நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

குறுந்தொகையில் கிடைத்த யானை


மொழிபெயர்ப்பு வல்லுநர் ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் அவ்வப்பொழுது இரவு வேளைகளில் செல்பேசியில் அழைப்பார்கள். சில நன்மொழிகளை வழங்கி ஊக்கப்படுத்துவார்கள். எங்கள் உரையாடல் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், பாரதி, கம்பன், பாவேந்தர், பாரதம். நளவெண்பா என்று நீண்டு சங்க இலக்கியம், சிலம்பு என்று வளர்ந்து பெருகும். சிலபொழுது அரைமணி நேரத்திற்கும் மிகுந்தும்கூட ஐயா அவர்கள் தம் அறிவுத் தொம்பையிலிருந்து அறிவுநன்மணிகளை எனக்கு உவகையுடன் வழங்கி மகிழ்வார். ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் செந்தமிழ் ஞாயிறு சேதுரகுநாதன் (முத்தொள்ளாயிரம் உரையாசிரியர்) அவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.

நெருநல் இரவு திருக்குறளிலிருந்து “பைங்கூழ் களைகட்டு அதனொடு நேர் ” என்பதற்கு உலகியல் விளக்கம் தந்து வியப்படையச் செய்தார். மேலும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவூட்டினார். பாடல்கள் யாவும் அவர்களுக்கு மனப்பாடமாக இருந்து வெளிவரும். நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை நூல்களை ஒருமுறை படித்த மனநிறைவுடன் எங்கள் உரையாட்டை நிறைவு செய்வோம். அறிஞர் பாலசுப்பிரமணியனார் நினைவூட்டிய குறுந்தொகைப்பாடலைப் பார்ப்போம்.

தலைவன் தலைவியுடன் இயற்கைப் புணர்ச்சியில் உரையாடி, மகிழ்ந்து மீண்டான். ஆனால் அவன் முகம் வாட்டமுடன் இருந்தது. இதனைக் கண்ட தோழன், உனக்கு இந்த வாட்டம் ஏற்படக் காரணம் என்ன? என்று வினவினான். ஒரு மங்கைப் பருவத்தாளின் நுதல்(நெற்றி) அழகு என் உள்ளத்தைப் பிணித்தது என்று தலைவன் மறுமொழி கூறினான். குறுந்தொகையில் வரும் 129 ஆம் பாடலின் கூற்று விளக்கம் மேற்கண்டவாறு அமையும்.

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே! ( குறுந்தொகை129)

(பொருள்) என் தோழனே! சிறுவர்கள் மகிழ்வதற்கும், அறிவுடையோர் பழகுதற்கும் உரிய பெருமைக்குரியவனே! கரிய கடலின் நடுவே உவாநாளின் எட்டாம் நாள் தோன்றும் சிறிய பிறைநிலவு போன்று, ஒரு மகளின் கூந்தலின் பக்கத்தில் தோன்றும் நெற்றியானது புதியதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானையைப் பிணிப்பதுபோன்று(கயிற்றால் அல்லது தொடரியால் கட்டுவது) என் நெஞ்சைப் பிணித்துவிட்டது என்றான்.(உரையாசிரியர்கள் இந்த இடத்திற்கு வேறுபொருள் உரைப்பாரும் உண்டு)


இந்தப் பாடலில் கோப்பெருஞ்சோழன் என்ற புலவர்(அரசர்) அழகிய உவமைகள் வழியாக நமக்குக் காட்சிகளை விளக்கியுள்ளார்.

 கடலின் இடையிலிருந்து தோன்றும் எட்டாவது நாள் பிறைநிலவு போன்று தலைவியின் நெற்றி விளங்கியது. அந்த நெற்றியின் பேரழகு என்னைப் பிணித்தது என்று தம் நண்பனிடம் தலைவன் கூறினான். யானை பிடிப்பதையும் அதனைப் பிணித்துக்கொண்டு வருவதையும் கண்ட புலவர் பொருத்தமான இடத்தில் இந்த நிகழ்வை நினைவுப்படுத்தியுள்ளார்.

சனி, 1 ஜனவரி, 2011

குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் எருதா? பன்றியா?


காட்டுப் பன்றி

சங்க இலக்கியத்தில் சில சொற்கள் இடத்திற்கு ஏற்பப் பொருள்கொள்ளும் பாங்கில் உள்ளன. ஓரிடத்தில் ஒரு பொருள் தரும் சொல் பிறிதொரு இடத்தில் பிரிதொரு பொருளைத் தருவது உண்டு. அவ்வகையில் குறுந்தொகையை மொழிபெயர்த்து வரும்பொழுது, ஒருத்தல் என்ற சொல்லை மொழிபெயர்க்க முயன்ற என் நண்பரும் பிரஞ்சுப் பேராசிரியருமான முனைவர் வெங்கடசுப்பராய நாயக்கர் அவர்கள் ஒருத்தல் என்ற சொல்லை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்று ஓர் ஐயத்தை எழுப்பினார்.

அயல்மொழிக்குத் தமிழ்நூல்கள் செல்லும்பொழுது உரியவாறு செல்ல வேண்டும் என்பதில் விருப்பம்கொண்ட நானும், பேராசிரியரும் குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் பற்றி எண்ணிப் பார்த்தோம்.

ஒருத்தல் இடம்பெறும் பாடல் பின்வருமாறு அமைகின்றது.

"உவரி யொருத்த லுழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய
இடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுண் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாநீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையே" (குறுந்தொகை 391)

பொன்மணியார் என்னும் புலவர் இயற்றியது இப்பாடல்.

தலைவனைப் பிரிந்து வருந்திய காலத்தில் தோழியை நோக்கி, "கார்காலம் வந்தது. மயில்கள் கூவின; அவை பேதைமை உடையன போலும்" என்று தலைவி கூறியதாக இப்பாடலுக்கு அறிஞர்கள் துறை விளக்கம் தருகின்றனர்.

உ.வே.சா. தரும் பாடலின் பொருள்: "தோழி எருதானது வெறுத்து, உழாமல் சோம்பிக் கிடக்கும்படி, மான் வெம்மையோடு கிடந்த, மழை நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கும் உருமேற்றினால் பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனிதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையொடு பொருந்தித் தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் மலரையுடைய கொம்பிலிருந்த, போழ்ந்தால் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம் தனித்து வருந்த கூவுகின்றன"

பெரும் பேராசிரியர் உ.வே.சா.அவர்கள் ஒருத்தல் என்பதை எருது என்று பொருள்கொண்டு உரை வரைகின்றார். இதே பாடலுக்கு உரை வரைந்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ஒருத்தல் என்பதற்குப் "பன்றி" என்று பொருள்கொள்கின்றார்.

"பன்றிகள் வெறுத்து நிலத்தைக் கிளைக்காமல் சோம்பிக் கிடப்ப, மான்கள் வெம்மையுற்ற மழை வறந்த முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கின்ற இடியானே பாம்புகளின் படம் அழியும்படி இடியோடே கலந்து மழை பெய்யா நின்றது."

இருபெரும் அறிஞர்களும் இரு பொருள் கொள்வதால் எதனை ஆள்வது என்று எங்களுக்கு ஐயம் ஏற்பட்டது. இதுகுறித்த இலக்கண இலக்கியங்கள் நிகண்டு நூல்கள் பலவற்றையும் பார்த்தேன்.

பிங்கல நிகண்டில்

"கவரி யானை பன்றி கரடி
யுரிய வாகு மொருத்தற் பெயர்க்கொடை" (பிங்கல நிகண்டு 2563)

என்னும் நூற்பாவில் ஒருத்தல் என்னும் சொல் மேற்கண்ட(கவரிமான், யானை, பன்றி, கரடி) விலங்குகளைக் குறிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எருது பற்றி இடம்பெறாமை கவனத்தில் கொள்ளத்தகும்.

தொல்காப்பியத்தில்

"புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமொ டொருத்த லொன்றும்" (தொல்.பொருள்.மரபு.590)

"வார்கோட்டி யானையும் பன்றியு மன்ன" (தொல்.பொருள்.மரபு.590)

"ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்" (தொல்.பொருள்.மரபு.590)

வரும் நூற்பாக்களில் ஒருத்தல் என்பது பன்றியைக் குறிக்கின்றது.

குறுந்தொகையில் இடம்பெறும் பாடல் முல்லைநிலப்பாடல் என்பதாலும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் யாவும் தெற்றென விளங்கித் தோன்றுவதாலும் பாடல் உணர்த்தும் சூழலாலும் ஒருத்தல் என்பதற்குப் பெருமழைப் புலவர் கண்ட பன்றி என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகின்றது.

ஒருத்தல் என்னும் சொல் குறுந்தொகை 396 ஆம் பாடலில் யானையையும் குறிக்கின்றது. "ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்"(396:4)(பொருள்: ஓமை மரத்தைக் குத்திய உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை)

இது நிற்க.

குறுந்தொகை 179 ஆம் பாடலில் கடமா என்று ஒரு விலங்கு குறிக்கப்படுகின்றது. அந்த விலங்கு எது?எவ்வாறு இருக்கும்? என்று பிரஞ்சுப் பேராசிரியர் வினா எழுப்பினார்?

"கல்லென் கானத்துக் கடமா வாட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

(பொருள்: கல்லென்னும் ஆரவாரத்தையுடைய காட்டின்கண் கடமாவை நீ அலைப்பப் பகற்பொழுதும் மங்கியது; நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன. எனவே நீ உன் ஊருக்குப் போகற்க; உயர்ந்த மலைப் பக்கத்தில் இனிய தேனிறாலைக் கிழித்த கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற, ஆழ்ந்த வாயையுடைய பேதைமையுடைய யானை தின்றதனால் கூழையாகிய மூங்கிலையுடைய உச்சியின் இடையே உள்ளதாகிய அஃது எமது ஊராகும். எனவே எம்மூர் அருகில் இருப்பதால் இரவில் தங்கிச் செல்க என்பதாம்)

இது பகலில் வந்து தலைவியுடன் அளவளாவிய தலைவனை நோக்கி, எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்று தோழி கூறுவதாகத் துறை அமைந்துள்ளது.
குட்டுவன் கண்ணன் என்ற புலவர் இயற்றியது.

இப்பாடலில் மலையும் அதில் உறையும் கருப்பொருளும் உரியவாறு சங்கப் புலவரால் காட்டப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத்துக்குரிய ஒழுக்கமும் இங்கு நுண்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடமா என்னும் சொல்லுக்கு ஒருவகை விலங்கு என்றே உரையாசிரியர்கள் குறிப்பு வரைகின்றனர். இருப்பினும் கடமா பற்றி வேறு விளக்கங்கள் தமிழ் நூல்களில் இருக்கின்றனவா? என எண்ணிக்கொண்டிருக்கும்பொழு காட்டுப்பசு என்று இளம் அகவையில் நான் படித்தது நினைவுக்கு வந்தது.

மேலும் பாவாணர் கடம் என்றால் காடு என்று எழுதியதாகவும் நினைவு.வேங்கடம்(திருப்பதி) என்றால் வெப்பம் நிறைந்த காட்டுப்பகுதி என்று பொருள் என்று படித்ததாக நினைவு. எனவே கடம்+ ஆ= காட்டுப்பசு; காட்டுப்பசு என்று குறிக்கலாம் என்றேன். போதிய சான்றில்லாததால் என் கருத்தையும் அழுத்திக்கூறாமல் இருந்தேன். கடமா பற்றித் தொடர்ந்து எண்ணியபடி இருந்தேன். ஆமா என்றால் காட்டுமாடு அல்லது எருது,இது நாவால் தடவினால் சாவு நேரும் என்று கருதப்படுகிறது என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதல் மடலம்,இரண்டாம் பாகம்,ப.109)யின் விளக்கம் கண்டேன்.சிறப்பாக இருந்தது.

"அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம்" (சீவக சிந்தாமணி,1902) எனவும்,

"ஆமானினந் திரியும் தடஞ்சாரல்" (தணிகை.களவு.333)

எனவும் பிற்கால நூல்களில் ஆமா பதிவாகியுள்ளது.

இணையத்தில் தேடியபொழுது கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் வழங்கப்படுவதை அறிந்தேன்.மேலும் இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இந்தக் காட்டுப்பசு இனம் இருப்பதையும் அதன் உருவத்தையும் விலங்கினப் பெயரையும் அறிந்து மகிழ்ந்தேன்.



தமிழ் விக்கிப்பீடியாவில் கடமா பற்றி சுவையான செய்திகள் கீழ்வருமாறு காணப்படுகின்றன.

"கடமா ஒரு பகல் விலங்காகும். இது காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் சுறுடசுறுப்புடன் இரை தேடும். பெரும்பாலான அதிக வெட்பமான மதிய நேரங்களை மரநிழல்களில் கழிக்கும். தற்சமயம இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவற்றின் இருப்பிற்கு நீர் மிகவும் அவசியமானதாக இருந்தாலும் நீர் எருமைகளை போல இவை நீரில் புரளுவதில்லை. கடமா மந்தைகள் 2 முதல் அதிகபட்சமாக 40 நபர்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு மந்தையை வயதான ஆண் தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு நபர் எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்தும் கனப்பொழுதில் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடும்.

இனப்பெருக்க காலத்தில் எருதுகள் மந்தைகளில் இருந்து விலகித் தனித்துப் புணர்வதற்காகப் பசுக்களைத் தேடிச்செல்லும். பெரும்பாலும் பெரிய உடலைக் கொண்ட எருதையே பசுக்கள் இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும். புணரும் போது எருதுகள் தனித்துவமான ஒலியெழுப்பும், அவ்வொலி சுமார் 1.6 கி.மீ சுற்றளவு கேட்டக்கூடியதாக இருக்கும்.

இவை புல், செடிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும். இவற்றின் இயற்கை எதிரிகள் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொன்றுண்ணிகள் ஆகும்."

எனவே கடமா என்றால் காட்டுப்பசு என்று பேராசிரியர் மொழிபெயர்க்கலாம் என்று குறிப்பிட்டேன்.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறுந்தொகை இன்பம்

புதுச்சேரியில் எனக்கு வாய்த்த நண்பர்களுள் பிரஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். வாழ்க்கையில் பல தெளிவுகளைக் கண்டு உணர்ந்து அதன்படி அமைதியாக வாழ்ந்து வருபவர். அறிஞர் மு.வ. போலும் குறிக்கோள் வாழ்க்கை வாழ்பவர். நம் போல் உலகியல் மாந்தர்களால் அவரின் சிறப்பை உணர இயலாது.

பேராசிரியர் அவர்கள் அவ்வப்பொழுது தமிழ் இலக்கியம் சார்ந்து உரையாட நம் இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் வருவார். பிரஞ்சு இலக்கியம் பற்றியும் உரையாடுவோம். பல பிரஞ்சு சிறுகதைகளை மொழிபெயர்த்து வழங்கும்படி அவரைத் தூண்டிப் பெற்று இதழ்களில் வெளியிட்டதும் உண்டு.

அண்மையில் குறுந்தொகையைப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வழங்கும்எண்ணத்தைப் பேராசிரியர் முன்மொழிந்ததும் அதற்குரிய திட்டமிடலில் கலந்துகொண்டேன். அவர்களும் ஈடுபாட்டுடன் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வருகின்றார்கள். அது தொடர்பாக அவ்வப்பொழுது பல ஐயங்களை எழுப்புவார்கள். இப்பொழுது பேராசிரியர் நாயக்கர் அவர்கள் குறுந்தொகை சார்ந்த பல செய்திகளை ஆழமாக அறிந்துள்ளார் என்பதறிந்து மகிழ்கின்றேன். இதே நிலையில் அவர் உழைத்தால் சங்க நூல்களை மிகச்சிறப்பாக அவரால் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்க்கமுடியும்.பிறநாட்டு அறிஞர்கள் பெயர்ப்பதற்கும் தமிழைத் தாய்மொழியாக அறிந்தவர்கள் பெயர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பேச்சின் ஊடே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் செழுமையான சில பாக்களையும் பிரஞ்சில் மொழிபெயர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

இப்பொழுது பிரஞ்சுப் பேராசிரியரின் வினாக்கள் எனக்குக் குறுந்தொகையைப் புதிய பார்வையில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதலை உண்டாக்கியுள்ளது. கல்லூரியில் பயின்றபொழுது குறுந்தொகை உ.வே.சாமிநாதையர் பதிப்பைப் படித்தோம். அதன் சிறப்பை எழுதி உணர்த்தமுடியாது. பெரும்பேராசிரியர் உ.வே.சா. போலும் உழைக்க இன்று ஆள் இல்லை.

பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் அவர்கள் குறுந்தொகையைப் பெயர்த்து வரும்பொழுது அவருக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள தமிழ் இலக்கணம், இலக்கியம் பயின்றவர்கள், விலங்கியல், நிலைத்தினையியல் பயின்றவர்களை அண்மிப் பல உண்மைகளைக் கண்டுகாட்டியுள்ளார். மருத்துவம் சார்ந்த சில நூல்களையும், அகரமுதலிகள்,பல்வேறு குறுந்தொகைப் பதிப்புகளையும் ஒப்பிட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாகப் பிரஞ்சுமொழியில் குறுந்தொகையை உருவாக்கி வருகின்றார்.

அவ்வாறு பணிசெய்யும் பேராசிரியரின் தந்தையார் அவர்கள் உடல் நலமிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிந்து ஓரிரு நாளுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்தேன். தந்தையாருக்குப் பணிவிடை செய்தபடி ஓய்வான நேரத்தில் தம் குறுந்தொகை மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்து வருகின்றார். நான் இருமுறை சென்று அவருக்கு உதவியாக உரையாடினேன்.
குறுந்தொகையில் எங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை எழுதினால் அறிஞர்களுக்கு அது உவப்பான செய்தியாக இருக்கும் என்று எழுதுகின்றேன்.

குறுந்தொகையில் யானை குளகு(தழை-செந்தமிழ் அகராதி ந.சி.கந்தையா) என்பதை உண்டதும் அதற்கு மதம் பிடிக்கும் என்று ஒரு குறிப்பு வருகின்றது. குளகு என்பது தழையா? செடியா? கொடியா? பூவா? என்பது அறியாமல் திகைத்தோம். தழை என்றே அறிஞர்கள் குறிக்கின்றர்.அவ்வாறு என்றால் அந்தத் தழை எப்படி இருக்கும்? இன்று உள்ளதா என்று அறிய விரும்பினோம். பி.எல்.சாமி இது பற்றி என்ன எழுதியுள்ளார் என்று பார்க்க வேண்டும் என்று பல நூலகங்களுக்கு அலைந்து அவர் எழுதிய கழகப் பதிப்பிலான நூல் ஒன்றைப் பெற்றேன்.

அதில் குளகு பற்றிய விவரம் இல்லை. நாம் அறிந்த புன்னை,காந்தள்,முருக்கம்,தாழை போன்றவற்றை அறிஞர் சாமி அவர்கள் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும் காட்டுத்துறையில் அதிகாரியாகப் பணிபுரியும் என் அருமை நண்பர் திரு.இலதானந்து அவர்களுக்கு இதுபற்றி விவரம் வேண்டி மின்னஞ்சல் விடுத்தேன்.அவரும் வழக்கம்போல் தரும் விடைகளைத்தான் தந்தார். நாகர்கோயில் திரு.செல்வதரனைத் தொடர்புகொண்டேன். அவர் மலையின மக்களுடன் தொடர்புடையவர்.அவர் வினவிச் சொல்வதாகத் தப்பித்தார். குளகு பற்றி மேலும் தொடர்புடையவர்களையும் வினவியவண்ணம் உள்ளேன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி என்பதால் உண்மை காண சில காலம் ஆகலாம். இது நிற்க.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று.
கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால்
அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்
இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.
இதுவும் நிற்க.

குறுந்தொகை 394 ஆம் பாடலிலும் ஓர் ஐயத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் எழுப்பினார்.

"முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னா ளினிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்தந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே"(குறுந்தொகை 394)

பொருள்: முழந்தாளையுடைய கரிய பிடியினது மென்மையான தலையையுடைய கன்று, கள் மிகுந்த மலைப்பக்கத்தில் உள்ள ஊரில் குறத்தி பெற்ற குறிய கைச்சந்தையுடைய பிள்ளைகளோடு சுற்றி விளையாடி இனிமை தந்தது. முன்பு இனிமை தந்த யானைக்கன்று வளர்ந்து பின்னாளில் அவர்களின் தினையை மேய்ந்து துன்பம் தரும். அதுபோல் தலைவன் முன்பு இனியவனாக இருந்து மகிழ்ச்சியைத் தந்தான்.இப்பொழுது அவன் நட்பு அமையாததால் துன்பம் தருகின்றான் என்பது பாடலின் பொருள்.

இப்பாடல், வரைவை(திருமணத்தை) இடைவைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, தலைவன் முன்பு இனியனாகத் தோன்றி இப்பொது இன்னாமைக்கு ஏதுவானான் என்று தோழி கூறியதாகத் துறை விளக்கம் உள்ளது.

இங்குக் குறியிறை என்பது என்ன? என்று பேராசிரியர் நாயக்கர் அவர்கள் வினா எழுப்பினார்.
நன்று கடாவினீர்கள் என்று நான் உரைத்துக் குறியிறை என்பது என்ன எனப் பெருமழைப் புலவர் உரையைப் பார்த்தேன். குறிய இறை என்பது யகரம் குறைந்து குறியிறை என்று விளக்கம் இருந்தது. உ.வே.சா குறியிறை என்பதற்குக் குறிய கைச்சந்தையுடைய என்று விளக்கம் தருகின்றார்.இறை என்பதற்கு முன்கை என்று ஒருபொருள் உண்டு.அதன் காரணமாக உ.வே.சா.அவர்கள் இவ்வாறு குறித்தனர் போலும்.

பாடலை இயற்றியவர் உவமையால் பெயர் பெற்ற புலவர் ஆதலால் குறியிறையார் எனப்பட்டார்ர். எனவே குறியிறை பற்றி ஆய்வது இங்கு ஆய்வுக்கு ஆழமான காரணமானது. எனவே குறியிறை என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டியுள்ளது என நினைந்து முதுபேரறிஞர் சோ.ந.கந்தசாமி ஐயாவிடம் என் வேட்கையுரைத்தேன்.ஐயா அவர்கள் மிக எளிதில் தீர்த்து வைத்தார்கள்.

குறியிறை என்பது சிறுவீடுகளில் உள்ள தாழ்ந்த பகுதியைக் குறிக்கும் இறவாறம்(பேச்சு வழக்கில் இறவாணம்) என்று குறிப்பிட்டார். மேலும் புறநானூற்றின் 129 ஆம் பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலில் "குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்" எனவரும் பாடலடியை எடுத்துக்காட்டி அதன் பழைய உரையில் குறியிறை என்பது குறிய இறப்பையுடைய சிறிய மனை என்று இடம்பெறுவதை ஐயா சோ.ந.க அவர்கள் குறிப்பிட்டு உ.வே.சா அவர்கள் இந்தத் தொடரைக் குறுந்தொகையில் உரைவரையும்பொழுது எடுத்துக்காட்டடாமல் போனமைக்குக் காரணம் விளங்கவில்லை என்றார்.

காளமேகப் புலவன் சிவனையும் சிட்டுக்குருவியையும் இருபொருள்படப் பாடும்பொழுது இறப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதையும் அப்பேரறிஞர் இணைத்துக்காட்டினார். மகிழ்ந்தேன்.அதாவது குறுகிய சிறு வீட்டுப்பகுதியில் விளையாடிய குறக்குடிச்சிறார் என்ப்பொருள் காண்டல் சிறக்கும் என நினைக்கின்றேன்.

இவ்வாறு சில ஐயங்களைப் பேராசிரியர் எழுப்பியதும் நுண்பொருள் காணும் நோக்கில் குறுந்தொகையைச் சிந்தித்து வருகின்றேன்.

முன்பு ஒருமுறை வகுப்பில் ஒருமணி நேரம் ஒரு பாடலைப் பாடமாகப் பயிற்றுவித்தேன். குறுந்தொகையின் அந்த நெஞ்சங் கவர்ந்த பாடல் நினைவுக்கு வந்தது.

தலைவன் இரவுப்பொழுதில் தலைவியைச் சந்திக்க வருகின்றான். அவனுக்குத் தோழி கூறியது.

கடும் மழைக்காலம். எங்கும் கருமுகில்கள் திரண்டு மழைத்துளி வீழ்வதால் வானத்தைக் காண முடியவில்லை. நிலம் முழுவதும் நீர்ப்பெருக்கு. எனவே பாதை தெரியவில்லை. கதிரவன் மறைந்த இருட் காலம் ஆதலின் பலரும் உறங்கும் நடு இரவு. வேங்கை மரத்தின் மலர்கள் மணம் வீசும் எங்கள் ஊருக்கு எவ்வாறு வந்தனையோ? உயர்ந்த மலையையுடையத் தலைவனே! என்று தோழி வினவுகின்றாள்.

இந்த வினவுதலில் இரவுப்பொழுதில் வந்தால் உயிருக்கு அச்சம் ஏற்படும் எனவும் எனவே தலைவியை விரைவில் வரைந்துகொள்வாயாக(திருமணம் முடித்துக்கொள்வாயாக) எனவும் குறிப்பை இப்பாடலில் பாவலர் பொதிந்து வைத்துள்ளார்.

மழைக்காலக் காட்சியை இதைவிட ஒரு புலவனால் மிகச்சிறப்பாகப் பாடிவிடமுடியாது அல்லது ஓவியனால் ஒரு படம் வரந்து விளக்கிவிடமுடியாது.அல்லது திரைக்கலைஞனால் காட்சிப்படுத்திவிட முடியாது என்ற எண்ணத்தை இப்பாடல் உணர்த்துகின்றது.

"பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந்த தொழுகலி னிலங்கா ணலையே
எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே" (குறுந்தொகை 355)

பாடலின் பொருள்: உயர்ந்த மலைநாட்டுக்கு உரிய தலைவனே! மழை எங்கும் பெய்து பரவி இடத்தை மறைப்பதால் வானத்தைக் காண இயலாது. அந்த மழையின் நீர் எங்கும் நிறைந்து இருப்பதால் நிலத்தையும் காண இயலாது. மேலும் கதிரவன் மறைந்ததால் இருளும் மிகுதியாக உள்ளது; இந்த நிலையில் பலரும் உறங்கும் நள்ளிரவுப்பொழுதில் வேங்கை மலர் மணம் வீசும் எமது சிற்றூரை எங்ஙனம் அறிந்து வந்தனையோ?

இவைபோல் இன்னும் சில பாடல்களை அசைபோடுவோம்!.தமிழ் இலக்கிய இன்பம் நுகர்வோம்.