[மலேசியாவில் பிறந்து வளர்ந்த மதிராசன் இந்தியச் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 24 ஆண்டுகளும், மலேசியா இந்தியச் சிகை அலங்காரச் சங்கத் தோற்றுநராகவும், தலைவராகவும் செயல்பட்டவர். தாம் சார்ந்த இயக்க வளர்ச்சிக்கு மூன்று கட்டடங்களை மலேசியாவில் வாங்குவதற்குத் தொண்டாற்றியவர். “கடந்து வந்த என் வாழ்க்கைப் பயணம் - Autobiography of My Life Journey” என்னும் தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். மலேசியத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பட்டறிவு பெற்றவர்; பல்வேறு தமிழமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர்].
மலேசிய நாட்டில் மக்கள் தொண்டாற்றும் மகத்தான தலைவர்களுள் த. மதிராசன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். மலேசியத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் போற்றும் வகையில் த. மதிராசனாரின் பணிகள் அமைந்துள்ளன. சிலாங்கூர் டாருள் ஏனான் கூட்டரசு வளாக இந்தியச் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 24 ஆண்டுகளும், மலேசியா இந்தியச் சிகை அலங்காரச் சங்கத் தோற்றுநராகவும், தலைவராக 12 ஆண்டுகளும் பணியாற்றிப் பல்வேறு மக்கள் பணிகளைச் செய்த பெருமை நம் தலைவர் த. மதிராசன் அவர்களுக்கு உண்டு.
சிகை அலங்காரச் சங்கத்துக்கு என மலேசியாவில் மூன்று கட்டடங்களை வாங்கியும், நவீன சிகை அலங்காரத் தொழிலில் புதுமைகளை வரவேற்றும் இவர் செய்த பணிகள் அனைவராலும் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றன. சங்கத்தில் இளைஞர் பகுதியை நிறுவிய வகையிலும், சாதனைபுரிந்த சங்கப் பொறுப்பாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய வகையிலும், அரசியல் தலைவர்களின் ஆதரவினைப் பெறுவதற்கு இவர் செய்த செயல்பாடுகள் யாவும் போற்றத்தக்கன. மதிராசனாரின் பணிகளைப் பாராட்டி மலேசிய பேரரசர் அவர்கள் AMN என்னும் உயரிய பட்டமும், சிலாங்கூர் சுல்தான் அவர்கள் PJK என்னும் உயரிய பட்டமும் அளித்துப் பாராட்டியுள்ளனர். சமூகச் சீர்திருத்த எண்ணம்கொண்ட த. மதிராசன் அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றைக் “கடந்துவந்த என் வாழ்க்கைப் பயணம்” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். 262 பக்கங்களில் மலர்ந்துள்ள இந்த நூல் தன் வரலாற்று நூல் (autobiography) வரிசையில் குறிப்பிடத்தகுந்த நூலாகும். நூலில் இடம்பெற்றுள்ள அறிஞர் பெருமக்களின் வாழ்த்துரைகளும், புகழ்ப் பாடல்களும் இவர்தம் பன்முக ஆளுமையை எடுத்துரைக்கின்றன. தம் குடும்ப வரலாற்றையும் இயக்க வரலாற்றையும் மக்கள் அறிந்துகொள்வதற்கு வழிசெய்த த. மதிராசனார் நம் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
த. மதிராசன் வாழ்க்கைப் பயணம்
மலேசியாவின் கோலாலம்பூரில் வாழ்ந்த ப. அ. தங்கையா - இராசாமணி ஆகியோரின் மகனாக 23.01.1943 இல் மூன்றாவது மகனாக மதிராசன் பிறந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் மதிராணி, மதியூகி, மனோகரன், சுதந்திரன், ரவீந்திரன், செல்வன், வாசுகி, மல்லிகா, வனிதா ஆகியோர் ஆவர். மதிராசனின் தந்தையார் தஞ்சை மாவட்டம் வடுவூர் அருகில் உள்ள அருமலை என்னும் ஊரில் பிறந்தவர். அங்கிருந்து தஞ்சாவூர் சோழ வன்னியன் குடிகாடு என்னும் கிராமத்திற்குக் குடிபுகுந்தவர். அருமலையில் இவர்களின் முன்னோர்கள் மருத்துவத் தொழில் செய்து வந்தனர்.
மதிராசனின் தந்தையார் ப. அ. தங்கையா அவர்கள் தமிழகத்திலிருந்து இலங்கை சென்று, கொழும்பிலிருந்து கப்பலில் மலேயா தலைநகர் சிங்கப்பூருக்கு தம் பத்தொன்பதாம் வயதில் 1930 ஆம் ஆண்டு வந்தவர். மலேயா கோலாலம்பூரில் பல முடித்திருத்தகங்களில் சம்பளத்துக்கு வேலைபார்த்தவர். பின்னர் தாமே புதியதாகக் கடையொன்றைச் சொந்தமாக வாங்கித் தொழில் நடத்தியவர். மதிராசனின் தந்தையார் ப. அ. தங்கையா அவர்கள் 1936 முதல் சிலாங்கூர் மருத்துவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். 1949 முதல் 1953 வரை தலைவராகவும் பதவி வகித்தவர்.
த. மதிராசன் அவர்கள் மலேசியாவைச் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பிறந்தவர்(1943). அப்பொழுது இவரின் தந்தையார் தொழிலின் பொருட்டுப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர்.
த. மதிராசன் கோலாலம்பூர் ஜாலான் சன் பெங், லொக்யூ தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் ஜாலான் புடு பாசார்ரோட் ஆங்கிலப்பள்ளி, கோலாலம்பூர் மத்திய நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜாலான் பண்டார் ஹய் ஸ்கூல் முதலான பள்ளிகளில் பயின்றவர்.
த. மதிராசனின் தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழலில் குடும்பப் பொறுப்பை இவர் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால் தம் ஒன்பதாம் வகுப்பு வரையிலான படிப்பை முடித்துக்கொண்டு, தம் பதினெட்டாம் வயதில் முடித்திருத்தகக் கடையைக் கவனிக்கத் தொடங்கினார். கடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் செய்தித்தாள்கள் படிப்பது, நூல்கள் படிப்பது என்று தொடங்கித் தமிழை நன்கு எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார்.
1967 ஆம் ஆண்டு மதிராசன் தம் தாயாருடன் முதன் முதல் தமிழகத்திற்கு வந்தவர். தம் உறவினர்களைப் பார்ப்பதற்குக் கோலகிள்ளான் ஸ்டேட் ஆப் மதராஸ் கப்பலில் ஏறி, ஏழு நாட்களில் நாகப்பட்டினம் சென்று, அருகில் உள்ள பட்டுக்கோட்டை ஊரில் உள்ள உறவினர்கள் இல்லம் சென்றுள்ளார். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியிலிருந்து விமானம் ஏறி, இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று, ரயிலில் பயணம் செய்து, குருநாகலில் அமைந்துள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று, தம் உறவினர்களைக் கண்டு வந்தவர்.
1969 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 23 ஆம் நாள் த. மதிராசன் – மல்லிகா திருமணமும். உடன்பிறப்பு த. மனோகரன் – வசந்தவல்லி திருமணமும் ஒரே நாளில் நடைபெற்றன. இத்திருமணங்கள் கோலாலம்பூர் ஜாலான் கேம்பல் ஈஸ்டன் ஹோட்டல் நடன அரங்கில் மாண்புமிகு மேலவை உறுப்பினர் டத்தோ ஆதி நாகப்பன் தலைமையில் நடைபெற்றன. தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் திருமணவினை இயக்குநராக இருந்து திருமணத்தை நடத்திவைத்தார். இத் திருமணத்தில் தமிழ்நேசன் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன், வார்தா மலேசியா தமிழ்ப்பதிப்பு ஆசிரியர் சி.வி. குப்புசாமி, கோலக்கங்சார் அ. இராசகோபால், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மெல்லிசை மன்னர் ரெ. சண்முகம் தமிழ் வாழ்த்துப்பாடல் பாட, மலேசிய வானொலியைச் சேர்ந்த அசன்கனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
த. மதிராசன் – மல்லிகா இணையருக்கு மாலதி, மலர்விழி, மணியரசி, மதனன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
த. மதிராசன் அவர்கள் மலேசியா முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, தமிழ்நேசன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியம், டான்ஸ்ரீ குமரன் உள்ளிட்ட பெருமக்களுடன் நல்ல தொடர்புகளைப் பெற்றவர். த. மதிராசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் மலேசியக் கிளையின் தலைவராகவும் உள்ளவர். இந்தியாவுக்குப் பலமுறை சுற்றுலா வந்து, கண்டுகளித்தவர். அதுபோல் மலேசியாவுக்குச் செல்லும் தமிழன்பர்களை வரவேற்று, விருந்தோம்பிப் பாரட்டி, வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டவர். அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்கள் பல்வேறு சூழல்களில் மலேசியாவுக்கு வந்தபொழுது அவர்களின் உரைகளை நேரில் கேட்கும் பெருமை த. மதிராசனுக்கு வாய்த்துள்ளது.
மதிராசனின் சமூகப்பணி, மக்கள் பணி, சமுதாயப் பணிகளைப் போற்றிப் பலரும் விருதுகளையும் பாராட்டுகளையும் நல்கியுள்ளனர். அவற்றுள் சமுதாயத் திலகம், தொண்டர் நாயகன், தமிழ்ச் செல்வம், பொதுநலச் சேவைச் செம்மல், சங்க நாயகன், வாழ்நாள் சாதனையாளர், பண்டிட், டாக்டர் என்று பலவாறு இவரை இவ்வுலகம் ஏத்திப் போற்றுவதை நினைவுகூர விரும்புகின்றேன். த. மதிராசன் அவர்கள் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவம் உடையவர்.
த. மதிராசன் அவர்களின் வாழ்வு பொதுவாழ்வாகும். மலேசிய மண்ணில் பல்வேறு இயக்கப் பணிகளைக் கவனிப்பதுடன், குடும்பத்தினரையும் உறவினர்களையும் அரவணைத்து வாழும் உயர்ந்த உள்ளம்கொண்டவர். சமூகத்தில் பலதரப்பு மக்களுடன் பழகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் சற்றும் தயக்கம் காட்டாத பெருமைக்கு உரியவர். தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் திறம்படச் செய்துமுடிக்கும் ஆற்றல்பெற்றவர். இவரின் வாழ்க்கை வரலாறு பல நூறு படங்களையும் அரிய குறிப்புகளையும் கொண்டு, “கடந்து வந்த என் வாழ்க்கைப் பயணம் - Autobiography of My Life Journey” என்னும் தலைப்பில் நூலாக அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த நூல் தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் உள்ளமை பெருஞ்சிறப்பிற்கு உரியதாகும்.
“சொல்லுதல்
யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்னும்
தமிழ்மறைக்கு ஏற்பத் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதி, அரிய ஆவணமாகத் தமிழ் இலக்கிய உலகில்
பதிவுசெய்துள்ள த. மதிராசன் பல்வேறு சிறப்புகளை மேலும் பெற்று, நீடு வாழ வாழ்த்துகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக