நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுக்கு இரங்கல்!


கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா


சென்னைக் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுச் செய்தியை ஏடுகளில் கண்டு(20.12.2010) அதிர்ச்சியுற்றேன். கலைஞன் பதிப்பகத்துக்குப் பல ஆண்டுகளாகச் சென்று நல்ல நூல்களை நான் வாங்கி வந்தது உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர் அரங்க. பாரி அவர்கள் ஏற்பாடு செய்த சில பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டபொழுது கலைஞன் பதிப்பகத் தொடர்பு எனக்கு வலிமையாக அமைந்தது.

கடந்த மே மாதம் சிங்கப்பூரில் கலைஞன் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருதரங்கில் கலந்துகொண்டு கட்டுரை படித்தேன். பிறகு மாநாட்டுக் குழுவினர் மலேசியாவுக்குச் சென்றோம். மலேசியாவைக் கண்டு மகிழ அண்ணன் மா.நந்தன் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஒருநாள் கோலாலம்பூரில் இரவு விருந்தினை முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்பொழுது உரையாடலில் அண்ணன் நந்தன் அருகில் நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது தங்கள் தந்தையார் மாசிலாமணி ஐயாவை நான் பார்க்கவேண்டும் என்று சொன்னேன். அருகில் இருந்த ஒரு பெரியவரைக் காட்டி இவர்தான் என் தந்தையார் என்றார்.

ஒரு கிழமையாக அமைதியாக அந்தப் பயணத்தில் இருந்த அவர்தான் கலைஞன் பதிப்பக உரிமையாளரா? என்று வியந்துபோனேன். ஐயா பொறுத்தருளவும்!. தாங்கள் யார் என்று தெரியாமல் பல நாள் உங்களுடன் உரையாடாமல் இருந்துவிட்டேன். நான் மு.இளங்கோவன். புதுச்சேரி என்றேன். விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலைப் பதிப்பித்தவர்தானே நீங்கள் என்றார். நான் அதிர்ந்துபோனேன். நம் முயற்சிகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்துவைத்துள்ள ஒருவரை இதுவரை அறியாமல் இருந்துள்ளோமே என்று நாணினேன்.

ஐயாவுக்கு அண்ணன் அறிவுமதி அவர்கள் துரையனார் அடிகள் நூலினைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வழங்கியுள்ளார். அதனை வரி வரியாக மனதில் தேக்கிவைத்திருந்த மாசிலாமணி ஐயாவின் நினைவாற்றலை எண்ணி எண்ணி வியந்தேன். அவர்களுடன் தங்கியிருந்த பல மணி நேரங்களில் அவர்களின் பதிப்புலக வாழ்க்கை, இலக்கிய ஆர்வம், முன்னணி எழுத்தாளர்களின் படைப்பாளுமை பற்றி அறிந்தவண்ணம் இருந்தேன்.

இந்த ஆண்டும் வெளிநாட்டுப் பயணத்தில் ஐயாவைச் சந்திக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அவர்கள் வீட்டில் படுக்கையில் படுத்து உறங்கியபொழுது (19.12.2010, ஞாயிறு) உயிர் பிரிந்துள்ளது என்ற செய்தியறிந்து வருந்தினேன். தந்தையாரை இழந்து வருந்தும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பதிப்பாளரை இழந்து தவிக்கும் படிப்பாளிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

நன்றி: (படம்) இந்து நாளிதழ்

கருத்துகள் இல்லை: