[ புலவர் அ. பொன்னையன் கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிங்கப்பூர் அதிபரின் வாழ்வையும் அருட்பிரகாச வள்ளலார் வாழ்வையும் காப்பியமாகப் பாடியவர். கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியங்களுக்குத் தொண்டாற்றி வருபவர்; பன்னூலாசிரியர். வள்ளலார் கொள்கையில் வாழ்ந்து வருபவர். ]
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூ அவர்களின் வாழ்வியலைக் காப்பியமாக்கிய பெருமை புலிகரம்பலூர் புலவர் அ. பொன்னையன் அவர்களுக்கு உண்டு. சிங்கப்பூர் அதிபரின் மறைவின்பொழுது(2015) சிங்கப்பூரில் புலவர் அ. பொன்னையன் தங்கியிருந்துள்ளார். பலமுறை சிங்கப்பூர் சென்று, அந்நாட்டின் சிறப்பை முன்பே அறிந்திருந்த புலவர் அவர்கள் அதிபர் லீ அவர்களின் மறைவையொட்டி அவர்தம் பெருமைகளையும் சிறப்புகளையும் நன்கு அறிந்து மரபு வடிவில் 1303 செய்யுள்களால் இக்காப்பியத்தைப் புனைந்துள்ளார். வெண்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்துறை எழுசீர் விருத்தம், பஃறாழிசை கொச்சகக் கலிப்பா, கலிப்பா, கலிநிலைத்துறை எனப் பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ள இக்காப்பியம் அந்தாதித்தொடையிலும் யாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சீர்காழியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபொழுது புலவர் அவர்களின் தமிழ்ப்புலமையை அறிந்து அவர்களின் தமிழ் வாழ்க்கையை உரையாடித் தெரிந்துகொண்டேன். அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் நெறியில் தம் அறவாழ்வை அமைத்துக்கொண்ட புலவர் அ. பொன்னையன் அவர்கள் வள்ளலார் கொள்கைகளை மக்கள் மன்றத்துக்கும் மாணவர் மன்றத்திற்கும் கொண்டுசேர்ப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகச் செய்து வருபவர். தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் கடலூரில் நெருங்கிப் பழகித் தென்மொழி வெளியீட்டுப் பணிகளில் துணைநின்றவர். பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, பேராசிரியர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுடன் நட்பு பாராட்டியவர். பள்ளியில் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய இப்பெருமகனாரின் வாழ்வு தமிழ் வாழ்வாகும். இவர்தம் பணிகள் யாவும் தமிழ்ப்பணியாகும். புகழ் வெளிச்சம் பெறாத இப்புலவர் பெருமானின் தமிழ்ப்பணிகளையும் தமிழ்வாழ்வையும் இவண் அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.
புலவர் அ. பொன்னையன் அவர்களின் தமிழ் வாழ்க்கை
புலவர் அ. பொன்னையன் அவர்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் வாழ்ந்த அப்புப் படையாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் மகனாக 22.09.1946 இல் பிறந்தவர். திண்ணைப்பள்ளியில் பயின்ற இவர், பின்னர் புலிகரம்பலூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். அதன் பிறகு தொழுதூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 12 வகுப்பு வரை பயின்றவர் (1964).
கடலூர், மஞ்சள்குப்பம் பகுதியில் இயங்கிய அடிப்படை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்(1964-1966). தனித்தேர்வராகப் புலவர், பி.லிட் படிப்புகளைப் படித்துப் பட்டம் பெற்றவர். 13.11.1979 இல் விருத்தாசலம் வட்டம், முதனை என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பயின்று 1982 இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் இளவல்(B.Ed) பட்டத்தை 1982-1984 இல் பெற்றவர்.
திட்டக்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982 இல் தமிழாசிரியராகப் பணியேற்றவர். பின்னர்த் தொழுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1988 முதல் 1996 வரை பணியாற்றியவர். கீழக்கல்பூண்டி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2004 இல் பணியோய்வு பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்த பட்டறிவுகொண்ட புலவர் பொன்னையனார் நல்லாசிரியராக விளங்கியதுடன் பல்வேறு நூல்களை எழுதித் தமிழுக்கு வளம்சேர்த்தவர்.
புலவர் அ. பொன்னையன் அவர்கள் பள்ளி மாணவராக இருந்தபொழுது செஞ்சி ந. நடராசன் அவர்கள் தொழுதூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். நம் புலவர் அவர்களின் தமிழார்வம் கண்டு, இவருக்கு மரபு இலக்கணங்களைப் பயிற்றுவித்து, மரபுப் பாடல் எழுதும் சூழலை உருவாக்கித் தந்தார். அது முதல், வாய்ப்பு நேரும் பொழுதிலெல்லாம் மரபுப் பாடல் வரைவதை வழக்கமாக்கிக்கொண்டு, பின்னாளில் காப்பியக் கவிஞராகப் புலவர் அ. பொன்னையன் மிளிர்ந்துள்ளார்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் அந்நாளில் பள்ளிகளில் கலைக்கழகம் என்ற அமைப்பு இருந்தது. அவ்வமைப்பின் வழியாக மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பேச்சாளராகவும், படைப்பாளிகளாகவும் அவர்களை மாற்றுவது ஆசிரியர்களின் கூடுதல் விருப்பப் பணிகளாக இருந்தன. நம் புலவர் அவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, திறன் வாய்ந்த பல மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
இல்லற வாழ்க்கை
புலவர் பொன்னையன் அவர்களுக்கு 13.11.1972 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் மனைவியின் பெயர் கௌரி அம்மாள். இவர்களுக்கு அருள் ஒளி, அருட்சுடர், அருள்மதி (சிங்கப்பூரில் தமிழாசிரியராகவும் கல்வித்துறை அதிகாரியாகவும் பணியாற்றுபவர்), அருள் தணிகை என்னும் நான்கு பெண் மக்களும், செவ்வேள் என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
கடலூர் புலவர் சீனி சட்டையன் (திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்), அவர்களும் சிதம்பர சாமிகள் அவர்களும் புலவர் பொன்னையன் அவர்களுக்கு அருட்பிரகாச வள்ளலார் பாடல்களையும் நெறிகளையும் அறிமுகப்படுத்திய பெருந்தகைகள் ஆவர். அவர்களின் துணையால் வள்ளலார் நெறியை இவர் வாழ்க்கை நெறியாக அமைத்துக்கொண்டவர். 1000 கணக்கான மேடைகளில் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகளைப் புலவர் அ. பொன்னையன் தம் குழுவினருடன் கொண்டுசேர்த்துள்ளார். வானொலி, தொலைக்காட்சிகள் வழியாகவும் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகள் பரவியுள்ளன. மனுமுறை கண்ட வாசகத்துக்கு இவர் வில்லுப்பாட்டு எழுதியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் சென்றுவரும் புலவர் அ. பொன்னையன் அவர்கள் அந்த நாட்டின் சிறப்பையும், முன்னாள் அதிபர் லீ அவர்களின் பணிகளையும் காப்பியமாக்கித் தமிழுலகுக்குத் தந்துள்ளார்.
புலவர் அ. பொன்னையன் அருளரசர் வள்ளற் பெருமான் என்ற வரலாற்றுப் பெருங்காப்பியத்தை எழுதியுள்ளார்(2003). சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், கடிதங்கள் என இவரின் படைப்புப் பணி விரிவானது.
புலவர் அ. பொன்னையன் படைப்புகள்
1. மலைத்தேன் (பல்சுவைப் பாடல்கள்) 2002
2. சிறுவர் முன் வள்ளலார் (சிறுவர்க்கு) 2002
3. சிறுவர் முன் ஆபுத்திரன் (சிறுவர்க்கு) 2003
4. அருளரசர் வள்ளற் பெருமான் (காப்பியம்) 2003
5. பொற்குவியல் (சிறுவர் பாடல்கள்) 2004
6. வண்ண மலர்கள் (சிறுவர் பாடல்கள்) 2004
7. உலகை ஆள்வோம் (சிறுவர் பாடல்கள்) 2005
8. சிறுவர் விரும்பும் சிறுகதைகள் 2006
9. குமுதன் (புதினம்) 2006
10. அக்கரைச் சீமை அத்தானுக்கு (கடிதங்கள்) 2006
11. வியப்பூட்டும் விருந்துகள் (கட்டுரைகள்) 2008
12. தமிழை அரியணை ஏற்றிடுவோம் (2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக