நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 டிசம்பர், 2012

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)





லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)


லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர்.

பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். 1939 இல் சைக்கோனில் நடைபெற்ற தமிழர் மாநாடு வெற்றியாக நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர். அந்த மாநாட்டில் தமிழருக்கு ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறிவரும் என்று இவர் பேசிய பேச்சு சைக்கோனில் தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளது. தமிழர்கள் அனைவரும் உடையில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுத், தமிழர்கள் வேட்டி, கைலி அணிவதை நிறுத்தி, பேண்டு, சட்டை அணிய வலியுறுத்தினார். அதுபோல் குடுமி நீக்கி, கிராப் வெட்ட வேண்டும் என்றார். 1930 ஆம் ஆண்டளவில் உடைச்சீர்திருத்தத்தை வலியுறுத்தி, மகாத்மா காந்தியடிகளுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் மடல் விடுத்துள்ளார்.

1939 ஆம் ஆண்டளவில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. பிரான்சு நாட்டைச் செர்மானியப் படைகள் கைப்பற்றின. செர்மானியரின் சொற்படி பிரெஞ்சு தேசம் ஆளப்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தோ சீனத்தில் சப்பானியரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பிரெஞ்சு ஆதிக்கம் வீழ்ந்தாலும்  சைக்கோனில் உள்ள  புதுச்சேரித் தமிழர்கள் சப்பானியருக்கு ஒத்துழைப்புத் தரத் தயங்கினர். நேதாஜி அவர்கள் சப்பானியரின் துணையுடன் இந்திய விடுதலை பெற்றுத் தருவார் என்று நம்பிய லெயோன் புருஷாந்தி அவர்கள் நேதாஜியின் படைக்குப் பலவகையில் ஆதரவு திரட்டினார். நேதாஜி அவர்கள் சைக்கோன் தெருக்களில்  காரில் ஊர்வலமாக வந்தபொழுது காசு மாலைகளை அணிவித்துப் பெருமை செய்தார்.

நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் அலுவலகத்திற்குச் சைக்கோனில் தாம் வாழ்ந்த வளமனையை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்து உதவினார். சைக்கோனில் Rue Paul Blanchy தெருவில் உள்ள 76 ஆம் எண்ணுள்ள வீட்டில்தான் இந்திய தேசிய இராணுவத்தின் அலுவலகம் செயல்பட்டுள்ளது. படைக்கு ஆள் சேர்ப்பது, இரகசியக் கூட்டங்கள் நடத்துவது இவர் வீட்டில்தான் நடந்துள்ளது. இங்கு இந்துத்தானி மொழியும் இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு) கற்பிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் சைக்கோனிலிருந்து வெளியான ஆசாத் ஹிந்த்(Azad Hind)(சூலை 1945) இதழில் உள்ளன.

அமெரிக்காவின் அணுக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு சப்பான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இதனால் பிரெஞ்சுப் படையினர் சைக்கோன் வந்திறங்கினர். பிரெஞ்சுநாட்டுக்கு எதிராக லெயோன் புருஷாந்தி செயல்பட்டார் என்று இராசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். மூன்றுமாதம் கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு லெயோன் புருஷாந்தி மனநோயாளியாக வெளிவந்தார். சிறைதண்டனைக்குப் பிறகு பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் இருந்தார். தம் செல்வநிலை, நிலபுலங்கள் பற்றிய எந்த நினைவும் இல்லாதபடி இருந்தார். அந்த அளவு சிறையில் மின்சாரம் பாய்ச்சப்பெற்றுச் சித்திரவதைக்கு ஆளானார்.

சைக்கோனில் இருந்த Dr. Le Villain என்ற ஆங்கில மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டார். ஆனால் மருத்துவம் பயனளிக்கவில்லை. இந்தோ சீனத்தில் இருந்த சொத்துகள் எதனையும் விற்பனை செய்யாமல் லெயோன் புருஷாந்தி குடும்பத்தினர் 1946 ஆம் ஆண்டில் புதுச்சேரி வந்துவிட்டனர். இவர்தம் வீடுகளும், சொத்துகளும் வியட்நாமியர் வாழும் இடமாக மாறிப்போனது. சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெயோன் புருஷாந்தி அவர்கள் ஓரளவு நலம் பெற்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். லெயோன் புருஷாந்தி அவர்கள் தம் 65 ஆம் அகவையில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

குதிரையேற்ற வீரராகவும், இந்திய விடுதலைக்கு உழைத்தவராகவும், தம் பொருள் செல்வங்களை வழங்கியவராகவும் விளங்கிய லெயோன் புருஷாந்தி அவர்களின் வாழ்வு முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் 1940 முதல் 1945 வரை இந்தோ சீனத்தில் நடைபெற்ற நேதாஜி அவர்களின் செயல்பாடுகளும் எழுதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.





புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்- வேறொரு தோற்றம்)


புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்-வேறொரு தோற்றம்)


புருஷாந்தியின் 76 ஆம் எண் பொறிக்கப்பட்டுள்ள சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)


புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)



தேநீர்க்கடையாக மாறிப்போன இன்றைய வீட்டு நிலை(சைக்கோன்-நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)




புருஷாந்தியின் சைக்கோன் வீட்டில் உள்ள சிங்கச் சிற்பம்(புதுவையிலும் இது போல் உள்ளது)



ஆசாத் ஹிந்து இதழில் சைக்கோன் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம் குறித்த குறிப்பு

1 கருத்து:

vijayan சொன்னது…

அற்புதமான ஆவணம்.இதையெல்லாம் பதிவு செய்யாமலும்,செய்தாலும் அதை படிக்காமல் ஒரு எருமைமாட்டின் வாழ்கையை தமிழன் வாழ்கிறான்.