நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

குறுந்தொகையில் கிடைத்த யானை


மொழிபெயர்ப்பு வல்லுநர் ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் அவ்வப்பொழுது இரவு வேளைகளில் செல்பேசியில் அழைப்பார்கள். சில நன்மொழிகளை வழங்கி ஊக்கப்படுத்துவார்கள். எங்கள் உரையாடல் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், பாரதி, கம்பன், பாவேந்தர், பாரதம். நளவெண்பா என்று நீண்டு சங்க இலக்கியம், சிலம்பு என்று வளர்ந்து பெருகும். சிலபொழுது அரைமணி நேரத்திற்கும் மிகுந்தும்கூட ஐயா அவர்கள் தம் அறிவுத் தொம்பையிலிருந்து அறிவுநன்மணிகளை எனக்கு உவகையுடன் வழங்கி மகிழ்வார். ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் செந்தமிழ் ஞாயிறு சேதுரகுநாதன் (முத்தொள்ளாயிரம் உரையாசிரியர்) அவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.

நெருநல் இரவு திருக்குறளிலிருந்து “பைங்கூழ் களைகட்டு அதனொடு நேர் ” என்பதற்கு உலகியல் விளக்கம் தந்து வியப்படையச் செய்தார். மேலும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவூட்டினார். பாடல்கள் யாவும் அவர்களுக்கு மனப்பாடமாக இருந்து வெளிவரும். நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை நூல்களை ஒருமுறை படித்த மனநிறைவுடன் எங்கள் உரையாட்டை நிறைவு செய்வோம். அறிஞர் பாலசுப்பிரமணியனார் நினைவூட்டிய குறுந்தொகைப்பாடலைப் பார்ப்போம்.

தலைவன் தலைவியுடன் இயற்கைப் புணர்ச்சியில் உரையாடி, மகிழ்ந்து மீண்டான். ஆனால் அவன் முகம் வாட்டமுடன் இருந்தது. இதனைக் கண்ட தோழன், உனக்கு இந்த வாட்டம் ஏற்படக் காரணம் என்ன? என்று வினவினான். ஒரு மங்கைப் பருவத்தாளின் நுதல்(நெற்றி) அழகு என் உள்ளத்தைப் பிணித்தது என்று தலைவன் மறுமொழி கூறினான். குறுந்தொகையில் வரும் 129 ஆம் பாடலின் கூற்று விளக்கம் மேற்கண்டவாறு அமையும்.

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே! ( குறுந்தொகை129)

(பொருள்) என் தோழனே! சிறுவர்கள் மகிழ்வதற்கும், அறிவுடையோர் பழகுதற்கும் உரிய பெருமைக்குரியவனே! கரிய கடலின் நடுவே உவாநாளின் எட்டாம் நாள் தோன்றும் சிறிய பிறைநிலவு போன்று, ஒரு மகளின் கூந்தலின் பக்கத்தில் தோன்றும் நெற்றியானது புதியதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானையைப் பிணிப்பதுபோன்று(கயிற்றால் அல்லது தொடரியால் கட்டுவது) என் நெஞ்சைப் பிணித்துவிட்டது என்றான்.(உரையாசிரியர்கள் இந்த இடத்திற்கு வேறுபொருள் உரைப்பாரும் உண்டு)


இந்தப் பாடலில் கோப்பெருஞ்சோழன் என்ற புலவர்(அரசர்) அழகிய உவமைகள் வழியாக நமக்குக் காட்சிகளை விளக்கியுள்ளார்.

 கடலின் இடையிலிருந்து தோன்றும் எட்டாவது நாள் பிறைநிலவு போன்று தலைவியின் நெற்றி விளங்கியது. அந்த நெற்றியின் பேரழகு என்னைப் பிணித்தது என்று தம் நண்பனிடம் தலைவன் கூறினான். யானை பிடிப்பதையும் அதனைப் பிணித்துக்கொண்டு வருவதையும் கண்ட புலவர் பொருத்தமான இடத்தில் இந்த நிகழ்வை நினைவுப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: