைவர் சிவ. மாதவன் அவர்களின் தலைமையுரை

புதன், 12 ஏப்ரல், 2017

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழா!





அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் நடைபெறும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நிகழ்விற்கும், ஆத்திரேலியாவிலிருந்து வருகைபுரியும் எழுத்தாளர் செயராம சர்மா அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு நிகழ்விற்கும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 14.04.2017, வெள்ளிக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: ’வில்லிசைவேந்தர்’ இ. பட்டாபிராமன்
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன்
தலைமை: முனைவர் சிவ. மாதவன்
சிறப்புரை: தமிழாகரர் தெ. முருகசாமி
     
தலைப்பு: தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்

பாராட்டுப் பெறுவோர்: எழுத்தாளர் ம. செயராம சர்மா, ஆத்திரேலியா

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள: 

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

வியாழன், 2 மார்ச், 2017

தொல்காப்பியத்தில் சிக்கல்கள் என்னும் தலைப்பில் தொடர்பொழிவு

முனைவர் இராச. திருமாவளவன்

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு 02.03.2017 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற தொடர்பொழிவுக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் கு. சிவமணி தொல்காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து, தொல்காப்பியர் காலம் குறித்தும், கடல்கொண்ட தென்னாடு தொடர்பாக ஆகமங்களிலும் வடமொழி நூல்களிலும் இடம்பெற்றுள்ள குறிப்புகளையும் எடுத்துரைத்தார்.

தமிழறிஞர் இராச. திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிக்கல்கள் என்ற தலைப்பில் அரியதொரு ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள சிக்கல்கள் சிலவற்றை  அறிஞர்களின் கவனத்திற்கு முன்வைத்தார். தொல்காப்பிய நூலின் மூலம், உரையாசிரியர் கருத்துகள், இவற்றை விளக்கிக்காட்டினார். மேலும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூல்மரபு நூற்பாக்களில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இவர்தம் உரையில் இடம்பெற்ற கருத்துகளை ஒட்டி அறிஞர்கள் உடன்பட்டும், உறழ்ந்தும் கருத்துரைத்தனர். தமிழாகரர் தெ. முருகசாமி, பேராசிரியர் விசயவேணுகோபால், முனைவர் தி. செல்வம், பாவலர் மு.இளமுருகன், முனைவர் சிவ. இளங்கோ, தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், பாவலர் சீனு. தமிழ்மணி, புதுவைத் தமிழ்நெஞ்சன், கல்வித்துறையின் முன்னை இணை இயக்குநர் அ. இராமதாசு, திரு. தூ. சடகோபன், அறிவியல் அறிஞர் தாமரைக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாவலர் மு. இளமுருகன் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் கு. சிவமணி அவர்களின் தலைமையுரை

தமிழாகரர் தெ. முருகசாமி

மு.இளங்கோவன்(அறிமுகவுரை)


வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு! ஊரன் அடிகளார் சிறப்புரை!


 தவத்திரு ஊரன் அடிகளார் உரை
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு வரிசையில் இன்று(16.02.2017) வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது. சிறப்புரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வள்ளலார் வழங்கியிருந்த விளக்கத்தினையும் ஊரன் அடிகள் எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தில் தவறாகப் பதிவுபெற்றிருந்த முக்கியமான செய்தியை விளக்கித் தெளிவுப்படுத்தினார். ஐந்திரம் என்பதற்கு உரிய சொல் விளக்கமும், தொல்காப்பிய ஆய்வுகளைக் குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொருளதிகாரப் பகுதி எந்த மொழியிலும் இல்லாத வகையில் வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு உரிய புணர்ச்சியைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இடங்களில் உள்ள பொருத்தமின்மையை வள்ளலார் வழியில் ஊரன் அடிகள் இந்த உரையில் விளக்கினார். பாவாணர், மு. வரதராசனார் கருத்துகளையும், உரையாசிரியர்களின் கருத்துகளையும் துணையாகக் கொண்டு ஊரன் அடிகளார் உரையாற்றினார்.

தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்; , மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்; பேராசிரியர் தெ. முருகசாமி தலைமையுரை வழங்கினார். இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பிக்கப்பட்டார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கணப் புலவர்களும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழாகரர் தெ. முருகசாமி தலைமையுரை
முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை
மு.இளங்கோவன் அறிமுகவுரை
 அறிஞர் பெருமக்கள்

முனைவர் இரா.கோவலன் நன்றியுரை

 அறிஞர் பெருமக்கள்
அடிகளாரிடம் வாழ்த்தினைப் பெறுவோர்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்( முனைவர் இரா. நிர்மலா, ஈகியர் அப்துல் மஜீத்)
அடியார்கள் வாழ்த்தினைப் பெறுதல்

அடிகளாரின் உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்

ஞாயிறு, 5 ஜூன், 2016

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்க விழா...

  கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது.  முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

  கனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

  திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.

  பிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

  திரு. சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் ’உந்தி முதலா முந்து வளி’ என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் - உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார். அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருத்துவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும் எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.


  திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

  கனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெள்ளி, 3 ஜூன், 2016

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்





  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.

  முதல் நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.

  மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.

  சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.

  மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில்  புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


  உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தொடர்புக்கு: சிவ.பாலு அவர்கள்: 416 546 1394



புதன், 11 மே, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா




21.05.2016 காரி(சனி)க் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது.


முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் டாக்டர் பி. நாராயணன், புலவர் . தண்டபாணி, திரு. .சிவராஜ், முனைவர் .பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன், பாவலர் . எழில்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் இ. சூசை அவர்கள் தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பியம் அறியலாம்.

செவ்வாய், 3 மே, 2016

புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தில் பேராசிரியர் ப. அருளியின் சிறப்புரை!





உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் குறித்த ஐந்தாம் தொடர்பொழிவு, புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் 04.05.2016 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது. இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் கலந்துகொண்டு, தொல்காப்பியம் உரியியல் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார்.


முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றவும், முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரான்சிலிருந்து வருகைதரும் பாட்டரசர் கி. பாரதிதாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கின்றார். திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க. மு. முருகையன் நன்றியுரை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

தொடர்புக்கு: 0091 9443658700 /  0091 9442029053



திங்கள், 4 ஏப்ரல், 2016

தொல்காப்பியம் – தொடர்பொழிவு 4

·  

அன்புடையீர்! வணக்கம்.
தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய இசையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 10. 04. 2016, ஞாயிறு, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8. 15 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119, நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள்

சிறப்புரை: முனைவர் இராச. கலைவாணி அவர்கள்
(
மேனாள் இசைப் பேராசிரியர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை)

தலைப்பு: தொல்காப்பியத்தில் இசை

நன்றியுரை:  முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053