நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 டிசம்பர், 2010

சிங்கப்பூரில் கரிகாலன் விருதுகள் வழங்கும் விழாதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் பெறும் தகுதியாளர்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத்
தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாலன் விருது வழகுவது வழக்கம். அவ்வகையில் சிங்கப்பூர் எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது சிங்கப்பூர்த் தேசியக் கல்விக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் சீதாலெட்சுமி, முனைவர் வனிதாமணி சரவணனுக்கு வழங்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய "தரமான தமிழ்ப்பேச்சு" என்னும் நூலின் அடிப்படையில் இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

மலேசியாவுக்கு வழங்கப்படும் விருது எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய "நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" என்ற நூலுக்காக வழங்கப்படுகின்று.

தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்த நடுவர் குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தது.

கரிகாலன் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் 01.01.2011(சனிக்கிழமை) மாலை ஆறு மணிக்கு நடைபெறுகின்றது.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் வி.பி.ஜோதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவர் முனைவர் ஆ.கார்த்திகேயன் திரைப்படப் பாடலாசிரியர் முனைவர் நா.முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

ஐக்கிய நாட்டு நிறுவன ஆசிய-பசிபிக் பொருளியல் சமூக ஆணைக்குழுவின் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது இக்பால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

அனைவரையும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவுநர் முஸ்தபா அவர்கள் அழைத்து மகிழ்கின்றார்.

கருத்துகள் இல்லை: