நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 ஜூன், 2025

நெல்லையில் நடந்த தொல்காப்பியர் விழா!


30.10.1960 ஞாயிறு இரவு, நெல்லைச் சந்திப்பு இசைமன்றத்தில்(சங்கீத சபாவில்) தமிழ்நாட்டு நல்வழி நிலையம் சார்பில் பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் மூன்றாம் ஆண்டு விழாவும், தொல்காப்பியர் விழாவும் நடைபெற்றுள்ளது

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம் என்ற அன்பர் முன்னின்று உழைத்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. நெல்லை இராசானந்தம் தமிழ்நாட்டு நல்வழி நிலையம், பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளின் தலைவராக விளங்கியவர். இவர் தொல்காப்பியர் விழாவினை நெல்லைப் பகுதியில் நடத்துவதற்கு ஆர்வமுடன் உழைத்தவர். பல மாதங்களாக விழா நடத்துவதற்கு முனைந்தும் யாது காரணமாகவோ குறிப்பிட்ட நாள்களில் விழா நடத்தமுடியாமல் 30.10.1960 இல் விழா நடத்தப்பட்டுள்ளதை இரா. சண்முகம் அவர்களின் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி நூலின் முன்னுரையால் அறியமுடிகின்றது

ஆயின், நெல்லை.இரா. சண்முகம் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் வாழ்ந்தபொழுது 1950 – களில் கோலாலம்பூரில் தொல்காப்பியர் விழா நடத்துவது குறித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கோலாலம்பூரில் வாழ்ந்த தமிழார்வலர்கள், தமிழறிஞர்களிடம் ஆதரவு திரட்டியுள்ளார். ஆனாலும் அவர்தம் கனவு அந்த நாளில் நிறைவேறவில்லை. 30.10.1960 இல் நெல்லையில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் நெல்லை இரா. சண்முகம் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து உரையாற்றியுள்ளார். தம் உரையை நூலாகவும் பின்னாளில்  வெளியிட்டுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் நெல்லை இந்துக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்..எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது. இவரைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் வீரசிவம் அவர்களும் திருச்சி வீ. வீரம்மாள் அவர்களும் உரையாற்றிய குறிப்புகள் உள்ளன

இன்று நடைபெறும் தொல்காப்பியப் பரவல் முயற்சிகளுக்கு முன்னோடியாக நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம் விளங்கியுள்ளார் என்பது தெரியவருகின்றது. கல்விப்புலங்களிலிருந்து தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு இப்பெரியார் உழைத்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. நெல்லை வண்ணார்பேட்டை இராசானந்தம் ஐயாவைப் பற்றிய கூடுதல் விவரம் அறிந்தோர் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: muetamil@gmail.com / +91 9442029053

வெள்ளி, 27 ஜூன், 2025

பேராசிரியர் ச. கணபதி முதலியார்

 

பேராசிரியர் . கணபதி முதலியார் 

[ச.கணபதி முதலியார் திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் வல்லவர். தொல்காப்பியத்தில் நல்ல புலமையுடையவர். The Story of the Eye – Devotee, இலக்கியச் சிந்தனை முதலிய நூல்களின் ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.] 

பேராசிரியர்  . கணபதி முதலியார் திருநெல்வேலியில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். திருநெல்வேலி சாஃப்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இளங்கலை (B.A.) வரலாற்றுப் பாடம் பயின்றவர். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி (L.T.) முடித்தவர். தனித்தேர்வராக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். 

ச. கணபதி முதலியார் சேலம் நகராட்சிப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். விழுப்புரம் அரசுப் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு,  திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறையில் துணை விரிவுரையாளராகப் பணியை ஏற்றார். கல்லூரியில் விரிவுரையாளராகவே பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் அவர்களின் துணைவியார் பெயர் சீதாலெட்சுமி என்பதாகும். இவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

1. குக நமசிவாயம் 2.சங்கர நமசிவாயம், 3. மெய்கண்ட சிவம்,  4.நமசிவாய பெருமாள் 5. மீனாட்சி, 6. அகிலாண்டம்.

 இவரது மகன் திரு. குக நமசிவாயம் பாளையங்கோட்டையில் உள்ளார். இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் நூலகராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்து ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவ்வகையில்,

1. நான் கலந்து பாடுங்கால்

2. சிறுகதை விளக்கம்

3. கையறுநிலைச் செய்யுள்

4. மணிமேகலை

5. இலக்கியச் சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு) 

6. The Story of the Eye - Devotee

7. அருட்பா

8. பழமொழி

முதலிய நூல்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் அவர்கள் செந்தமிழ்ச் செல்வி இதழில் 17 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை: 

1. வள்ளுவர் குறள் நடை, இதழ் 3, - 1957

2. கம்பர் காப்பிய நடை, இதழ் 5,6,7, - 1957

3. சேக்கிழார் புராண நடை, இதழ்  10,11,12,1,2,3 - 1957,1958

4. சங்ககாலச் செய்யுள் நடை, இதழ் 2, 3, 4, 5, 6, 8. - 1962 

நெல்லை வண்ணார்பேட்டையில் வாழ்ந்த இராசானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்து, 30.10.1960 ஞாயிற்றுக்கிழமை, நெல்லை, சந்திப்பு இசை மன்றத்தில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் இந்துக் கல்லூரியின் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்.ஏ., எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியைத் நெல்லை இரா. சண்முகம் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  தொல்காப்பியத்தின் சாரமான செய்திகளை இவர் எடுத்துரைத்துப் பேசியுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது. 

கணபதி முதலியார் அவர்களின் நூல்கள் செம்பதிப்புகளாக வெளிவருதல் வேண்டும். இதுவரை நூலுருவம் பெறாத கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டும் என்பது தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாகும். 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் தம் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதல் மாதம் ஓய்வு ஊதியம் 25 உருவா பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தார். ஆயின் முதல் மாதம் ஓய்வு ஊதியம் பெறுவதற்குக் கையொப்பம் இடுவதற்குக் கை ஒத்துழைக்காமல் கடைசி வரை ஓய்வூதியம் பெறாமல் மருத்துவமனையில் 1971, சனவரி மாதத்தில் இயற்கை எய்தினார். மிகப்பெரும் தமிழ் அறிஞரான ச. கணபதி முதலியாரின் பணிகள் முழுமையாகத் தெரியவரும்பொழுது இவர்தம் இலக்கிய ஆளுமை உலகுக்குப் புலப்படும்.

 



நன்றி:

பேராசிரியர் கட்டளை கைலாசம், திருநெல்வேலி.


****** இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.