நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

"தமிழன் வழிகாட்டி" செந்தியுடன் ஒரு நாள் சந்திப்பு!


பாவேந்தர் அருங்காட்சியகத்தில் மு.இளங்கோவன், செந்தி அவர்கள்

 ஈழத்து நூல்களையும் அறிஞர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் முனைவர் ஈழத்துப்பூராடனார் ஆவார். ஐயா அவர்கள் ஈழத்தில் ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றுத் தம் துணைவியார், குடும்பத்தாருடன் இப்பொழுது கனடாவில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். ஐயா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மறவாமல் தமிழன் வழிகாட்டி என்ற கனடா நாட்டுத் தமிழர்கள் குறித்த தகவல்கள் அடங்கியப் பெரிய வழிகாட்டி நூலை எனக்கு அனுப்பி வைப்பார்கள்.

 தமிழன் வழிகாட்டி நூலில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் உரிய உதவி, தேவை பற்றிய விளம்பரங்கள், செய்திகள் இருக்கும். குடமுழுக்குத் தொடங்கி, துணிவெளுப்பு வரையிலான பல வகை விளம்பரங்கள் கண்டு ஈழத்தமிழர்கள் கனடா நாட்டில் வேர்விட்டு வளர்ந்துள்ளார்களே என்று நினைத்து மகிழ்ந்திருந்தேன். தமிழன் வழிகாட்டியின் ஆசிரியர் அல்லது உரிமையாளர் பெயர் திரு.செந்தி (செந்திலாதவன்) என்பதை நூல்வழி அறிந்திருந்தேன். அவரின் முயற்சியைப் பாராட்டி ஈழத்துப்பூராடனார் ஐயாவுக்குப் பல மடல்கள் எழுதியதும் உண்டு. இவை நடந்தது பல ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

 அதன் பிறகு இணையத்தில் ஈடுபட்டு உழைத்தபொழுது தமிழன் வழிகாட்டி இணையத்தில் காலூன்றி வளர்ந்திருப்பதைக் கவனித்தேன். மின்னஞ்சல் வழியாகத் திரு. செந்தி அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். கனடாவிலிருந்து யாரேனும் வந்தாலும் அவர்கள் வழியாகச் செந்தி அவர்களைப் பற்றி வினவுவது வழக்கம். செந்தியின் சிறப்பினையும் வினைத்திட்பத்தையும் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் "செயல்மறவர் செந்தி" என்று ஒற்றைவரியில் தமிழ் உளிகொண்டு செதுக்கிய ஓர் அறிமுகத்தைக் கண்டு செந்தியின் நினைவில் இருந்தேன்.

 ஒருநாள் மணிமேகலை நூல் வெளியீட்டகத்திலிருந்து ஒரு நூல்பொதி என் முகவரிக்கு வந்திருந்தது. அதில் திருக்குறள் விளக்கவுரை என்றும் மேலும் திருக்குறள் தொடர்பிலான சில நூல்களும் இருக்கக் கண்டேன். திருக்குறளை அயலகத்தில் பரப்பும் அரிய முயற்சியாக உள்ளதே என்று பார்த்தபொழுது அதன் உரையாசிரியர் திரு.அ.பொ.செல்லையா என்று இருந்தது. அவர்கள் ஈழத்தில் தமிழ்ப்பற்றும், திராவிட இயக்க உணர்வும் வாய்க்கப் பெற்றவராகவும் விளங்கியவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபொழுது பேராசிரியர் க. அன்பழகன் உள்ளிட்டவர்களையும் அறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர் பணிகளையும் அறிந்தவர். ஈழத்தில் திருவள்ளுவருக்குச் சிலை எடுத்த பெருமைக்குரியவர். அ.பொ. செல்லையாவின் தமிழ்ப்பற்று அறிந்து அவர்களின் குடும்பச்செல்வம்தான் நம் செந்தி என்று அறிந்து உவந்திருந்தேன். தமிழாசிரியர் ஒருவரின் மகன் பொருளாலும், புகழாலும் உலக அளவில் சிறப்புற்று விளங்குகின்றார் என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

 இதனிடயே செந்தி அவர்களின் அன்னையார் திருமதி யோகரத்தினம் அம்மா அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பது அறிந்து எனக்கு மேலும் வியப்பு பன்மடங்கானது. அந்த மொழிபெயர்ப்பையும் கண்ணுறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் மொழிபெயர்ப்புப் பட்டறிவுகளை ஒரு கட்டுரையாக்கி விடுத்துவைக்க வேண்டினேன். கட்டுரையும் அம்மாவால் உருவாக்கப்பட்டு ஒரு கிழமைக்குள் வந்தது. கட்டுரையின் தரமும் சிறப்பும் உணர்ந்து அக்கட்டுரையைக் கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கலாமே என்று ஒரு கருத்தினை வழங்கினேன். அம்மாவும் தம் கணவருக்கு அமையாத ஒரு பெருஞ்சிறப்பு தமக்கு அமைய உள்ளதே என நினைத்து அகவை முதிர்ந்த நிலையிலும் கோவை மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டுக் கட்டுரையை மாநாட்டுக் குழுவினர்க்கு அனுப்பியுள்ளார். அறிஞர்குழுவால் அக்கட்டுரை ஏற்கப்பட்டது.

 அம்மா தமிழகத்திற்குத் தமிழ்நாட்டு அரசின் விருந்தினராக வருவதற்குரிய ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டார். அவர்களுக்குரிய சில நெறிமுறைகளை நானும் சொன்னேன். அகவை முதிர்ந்த அவர்கள் தனியாகக் கனடாவிலிருந்து புறப்பட்டு வருவதில் செலவு(பயணம்)க்களைப்பு இருக்கும் என்றும் தமிழகத்திற்கு இதுவரை வந்தது இல்லை என்றும் தயங்கினார்கள். அந்தச் சூழலில் நண்பர் செந்தி அவர்கள் " உங்கள் மகன் இளங்கோவன் அங்கு இருக்கின்றார். கவலையின்றிப் புறப்படுங்கள்" என்று ஊக்க உரை தந்ததும் அந்தத் தமிழ்த்தாய் என்னையும் அரசையும் நம்பித் தமிழகம் வந்தார்கள்.

 அம்மாவைச் சந்திக்கும் நோக்கில் மாநாட்டுக்கு முதல்நாளே நான் கோவை சென்று அம்மாவைக் கண்டேன். அவர்கள் வரும்பொழுதே வானூர்தியின் பறப்பு ஒவ்வாமல் வாந்தி மயக்கமாக வந்துள்ளார்கள். உண்ணாமல் உறங்காமல் இருந்துள்ளார்கள். நான் சென்று கண்டபொழுது மிகவும் சோர்ந்து காணப்பட்டார்கள். உடன் விடுதி உரிமையாளரின் மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்து உரிய மருத்துவம் பார்த்து அம்மாவை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தேன். அந்த நிகழ்வுகள் பற்றி அம்மாவும் நானும் முன்பும் எழுதியுள்ளோம்.

 மாநாடு முடியும்வரை அம்மாவைப் பாதுகாப்பாகப் பார்த்து அவர்களுக்கு உரிய பணிவிடைகள் செய்து பாதுகாத்தேன். அதுபோல் அவர்கள் கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்பி இரண்டு நாள் தங்கி அதன் பிறகு இலங்கை சென்று ஒரு மாத இடைவெளியில் மீண்டும் கனடா செல்வது திட்டம். அம்மா கோவையிலிருந்து சென்னைக்கு வந்தார்கள். சென்னையில் தங்குவதற்கு உரிய இடத்திற்குச் செல்ல இயலாமல் சென்னை வானூர்தி நிலையத்தில் தயங்கியபடி நின்றிருந்தார்கள். அங்கிருந்தபடி எனக்குத் தொலைபேசியில் பேசினார்கள். புதுச்சேரியில் இருந்தபடி பெரும் பரபரப்புக்கு இடையே என் சென்னை நண்பர் திரு. மு. இராசசேகர் அவர்களின் உதவியால் அம்மாவை உரிய இடத்தில் தங்கவைத்து இலங்கைக்குச் செல்லும்வரை துணையாக உதவினேன். ஒரு மாத்ததிற்குப் பிறகு அம்மா கனடா திரும்பியதும் அன்பொழுக நன்றி மடல் எழுதியபடி இருந்தார்கள்.

 கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபொழுது செந்தி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் வணிகத்திருவிழா நடக்க ஏற்பாடாகியிருந்தது. எனவே செந்தி அவர்கள் மாநாட்டுக்கு வர இயலாமல் வணிகத் திருவிழாவில் இருக்கும்படி நேர்ந்தது. வணிகத் திருவிழா முடித்துச் செந்தி இயல்பு நிலைக்குத் திரும்பியபொழுதில் ஒரு கிழமைப் பயணமாகத் தமிழகம் வந்தார்கள்.

 அம்மா அவர்கள் மறவாமல் என்னைக் கண்டு நன்றியுரைக்கும்படி தம் அன்புமகன் செந்திக்கு ஓர் ஆணையிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் சென்னை வந்த திரு.செந்தி அவர்கள் புதுச்சேரி வருவதற்கு நாள் ஒதுக்கினார்கள். நானும் அவரும் உள்ளம் திறுந்து பேசுவதற்காகப் பிற புறப்பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அமைதியாக வந்தார். நானும் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தேன். இருவரும் என் அலுவலகத்தில் சந்தித்தோம். பிறகு இருவரும் புதுவையின் புகழ்பெற்ற இடங்களுக்குச் சென்றோம். அரவிந்தர் தவமனை, கடற்கரை, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பாரதியார் காட்சியகம், பாவேந்தர் காட்சியகம் யாவும் சென்று அவருக்குக் காட்டினேன்.

 பாவேந்தர் பாரதிதாசன் காட்சியகத்தில் பாவேந்தர் தொடர்பிலான ஒளிவட்டுகளைப் பெற்றுக்கொண்டார். அதுபோல் பாரதியார் குறித்த ஆவணப்படத்தையும் பார்த்ததோடு அல்லாமல் அதன் படியினையும் வாங்கிக்கொண்டார்.


புதுவைக் கடற்கரையில் செந்தி அவர்கள்


அரவிந்தர் தவமனையில் மு.இளங்கோவன்,செந்தி அவர்கள்


மு.இ. இல்லத்தில் செந்தி அவர்கள்

 இருவரும் உள்ளார்ந்த அன்புடன் உரையாடினோம். அப்பொழுது செந்தி அவர்களின் கடும் உழைப்பும், திட்டமிட்டு இயங்கிய இயக்கமும் சமூகத்தில் ஒரு பெரிய மதிப்பை அவருக்கு ஏற்படுத்தித் தந்ததுள்ளதை அறிந்தேன். இலங்கையிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகச் செல்ல வேண்டிய நாட்டுச் சூழலில் செந்தி இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் தங்கியிருந்து பிறகு கனடா சென்றார். கனடா செல்லும்பொழுது அவர் கையில் ஐம்பது டாலர் மட்டும் இருப்பு இருந்ததுள்ளது. கடுமையாக உழைத்து குறிப்பிட்ட ஆண்டில் குடும்பத்தினரையும் கனடாவுக்கு அழைத்துக்கொண்டார். கடும் உழைப்பும், சரியான திட்டமிடலும் அவருக்குப் பெரிய வளர்ச்சியைத் தந்தது. தமிழன் வழிகாட்டி விளம்பரப் புத்தகமாக இருந்து சமூகத்துக்கு அவரை அடையாளம் காட்டியுள்ளது. அதனையொட்டி வணிகத் திருவிழா கனடாவில் ஈழத் தமிழர்களை ஓரிடத்தில் இணைக்கும் பாலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

 இன்று பொருளாலும், புகழாலும் வளர்ந்து நிற்கும் செந்தி போன்றவர்களின் வாழ்க்கை ஓர் உண்மையை உணர்த்தி நிற்கின்றது. முறையான உழைப்புக்கும் சரியான திட்டமிடலுக்கும் தோல்வி என்பதே இல்லை என்பதுதான் அது. நம் புதுவை இல்லத்திற்கு வந்து நம் முயற்சிகளைக் கண்ணுற்ற செந்திக்கு எங்கள் ஊரில் பழைய வீடு பாழடைந்து கிடந்ததையும் அதனைச் செப்பமிட்டு எங்கள் முன்னோர் நினைவாகக் காத்து வருவதையும் படங்கள் வழியாகக் காட்சிப்படுத்தினேன். ஈழத்தில் தங்கள் முன்னோர் வீடும் இதுபோல் சிதைந்து கிடப்பதாகவும் அதனைப் புதுப்பிக்கும் முயற்சிக்கு என் பட்டறிவு தேவை எனவும் உரைத்தார். இருவரும் உள்ளம் ஒன்றிப் பிரியா விடைபெற்றுக்கொண்டோம். தம் தாயாரின் தமிழகச் செலவுக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி சொல்வதற்கு நேராக என்னைக் காண வந்த தன்னம்பிக்கைத் தோழரின் பண்பறிந்து போற்றினேன்.

2 கருத்துகள்:

KANA VARO சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

kannan சொன்னது…

செந்தியுடன் தாங்கள் பகிர்ந்துகொண்டதைப்படித்தேன்.அம்மையாரைப்பாதுகாப்பாக வைத்திருந்து அனுப்பியமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.அன்பன் சொக்கலிங்கம்