[சு. சிவச்சந்திரன் அவர்கள் இலங்கை வேலணையில் பிறந்து, இலண்டனில் வாழ்பவர். தொல்காப்பியப் பற்றாளர். தொல்காப்பியருக்குச் சிலை அமைத்தவர்; தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளைக்கும் சிலை அமைந்தவர். தொல்காப்பிய மறைமொழிக் கழகத்தை நிறுவியவர். தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு பொறியாளர்]
தொல்காப்பியமும் சைவமும் தமதிரு கண்கள் என்று குறிப்பிடும் சு. சிவச்சந்திரன் ஐயாவின் பணிகளையும் ஈடுபாட்டையும் நினைக்கும்பொழுது எப்பொழுதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு. “உலகத் தொல்காப்பிய மன்றம்” என்ற அமைப்பை நாங்கள் உருவாக்கித் தொல்காப்பியத் தொண்டில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்த இப்பெருமகனாரின் மூன்று பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும். 1. இலங்கையின் வவுனியாவில் 2023 ஆம் ஆண்டில் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியமை, 2. முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் என்னும் ஊரில் தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளைக்குச் சிலை நிறுவியமை(2025). 3. தொல்காப்பிய மறைமொழிக் கழகம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவித் தொடர்ந்து தொல்காப்பியத்தை இலங்கையிலும் இலண்டனிலும் பரப்பி வருகின்றமை.
சு. சிவச்சிந்தரன் அவர்கள் அடிப்படையில் பொறியியல் கற்றவர். இலண்டனில் வாழ்ந்துவரும் இவர்தம் இல்லத்தில் தொல்காப்பியம் சார்ந்த நூல்களும், பிற நூல்களும் பாதுகாக்கப்படுவதை நேரில் கண்டு வியப்புற்றுள்ளேன். இலண்டன் நாகபூசணி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் தம்மை ஓர் உறுப்பினராக இணைத்துக்கொண்டு, சமயத்தொண்டு ஆற்றுபவர். வாய்ப்பு நேரும் இடங்களிலெல்லாம் தொல்காப்பியச் சிறப்பைப் பேசுவதும் எழுதுவதும் இவருக்கு விருப்பமான செயல்களாகும். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை முன்பொருமுறை தெரிந்துகொள்ள முயன்றபொழுது, “மற்றொன்று விரித்தல்” என்று எங்கள் உரையாடல் நீண்டதே தவிர, தேவைப்படும் விவரங்கள் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் உரையாடி, அவர்தம் வாழ்க்கைக் குறிப்பினை அறிந்தேன்.
சு. சிவச்சந்திரன் இளமை வாழ்வு
தொல்காப்பியத் தொண்டர் சு. சிவச்சந்திரன் அவர்கள் இலங்கை, வேலணையில் 04.08.1948 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சாந்தலிங்கம் சுந்தரம்பிள்ளை, பாக்கியலட்சுமி சின்னர் என்பனவாகும். சிவச்சந்திரன் அவர்கள் வேலணை தொடக்கப்பள்ளி, மண்டைத்தீவுப் பள்ளி, துரைச்சாமி மகா வித்யாலயம், யாழ்ப்பாணக் கல்லூரிகளில் பயின்றவர்(1965-68).
1972 இல் சரவணை நாகேசுவரி வித்தியாலயாவில் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். 1976 இல் இலண்டனுக்கு உயர்கல்வி பயில்வதற்குச் சென்றவர். அவ்வகையில் இளம் அறிவியல் - மின்னனுவியல் பொறியியல் படித்தவர் (B.SC; MIET; D.T.L;). 1980 இல் இலண்டனில் இயங்கும் அமெரிக்கத் தொழிலகம் ஒன்றில் பணியில் இணைந்தவர். அங்கு 1980 முதல் 1992 வரை பணிபுரிந்தவர். சு. சிவச்சந்திரன் அவர்கள் 1992 முதல் 2000 வரை இலண்டனில் உள்ள பிரிட்டிசு கல்லூரி ஒன்றில் மின்னணுவியல், கணக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இல்வாழ்க்கை
சு. சிவச்சந்திரன் அவர்களுக்கு 1983 இல் திருமணம் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் புவனேசுவரி என்பதாகும். இவர்களின் இல்லறப் பயனாய் உமா சிவச்சந்திரன் என்ற மகளும் லிங்கம் சிவச்சந்திரன் என்ற மகனும் வாய்த்தனர்.
சு. சிவச்சந்திரன் அவர்கள் தம் நண்பர்களுடன் இணைந்து, 1988 இல் இலண்டன் ஆங்கிலோ – தமிழ்க் கழகம் London Anglo – Tamil Association என்னும் அமைப்பை நிறுவிச் செயற்பட்டவர். இலண்டனில் தமிழ்ப்பள்ளி ஒன்று உருவாகவும், தமிழிசை, நாடகம், முதலிய கலைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பைத் தொடங்கி, மிகச் சிறப்பாக நடத்தினர்.
தொல்காப்பியத்தைக் கற்ற நன்மாணவர் திருவள்ளுவர் என்று கருதும் சிவச்சந்திரனார் தொல்காப்பிய நூற்பாக்களும், திருக்குறள் பாடலடிகளும் பொருந்திப் போவதை எளிமையாக எடுத்துரைத்து மகிழ்பவர். “அகர முதல் னகர இறுவாய்” என்ன்னும் தொல்காப்பிய அடிகள் திருக்குறளில் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று விரிவதையும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது, “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” என்னும் குறளாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டு உவப்பவர்.
“மாயோன்
மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்”
எனத் தொடங்கும் நூற்பாவை எடுத்துக்காட்டி அந்நாளில் திருமால் வழிபாடும், முருக வழிபாடும் தமிழ்நிலமாம் முல்லை(காடு), குறிஞ்சி(மலை) நிலங்களில் இருந்தமையை எடுத்துரைத்து இறைப்பெருமை பேசுபவர்.
தொல்காப்பியச்
சிந்தனையில் நாளும் வாழ்ந்துவரும் சு. சிவச்சந்திரப் பெருமகனார் தமிழ் வாழும் காலமெல்லாம்
நிலைபெற்றுப் புகழுடன் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக