நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 டிசம்பர், 2010

தமிழரிமா பேராசிரியர் பி. விருத்தாசலம் மறைவுக்கு இரங்கல்


பேராசிரியர் பி. விருத்தாசலம்

தஞ்சாவூர் என்றால் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருபவர் பி.விருத்தாசலம் ஐயா அவர்கள் ஆவார். 17.11.2010 அறிவன் கிழமை இரவு தம் 70 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை இன்று சிந்தனையாளன் ஏட்டில் பார்த்தேன். பேராசிரியர் கு.திருமாறன் ஐயா அவர்களும் இதனை உறுதிப்படுத்தினார்.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது கரந்தைக்கல்லூரியில் சேர்வற்குரிய ஒரு சூழல் நிலவியது. அப்பொழுது எனக்கு இடம் தர முன்வந்த நாள் முதல் பேராசிரியர் பி. விருத்தாசலனாருடன் நெருங்கியத் தொடர்பு இருந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலத்திலும் ஆக்கமும் ஊக்குமும் தரும் உரைகளை வழங்கியவண்ணம் இருந்தார்.

தமிழ்வழிக்கல்வி இயக்கம் என்னும் ஓர் அமைப்பை அறிஞர்கள் கட்டி மாநாடுகள்
கண்டபொழுது துணிவாக நின்று வினையாற்றியவர் நம் பேராசிரியர். அந்த மாநாடுகளுக்கு நான் தஞ்சை சென்ற பொழுதெல்லாம் ஐயாவைக்கண்டு உரையாடுவேன்.
மேலும் நாங்கள் இணைந்து பணிபுரிந்த தமிழியக்கம் என்னும் அமைப்பு சார்ந்தும் ஐயாவுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர்களின் மகன் திரு.வி.தமிழ்ச்செல்வன் என் அன்புக்குரிய நண்பர். பிற மக்கள் செல்வங்களும் எனக்கு அன்புக்குரியவர்களே.

பேராசிரியரை இழந்து நிற்கும் மாணவக் குமூகத்துக்கும், குடும்பத்தினருக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியரின் வாழ்க்கைக்குறிப்பு

தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில் பொ.பிச்சை நாட்டார், தென்காவேரியம்மையாருக்கு மகனாய் 22-5-1940-இல் பிறந்தவர். இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி, பூண்டி திரு.புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.

தங்கச் சாலையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும்,
சென்னைப் பெரம்பூரில் உள்ள சமாலியா மேல்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர்.

தஞ்சையருகே உள்ள கரந்தையில் உள்ள உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இதில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எளிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் உணர்வு செறிந்த மாணவர்களுக்கும் இவர் தந்தையராகவும் காப்பாளராகவும் இருந்து உதவியவர்.

சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆட்சிக்குழு, கல்விக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். இங்கெல்லாம் தமிழுக்கு ஆக்கமான நிலையில் குரல்கொடுத்தவர்.

தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தார்.

சிலப்பதிகாரத்திலும் பாவேந்தர் படைப்புகளிலும் பழந்தமிழ் நூல்களிலும் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.


மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. இவரின் தமிழ்ப் பணியைப் போற்றி 2009 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது.


பேராசிரியர் பி.விருத்தாசலனார் நூல்கள்

சான்றோர் சிந்தனைகள்
காவிரிக்கரை வேங்கடம்
தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
கண்ணகி சிலம்பீந்த காரணம்
மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
சிந்தனைச் சுடர்

2 கருத்துகள்:

Thanjavurkaran சொன்னது…

மிகவும் வருத்தமான செய்தி.
இவரது மகன் பாரி எனது பள்ளிகால நண்பன்.
நானும் கரந்தை தமிழ் சங்கத்தின் முன்னால் மாணவனே.

Thamizhan சொன்னது…

பேராசிரியர் அய்யா அவர்களை நினைவு கூர்ந்து எழுதுயுள்ளதைப் பாராட்டுகின்றேன்.தங்கள் பணியும்,தாங்கள் பழகியுள்ள பெருந்தமிழறிஞர்கள் அவர்களது பணியும் பலவாறு போற்றத்தக்கவை.இளைய தலை முறைக்கு இவர்களது காலமும், காலத்தின் இவர்கள் ஆற்றிய பெருஞ்செயல்களும் புரியாமல் போய் விட்டன.பலர் இவர்களை நேரே பார்த்துப் பழகி இருக்கவும் முடியாது. தங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்..