நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
உலகத் தமிழாசிரியர் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழாசிரியர் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2013

மலேசியா உலகத் தமிழாசிரியர் மாநாடு நிறைவு விழா- காட்சிகள்



மலேசிய அமைச்சர் டத்தோ மு.சரவணன் அவர்களிடம் மு.இளங்கோவன் அவர்கள் நூல்களை அளித்தல். அருகில் பேராசிரியர் ம.மன்னர்மன்னன் அவர்கள்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில்  மூன்றுநாள் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாடு நேற்று(05.06.20130) முற்பகல் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மலேசியாவின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் துணைஅமைச்சர் டத்தோ மு. சரவணன் அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார். தமிழ்மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையினையும் எடுத்துரைத்து அரியதோர் இலக்கிய உரை வழங்கினார். தேவாரம்,  திருவாசகம், கம்பராமாயணம், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்களின் - படைப்புகளிலிருந்து இலக்கிய நயம் பொருந்திய வரிகளை எடுத்துரைத்துப் பேசி அவையினரின் உள்ளங்களில் இடம்பெற்றார்.

சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது என்று எடுத்துரைத்து நல்ல மாணவர்களைச் சமூகத்திற்கு உருவாக்கி வழங்கவேண்டும் என்று துணை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களிடத்தில் வேண்டுகோள் வைத்தார்.

ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், உங்களுக்கு எது மறுக்கப்பட்டதோ அதனை எல்லாம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.

மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஆத்திரேலியா, கனடா, இலங்கை, அமெரிக்கா,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 520 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவில் பேராசிரியர் ம.மன்னர்மன்னன் வரவேற்புரை

டத்தோ மு.சரவணன் அவர்களுடன் பன்னாட்டுப் பேராளர்கள்

செவ்வாய், 4 ஜூன், 2013

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு நிகழ்வுகள்


பேராசிரியர் மன்னர்மன்னன் வரவேற்புரை

பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு கோலாலம்பூர் பேர்ல் இண்டர்நேஷ்னல் ஹோட்டலில் 03.06.2013  பிற்பகல் தொடங்கியது. மாலையில் பொது அமர்வில் முனைவர் கி. கருணாகரன் அவர்கள் கருத்தாடல் திறன்வளர்த்தலும் தமிழ்மொழிப் பயன்பாடும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இணை அமர்வுகள் நடைபெற்றன. மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து முனைவர் ந. தெய்வசுந்தரம், முனைவர் செ. சண்முகம், மு.இளங்கோவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் எஸ். கே. ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவிலிருந்து அறிவொளி திருவேங்கடம், ஜெயராதா, மொரிசீயசிலிருந்து செங்கண்ணன், கனடாவிலிருந்து இராஜரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் தொடக்கத்தில் முனைவர் மு.இளங்கோவன் தமிழக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினார். அதனை அடுத்துத் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து மாணவர்கள் வழங்கிய பன்முகப் பேச்சு நிகழ்ச்சி, முரசோவியம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியாவின் கல்வித்துறையின் துணைஅமைச்சர் மாண்புமிகு சி.கமலநாதன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


 04.06.2013 காலையில் மலேசியா பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் மாநாட்டு விழாக்குழுவின் சார்பில் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டினை மலேசியாவின் இயற்கைவளம், மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ கோ. பழனிவேல் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அமைச்சரின் சிறப்புரைக்குப் பிறகு  பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பேராசிரியர் செ.சண்முகம் அவர்கள் “மொழி கற்பித்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்து எஸ்.கே.ஈஸ்வரன் தலைமையில் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் “கணினித் தமிழும் தமிழ்மொழிக் கல்வியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இணை அமர்வுகள் நடைபெற்றன. 

நாளை (05.06.2013) மாநாட்டின் நிறைவு விழா நடைபெற உள்ளது.

மாநாட்டுக் காட்சிகள்
அமைச்சர் கோ.பழனிவேல் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

அமைச்சர் கோ.பழனிவேல் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

பார்வையாளர்கள்

பொறியாளர் அறிவொளி ஆய்வுரை வழங்கல்

முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் செ.சண்முகம், மு.இ,முரசு, ம.இளந்தமிழ்

மலேசியா நாடக அறிஞர் முருகன் அவர்களுடன் மு.இ

எழுத்தாளர் கப்பார் கனிமொழி, மு.இளங்கோவன்

மு.இளங்கோவன் நாட்டுப்புறப் பாடல் வழங்கல்

சனி, 1 ஜூன், 2013

மலேசியா உலகத் தமிழாசிரியர் மாநாடு அழைப்பிதழ்

மலேசியாவில் நடைபெறும் (2013 சூன் 3 - 5 வரை ) உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தொடக்கவிழாவில் மலேசிய நாட்டின் இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஜி.பழனிவேல் அவர்களும், நிறைவு விழாவில் மலேசிய நாட்டின் இளஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, மொரீசியசு, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். அழைப்பிதழ் கீழே இணைத்துள்ளேன்.



தொடக்க விழா அழைப்பிதழ்



நிறைவு விழா அழைப்பிதழ்

புதன், 22 மே, 2013

மலேசியாவில் ஜூன் முதல்வாரத்தில் உலகத் தமிழாசிரியர் மாநாடு




மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் - ஜாலான் கிள்ளான் லாமாவில்  அமைந்துள்ள  பேர்ல் இண்டர்நேசனல் விடுதியில் மாநாடு மூன்றுநாளும் நடைபெறுகின்றது.

ஜூன் மாதம் மூன்றாம் நாள் (திங்கள் கிழமை) பிற்பகல் மூன்றுமணி முதல் பேராளர்களின் பதிவு நடைபெறும். பேராளர்களுக்கு உரிய விளக்கம், கட்டுரையாளர்களுக்கான குறிப்புகளும் வழங்கப்படும். மாலை 4.30 மணி முதல் பொது அரங்கில் அறிஞர்களின் உரை அமையும். அதன் பிறகு இணை அமர்வுகளில் கட்டுரைகள் படைக்கப்பெறும். இரவு 7.30 மணிக்கு மேல் இரவு விருந்தும் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கூட்டுப்பேச்சு, முரசோவியம், நாட்டுப்புற இசை, தமிழிசை, நூல்வெளியீடு அமையும்.

இரண்டாம் நாள்(ஜூன் 4) மாநாட்டின் தொடக்க விழாவில் மாநாட்டுத் தலைவர் உரை, தொடக்க உரை அமையும். முற்பகல் 11 மணி முதல் பொது அமர்வு, இணை அமர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை அமர்வில் பொது அரங்கில் பன்னாட்டு நிகராளிகளின் நாட்டுப்படைப்பு வழங்கப்பெறும். அதன் பிறகு மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினரின் நிறைவுரை இடம்பெறும். மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவராக ம.மன்னர்மன்னன் (மொழித்துறை, மலேயா பல்கலைக்கழகம்) அவர்களும், செயலாளராக எஸ். சுவீடன் அவர்களும் இருந்து மாநாட்டுப் பணிகளைக் கவனித்துவருகின்றனர். உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் குழுவினர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் இடம்:

PEARL INTERNATIONAL HOTEL, KUALA LUMPUR
Batu 5, Jalan Klang Lama,
58000 Kuala Lumpur
General Line:   603-7983111
Fax:   603-79832211
E-mail:   pih@pearl.com.my

திங்கள், 14 ஜனவரி, 2013

மலேசியாவில் 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு





மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013, சூன் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த கட்டுரை வழங்கலாம். கட்டுரைச் சுருக்கம் அனுப்ப நிறைவுநாள் 15.01.2013

மேலும் விரங்களுக்கு: இணையதளம் 

திரு.ம.மன்னர்மன்னன் அவர்கள், மலேசியா பேசி:  03-79673142






வெள்ளி, 17 டிசம்பர், 2010

உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

இன்று(17.12.2010) சென்னையில் நடந்த உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காலை 9 மணி முதல் 9.30 மணி வரை என் பங்களிப்பு இருந்தது. சிங்கப்பூர், இலங்கை போன்ற அயல்நாட்டிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தமிழ் இணைய வளர்ச்சியைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துக்காட்டினேன்.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்தாமல் உள்ள கணினி இனிப் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ஆர்வமாக அனைவரும் முன்வந்து உரையாடிக் கூடுதல் செய்திகளைப் பெற்றுச்சென்றனர்.

தருமபுரி, தூத்துக்குடி,பழனி, ஆர்க்காடு,கிருட்டினகிரி,விழுப்புரம்,திண்டிவனம், மதுராந்தகம், செஞ்சி, கன்னியாகுமரி,நெல்லை,மதுரை சார்ந்த தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இனித் தொடர்ந்து என்னை அழைத்துத் தமிழ் இணையப் பயன்பாடுகளை அறிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுச்சென்றர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதால் தமிழ் இணையப் பரவலாக்கம் தமிழக அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த வாய்ப்பைக் காலத் தேவையறிந்து, உணர்ந்து பேராளர்கள் அனைவரும் நேற்றே மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துக் கூடுதல் நிகழ்ச்சியாக இதனை அமைத்தனர். இந்த வகையில் உதவிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.ஈசுவரன் ஐயா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர்க்கு என் நன்றி.

வியாழன், 16 டிசம்பர், 2010

சென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்

சென்னையில் இன்று(16.12.2010)நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் எடுக்கப்பெற்ற சில படங்களை இணைத்துள்ளேன். கண்டு மகிழலாம்.


உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்


இலங்கைப் பேராளர் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொள்ளும் காட்சி


மாநாடு தொடக்க விழா


சிங்கப்பூர் பேராசிரியர் தலைமையில் ஆய்வரங்கு


கட்டுரை வழங்கும் பேராளர்கள்


மு.இ, சிங்கப்பூர் இராசிக்கண்ணு,கோவலன்,ஈசுவரன்


புலவர் கோமதிநாயகம் அவர்கள் தலைமையில் மு.இளங்கோவன் கட்டுரை வழங்கிய அரங்கம்

சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது...


முனைவர் பொற்கோ மாநாட்டு மலரை வெளியிட, சிங்கப்பூர் பேராளர் பெற்றுக்கொள்கின்றார்.அருகில் ஈசுவரன்,ஈரோடு தமிழன்பன்

சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் காலை 10 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். முனைவர் பொற்கோ அவர்களின் உரை செறிவாகவும் நிறைவாகவும் இருந்தது.

தமிழின் பொதுப்பேச்சு வழக்கினையும் பொது இலக்கிய வழக்கினையும் கற்பிக்க வேண்டும். மேலும் செய்யுள் வழக்கில் உள்ள சிறப்புக்கூறுகளையும் கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பேச்சுத் தமிழைப் புறக்கணித்தால் தமிழ் வாழாது என்றும் குறிப்பிட்டார். மொழியாசிரியர்கள்தான் மாணவர்களின் ஆளுமையை வளர்க்கமுடியும் எனவும் நடைமுறை வாழ்க்கையை மொழியாசிரியர்தான் சொல்லித்தர முடியும் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டின் சிறப்புரையை ஈரோடு தமிழன்பன் வழங்கினார்.

சிங்கப்பூரிலிருந்து 14 பேராளர்களும் இலங்கையிலிருந்து ஒரு பேராளரும் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து பேராளர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடைக்காததால் பேராசிரியர் சண்முகதாசு, பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டனர். பொது அமர்வும் இணை அமர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் என் பணி...

வீ.மா.பெரியசாமி, சிவாப் பிள்ளை, மு.இளங்கோவன்

தமிழ்த்தட்டச்சு(99 விசைப்பலகை) பற்றி விளக்குதல் 

     சென்னையில் (13,14-12.2008) நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் இரண்டு நாள்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. முதல்நாள்(13.12.08) காலை புறப்பட்டு ஒன்பது மணிக்குச் சென்னை இராயல் மெரிடியன் உணவகத்திற்குச் சென்றேன். திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் முதலில் கண்ணில் தெரிந்தார். நண்பர் திரு.கோவலன் அவர்களும் உடன் இருந்தார். இருவரும் அளவளாவினோம். பாதுகாப்புக் காரணமாக அனைவரும் ஆய்வுக்குப் பிறகே உணவகத்தின் உள்ளே சென்றோம். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்தார். சிங்கப்பூர், மலேசியாவைச் சார்ந்த பேராளர்கள் பலரும் வந்திருந்தனர். திரு.இராசிக்கண்ணு, முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், பேராசிரியர் இராசேந்திரன், திரு.சோதிநாதன், திரு. கிருட்டிணன்,திரு.சாமிக்கண்ணு,திரு.சகாதேவன் உள்ளிட்ட அயல்நாட்டுப் பேராளர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன். 

 திட்டமிட்டபடி காலை 10.35 மணிக்குக் காலை நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்புவிருந்தினர்களாக வர இசைவு தெரிவித்திருந்த அமைச்சர் பெருமக்கள் இருவரும் பெரு வெள்ளப்பாழினைப் பார்வையிடும் பணி காரணமாக வர இயலவில்லை. பேராசிரியர் இரா.இளவரசு, பெருங்கவிக்கோ உள்ளிட்ட அறிஞர்கள் உரையாற்றினர். பிற்பகல் முதல் அமர்வுகள் தொடர்ந்து நடந்தன. நான் ஒரிசாவிலிருந்து புதுச்சேரி வந்திருந்த திரு. பாலசுப்பிரமணியன் அவர்களைக் காணவேண்டிய காரணத்தால் பிற்பகல் 3. 30 மணிக்குப் புதுச்சேரிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வந்தேன். இரவு 8.30 மணி முதல் திரு. பாலசுப்பிரமணியன், அ.சுகுமாரன் உள்ளிட்ட இருவருடன் தமிழக வரலாற்றுக்கு உரிய ஆய்வுத் தரவுகள் இந்தியா முழுவதும் உள்ளமை பற்றி நெடுநாழிகை உரையாடினோம். இரவு அவர்களிடம் விடைபெற்று 11 மணியளவில் வீட்டுக்கு வந்து இணையப் பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது நடு இரவு கடந்தது. 

     14.12.08 வைகறை எழுந்து மீண்டும் சென்னைச் செலவு... காலை பத்து மணியளவில் மாநாட்டு அரங்கை அடைந்தேன். காலை பதினொரு மணியளவில் எங்கள் அமர்வு தொடங்கியது.பேராசிரியர் திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். திருவாட்டி இராச.முத்துலட்சுமி அவர்கள் (சிங்கப்பூர்) முதலில் கட்டுரை படித்தார். அடுத்து என் முறை. 11.35 மணியளவில் தொடங்கி 12.35 மணியளவில் என் ஆய்வுரை காட்சிவிளக்கமாக அமைந்தது. "ஆசிரியர்கள், மாணவர்கள் அறியவேண்டிய மின்னஞ்சல், வலைப்பதிவுகள்" என்னும் தலைப்பில் என் பேச்சை அமைத்துக்கொண்டேன். தமிழ் இணையத்தின் சிறப்பு, தமிழர்கள் இணையம் பற்றி அறியாமல் உள்ள நிலை, தமிழகம் முழுவதும் பயிலரங்கம் நடத்தும் என் முயற்சி பற்றி முன்னுரையாகப் பேசினேன். மடிக்கணிப்பொறி என்னிடம் இருந்தது. இயங்கு மோடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி இணைய இணைப்பைப் பெற்றேன்.(அகண்ட அலைவரிசை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்). மேலும் "பவர் பாயிண்ட்" வழியாகவும் செய்திகள் விளக்குவதற்கு வசதியாக ஆயத்தமாக இருந்தேன். 

     நண்பர் திரு.கோவலன் அவர்கள் என் கட்டுரை படைப்புக்கு உதவியாகக் கணிப்பொறியை இயக்கி மேடையில் காட்சிகள் விரிய உதவினார். சிவப்பிள்ளை ஐயாவும் இடையில் உதவினார். மின்னஞ்சல் தேவை, சிறப்பு பற்றி முதலில் எடுத்துரைத்தேன். மின்னஞ்சல் கணக்கு தொடங்குவதற்குரிய படிவம் நிரப்புதல், கமுக்கக்குறியீடு பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். கூகுள் நிறுவனத்தில் கணக்குத் தொடங்கும் செயல்விளக்கம் காட்டினோம். நேரச்சுருக்கம் கருதி என் பக்கத்தை விரித்து, மின்னஞ்சல் அனுப்புவது, உரையாடுவது, படம் இணைத்தல், கோப்பு இணைத்தல் பற்றியெல்லாம் பேசினேன். கூகுள் முகவரியைப் பயன்படுத்தி வலைப்பூ உருவாக்கம், வலைப்பூவின் சிறப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்தித் தங்கள் படைப்புகளை உலகிற்கு செலவின்றி வெளிப்படுத்தும் முறை பற்றி எடுத்துரைத்தேன். 

     தமிழில் ஒருங்குகுறி கண்டுபிடித்த முகுந்து அவர்களின் எ.கலப்பை, ஒருங்குகுறி பற்றி எடுத்துரைத்தேன். தமிழ் மரபு அறக்கட்டளை அதன் நிறுவுநர் கண்ணன்(கொரியா) பற்றியும் அவைக்கு நினைவூட்டினேன். உலகில் ஒவ்வொருவரும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டும் திரட்டியான தமிழ்மணம், அதனை உருவாக்கிய காசி ஆறுமுகம் பற்றியும் அதனை இன்று பாதுகாத்து வளர்த்துவரும் தமிழ்மணம் குழுவினர் பற்றியும்(திருவாளர்கள் நா.கணேசன், தமிழ்சசி, சங்கரபாண்டி, சௌந்தர் உள்ளிட்ட தோழர்கள்) விரிவாகக் காட்சி விளக்கத்துடன் பேசினேன். தமிழ்மணம் 4020 பதிவர்களின் தகவல்களைத் திரட்டிக் காட்டுவதை இணையம்வழி எடுத்துக்காட்டியதும் அரங்கில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர். 

    தமிழில் தட்டச்சிடும் முறை பற்றியும் எடுத்துரைத்துக் காட்சியுடன் விளக்கினேன். மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக என் உரையும் செயல்விளக்கமும் இருந்ததைத் தமிழகம் முழுவதிலுருந்தும் வந்திருந்த ஆசிரியர்கள் என்னிடம் நெருங்கிப் பேசியதிலிருந்து உணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் பயன்படும்படி என் முகவரி, மின்னஞ்சல் தொலைபேசி எண் திரையில் காட்டப்பட்டதும் அனைவரும் குறித்துக்கொண்டனர். மேலும் மாநாட்டு மலரிலும் என்னைத் தொடர்புகொள்ளும் விவரம் அளிக்கப்பட்டுள்ளதால் பலர் என்னைத் தொடர்புகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய வாய்ப்பு உள்ளது. அனைவரிடமும் விடைபெற்று இரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

வெள்ளி, 12 டிசம்பர், 2008

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு - சென்னை(நிகழ்ச்சி விவரம்)

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் உணவகத்தில் 13,14-12.2008 இரு நாள் நடைபெறுகிறது.

13.12.2008 காலை 10.35 மணிக்குத் தொடங்கும் மாநாட்டில் தமிழ்நாட்டு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டு மலரைப் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு இராமச்சந்திரனார் அவர்கள் வெளியிடுகின்றார்.

மாநாட்டு வரவேற்புரை திரு சு.ஈசுவரன் அவர்கள்.தலைமையுரை திரு.சொ.சகாதேவன் அவர்கள்.மாநாட்டு அறிக்கை திரு.சா.அன்பழகன் அவர்கள்.மாநாட்டு நோக்கங்களை முனைவர் இரா.இளவரசு,வா.மு.சேதுராமன் விளக்கிப் பேசுவார்கள்

மாநாட்டு அமர்வுகளில் முனவர் மா.நன்னன்,எ.சகாதேவன்(மலேசியா),முனைவர் மலையமான்,டி.குணசேகரன்(மலேசியா)முனைவர் ச.முத்துக்குமரன்,முனைவர் சீத்தாலட்சுமி(சிங்கப்பூர்),க.சிவகுருநாதப் பிள்ளை(இலண்டன்),முனைவர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்(இலங்கை),விசயராணி(சிங்கப்பூர்),சித்திரன் குருசாமி(சிங்கப்பூர்)ஆறு.அஞ்சப்பன்(சிங்கப்பூர்),பா.தியாகராசன்(சிங்கப்பூர்),இ.கோமதிநாயகம்,பூபதி(சிங்கப்பூர்) உள்ளிட்டோர் கருத்தரங்க அமர்வுகளில் தலைமை தாங்குகின்றனர்.

முனைவர் சரளா இராசகோபாலன்,முனைவர் மலையமான்,புலவர் தி.நா.அறிவொளி, முனைவர் து.சேகர்,அருள்செல்வன் இராசு(மலேசியா),அ.கவிதா,முனைவர் கி.மைதிலி, மன்னர்மன்னன்(மலேசியா),முனைவர் வேல்முருகன்(சிங்கப்பூர்),பார்வதி கைலாசம், முனைவர் குமரன்(மலேசியா) இராசப்பன் முத்துலட்சுமி சிங்கப்பூர்),முனைவர் மு.
இளங்கோவன்(புதுச்சேரி), முருகையன்,தமிழகன்,கல்பனா செல்வராசு, கி.சிற்றம்பலம், முனைவர் ப.அனுராதா,முனைவர் சிவகுமாரன்(சிங்கப்பூர்),சா.கல்பனா(தே.கழகம்) உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர்.

14.12.2008 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆசிரியம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.ஆ.சோதிநாதன்(மலேசியா) வெளியிட,சி.சாமிக்கண்ணு(சிங்கப்பூர்)
முதற்படி பெறுகிறார்.முனைவர் இராசேந்திரன்(மலேசியா)ஏற்புரை.

14.12.08 ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு நிறைவு விழா.
மாநாட்டு நிறைவுரையும் விருது வழங்கலும்
முனைவர் கா.மாரியப்பன்(மேனாள் பள்ளிக்கல்வி இயக்குநர்).
(பதிவு செய்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும்)