நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 மே, 2016

நினைக்கத் தகுந்த நிகழ்வுகள்…


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். முனைவர் கு. இராமசாமி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பாஸ்கரன் மணிமாறன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். திலகர் ஆகியோரின் வாழ்த்திலும் அன்பிலும் முனைவர் மு.இளங்கோவன். (நாள்: 17.04.2015) 

அலுவல் நிமித்தம் சென்ற ஆண்டு கோயம்புத்தூருக்குச் சென்றிருந்தேன். பாரதியார் பல்கலைக்கழகப் பணியை முடித்துக்கொண்டு, பேராசிரியர் இரா. பாவேந்தன் அவர்களைச் செல்பேசியில் தொடர்புகொண்டேன். குறிப்பிட்ட உணவகத்திற்கு அவரும் வந்து சேர்ந்தார். இருவரும் உரையாடியவாறு பகலுணவை முடித்துக்கொண்டு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்த அவர் அலுவலக அறைக்குச் சென்றோம். வளரும் வேளாண்மை இதழ் பற்றி எங்கள் உரையாடல் தொடர்ந்தது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விற்பனைக்கு உள்ள கன்றுகள், விதைகள் பற்றிய விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அருகிலிருந்த பண்பலை வானொலி நிலையப் பணிகளையும் பேராசிரியர் பாவேந்தன் எடுத்துரைத்தார்.

உழவர்களுக்கும், வேளாண்மைக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செய்துவரும் அரும்பெரும் பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இங்குள்ள பேராசிரியர்கள் வேளாண்மை குறித்தும், தோட்டக்கலை குறித்தும் செய்துள்ள ஆய்வுகள் உலக அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியவையாகும். அதிய முருங்கை, புளியங்கன்றுகள், பப்பாளி போன்ற புதியவகை கண்டுபிடிப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்தவையாகும். இங்குப் பயின்ற மாணவர்கள் பலர் இந்திய ஆட்சிப்பணி, காவல்துறைப் பணிகளில் புகழுடன் பணியாற்றி வருகின்றமையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது. கண்டிப்புக்கும் கடும் உழைப்புக்கும் பெயர்பெற்ற கல்வியாக வேளாண்மைக் கல்வி விளங்குகின்றது என்பதை நான் அருகிலிருந்து பார்த்தவன்.  இத்தகு பெருமைக்குரிய வேளாண்மைக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகத்தின் பண்பலை வானொலி நிலையத்தின் பணிகளை அறிந்து, நேரில் பார்வையிட்டோம்.

பண்பலை வானொலியின் பொறுப்பாளரிடம் என் வருகையைச் சொல்லி ஓர் உரையாடலுக்கு முனைவர் பாவேந்தன் ஏற்பாடு செய்தார். முனைவர் இரா. பாவேந்தன் நன்கு திட்டமிட்டுச் செயல்படும் முன்மாதிரியான பேராசிரியர் ஆவார். பல்வேறு அரிய நூல்களை வெளியிட்டவர். என் முயற்சிகளை அறிந்து அவ்வப்பொழுது ஊக்கப்படுத்தும் உயர்ந்த உள்ளம் உடையவர். எங்களின் பண்பலை வானொலி உரையாடல் கால்மணி நேர அளவில் திட்டமிடப்பட்டு, மணிக்கணக்கில் நீண்டது. தமிழக நடவுப் பாடல்கள் குறித்து, சில செய்திகள் என் நேர்காணலில் இடம்பெற்றது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடவுப்பாடலைப் பற்றிப் பேசாமல் வேறு எங்குப் பேசுவது? உரிய களம் இதுதான் என்று நடவுப் பாடல்களைப் பாடி நான் விளக்கம் சொன்னமை அங்கிருந்தவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கியது. அனைவரும் நேர்காணலைப் பாராட்டி, ஊக்கப்படுத்தினர். நேர்காணல் பதிவை முடித்துக்கொண்டு இரவு புதுச்சேரிக்குப் புறப்பட்டேன்.

என் வருகையும், பண்பலை வானொலிக்கு அமைந்த நேர்காணல் பதிவும், நிகழ்ச்சி ஒலிபரப்பு விவரமும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது. மாதங்கள் உருண்டோடின.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் மன்ற நிறைவு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்க வேண்டும் என முத்தமிழ் மன்றப் பொறுப்பாளராக விளங்கிய பேராசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் செல்பேசி வழியாக என்ற அழைப்பு விடுத்தனர். நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளில் (17.04.2015)) கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். விருந்தினராகப் பல்கலைக் கழக விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டேன். மூன்றுநாள் சித்திரைப் பெருவிழாவாக நடைபெற்ற முத்தமிழ் மன்ற விழாவுக்குத் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்களாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாபுகழ் திரு. கோபிநாத், பட்டிமன்றப் பேச்சாளர் சீர்மிகு பாரதி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வந்து, இரண்டு நாளும் உரையாற்றிச் சென்றமையை அறிந்தேன். நிறைவு விழா நடைபெறும் மாலைப் பொழுதுக்காகக் காத்திருந்தேன்.

இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திமாலைக்குரிய  நேரம் வந்தது. பேராசிரியர்களும் மாணவர்களும் அழைப்பதற்கு விருந்தினர் இல்லம் வந்திருந்தனர். விருந்தினர் இல்லத்திலிருந்து மகிழ்வுந்தில் புறப்பட்டு, விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்று சேர்ந்தோம். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அறிவாற்றல் நிறைந்த மாணவர்களின் ஆரவாரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நடுவே நடந்து சென்று, அரங்கின் முன்வரிசையில் அமர்ந்தேன். புல முதன்மையர்கள், மூத்த பேராசிரியர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.  அனைவரும் துணைவேந்தர் அவர்களின் வருகைக்குக் காத்திருந்தோம். அடுத்த நொடி….

மாண்பமை துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி அவர்கள் அரங்கிற்கு வருகை தந்து நலம் வினவினார்கள். அவர்களின் அருகில் வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டு துணைவேந்தர்கள் இருந்தனர். சில மணித்துளிகளில் மூன்று துணைவேந்தர்களும் மேடையேறினர். அவர்களுடன் நானும் மேடையில் ஒருங்கு அமர்ந்தேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கு. இராமசாமி அவர்களும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பாஸ்கரன் மணிமாறன் அவர்களும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். திலகர் அவர்களும் மேடையில் ஒருசேர அமர்ந்திருந்தனர்.  சிறப்புரையாற்றும் நேரம் கனிந்தது.

முரசு முழங்குதானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல

என்னும் பொருநராற்றுப்படை வரிகளை மேற்கோள் காட்டித் துணைவேந்தர்களுக்கு என் வணக்கம் கூறிப், வாய்ப்புக்கு நன்றி பாராட்டிப் பேசத் தொடங்கினேன்.
மு.இளங்கோவன் உரை

தமிழக நடவுப்பாடல்கள் குறித்து இருபது நிமிடம் உரையாற்றும் வாய்ப்பு இந்த நிகழ்வில் எனக்கு அமைந்தது.  உழவுத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து, உழவுத்தொழில் செய்து வளர்ந்தமையைக் குறிப்பிட்டு, உழவுக்கும் எனக்குமான தொடர்பை எடுத்துரைத்து,, இன்று நலிந்துபோன நடவுத்தொழிலில் தமிழனின் இசை வளர்ந்த வரலாற்றை நினைவூட்டிப் பேசினேன். தமிழகத்துச் சிற்றூர்ப்புறங்களில் இன்றும் பல்லாயிரம் மணிநேரம் கேட்கத்தக்க வகையில் நடவுப்பாடல்கள் உள்ளன என்றும் அவற்றுள் தமிழிசை புதைந்திருப்பதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினேன். மாணவர்கள் என் பேச்சை, மன்னிக்கவும் பாட்டைச் செல்பேசியில் காணொளி வடிவில் பலரும் பதிந்துகொண்டனர். நடவுப் பாடல்களைப் பாடியபொழுது பொருந்தும்படியாகத் தாளமிட்டனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணமுடிந்தது.

இந்தப் பாட்டுப் பொழிவு மாணவர்களின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்திருக்கும் என்று நம்பினேன். துணைவேந்தர்களும் என் முயற்சியையும் உரையையும் பாராட்டினர். அனைவரின் அன்பிலும் நனைந்த இனிய பொழுது அதுவாகும். கல்வி வல்லார் நடுவே, நடவுத்தொழிலில் செழித்து வளர்ந்த  இசையை நினைவூட்டியமையை எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு. என் வாழ்வின் கிடைத்தற்குரிய வாய்ப்பாக இதனை நினைக்கின்றேன்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களுடைய மகிழ்ச்சியில் நாங்களும்.