நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 9 மே, 2016

பொதட்டூர்பேட்டை முனைவர் இ. கே. தி. சிவகுமார்

முனைவர் இ. கே. தி. சிவகுமார்

எளிய நிலையில் இருப்பவர்களும் சாதனைகள் செய்யமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருபவர் முனைவர் இ. கே. தி. சிவகுமார் ஆவார். இவர் திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் டாக்டர். இ. கே. திருவேங்கடம் - விஜயா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

கல்வித்தகுதிகளும் கல்விப்பணிகளும்

பொதட்டூர்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த இ.கே.தி.சிவகுமார், சென்னையில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் வேதியியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், குருநானக் கல்லூரில் முதுநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். ஆராய்ச்சிப் படிப்பினை மாநிலக் கல்லூரியில் மேற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தொழில்நுட்பம் சார்ந்த பணி

வேதியியல் துறையில் புலமை பெற்றதோடு சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய இ.கே.தி.சிவகுமார் தமது அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய அளவிலான அறிவியல் அறிஞர் 2008” என்கிற விருதுக்கு டெல்லியில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் அறிவியல் கழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டும் பெற்றவர்.

மேலும் துறைசார்ந்த ஏராளமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் ஆய்வரங்குகளில்வழங்கியவர், உலக நாடுகள் பலவற்றிற்கும் அறிவுப் பயணம் மேற்கொண்டு தன்னலம் கருதாது தொடர்ந்து கல்விப் பணி மற்றும் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகின்றார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்விப் பணியாற்றி வருகிறார்.

ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கும் தொடக்க காலம் முதலே சிவகுமாரின் குடும்பம் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கிறது. இவரது தந்தையார் இ.கே.திருவேங்கடம் ஓர் ஆசிரியராக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர்.

சிவகுமாரின் தந்தையார் இ.கே.தி. திருவேங்கடம் டாக்டர் பட்டம் பெற்று ஒரு கல்வியாளராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமூதாய நோக்கோடு 1997 இல் வாரியார் சுவாமிகளின் பெயரில்முதியோர் காப்பகம் ஒன்றை நிறுவி அதனைத் திறம்பட செயல்படுத்தியும் வந்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு அதனை இ. கே. தி. சிவகுமார் பொறுப்பேற்றுத் திறம்படப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவது பெருமைக்குரியது.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இவரைச் சிறப்பித்துள்ளன. குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவிட இவர் கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் (Educational and Social Research Organisation – ESRO) என்ற நல உதவி அறக்கட்டளையைக் கடந்த 2007-இல் நிறுவிப் பல இலட்ச ரூபாய் அளவில் ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

இந்த அமைப்பின் சார்பில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் இ.கே.தி.சிவகுமார் அவர்களின் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான சமுதாய சேவைகள் குறித்த, தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சான்றோர் பெருமக்களின் வாழ்த்துரைகள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் வெளியிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

மேலும் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர்.கே.ரோசய்யா அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளர்களுக்கான நல உதவிகளும் ஏழை மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.இ.கே.தி.சிவகுமாரின் கல்விச் சேவையை மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சமூக முன்னேற்றம் சார்ந்த பணிகளும் விருதுகளும்

மாற்றுத் திறனாளிகளுக்காக இவர் செய்த சேவைகளுக்குத் தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சரால் சிறந்த சமூக சேவைக்கானவிருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவரது சேவைகளைப் பாராட்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இளம் வயதிலேயே இவருக்கு வாழ்நாள் சாதனையாளர்விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஜப்பான் நாட்டுத் தூதரால் வழங்கப்பட்ட புகழ்மிக்க மீடியா கில்டுவிருதும், சென்னை 38-வது புத்தகக் கண்காட்சியில் சிறந்த சிறுவர் அறிவியல் நூலிற்கான விருதும்இவருக்குக் கிடைத்துள்ளன.

எல்லாவற்றிக்கும் மேலாக 1140 பக்கங்கள் கொண்ட உலகத் தமிழர் கலைக்களஞ்சியம் என்ற நூலினை வெளியிட்டுச் சிறப்பான தமிழ்ப்பணியையும் செய்துள்ளார்.

மதிப்பு மிக்கவர்களின் பாராட்டுக்கள்

தனது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கிடையே, கல்விப்பணி, சமுதாயப்பணி, எழுத்துப்பணி, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான சேவைகள் எனக் கடந்த 25 ஆண்டுகளாக இந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிறப்பான அறப்பணிகளை ஆற்றிவரும் இ.கே.தி.சிவகுமார் அவர்களுக்கும், அவரது செயல்பாடுகளுக்கும் மதிப்பளித்து சாதனையாளர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியும், தற்போதைய கேரள ஆளுநருமான மாண்புமிகு நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள், அகில இந்திய மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் மேனாள் தலைவர் மாண்புமிகு நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள், மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு.ச.மோகன் அவர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நீதியரசர்கள் எனப் பலரும் திரு.இ.கே.தி.சிவகுமாரின் பணிகளை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

சந்திரயான் 1 திட்ட இயக்குநரும் இஸ்ரோவின் புகழ்பெற்ற அறிவியல் அறிஞருமான மயில்சாமி அண்ணாதுரை அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு இவர் நடத்தி வரும் வளரும் அறிவியல்என்கிற காலாண்டு இதழ், உலக அளவில் பதிவு எண் பெற்று, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பான தகவல்களை இந்தச் சமூகத்திற்கு வழங்கி வருகிறது.

இவரது சமூக சேவைகளையும் இதழியல் பணிகளையும் மனம் திறந்து பாராட்டியுள்ள அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், இ.கே.தி.சிவகுமார் தமது மூன்றாவது சகோதரர் என்று நெகிழ்ச்சியோடு பொது நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக அறிவித்திருப்பது, இவரது சேவைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றால் அது மிகையன்று.


இ.கே.தி.சிவகுமார் அவர்களின் தன்னலமில்லா சாதனை மேலும் தொடர மனம் திறந்து நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்கள் மூலமாக முனைவர் சிவகுமாரைப் பற்றி அறிந்தோம். நன்றி.