நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 டிசம்பர், 2010

சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது...


முனைவர் பொற்கோ மாநாட்டு மலரை வெளியிட, சிங்கப்பூர் பேராளர் பெற்றுக்கொள்கின்றார்.அருகில் ஈசுவரன்,ஈரோடு தமிழன்பன்

சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் காலை 10 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். முனைவர் பொற்கோ அவர்களின் உரை செறிவாகவும் நிறைவாகவும் இருந்தது.

தமிழின் பொதுப்பேச்சு வழக்கினையும் பொது இலக்கிய வழக்கினையும் கற்பிக்க வேண்டும். மேலும் செய்யுள் வழக்கில் உள்ள சிறப்புக்கூறுகளையும் கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பேச்சுத் தமிழைப் புறக்கணித்தால் தமிழ் வாழாது என்றும் குறிப்பிட்டார். மொழியாசிரியர்கள்தான் மாணவர்களின் ஆளுமையை வளர்க்கமுடியும் எனவும் நடைமுறை வாழ்க்கையை மொழியாசிரியர்தான் சொல்லித்தர முடியும் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டின் சிறப்புரையை ஈரோடு தமிழன்பன் வழங்கினார்.

சிங்கப்பூரிலிருந்து 14 பேராளர்களும் இலங்கையிலிருந்து ஒரு பேராளரும் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து பேராளர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடைக்காததால் பேராசிரியர் சண்முகதாசு, பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டனர். பொது அமர்வும் இணை அமர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.

1 கருத்து:

உமர் | Umar சொன்னது…

//லீ மெரிடியன் உணவகத்தில்//

தங்கும் விடுதி?

---
//புறக்கனித்தால்//

--
அவசரத்தில் தட்டச்சும்போது பிழை நேர்ந்திருக்கும் போல. சரி செய்து விடுங்கள். (பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம். )